இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுவது மிகவும் பிரபலமான நிகழ்வாகும். பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளில் கொண்டாட்டம் வேறுபடும். பரந்த நிலப்பரப்பில் பரந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா பல கலாச்சாரங்களையும் மொழிகளையும் கொண்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் பரவி உள்ளனர். சில பகுதிகளில் அல்லது சில மாவட்டங்களில் அவர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர், சிலவற்றில் சிறுபான்மையினராகவே உள்ளனர். கிராமங்கள், நகரங்கள் மற்றும் பட்டணங்களில் கொண்டாட்டங்கள் வித்தியாசமானது.
நான் தென்னிந்தியாவில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தேன், ஆண்டுகள் கடக்க ஒரு சிறிய நகரத்தில் வாழ்ந்தேன். அன்றைய பொருளாதார நிலை, இன்று செழித்து வரும் இந்தியாவைப் போல் இல்லை. குழந்தைகளாகிய நாங்கள் கிறிஸ்துமஸை ஆவலோடு எதிர்பார்த்தோம், முக்கியமாக, எங்களுடைய வருடாந்திர ஒதுக்கீட்டின்படி புதிய ஆடைகள் கிடைக்கும். குடும்பம் கஷ்ட நிலையில் இருந்தால், குழந்தைகளுக்கு பள்ளி சீருடை மட்டுமே கிடைக்கும், வண்ண ஆடைகள் அல்ல. மற்றபடி எதிர்பார்ப்பு கேக் மற்றும் பிரியாணி மீது (ஒரு சிறப்பு அரிசி மற்றும் இறைச்சி உணவு) இருக்கும். அந்த நாட்களில், குடும்பங்களில் வாரம் ஒருமுறை மட்டுமே அசைவ உணவு சாப்பிடுவார்கள் (பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே). அது போல கேக்குகளும் எளிதாக கிடைப்பதல்ல. எங்கள் பிறந்தநாளுக்கு நாங்கள் ஒருபோதும் கேக் வெட்டுவதில்லைஇ அதனால் கிறிஸ்துமஸ் எங்களுக்கு மிக சிறப்பானதாக இருந்தது. ஆலய பாடகர் குழு இரவில் வீடுகளைச் சந்திப்பது வழக்கம்; அதுவும் பொதுவாக, நள்ளிரவில் வருவார்கள். வருகை தரும் பாடகர் குழுவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேஷம் போட்டு எவரேனும் இருப்பர், அதைப் பார்ப்பது மகிழ்ச்சியான சந்தர்ப்பமாக இருந்தது. அவர் பொதுவாக சாக்லேட் மற்றும் பலூன்களை கொடுத்து பாடல்களுக்கு ஏற்றபடி உடலசைவுகளுடன் நடனமாடுவார். பாடல்கள் பெரும்பாலும் உள்ளூர் இசை மற்றும் தாளத்துடன் கூடிய தமிழ் பாடல்களாகவே இருந்தன. கிறிஸ்துமஸ் அட்டைகளை அனுப்புவதும், கிறிஸ்துமஸ் அட்டைகளைப் பெறுவதும் சிறப்பாக இருந்தது. ஒரு குடும்பம் அனுப்பும் மற்றும் பெறும் கிறிஸ்துமஸ் அட்டைகளின் எண்ணிக்கையால் ஒரு நபரின் அந்தஸ்து தீர்மானிக்கப்படுகிறது.
சில நேரங்களில், மற்ற நகரங்களில் உள்ள பாடகர்களை நாங்கள் பார்வையிடுவது வழக்கம். அவர்கள் நடத்தும் கிறிஸ்துமஸ் பவனி மிக அருமையாக இருக்கும். தனிப்பாடல்கள், குழு பாடல்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடல்கள், அழகான இசை மற்றும் நிச்சயமாக ஒரு குறுஞ்செய்தி இருக்கும். குழந்தைகளாக இருந்தபோது, நாங்கள் குடில் அமைத்து பெத்லகேம் காட்சிகளை நிகழ்த்துவோம். இது வருடாந்திர சடங்கு போலானது, ஆனால் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இருந்தது. இது ஒரு ஃபேன்ஸி டிரஸ் போட்டி போல இருந்தது; காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் போர்த்தப்பட்ட மரியாள், தாய்மார்கள், மேய்ப்பர்கள் தங்கள் தந்தையின் சால்வைகளுடன் காணப்படுவார்கள்.
எங்கள் வீடு அலங்கரிக்கப்பட்டிருக்கும். பொதுவாக, பல ஆண்டுகளாக நாம் பயன்படுத்தும் நட்சத்திரங்கள் உள்ளன. நாம் கிறிஸ்தவர்கள் என்பதைக் குறிக்கும் வகையில் வீட்டின் முன்புறத்தில் தொங்கவிடப்படும். பாடல் குழுவினர் வீட்டை எளிதில் அடையாளம் காண முடியும்.
