மாம்சமாகுதல் - அவதாரம்
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே மாம்சமானவர்; அவர் பல அவதாரங்களில் ஒன்றல்ல. பொதுவாக மனித வரலாற்றில் தேவை ஏற்படும் போதெல்லாம் கடவுள் மனிதனாக மாறுவது என்பது சில மதத்தில் காணமுடிகின்றது. இத்தகைய அவதாரங்கள் பூமிக்கு வருவதன் முக்கிய நோக்கம் பாவிகளை அழித்து தர்மத்தை நிலைநிறுத்துவதாகும். இருப்பினும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அவதாரம் (மாம்சமானது) பாவிகளை இரட்சிப்பதற்காகவே (லூக்கா 5:32). எல்லா மனிதர்களும் பாவம் செய்திருக்கிறார்கள், விதிவிலக்கு இல்லை என்று வேதாகமம் தெளிவாக அறிவிக்கிறது (ரோமர் 3:23). அப்படியானால், எல்லா மனிதர்களும் கொல்லப்படுவதற்கு அல்லது அழிக்கப்படுவதற்குத் தகுதியானவர்கள். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவிகளைக் காப்பாற்ற (இரட்சிக்க) வந்தார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பாவத்தின் பிரச்சினையைக் கையாள்வதன் மூலம் பாவிகளை இரட்சிக்கிறார். அடிப்படையில், பாவம் என்பது கீழ்ப்படியாமை மற்றும் தேவனுக்கு எதிரான கலகம். பாவத்தின் இந்த ‘கொடிய வைரஸ்’ இவ்வுலகில் பிறந்த மனிதர்கள் அனைவரையும் தாக்கியுள்ளது. எனவே, கல்வாரி சிலுவையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கொடிய வைரஸ் அழிக்கப்படுவது அவசியமானது. "மரணத்தின் கூர் பாவம்" (1கொரிந்தியர் 15:56). "அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?" (1கொரிந்தியர் 15:54,55). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதல் மனிதகுலத்தை ஆளும் கூரை அடையாளம் கண்டு, பிரித்தெடுத்து தோற்கடித்தது.
இன்னும் ஒருமுறை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதல் அனைவருக்குமான பாவத்தையும் மரணத்தையும் தோற்கடித்தது (ரோமர் 6:10). ஆகவே, பாவம் பெருகும்போது அவர் மீண்டும் மீண்டும் வர வேண்டியதில்லை. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதல் பாவிகள் மனந்திரும்பி நீதிமான்களாக மாற உதவுவதாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினாலே தங்கள் பாவங்களைச் சுத்திகரித்தால் மன்னிக்கப்பட்டவர்களைத் தவிர நீதிமான்கள் எவருமில்லை (ரோமர் 5:1; 1யோவான் 1:7).
எனவே, மாம்சமாகுதல் என்பது மனிதகுல வரலாற்றில் ஒரு தனித்துவமான, தரமான ஒரே நிகழ்வு. பாவம், மரணம் மற்றும் சாத்தானை ஒருமுறை தோற்கடிக்க, மரண தண்டனையை தனக்குத்தானே ஏற்றிக்கொண்டு, மரித்தோரிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுப்பப்பட, தேவனுடைய குமாரன் மனித உருவம் எடுத்தார். "எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான்" (சங்கீதம் 32:1).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தால் நீங்கள் சுத்திகரிக்கப்பட்டு மன்னிக்கப்பட்டீர்களா?
Author : Rev. Dr. J. N. Manokaran