நம் உடல் மற்றும் மனது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதில் கடவுள் மிகவும் அக்கரையுள்ளவர். காரணம், நமது சரீரம் அவர் வசிக்கும் வீடாகவும், அவர் பயணிக்கும் வாகனமாகவும் இருக்கிறது. நமது மனது கெட்டுப்போவதால் உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. மனதை தூய்மைப்படுத்த கடவுளைப் பற்றிய சிந்தனை அவசியம். அவரை சிந்திப்பதற்காக கடவுளே மனிதனாகப் பிறந்து மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காண்பித்தார். மனித பாவம், சாபம், வியாதிகளுக்காகவும் அவர் பலியானதால் அவருடைய தழும்புகளினால் குணமடைகிறோம்.
இயேசு உலகத்தில் பிறந்ததால் தீராத வியாதிகள் மனதிலும், உடலிலும் தீர்ந்துவிடுகிறது என்பதற்கு கோடானகோடி மக்கள் சாட்சி. இன்பத்திலும், துன்பத்திலும் இயேசுவின் போதனைகள், அவர் வாழ்ந்த வாழ்வு பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தால் நல்லெண்ணங்கள் மனதில் தோன்றும். அது மனதிலும், உடலிலும் ஆரோக்கியத்தை கொடுக்கும். ‘இயேசுவின் தழும்புகளால் குணமாகிறீர்கள்’ ‘நான் உங்கள் வியாதிகளை அகற்றுவேன்’ ‘நம்பிக்கையுள்ள பிரார்த்தனை நோயாளிகளை குணமாக்கும்’. பரிகாரி இயேசுவின் இவ்வாக்குகளை நம்புவோருடைய தீராத நோய்கள்; மற்றும் பெரும்பாலான வியாதிகள் வருவதற்கான பாவம் அத்துடன் செய்வினைகளும் நீங்கிப்போகும்.
இயேசுவே வியாதிப்படுக்கையில் இருப்போருக்கு மனதிற்கு ஆறுதலும், உடலுக்கு மருந்துமாயிருக்கிறார். இயேசுவின் பிறப்பு எல்லா மனிதர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அவர் நம் வாழ்வில் பிறந்தால் நம் மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் பிறக்கும், அத்துடன் இயேசுவைப் போல நம் வாழ்வும் தூய்மை, வாய்மை மற்றும் மேன்மை அடையும். உங்கள் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியத்திற்காக எங்கள் வாழ்த்துதல் மற்றும் பிரார்த்தனைகளை தெரிவிக்கிறோம்.
Author. Rev. Dr. C. Rajasekaran