கடவுள் மனிதனை ஆறு அறிவுடன் ஆறாம் நாள் ஈன்றெடுத்தார். ஆறு நாளைக்கு முன்னதாக ஈன்றெடுக்கப்பட்டவைகள் எல்லாம் மனிதனுக்காகவும், அவன் அவைகளுக்கு பெயரிடவும், அவைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும், வழிநடத்தவும் பணிக்கப்பட்டான். மனிதர்கள் செய்த பாவத்தின் விளைவால் மரணம் என்றால் என்ன என்று தெரியாத ஏதேன் தோட்டத்தில் அவர்களின் நிர்வானத்தை மறைக்க ஒரு மிருகம் அதனுடைய உயிரை விடவேண்டியதாயிருந்தது. அம்மிருகத்தின் தோல் மனிதர்களுக்கு ஆடையானது, ஆனால் அவைகளின் மாமிசமும் இரத்தமும் கழிவானது. அக்கழிவே மண்ணையும், தண்ணீரையும், காற்றையும், மற்ற உயிரினங்களையும் பாதித்தது. பூமி அசூசிப்பட்டது. அதற்கு காரண கர்த்தாவான மனிதன் அவைகளை சீர்ப்படுத்தும் பொறுப்புடையவனானான்.
பொறுப்பையும் உணராமல், பாவத்திலும் பெருகிய மனித குலத்தை கடவுள் மீட்கும் பொருளாக பல்வேறு வழிகளில் தன் அயராப் பணியை செய்தார். ஆபிரகாம், மோசே, தாவீது போன்றோரை தெரிந்தெடுத்தார். அவர்கள் மூலம் இம்மனுக்குலத்தை மீட்கும் தனது செயல் திட்டத்தை பகிர்ந்துகொண்டதோடு அவர்கள் மூலமாக செயல்படுத்தியும் வந்தார். வரப்போகும் நித்திய மீட்பின் அடையாளமாக பஸ்கா பலியை ஏற்படுத்தி கடவுள் பலியாவதற்கு முன்னடையாளமாக ஏற்படுத்தினார். தாம் ஈன்றெடுத்த இவ்வுலகில் கடவுள் மனிதனையே அனைத்திற்கும் மையப்பொருளாக வைத்தார். மனிதர்களின் வாழ்வைப் பொறுத்தே இவ்வுலக நிலை அமையும் என்ற மாறா விதியை நிறைவேற்ற மனிதனை மாற்றியமைக்கும் பெரும் திட்டத்தில் கடவுள் மனு-உருவேற்றார்.
கடவுள் மனு-உரு ஏற்றது அவரது அனாதி திட்டத்தில் இருந்தது. கடவுளின் உரு நம்மில் இருந்தாலும், கடவுள் மனு-உரு ஏற்றது வரலாற்றில் இயேசுவை மட்டுமே குறிக்கும். இயேசுவில் கிருபையும் அதாவது அன்பும், சத்தியமும் அதாவது பிரமானம் அல்லது நீதியும் காணப்பட்டது, அது கடவுளின் தன்மையை அப்படியே ஒத்திருந்தது என்று யோவான் கூறுகிறார் (யோவான் 1:14). மனு-உருவாகிய இயேசு கடவுளின் பாசத்தின் உருவாகவும், மனிதனின் பாவத்தின் உருவாகவும், பரிகார பலியின் உருவாகவும், பரிசுத்த உருவாகவும் இறுதியாக பலத்தின் உருவாகவும் வாழ்ந்தார். அப்படிப்பட்ட உருவை நாம் ஏற்றுக்கொள்ளும் போது நமது கிறிஸ்மஸ் பண்டிகை அர்த்தமுள்ளதாக அமையும்.
