தேவனின் தலையீடு
கர்த்தர் மனிதகுலத்தின் மேல் அக்கறையாகவும் கரிசனையாகவும் உள்ளார் என்பதை அவருடைய குமாரனான இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பி மனுக்குலத்தின் செயல்பாடுகளில் தலையிட முடியும் என்பதை அறிவது ஆச்சரியமாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் அவருடைய அன்பையும், நம் வாழ்வில் அவரது ஈடுபாட்டையும், அவரின் அற்புதமான வழிகாட்டுதலையும் நமக்கு நினைவூட்டுகிறது. கிறிஸ்துமஸ் என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதலில் ஒரு மிகப்பெரும் நிகழ்வாக இருந்தாலும், இந்த உலகில் அவர் பிறப்பின் நிகழ்வில் பங்காற்றிய ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் தேவன் கிரியைச் செய்தார். அவர்களில் மரியாளும் ஒருவர், ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் தேவனின் அற்புதமான அக்கறை மற்றும் ஈடுபாட்டிற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
நம்மேல் சிந்தையுள்ள தேவன்
கர்த்தர் மனிதகுலத்தின் மேல் சிந்தையுள்ள தேவன். வாழ்க்கையின் பெரும்பகுதியை வெளியில் வனாந்தரத்தில் வாழ்ந்த தாவீது, தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போதும் அல்லது சவுலிடமிருந்து தப்பித்து உயிருக்காக ஓடிக்கொண்டிருக்கும் மலைகளிலும் கர்த்தரின் அற்புதமான படைப்பைக் கண்டு வியந்தார். அவர் பரந்த வானத்தையும், தெளிவான இரவில் அழகான நட்சத்திரங்களையும், மலைகள், பள்ளத்தாக்குகள், குகைகள் மற்றும் வனாந்தரங்களின் அற்புதமான அழகையும் பார்த்து, "மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்" என்று ஆச்சரியப்பட்டான் (சங்கீதம் 8:4). முழு சிருஷ்டிப்பின் பரந்த தன்மையுடன் ஒப்பிடுகையில், மனிதன் ஒரு சிறிய புள்ளியாக இருந்தாலும், கர்த்தருக்கு முக்கியத்துவம் வாய்ந்தவன். எனவே, பாழடைந்த மற்றும் வீழ்ச்சியடைந்த மனிதகுலத்தை மீட்பதற்காக அவர் தம் குமாரனை அனுப்பினார் என்பதிலிருந்து தேவனுக்கு மனிதகுலத்தின் மீதான கரிசனை விளங்குகிறது.
நம்முடைய தாழ்மையான நிலையைக் கர்த்தர் கவனத்தில் கொள்கிறார். அரச பரம்பரையான தாவீதின் வழித்தோன்றலாக மரியாள் இருந்தபோதிலும், நாடு வலிமைமிக்க ரோமானியர்களின் அடிமைத்தனத்தில் இருந்தது. எனவே, மரியாள் தனது சொந்த நாட்டில் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்த ஒரு அடிமையாக இருந்தார். உலக வரலாற்றில் எந்தவொரு பெண்ணுக்கும் கிடைக்கப் பெறாத மிக உயர்ந்த மரியாதையாகிய "கிருபை பெற்றவளே" அல்லது "கர்த்தரின் தாய்" என்று அழைக்கப்படும் பாக்கியத்தை மரியாள் பெற்றாள். ஆம், அவளுடைய தாழ்மையான நிலையைக் கர்த்தர் கவனித்தார் ( லூக்கா 1:48). எபிரெய நிருப ஆக்கியோன் “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே” (எபிரெயர் 6:10). அவர் நீதியுள்ளவர், உண்மையுள்ளவர், நம்முடைய செயல்களையும் நினைவுகூருகிறார். "சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்" (மத்தேயு 10:42).
தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு
மரியாள் தன்னைச் சுற்றி நடக்கும் சாதாரண நிகழ்வுகளில் மூழ்கியிருக்கக் கூடும். ஒரு இளம் பெண்ணாக, "என் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருக்கிறதா?" என்ற கடினமான கேள்வியை அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருப்பாள். அரசியல் கொந்தளிப்பு, மோசமான பொருளாதார மற்றும் சமூக நிலை ஆகியவற்றால், அவரது வாழ்க்கை எந்த நம்பிக்கையையும் அளிக்கவில்லை. யூத நம்பிக்கையில் பெண்களுக்கு எந்த அந்தஸ்தும் இல்லை. அவள் வாழ்வில் எதிர்காலம் எப்படி அமையும்? அவள் திருமணம் செய்து கொள்வாளா? கணவர் எப்படி இருப்பார்? அவர் உண்மையில் அவளை கவனித்துக் கொள்வாரா அல்லது சுயநலமாக இருப்பாரா? கர்த்தர் அவளை குழந்தைகளைக் கொடுத்து ஆசீர்வதிப்பாரா? ஆனால் இந்த இளம் பெண்ணுக்கு தேவன் மீது நம்பிக்கை இருந்தது, வேதாகமத்தில் உள்ள பல நபர்கள் போல அவளும் அவளது அபிலாஷைகளையும் விரக்திகளையும் தேவனிடம் பகிர்ந்துகொண்டு உரையாடி இருக்கக் கூடும். அவளுடைய எளிய நம்பிக்கை, அன்பு மற்றும் தேவன், அவருடைய வார்த்தை மற்றும் அவருடைய நோக்கங்கள் ஆகியவற்றின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை கர்த்தரின் உன்னதமான மற்றும் உயர்ந்த நோக்கங்களைப் புரிந்துகொள்ள அவளுக்கு உதவியது. காபிரியேல் அவளுக்குத் தோன்றியபோது அவள் உபவாசம் இருந்ததாகவோ ஜெபித்ததாகவோ லூக்காவோ அல்லது மத்தேயுவோ குறிப்பிடவில்லை. மரியாள் வாழ்க்கையில் அன்றாட பணி செய்து கொண்டிருந்தாள், ஆனால் கர்த்தர் தனது திட்டத்தை அவள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள். அவளுடைய வாழ்க்கை மற்றும் மனிதகுலத்திற்கான கர்த்தரின் எதிர்கால திட்டம் ஒரு தேவதூதனின் செய்தி மூலம் வெளிப்படுத்தப்பட்டது.
கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தெய்வீக திட்டத்தை வைத்திருக்கிறார். இது நம் அன்றாட வாழ்க்கையில் அதிசயமான வழிகளில் வெளிப்படுகிறது. அதை நமக்கு அறிவிக்க தேவதூதன் இருக்க வேண்டிய அவசியமில்லை. பவுலோ மோசேயோ அனுபவித்ததைப் போல வியத்தகு முறையில் இருக்க வேண்டியதில்லை. கர்த்தர் மற்ற மக்கள், சூழ்நிலைகள், கனவுகள், தேவ வார்த்தை மற்றும் பரிசுத்த ஆவியின் உள்ளார்ந்த சாட்சி மூலம் நமக்கு அதைச் செய்கிறார். எதிர்கால வாழ்க்கையின் போக்கை வியத்தகு முறையில் மாற்றக்கூடிய எந்தவொரு சாதாரண நாளிலும் அவரது சந்திப்பு நிகழலாம். பேதுரு மற்றும் யோவான் போன்ற சீஷர்கள் தங்கள் அன்றாட வேலைகளைச் செய்யும் போது அவர்களின் வாழ்க்கையை வரையறுக்கும் தருணங்களை எதிர் கொண்டனர்.
கர்த்தர் நம்மை ஆச்சரியப்படுத்துகிறவர்
மனிதர்களாகிய நமது சிறந்த அபிலாஷைகள் அவருடைய திட்டங்களுடன் பொருந்துவ்தில்லை. "அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது, அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது. சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக் கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்" (ஏசாயா 59:7,8). ஆபிரகாம் முழு உலகத்திற்கும் ஒரு ஆசீர்வாதமாக இருப்பதை கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. தாவீது தன் முழு கற்பனைத்திறன் மற்றும் கவித்தன்மையும் கொண்டு உலக வரலாற்றில் கர்த்தரின் மீட்பு திட்டத்தில் தனது பங்கை கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. எனவே, மரியாள், ஒரு கிராமத்து பெண்ணாக மற்ற சாதாரண பெண்களை போலவே இருந்தாள். தேவனுடைய "நீதியின் கருவிகளாக" (ரோமர் 6:13) நம்மை அவர் பயன்படுத்துவதற்குத் திறந்தமனமுள்ளவர்களாக அவருக்குக் கிடைக்கக்கூடியவராகவும் இருப்பதுதான் நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியமாகும். அவர் நம்மை ஒரு தனித்துவமான சூழலில் வைப்பதன் மூலம் நம்மை ஆச்சரியப்படுத்துவார், நம்மை அவருடைய சிறப்பு ஊழியர்களாகப் பயன்படுத்தி நம்மைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கானவர்களுக்கு நம்மை ஆசீர்வாதமாக மாற்றுவார். மேலும் நாம் அதிக பாதிப்புக்குள்ளாகும் போது அவருடைய மகத்துவம் வெளிப்படுகிறது.
