அவர் தோளின்மேல் கர்த்தத்துவம்
அரசாங்கம் என்பது ஒரு அமைப்பு அல்லது நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் மக்கள் குழு என்று விவரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மக்கள் அரசாங்கம் என்பது ஞானமாகவும் அதிகாரமிக்கதாகவும் செயல்பட வேண்டும் என்றும், ஒரு தந்தையைப் போன்று ஒரு மென்மையான ஆளுகை நிறைந்ததாகவும் மற்றும் சமாதானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் அரசாங்கத்திற்காகவும் ஏங்குகிறார்கள். ஆனாலும் தலைமுறையாக தலைமுறையாக ஏக்கமும் ஏமாற்றமும் தான் தொடர்கிறது. ஏசாயா தீர்க்கத்தரிசி ‘ஒரு குழந்தையைப்’ பற்றி கூறுகிறார், அதாவது அரசாங்கம் அவரது தோளின் மேலிருக்கும் என்கிறார். "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்" (ஏசாயா 9:6). அதாவது, ஒரு நபரின் மீது அரசாங்கம் என்றால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே அந்த நபர். "ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது" (கொலோசெயர் 1:16) என்பதை பவுல் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்.
அவருடைய ஆளுகைக்கு பின்வரும் உள்ளார்ந்த மதிப்புகள் உள்ளன;
1) ஆலோசனை கர்த்தா:
வீழ்ந்து போன இந்த பாவ உலகில் அனைத்து பிரச்சனைகளையும், சாபங்கள் மற்றும் பாவத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என அனைத்தையும் சரி செய்யும் அவர் அற்புதர் மட்டுமல்ல, அதீத ஞானமுள்ளவர். உலகம் முழுமையும் கொரோனா தொற்றுநோயால் பல மாதங்கள் பாதிக்கப்பட்டபோது அரசியல் தலைவர்கள், மருத்துவ வல்லுநர்கள், நிர்வாகங்கள் என எவராலும் இந்த சிக்கலைச் சமாளிக்க போதுமான அறிவோ அல்லது ஞானமோ அல்லது திறமையோ அல்லது ஆலோசனையோ வழங்க முடியவில்லை. இது மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரங்களையும் மற்றும் தேசத்தின் பொருளாதாரங்களையும் நாசமாக்கியது.
2) சர்வவல்லவர்:
“தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன், வல்லமை தேவனுடையது என்பதே" (சங்கீதம் 62:11). "வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது" (மத்தேயு 28:18). கர்த்தராகிய இயேசுவின் கல்லறையை ஆட்சி செய்பவர்களாலோ மற்றும் மத அதிகாரிகளாலோ மூட முடியாதபடி இருந்தது. ஆம், உயிர்த்தெழுந்த தேவனுக்கு முன்பாக அடைக்கப்பட்ட கதவு என்று எதுவுமில்லையே.
3) நித்திய பிதா:
கர்த்தராகிய இயேசு எல்லா உயிர்களுக்கும் புதிய வாழ்க்கைக்கும் ஆதாரமாக இருக்கிறார். ஒரு தந்தையின் அன்பு மற்றும் தாயின் மென்மையுடன், அவர் தனது பிள்ளைகளுடன், அவருடைய ராஜ்யத்தின் குடிமக்களுடன் பழகுகிறார். அவரது ஆளுகை மென்மையும், உணர்வுள்ளதும், அக்கறையும், அரவணைப்பும், இரக்கமும், உறுதியான அன்பும் மற்றும் தயவும் கொண்டது.
4) சமாதான பிரபு:
தேவன் ஆட்சி செய்யும் இடத்தில் நிச்சயம் சமாதானம் உண்டு. ஆண்டவர் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் மற்றும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதையே விரும்புகிறார். போர், சண்டை, வெறுப்பு, கலகங்கள், துப்பாக்கிச் சூடு, பயங்கரவாதம், கலவரம், வன்முறை, கண்ணிவெடிகள் மற்றும் வெடிப்புகள் ஆகியவற்றிற்கு மாறானது தான் சமாதானம்.
நான் அவருடைய ஆளுகை மற்றும் அரவணைப்பின் கீழ் இருக்கிறேனா? என சிந்திப்போம்.
Author : Rev. Dr. J. N. Manokaran