கடவுள் மனிதனாகப் பிறந்தது உலக அதிசயம். அவரது பிறப்பு உலகத்திற்கு ஒரு புதிய விடியல். அவரது பிறப்பால் பூலோகம் மேலோகமானது: தூதர்கள் வந்து போற்றினார்கள். இயேசுவின் பிறப்பு பெரும் சாதனைகளை நிகழ்த்தியது. இயேசுவின் பிறப்பு சுமார் 2000 வருடங்களாக உலகமெங்கும் பெருங்கூட்ட மக்களால் கொண்டாடப்படுகிறது.
1. மாறுபட்ட பிறப்பு
இயேசுவின் பிறப்பு இதுவரை மனித வரலாற்றில் இல்லாத பிறப்பு. ஆதாமின் பிறப்பு கடவுளின் நேரடி பிறப்பு. ஆதாம் ஆண் மற்றும் பெண் துனையின்றி பிறந்தான். ஏவாளின் பிறப்பு ஆதாமின் வழி பிறப்பு. ஏவாள் பெண் துணையின்றி பிறந்தாள். இயேசு ஆண் துணையின்றி பிறந்தார். கடவுள் மரியாளின் கற்பத் தொடாமல் கர்ப்பப்பையை மாத்திரம் பயன்படுத்தினார். கற்பு பாதிக்காமல் கர்ப்பமாகி பிறந்தவர் இயேசு மாத்திரமே. வேறு எந்த அவதாரங்களும் இயேசுவைப் போன்று கண்ணித்தன்மை பாதிக்காமல் பிறக்கவில்லை.
2. மாற்று பிறப்பு
இயேசுவின் பிறப்பு ஒரு பலிமிருகத்திற்கு மாற்றான பிறப்பு. பலியாகவேண்டிய மிருகத்திற்குப் பதிலாகப் பிறந்தார். மனிதர்கள் யாரும் இப்படிப்பட்ட மாற்றுப்பிறப்பாக பிறக்கவில்லை. மனித பிறப்புகளில் குறைபாடுகள் உண்டு, ஆனால் இப்படி மாற்று பிறப்பாக யாரும் பிறக்கவில்லை. இயேசு மாத்திரமே பலியாகப் பிறந்தார்: அவருடைய பலிதான் நிறைவானது, நிலையாக ஏற்கப்பட்டது, அனைவருக்குமானது, இனி எந்த இரத்த பலியும் அவசியமில்லை.
3. மாற்றுவதற்கான பிறப்பு
இயேசுவின் பிறப்பு மனிதவரலாற்றையும் வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. ஆன்மிக விதிகளை மாற்றியமைத்தது: பலிக்குப்பலி என்னும் விதியை மாற்றியமைத்தது: மன்னிப்பு, விரோதிகளையும் நேசித்தல், சபிக்கிறவர்களை ஆசீர்வதித்தல், துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபித்தல், நீதிக்காக துன்பம் அனுபவித்தல், சத்தியத்திற்காக உயிர்கொடுத்தல். வழிபாட்டு முறைகளை மாற்றினார்: ஆலய வழிபாட்டை மாற்றி எங்கும் தொழுதுகொள்ளும் முறை, தசமபாகத்தை மாற்றி ஐம்பது அல்லது நூறு சதவிகிதம் கொடுத்தல். தீயவர்களை அல்லது பாவிகளை அழிக்காமல் அவர்கள் புதுவாழ்வு வாழ வழிவகுத்தல் மற்றும் வாய்ப்பளிக்கப் பிறந்தார். இயேசு மறுமலர்ச்சியை ஏற்படுத்த அல்ல மறுபிறப்பை கொடுக்கப் பிறந்தார். Jesus was born not as a reformer but as the regenerator.
இயேசு நம் வாழ்வில் பிறப்பதால் நாமும் அவரைப் போன்று ஆவியில் பிறந்து மாறுபட்ட வாழ்வை வாழ்வோம். நாமும் இந்த பூமியில் சரீரங்களை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்து வாழவேண்டும் - நமது இவ்வாழ்க்கை அநேகரது வாழ்வில் புதுவாழ்வை அனுபவிக்க உதவும். நாமும் மனந்திரும்பிய புதிய வாழ்வால் அநேகரை புதிய வாழ்வை அடைய உதவும்.
Author. Rev. Dr. C. Rajasekaran