கடவுள் இல்லாமல் உலகம் இல்லை. உலகம் இல்லாமல் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் இல்லாமல் மதங்கள் இல்லை. மதங்கள் இல்லாமல் வழிபாடுகள் இல்லை. வழிபாடுகள் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. இரண்டு வார்த்தைகளால் இணைக்கப்பட்டுள்ள ஒரு சொல் தான் கடவுள் ஆகும். கட+உள்=கடவுள். எல்லாவற்றையும் கடந்தவரும், அதே வேளையில் அனைத்திற்குள்ளும் இருப்பவரே கடவுள். ஒன்று சேராத இரண்டு பதங்கள் ஒன்றாக இருப்பவரே கடவுள். கடவுள் யாருக்கு? அவர் எந்த மதத்தை சார்ந்தவர்? கடவுளுக்கு எந்த வழிபாட்டு முறை ஏற்றது? கடவுள் யார்? அவருக்கு என்ன பெயர்? என்ற எந்த கேள்விக்கும் மனிதர்களால் பதில் சொல்ல முடியாது மாறாக அவர் மட்டுமே பதில் சொல்ல முடியும். கடவுள் சார்பில் மனிதர்கள் பதில் சொல்லலாம் ஆனால் கடவுள் சொல்லும் பதிலை மட்டுமே சொல்ல வேண்டும்.
கடவுள் ஈன்றெடுத்த உலகத்தில் ஓரறிவு உயிரினமாகிய தாவரங்கள் முதல் ஆறறிவு மனிதர்கள் வரை வாழ்கின்றனர். பகுத்தறிவு பெற்றிருக்கும் மனிதர்களே மற்ற உயிரினங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும், அவைகளை பெருக்கவும் பணிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் பொறுப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள மனிதர்கள் கடவுளின் பிரதிநிதிகளாக செயல்படவேண்டியவர்கள் சுய-நலம், ஆணவம், பிரிவினைவாதம், அறியாமை மற்றும் அன்பின்மை போன்ற தீய குணங்களால் சிக்குண்டு தவிக்கிறார்கள். மாறிப்போன மனிதர்களால் மற்ற உயிரினங்களின் குணங்களும் மாறிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டே போகும் உலகம் மாற்றம் அடைய வேண்டுமானால் மனிதன் மாற வேண்டும். மனிதன் மாற்றம் பெறுவதற்காக கடவுள் மனிதனாக மாறினார்.
கடவுள் மனிதர்கள் மீட்கப்பட்டவும், மனிதர்கள் மூலம் மற்ற உயிரினங்களும் மீட்கப்பட கடவுள் மனிதனார். ‘பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு’ என்னும் பழமொழிக்கேற்ப மனிதன் மேல் கொண்டுள்ள கடவுளின் அன்பு அவனுக்காக அவரே தன்னை மாற்றிக்கொண்டு மனிதனானார். கடவுள் மனிதனாவது அசாத்தியமானதல்ல. கடவுளால் முடியாதது ஏதும் இல்லை. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்? மனிதர்கள் மேல் கொண்டுள்ள கடவுளின் அடக்க முடியாத அன்பால் அவர் இயேசு என்னும் பெயரில் மனிதனாகப் பிறந்தார் என்று பைபிள் வரலாறு கூறுகிறது.
மனிதர்களை தன்னுடன் சேர்த்துக்கொள்ளும் நடவடிக்கையில் மனிதனானார். நமக்காக ஒருவர் தாழ்மையாகி, தியாகியாகினால் நாம் அவருக்காக உயிரையும் கொடுப்பது இயல்பு. அப்படியிருக்க, நமது பாவங்களுக்காக பலியாகி, நம்மை அவருடன் வாழவும், அவருடைய குணங்களை பெற்று, அவரைப் போல வாழ நமக்காக கடவுளே மனிதனான இயேசுவுக்கு நம்மை கொடுப்பது எவ்வளவு முக்கியமானது? மனிதர்கள் கடவுளைப் போல மாறவேண்டும் என்று மனிதனான கடவுளை நமது வாழ்வில் ஏற்றுக்கொண்டால், நாம் மற்ற உயிரினங்களை மீட்டு உலகைக் காக்கும் கடவுளைப் போன்று மாறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Author. Rev. Dr. C. Rajasekaran