நோக்கமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
நொய்டாவில் பல அடுக்குமாடி குடியிருப்பில் சத்யேந்திராவின் குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் தங்கள் குழந்தை ரிவானின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட விரும்பினர். நண்பர்களை அழைத்து பெரிய விருந்தும் ஏற்பாடு செய்திருந்தனர். பெற்றோர்கள் கூடத்தை அலங்கரிப்பதிலும், தளபாடங்கள் ஏற்பாடு செய்வதிலும், பலூன்களை சரி செய்வதிலும் மும்முரமாக இருந்தனர். மக்கள் உள்ளே செல்லத் தொடங்கியபோது பிரதான கதவு திறந்தே இருந்தது. சிறுவன் பிரதான கதவிலிருந்து நழுவி, படிக்கட்டுகளில் இரும்பு கிரில்லைப் பிடித்துக் கொண்டிருந்தான். இரண்டு இரும்பு கம்பிகளுக்கு நடுவே தலையை வைத்து, கீழே பார்த்து, ஆராய விரும்பி, பன்னிரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தான் (என்டிடிவி 24 ஆகஸ்ட் 2021)
1) நிகழ்வு:
அந்த ஆண் குழந்தை ரிவானுக்கு பிறந்தநாள். இருப்பினும், கொண்டாட்ட நிகழ்வின் மீது கவனம் திரும்பியது. பெற்றோரும் மற்றவர்களும் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் மும்முரமாக இருந்தனர், பிறந்தநாளான குழந்தையை கண்டுகொள்ளவில்லை. வருந்தத்தக்கது என்னவெனில், ரிவானின் பிறந்தநாள் அவன் இறந்த நாளாக மாறியது. இப்போது நடந்தது போல பலருக்கு கிறிஸ்மஸ் என்பது ஒரு நிகழ்வு. வரலாற்று முக்கியத்துவம் அதில் தெரியவில்லை அல்லது மறக்கப்பட்டது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16) என்பது மறக்க முடியாதது.
2) விருந்தினர்கள்:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் விருந்தினர்களை மகிழ்விப்பதாகும். புரவலர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தார், அயலவர்கள், சக பணியாளர்கள் மற்றும் நண்பர்களுடன் சிறந்த உரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த வியாபாரத்தில், குழந்தை மறக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் காலத்தில் ஏழைகளை கவனிப்பதும், அவர்களைப் பார்ப்பதும் முக்கியம். விருந்தினராக யாரை அழைக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்குக் கற்பித்தார்; "நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார்" (லூக்கா 14:13,14). தங்கள் வட்டாரத்தில் சிறியவர்களும் ஒதுக்கப்பட்டவர்களும் தங்கள் பரிசுகளால் ஆசீர்வதிக்கப்படுவதை உறுதி செய்யும் தேவனின் அனைத்து பரிசுத்தவான்களுக்காகவும் தேவனுக்கு நன்றி.
3) விருந்து:
கொண்டாட்டத்தில், விருந்து முக்கியமானது. சிறந்த சமையல்காரர் மக்கள் ரசிக்க சிறந்த உணவை வெளியே கொண்டு வருகிறார். பல வகையான உணவு வகைகள் இருப்பதை உறுதி செய்வது கடினமான பணியாக இருந்தது. இந்த உழைப்பில் குழந்தை மறந்து போனது. சிலருக்கு கிறிஸ்துமஸ் விருந்து, விருப்ப உணவு. ஒரு குடும்பம் பொருளாதார நிலையில் மற்றவர்களை விட தங்களை சிறந்தவர்களாக காட்டிக்கொள்ள விரும்பி, கோழி அல்லது ஆடு இறைச்சிக்கு பதிலாக வான்கோழியால் செய்யப்பட்ட பிரத்யேக பிரியாணியை சாப்பிட முடிவு செய்தனர். ஒரு வாடகை இடத்தில் அந்த விருந்தை நடத்த அவர்கள் கடன் வாங்கினார்கள். இருப்பினும், மகிழ்ச்சி இல்லை, ஆனால் சச்சரவு மற்றும் கசப்பான சண்டைகள் மற்றும் களியாட்டங்கள் அவர்களை நோயுற்றவர்களாகவும், மனச்சோர்வடைந்தவர்களாகவும், கடனாகவும் ஆக்கியது. "தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது" (ரோமர் 14:17).