பொதுவாக, கிறிஸ்துமஸ் காலக் கட்டங்களில் வீட்டிற்கு வெள்ளையடித்து சுத்தமாக வைத்திருப்பது வழக்கம். கிறிஸ்துமஸ் மரம் வாங்க இயன்றவர்கள் வீட்டிற்குள் வாங்கி வைத்திருப்பார்கள். குழந்தைகளாகிய நாங்கள் பலூன்களை ஊதுவதையும் அவற்றைக் கொடுப்பதையும் விரும்பினோம். கிறிஸ்துமஸ் மரத்திற்கு வண்ணம் சேர்க்க பழைய கிறிஸ்துமஸ் அட்டைகளும் தொங்கவிடப்பட்டிருக்கும். பெத்லகேம் காட்சிகளை வீடுகளில் முடிந்தளவு, தாங்கள் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு செய்து வைத்திருப்பார்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுடன் கூடிய பலூன்கள் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு தொங்கவிடப்படுகின்றன.
குழந்தைகளாகிய நாங்கள் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் மரம் திட்டத்தை எதிர்பார்த்தோம். எல்லா குழந்தைகளுக்கும் பரிசு கிடைக்கும் என்பதால் இது மிகவும் முக்கியமானது. உள்ளூர் சபை அனைத்து குழந்தைகளின், அனைத்து உறுப்பினர்களின் தரவுத்தளத்தை உருவாக்குகிறது. அவர்கள் பரிசுகளை வாங்கி, ஒரு பெரிய கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடுகிறார்கள். பின்னர் ஒரு சிறிய சபை ஆராதனைக்குப் பிறகு ( பெரும்பாலும் கிறிஸ்துமஸ் முன் ஞாயிறு மாலை) சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகள் நடைபெறும், அதற்கு பின்பதாக ஞாயிறு பள்ளி ஆசிரியர் அல்லது போதகர் பெயர்களை ஒவ்வொன்றாக வாசித்து குழந்தைகள் பரிசுகளைப் பெறுகிறார்கள். பரிசுகள் கவனமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன, ஏனெனில் அவை பயன்பாட்டு மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். சில பரிசுகள் பள்ளியில் பயன்படுத்தக்கூடிய வடிவியல் பெட்டியாக இருக்கலாம் அல்லது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பாத்திரங்களாகவும் இருக்கலாம்.
கிறிஸ்துமஸ் நாள் மிக விரைவில் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு எழுந்தோம். நாங்கள் குளிர்ந்த நீரில் விரைவாக குளித்து, எங்கள் புதிய ஆடைகளுக்காக ஜெபித்து, அவற்றை அணிந்துகொண்டு அதிகாலை 5 மணிக்கு சபைக்கு விரைந்தோம். சபை மக்களால் நிரம்பி வழிந்தது ஒரு பெரிய நிகழ்வு. வெளியில் பலர் அமர்ந்து அல்லது நின்று கொண்டிருப்பதால் இடம் இருக்காது. அனைவரும் சிறந்த ஆடைகளை அணிந்திருந்தனர், இது ஒரு அற்புதமான காட்சி. பாடகர் குழு சிறப்பாக செயல்படுகிறது, மேலும் பிரசங்கம் வந்திருக்கும் ஜனங்களை ஊக்குவிப்பதாகவும் குறுகியதாகவும் காணப்படும். ஆராதனைக்குப் பிறகு, ஆலயத்திற்கு வெளியே பட்டாசுகள் வெடிக்கப்படும். சத்தமாகவும் மற்றும் வண்ணமயமான கொண்டாட்டமாகவும் கிறிஸ்துமஸ் இருக்கும்.
ஆராதனை முடிந்ததும், வீட்டில் சிறப்பான உணவு ஆயத்தமாக்கப்படும். கேக், வடை, இட்லி மற்றும் தோசை காலை உணவாக இருக்கும்; பிறகு அம்மா காரமான பிரியாணி சமைப்பார். இதற்கிடையில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். சலவை செய்பவர், பால்காரர், தபால்காரர், மற்ற சேவை வழங்குநர்கள் போன்றோரும் அந்நாளில் கவனிக்கப்படுவர். அதாவது அவர்களுக்கு கேக் மற்றும் சில நேரங்களில் ஒரு சிறப்பான பரிசாக பணமும் பெறுவார்கள். பின்பதாக நாங்கள் ஒரு நல்ல மதிய உணவை சாப்பிடுவோம், சில சமயங்களில் விருந்தினர்களும் உடன் இருப்பார்கள். நாங்கள் வளர்ந்து வாலிப வயதாக காணப்படும் போது, நம்முடைய நண்பர்கள் சிலரையும் அழைப்போம். மதிய உணவுக்குப் பிறகு, சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள், தர்மம் எடுத்து பிழைப்போர் போன்றோருக்கு இயன்ற உதவி அல்லது உணவுகளை அளித்து அதை மகிழ்ச்சியோடு கொண்டாடுவது வழக்கம். ஆம், நட்சத்திரங்கள், கிறிஸ்துமஸ் மரம், சாண்டா கிளாஸ், தேவதூதர்கள், பாடல்கள், கேக்குகள், சுவையான உணவுகள், கிறிஸ்துமஸ் அட்டைகள், புதிய உடை, பரிசுகள், ... ஆகியவை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகும்.
Author : Rev. Dr. J. N. Manokaran