பாசத்தின் உரு: கடவுள் இவ்வுலகையும் குறிப்பாக மனிதர்களை எவ்விதம் நேசிக்கிறார் என்பதற்கு சாட்சியாகவே இயேசுவை இவ்வுலகிற்குக் கொடுத்தார். அவருடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக இயேசுவை நமக்கு வெகுமதியாகக் கொடுத்தார். கிறிஸ்மஸ் கிறிஸ்து நமக்கு கடவுளின் பாசத்தின் வெகுமதி. கடவுள் நம்மேல் வைத்த பாசம், ‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு’ என்று சொல்வதைப் போன்று மனிதர்கள் மேல் கடவுளுக்கு உள்ள பித்து ஆகும். இயேசு கடவுளின் அன்பின் உரு, பாசத்தின் உரு, நேசத்தின் உரு. இயேசுவில் அன்பின் உருவம் தான் தெரிகிறது. அவர் அன்பின் சொரூபம். அன்பு என்றால் கடவுள் என்பர், இயேசு பிறந்த பின்பு அன்பு என்றால் இயேசு என்றாகிவிட்டது. கிறிஸ்மஸ் கொண்டாடுகிறவர்களும் இயேசுவைப் போன்று அன்பின் உருவாக இருக்கவேண்டும். நமது உருவில் கடவுள் அன்பை மக்கள் பார்க்கவேண்டும், அனுபவிக்க வேண்டும். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்ற இயேசுவைப் போல் நம் உருவில் கடவுளைக் காண்பித்த இயேசுவை காண்பிக்கும் போதுதான் நாம் கிறிஸ்தவர்கள் என்னும் பெயருக்கு பொருத்தமுள்ளவர்களாவோம். கிறிஸ்துவின் உருவை வெளிப்படுத்தும் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.
பாவத்தின் உரு: ‘பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்’ என்று பவுல் சொல்கிறார். (1கொரி. 5:5). கடவுளோடு சமமமாக இருந்தவர் பாவத்தை ஏற்றதால் அடிமையானார், வெறுமையானார், தாழ்மையானார், (பிலி. 2:7) இறுதியில் பாவத்தின் விளைவான சாபமானார் (கலா. 3:13). பாவத்தின் சாபமான மரணம் என்னும் பிரிவை அவர் சந்தித்தார். அதனால் ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னை கைவிட்டீர்?’ என்று பிரிவினையின் துயரை வெளிப்படுத்தினார். இயேசு பாவத்தின் உருவை ஏற்காவிட்டால் நமது பாவத்தின் உரு மாறுவதற்கான நம்பிக்கை ஏற்பட்டிருக்காது. நமது பாவத்தின் உருவை அவர் ஏற்றுக்கொண்;டதால் அவருடைய பரிசுத்தத்தின் உரு நமக்கு சொந்தமானது.
அவர் நமக்காக பாவமானதினால், நாம், அவருக்காக பாவமாக மாறவேண்டும். சாக்கடையில் இருந்த நம்மை மீட்க சாக்கடையில் இறங்கி வந்து நம்மை அதன் துர்நாற்றத்தை எல்லாம் துடைத்து சந்தனமாக்கினார். நம்முடைய சந்தன வாசனையை நாம் நுகர்ந்து இன்புறமட்டுமல்லாது, நம்மைப் போன்று சாக்கடையில் உழன்றுக்கொண்டிருக்கும் மக்களை அவரைப் போன்று சாக்கடையில் இறங்கி அவர்களை மீட்கவும் நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களை மீட்கும் பணியில் நாம் நாற்றமடைவோம் என்று பயந்திருந்தால் சுய-நலவாதிகளாவோம். இயேசு தாம் கொடுத்த ஸ்தானத்தை மற்றும் ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கையில் அப்படி செய்தார் (யோவான் 10:17), அவ்வாறே அவரைப் போன்று மற்றவர்களின் பாவத்தை, அதன் பழியை சுமக்க, அதன் தண்டனையான அவமானம், இழப்பு, பிரிவு போன்றவற்றை சுமக்க நாம் அழைக்கப்படுகிறோம். அவருக்காக எதை நாம் இழக்கிறோமோ அவர் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டது போல நாமும் அவருக்குள் அவரோடு பெற்றுக்கொள்வோம். இந்த நம்பிக்கையில் பிறருக்காக நம்மை இழக்கும் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.
