சமாதானத்தின் கடவுள் இப்பூமியை சமாதானத்துடனும் சந்தோஷத்துடனும் உண்டாக்கினார். மனிதனின் துனையுடன் சாத்தான் இப்பூமியின் சமாதானத்தை குலைத்துப்போட்டான். இப்பூமியின் சமாதானம் மங்கிப்போய் பாதிக்கப்பட்டாலும் முற்றிலுமாய் அழிக்கப்படமுடியவில்லை. கடவுள் தனது இனையற்ற கிருபையாலும் நித்திய திட்டத்தாலும் தனது ஒரே பேரான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இப்பூமியின் சமாதானத்தை மீட்டு அதில் தனது பிள்ளைகள் வழியாக சமாதானத்தின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க சித்தம் கொண்டார்.
கிறிஸ்துமஸ் என்பது சமாதானம் மற்றும் சந்தோஷத்தின் பண்டிகை. இதை அதன் சந்தோஷத்துடனும் சமாதானத்துடனும் கொண்டாட வேண்டும். இவ்வனுபவம் தனி வாழ்விலும் பொதுவாழ்விலும் அப்பியாசிக்கும் போது கடவுளின் வாக்குதத்தத்தின்படி இப்பூமி தேவசமாதானத்தினால் நிரம்பும். பூமியின் சமாதானம் எங்கு பிறந்ததோ அங்கு ஆரம்பிக்கிறது. கடவுளே சமாதானம் மற்றும் சந்தோஷத்தின் பண்டசாலை. பூமியில் சமாதானம் சாத்தியமானதொன்றாகும் ஆனால் மனிதன் கடவுளிடமும் சகமனிதனிடமும் மற்றும் சகல உயிரினங்களிடமுள்ள உறவையும் பொறுத்தே இது அமைகிறது. இதை இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் மூலம் இவ்வுறவுகளை அன்பென்னும் சங்கிலியால் கடவுள் இனைக்கிறார்.
கடவுளோடுள்ள மனிதனின் உறவால் பூமியில் சமாதானம்: கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான சமாதான உறவு மனிதன் கடவுளை விசுவாசியாததாலும் கீழ்படியாததாலும் முறிந்தது. மனிதனுடனான முறிந்த உறவை கடவுள் தனது குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் மீட்டெடுத்தார். இம்மீடபின் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினையை இயேசு தன்மேல் ஏற்றுக்கொண்டார். இதனால் இயேசுவுக்கு பிதாவாகிய கடவுளோடிருந்த தனித்துவ உறவையும் தெய்வ சமாதானத்தையும் நாம் பெற்றுக்கொள்கிறோம். இயேசு மனிதனோடு தன்பிதாவை இனைத்ததால் நமக்கு அவர் பரலோகப்பிதாவானார். இவ்வுறவினால் வரும் சமாதானம் கடவுளின் வாக்குத்தத்தமாக இருந்தாலும் அதை கடவுளை மட்டும் விசுவாசிப்பவர்களுக்கும் கீழ்படிபவர்களுக்கும் வழங்குகிறார். கடவுளோடு மனிதன் கொண்டுள்ள உறவே இப்பூமிக்கு மெய்யான சமாதானம்.
சகமனிதனோடுள்ள மனித உறவால் பூமியில் சமாதானம்: சமாதானத்திற்கு உறவே அடிப்படையாக உள்ளது. மனிதர்கள் தங்கள் சகமனிதர்களோடு சீரான உறவு இல்லாதவரை இப்புவிக்கு சமாதானம் சாத்தியமில்லை. மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபட்டிருந்தாலும் ஒவ்வொருவரும் தங்கள் குணங்களில் தனித்துவம் வாய்ந்தவர்கள். இயேசு நம்மை பரலோகப்பிதாவுடனான முறிந்த உறவை மீட்க மட்டும் பிறக்காமல் கடவுளின் குமாரர்கள் குமாரத்திகளாகிய நமது சக மனிதர்களிடமும் நல்லுறவை ஏற்படுத்தவும் பிறந்தார். பரலோகப்பிதாவுடனான நமது உறவு சக மனிதர்களுடனான நல்லுறவின் வழியாக நிறுபனமாகவேண்டும். பரலோகப்பிதாவுடனான நமது நல்லுறவு சக மனிதர்களான நமது சகோதர சகோதரிகளுடனான நல்லுறவிற்கு நேராக வழிநடத்துகிறது இதனிமித்தம் இப்பூமியில் சமாதானம் உயிரோட்டமாக வாழும்.
