காவல் துறையினருக்கு காவல் தெய்வம் இயேசுவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

காவல் காப்பது, வழிநடத்துவது, சீர் செய்வது, தவறுகள் நேரிடும் முன்பே காப்பது, தவறு செய்கிறவர்களை தண்டிப்பது, அவர்களுக்கு புத்திமதி சொல்லி இனி தொடர்ந்து நடைபெறாது என்பதை உறுதிசெய்வது போன்ற பணிகள் கடவுள் செய்யும் கண்ணியமானப் பணி. இப்பணியில் ஈடுபட்டிருக்கும் உங்கள் பணி தெய்வீகப்பணி ஆகும். இப்பணியில் தியாகத்தோடு ஈடுபட்டுள்ள உங்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். காவல் தெய்வம் இயேசு கிறிஸ்து அனைவரையும் அதர்மத்திலிருந்தும், ஆபத்திலிருந்தும், இல்லாமையிலிருந்தும் காக்கிறார். 

கடவுளை யாரும் கண்டதில்லை. கடவுளை மனித உருவில் காட்டுபவரே இயேசு நாதர். வரலாற்றில் கடவுள் இயேசு என்னும் மனிதனாக பிறந்ததால்தான் இன்று உலக சமயங்களில் இறை அவதாரக் கொள்கை உருவானது. இறை அவதாரம் உலக மனிதர்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சியின் செய்தி. ஏனெனில், அவர் நம் அனைவருக்கும் கடவுளின் பிரியத்தையும், நிம்மதியையும், தர்மத்தையும், தூய்மையையும், சமத்துவத்தையும், இறை ஞானத்தையும் வரமளித்து, நம்மை கடவுளின் பிரஜைகளாகவும் பிள்ளைகளாகவும் மாற்றுகிறார்.

அன்பை விரும்பாதவர் எவரும் இல்லை. அன்பே கடவுள். கடவுள் தான் எல்லாவற்றிற்கும் மூல ஆதாரம். அவரிலிருந்து இவ்வுலகம் உருவானது. மனிதன் கடவுளுக்கு கீழ்படியாமல் போனதால்  பாவம் வந்தது, பாவத்தினால் இப்பூமியில் அன்புக்கு பஞ்சமானது. பிரிவினைகள், பேதங்கள், கொலை, கொள்ளை பெருகினது. அன்பில்லா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு. அர்த்தமில்லா வாழ்வு அவசியமில்லா வாழ்வு என்பது உண்மை. ஆகவேதான் அன்பு கிடைக்கப்பெறாதவர்கள் தங்கள் வாழ்வில் சோர்ந்து போய் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். இவ்வுலக அழகு, அந்தஸ்து, ஆஸ்தி, ஆரோக்கியம் அனைத்தும் இறை அன்புக்கு ஈடாகாது என்பது நாம் அறிந்த உண்மை. 

அன்பை காணாமல் யாரும் நம்பமுடியாது. செயலில் வெளிப்படாத அன்பை யாரும் காண முடியாது. அன்பின் உருவாக கடவுள் இயேசு இப்பூமியில் பிறந்தார். வரலாற்றில் இந்நாள் கிறிஸ்துமஸ் நாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இயேசு மனுஅவதாரம் ஒரு குறிப்பிட்ட இனம், நிறம், மொழி மக்களுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும், உயிர்களுக்கும் பொதுவானது. 

இயேசு கிறிஸ்துவின் அவதாரத்தை நாம் தரிசிக்க அவர் நம் வாழ்வில் பிறக்க வேண்டும். அவர் பிறக்கும் உள்ளத்தில் மகிழ்ச்சி, நிம்மதி, திருப்தி நிரம்பும், பொது வாழ்வில் தர்மம், தூய்மை, நல்ல குணங்கள் மற்றும் நல்ல பழக்கங்கள் வெளிப்படும். அதனால் நம்மை சார்ந்த மற்றும் சாராத மக்களுக்கு பயனுள்ளவர்களாக மாறுவோம். வரப்போகிற புதிய ஆண்டில் புது வாழ்வு பெற நம் வாழ்வை இயேசு நாதர் ஆட்கொள்ள இடமளிப்போம். இறைமக்கள் என்றும் செழிப்பர்! வாழ்வர்!! இறைவன் புகழ் வளரட்டும்!!! இறைவாழ்வு நம்மில் மலரட்டும். காவல் காக்கும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இயேசு பெருமான் காத்து நிறைவான ஆசிகளை அருளுவாராக! உங்கள் தெய்வீகப் பணி என்றும் இறைவனுடைய சக்தியுடன் தொடர வாழ்த்துக்கள்.

Author. Rev. Dr. C. Rajasekaran



Topics: Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download