கர்த்தர் நம்மை வழிநடத்துகிறவர்
காபிரியேல் மூலம் கர்த்தரின் செய்தியைக் கேட்டபோது உலகில் உள்ள அனைவரையும் விட மரியாள் மிகவும் குழப்பமடைந்தார். "இது எப்படி ஆகும்?" யூதாவின் கிராமப்புறங்களில் இருந்த பிரமிப்புக்குள்ளான இந்த இளம் பெண் ஆச்சரியப்பட்டாள் (லூக்கா 1:34). கர்த்தர் எப்படி இந்த அற்புதத்தை நிகழ்த்துவார் என்று தேவதூதன் அவளுக்கு விளக்கினான். கர்த்தர் நமக்கு அற்புதமான ஒன்றைச் சொல்லும்போது நாம் கேட்கும் கேள்வி "எப்படி?" என்பதாக இருக்கலாம். தனது சந்ததியினர் மணலைப் போலவோ அல்லது வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போலவோ ஏராளமாக இருப்பார்கள் என்ற வாக்குத்தத்தத்தை ஆபிரகாம் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தனது கனவுகள் எப்படி நனவாகும் என்பதை யோசேப்பு உணரவில்லை. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேலின் விடுதலை எவ்வாறு நிகழும் என்று மோசே ஆச்சரியப்பட்டார். ஆம், நம்மிடமும் இதே போன்ற கேள்விகள் உள்ளன. ஆனால், அவர்களைப் போல் நாமும் விசுவாசத்தில் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
முன்னால் சென்ற ஒட்டகத்தின் கால்தடங்களைத் தொடர்ந்து ஒரு இளைஞன் தனது தந்தையுடன் ஒட்டகத்தின் மீது பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். அவர்கள் இரவில் கூடாரத்தை அமைத்து ஓய்வெடுத்தனர், முன்னால் சென்ற ஒட்டகம் தூரம் சென்றிருந்தது. திடீரென்று ஒரு புயல் மணல் பாலைவனம் முழுவதையும் புரட்டிப்போட்டது மற்றும் கால்தடங்கள் மறைந்தன. பின்தொடர்வதற்கு பாதைகள் எதுவும் இல்லாததால், அவர்கள் எப்படி பயணத்தைத் தொடரலாம் என்று அந்த இளைஞன் யோசித்தான். அதற்கு அப்பா, “கவலைப்படாதே. மணலில் கால்தடங்கள் எப்போதும் இருக்காது, ஆனால் நமக்கு திசையைக் காட்டும் நட்சத்திரங்கள் எப்போதும் இருக்கும். ஆம், கால்தடங்கள் மறைந்தாலும், இன்னும் நட்சத்திரங்கள் உள்ளன. மனித அறிவு மற்றும் அறிவுரைகளால் வழிகாட்டுதல் சாத்தியமில்லாத நம் வாழ்வில், பாலைவனத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போல தெய்வீக வழிகாட்டுதல் உள்ளது. மரியாள் தனது வாழ்க்கையில் கர்த்தரின் தெய்வீகத் திட்டத்தை நிறைவேற்ற படிப்படியாக வழிநடத்தப்பட்டார்.
கர்த்தர் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறார்
வலி, இழப்பு, துன்பம், தனிமை, பிரிவு மற்றும் நிராகரிப்பு ஆகியவை மனித வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். இந்த பூமியில் உள்ள பரிபூரணமற்ற வாழ்க்கையிலிருந்து மரியாள் விலக்கப்படவில்லை. சமூகத்தின் கேவலம், கணவன் யோசேப்பின் இழப்பு, இன்று தன் குழந்தைகளை ஒற்றைப் பெற்றோர் போல குழந்தைகளை வளர்ப்பதில் தனிமை, எல்லாவற்றையும் விட மிக மோசமான அடியாக இயேசு சிலுவையில் மரணம் அடையும்போது அருகில் ஒரு மவுனிக்கப்பட்ட தாயாக நின்றார். ஆனால் அவள் எதிர்மறையான அனுபவங்களை மட்டுமே கடந்து செல்லும் ஒரே மாதிரியான வாழ்க்கையாக இல்லை. அவளது துக்கங்களைத் தாண்டியதில் அவளால் மகிழ்ச்சியடைய முடிந்தது.
அவளுடைய மகிழ்ச்சியின் கிரீடம் இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்; அது நமக்கும் தான். இயேசுவின் உயிர்த்தெழுதல் அவரின் தெய்வீகத்தை நிரூபித்தது, பாவங்களை மன்னிப்பதற்கான அவரது அதிகாரத்தை உறுதிப்படுத்தியது, நித்தியத்தின் கதவுகளைத் திறந்து மனிதகுலத்திற்கான மீட்பின் திட்டத்தை முத்திரையிட்டது. அவருடைய துன்பங்களில் அவருடன் பங்குகொள்வோராக, நாம் அவருடைய மகிழ்ச்சியிலும் மகிமையிலும் பங்கு பெறுகிறோம். கிறிஸ்து இயேசுவில் என்னே ஒரு மகிமையான நம்பிக்கை!
சவால்
மரியாள் மட்டும் தன் வாழ்க்கையில் கர்த்தரை அக்கறையை அனுபவித்தவளா என்றால் அல்ல, யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள், ஞானிகள் மற்றும் பல அறியப்படாத கதாபாத்திரங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கர்த்தரின் தயையை அனுபவித்தனர். கர்த்தர் தனது தெய்வீகத் திட்டத்தை வெளிப்படுத்தவும், அவருடைய தெய்வீக நோக்கங்களை நிறைவேற்றவும், அவருடன் மகிழ்ச்சியடையவும் நம்மை வழிநடத்துகிறார் என்பதை இந்த கிறிஸ்துமஸ் நமக்கு நினைவூட்டட்டும்.
தேவனின் தெய்வீக திட்டங்களை நிறைவேற்ற நம்மை அர்ப்பணிக்க தயாரா?
Author : Rev. Dr. J. N. Manokaran