எல்லா உயிரினங்களிடமுள்ள மனித உறவால் பூமியில் சமாதானம்: எல்லா உயிரினங்களையும் படைத்தவரிடத்திலிருந்தே சமாதானம் இப்பூமிக்கு வருகிறது. மனிதனின் பாவமே இப்பூமிக்கு பகைமையை கொண்டு வந்தது. மனிதனின் பாவம் மனிதனை மட்டுமல்ல எல்லா உயிரினங்களின் சமாதானமின்மைக்கும் காரணமாக அமைந்தது. மனிதன் கடவுளோடுள்ள சமாதானத்தைமட்டுமல்ல சக மனிதர்களோடுள்ள சமாதானத்தையும் அத்துடன் எல்லா உயிரினங்களிடமுள்ள சமாதானத்தையும் இழந்தான். ஆகையால் எல்லா உயிரினங்களும் தங்களுக்குள்ளும் மனிதர்களிடமும் சமாதானமாகவும் பயமின்றி வாழவும் ஏங்கி தவிக்கின்றன. பூமியில் ஏற்பட்ட இத்தவிப்பிற்கு மனிதனே மூலகாரணமானதால் எல்லா உயிரினங்களும் இழந்த சமாதானத்தை மீட்டெடுக்கும் பொறுப்புக்குள்ளாகிறான். இது கடவுளின் திட்டம். மனிதன் எல்லா உயிரினங்களிடமும் அன்புசெலுத்த ஆரம்பிக்கும் போதும் அத்துடன் கடவுள் ஏதேன் தோட்டத்தில் அனுமதியளித்த தாவர உணவு வகைகளை மட்டும் உண்டு அனுமதியளிக்காத புலால் உணவுகளை தவிர்த்துவிடும் காலத்தில் இத்திட்டம் கட்டாயம் நிறைவேறும். தாமாக தரும் தாவர உணவுகளைவிட்டு பிற உயிர்களை விரட்டி பிடித்து அடித்துக் கொன்று சாப்பிடும் காலம் மாறவேண்டும். மனிதன் கடவுளிடமும் சகமனிதர்களிடமும் கொண்டுள்ள நல்லுறவு எல்லா உயிரினங்களிடமும் பொறுப்புள்ள நல்லுறவை ஏற்படுத்தவும் அவைகளின் அழகை பாதுகாக்கவும் பராமரிக்கவும் வழிநடத்துகிறது. இப்பொறுப்புள்ள நல்லுறவு பூமிக்கு சமாதானத்தை ஏற்படுத்துகிறது. எல்லா உயிரினங்களிடமுமான நமது அன்பும் நல்லுறவும் அவைகளுக்கு சமாதானத்தையளித்து வேட்டைகாரர்களுக்கும் மரணத்திற்கும் பயமின்றி வாழ வழி வகுக்கிறது.
இயேசு கிறிஸ்து கடவுளின் உச்சகட்ட அன்பின் வெளிப்பாடு. கடவுளின் அன்பு வரலாற்றில் கடவுள் நியமித்த காலம் நிறைவேறினபோது இப்பூமியில் அவதரித்தார். இயேசுவின் பிறப்பு இப்பூமியில் கடவுளின் அன்பும் சமாதானமும் வருவதற்கு ஆரம்பமாயிருந்தது. இச்செய்தியை கிறிஸ்துமஸ் காலத்தில் மட்டுமல்ல எல்லா காலத்திலும் எடுத்துரைக்க வேண்டிய செய்தி. கடவுளின் அன்பும் சமாதானமும் இல்லாமல் கிறிஸ்துமஸ் வெறும் அர்த்தமற்ற கொண்டாட்டமாகத்தானிருக்கும். கடவுளின் அன்பிற்கும் சமாதானத்திற்கும் கடவுளின் பிள்ளைகளே சாட்சி. கடவுளிடமும் நமது சக மனிதர்களிடமுள்ள நல்லுறவும் அத்துடன் கடவுளின் எல்லா படைப்புகளிடம் நாம் ஏற்படுத்தும் மிதமான நல்லுறவும் எல்லாவற்றிற்கும் மேலாக நம் இருதயத்திலிருக்கும் மெய்யான சமாதானமும் கடவுளின் சமாதானத்தை இப்பூமிக்கு கொண்டுவரும். கடவுளையும் கடவுள் படைத்தவைகளையும் மட்டும் நேசித்து நாம் படைத்தவைகளின்மேல் உள்ள நமது பற்றை கைவிட்டால் நமக்கு மட்டுமல்ல நம் சக மனிதர்களுக்கும் அத்துடன் நம்மை சார்ந்து வாழும் எல்லா உயிரினங்களுக்கும் சமாதானம் கிட்டும். இவ்வண்ணமே இப்பூமிக்கு சமாதானம் சாத்தியம். கடவுளின் இத்திட்டத்தில் நாமும் இணைவோம் இந்நன்நாளில்.
Author. Rev. Dr. C. Rajasekaran