4) அந்தஸ்தை நிலைநாட்டுதல்:
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் சமூக மற்றும் வருமான நிலையை உலகுக்குக் காட்டுவதற்காகப் பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். குழந்தையின் வாழ்க்கையில் கவனத்தையும் மற்றும் அக்கறையையும் முதலீடு செய்வதற்கு பதிலாக, அவர்களின் பிறந்தநாளை தங்கள் சுயத்தை தம்பட்டம் பண்ணுகிறார்கள். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஆவிக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்படும்போது, உலக ஆசைகள் அனைத்தும் முட்டுக் கொடுக்கும். மிகப் பெரிய நட்சத்திரத்தைத் தொங்கவிடுவது, அல்லது பல வண்ணத் தொடர் விளக்குகள் வைத்திருப்பது, கிறிஸ்துமஸ் மரங்களை இறக்குமதி செய்தல், இயற்கையான காட்சியை உருவாக்குதல் போன்றவை. அந்தத் தேவையில்லாதவற்றில் நேரத்தையும், பணத்தையும், சக்தியையும் செலவழிக்கும்போது, இன்றியமையாத துதி ஆராதனைகள், ஜெபம், வார்த்தையைப் பகிர்ந்துகொள்வது, அக்கறை காட்டுவது ஆகியவை புறக்கணிக்கப்படும்.
5) பாரம்பரியம்:
குழந்தைகளின் பிறந்தநாள் இன்று பெரியளவில் கொண்டாடப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. பிறந்தநாளைக் கொண்டாடும் சிறப்புப் பேக்கேஜ்களை வழங்கும் உணவகங்கள் உள்ளன. எனவே, இது குடும்பத்திற்கு ஒரு பாரம்பரியம். உலகம் முழுவதும், கிறிஸ்துமஸ் ஒரு கலாச்சார கொண்டாட்டமாக அல்லது ஒரு பாரம்பரிய சடங்கு அல்லது தேவாலயத்தின் வருடாந்திர நிகழ்வாக மாறியுள்ளது. கொண்டாட்டத்திற்கான காரணமாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, புறக்கணிக்கப்படுகிறார், புறந்தள்ளப்படுகிறார் அல்லது மறக்கப்படுகிறார். சில நகரங்களில், சிறந்த கிறிஸ்துமஸ் மரங்களுக்கான போட்டி உள்ளது. சில நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் சாண்டா கிளாஸ் உடையணிந்து பாடிக்கொண்டே செல்கிறார்கள். கச்சேரிகளிலும் மால்களிலும் கிறிஸ்துமஸ் பாடல்களின் அர்த்தம் தெரியாமல் பாடுகிறார்கள்.
நமது பாவங்களுக்கான மீட்பு
ஆதாமும் ஏவாளும் வேண்டுமென்றே கீழ்ப்படியாமையால் பாவம் செய்து மனிதகுலத்தின் மீது பாவத்தையும் மரணத்தையும் சாபத்தையும் கொண்டு வந்தனர். வீழ்ந்த மனிதகுலத்தை மீட்பதற்காக பெண்ணிடம் இருந்து ஒரு வித்து பிறக்கும் என்று தேவன் வாக்குறுதி அளித்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெத்லகேமில் ஒரு எளிய மாட்டுத் தொழுவத்தில் உலகத்தின் மீட்பராக தேவனால் வாக்களிக்கப்பட்டபடி பிறந்தார். அவர் நம் பாவங்களுக்காக மரிக்கவும், நமக்கு மன்னிப்பு வழங்கவும் பிதாவாகிய தேவனால் அனுப்பப்பட்டார். இவ்வாறு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக நாம் பரிசுத்த தேவனுடைய பிரசன்னத்தை அணுகி அவருடன் என்றென்றும் வாழ முடியும்.
சவால்
துரதிர்ஷ்டவசமாக, மக்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறந்துவிடுகிறார்கள், ஆனால் தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள், நிறுவனங்கள், நகரங்கள், தேசங்கள் என கொண்டாட்டங்களை மாத்திரம் விடவில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறந்ததின் விளைவு தேவ நோக்கத்தையும் வாழ்க்கையின் நோக்கத்தையும் தவறவிட்டு கொண்டாட்டத்தை பெரிதாக்குகிறார்கள்.
இயேசு வருகையின் காலத்தில் இருக்கும் நாம் சபை என்னும் நாட்காட்டி அழைப்பது போல், மனிதகுலத்திற்கான தேவனின் அன்பு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் பற்றி அமைதியாக சிந்திக்க வேண்டிய நேரமிது. கிறிஸ்துமஸ் பருவம் என்பது ஒரு மகிமையான மாற்றத்திற்காக நம் இதயத்திலும் மனதிலும் பிறக்கும் நம் ஆண்டவரை வரவேற்பதாகும்.
Author : Rev. Dr. J. N. Manokaran