பரிகார உரு: இயேசுவை பார்த்த யோவான் ஸ்நானகன் ‘இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டி’ என்று அழைக்கிறார் (யோவான் 1: 29). இயேசுவின் மேல் உலக பாவத்தை தீர்க்கும் பரிகாரப் பொறுப்பு சுமத்தப்பட்டது. பாவம் செய்தவர்கள், மிருகங்களை பலியிட்டு, அதன் மாம்சத்தை தங்கள் பாவத்திற்காக பலியிடுகிறவர்கள் உண்ணவும், இரத்தத்தை பலிபீடத்தின் மேல் ஊற்ற வேண்டும். அப்போது அவர்களின் பாவம் நிவர்த்தியடையும். இவ்வாறான நிவிர்த்தி மக்களின் பாவத்தை அதிகரித்தது, அதனால் இறைச்சி உண்ணும் பழக்கமும் வளர்ந்தது. ஆனால் பாவத்தின் பரிகாரமாக இயேசு தன்னுடைய உடலையும், ஊனையும் கொடுத்தபின்பு பாவத்தின் பரிகாரம் நிறைவுப் பெற்றது. இனி எந்த மிருகங்களையும் பாவத்தின் பரிகாரமாக பலியிடத் தேவையில்லை, ஆகவே அதன் மாம்சத்தை உண்ணவும் தேவையில்லை என்பதாலேயே ஒரு தரம் அவர் தம்மைத்தாமே உலகம் முழுவதற்குமான பாவத்திற்காக பலியாகிவிட்டார்.
அவருடைய பரிகார பலியை நம்பி, ஏற்றுக்கொண்ட யாவரும், அவருடைய பலியின் நிறைவாக அவர் கொடுத்த திருவிருந்தை (சைவ விருந்தை) நாம் ஏற்றுக்கொண்டு, அவர் வரும் வரை அனுசரிக்க வேண்டும். அதாவது எல்லாவற்றிற்காகவும் அவரிடமே வந்து, அவரையே எல்லாவற்றிற்காக நம்புவதே அவருடைய மாம்சத்தை அதாவது நம்முடைய பாவத்திற்காக பலியானவரின் மாம்சத்தை நாம் உட்கொள்வதற்கும், அவரை நம்புவதால் அவருடைய இரத்தத்தை பருகுவதற்கும் சமமாகக் கொள்ளப்படுகிறது (யோவான் 6:35).
பாவத்திற்காக பலியான இயேசுவின் உரு நம்மில் வெளிப்பட வேண்டும். பவுல் பிறருடைய பாவத்திற்காக நாம் வார்க்கப்பட்டுப் போகிறேன். இயேசுவின் பாடுகளை நான் தொடர்ந்து என் சரீரத்தில் நிறைவேற்றுகிறேன் என்கிறார் (பிலி. 2:17). இயேசு நம்மை அவரைப் போன்று சிலுவை சுமக்க அழைக்கிறார். பிறருடைய பாவத்தின் பரிகாரமாக சிலுவையை அவர் சுமந்தார். நாமும் நம் குடும்பதார், நண்பர்கள், உடன் ஊழியர்களின் பாவத்தின் பலனாகிய சிலுவையை சுமந்து இக்கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.
பரிசுத்த உரு: இயேசு பரிசுத்த உருவாக இந்த பூமியில் பிறந்தார். ‘கடவுளை யாரும் ஒருபோதும் கண்டதில்லை’ யோவான் 1:18. கடவுள் பரிசுத்தராய் இருக்கிறார், நாமும் பரிசுத்தமாய் இருக்க வேண்டும். கடவுளின் பரிசுத்தத்தை, பரிபூரணத்தை அல்லது குற்றமில்லா வாழ்வை மனித வாழ்வில் இயேசு வெளிப்படுத்தினார். என்னிடத்தில் குற்றம் கண்டுபிடிப்பவன் யார்? என்று சவால் விட்டார் (யோவான் 8:46). பரிசுத்தத்தின் உருவாக வெளிப்பட்டார் இயேசு. அவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரிக்கப்பட்டார். அவர் வாழ்வில் அன்பு, மன்னிப்பு, ஈகை, தியாகம், இரக்கம், மனதுருக்கம், பொறுமை, சகிப்பு, இச்சையடக்கம், தயவு, சாந்தம், தாழ்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, துணிவு, சேவை, போன்ற பரிசுத்தம் நிறைந்திருந்தது. பாவத்தை சுமந்தாலும், பாவிகளிடம் நெருங்கின உறவு வைத்திருந்தாலும், பாவத்தை தன் சுய-மாம்சத்தாலும், இரத்தத்தாலும் கழுவினாலும் அவர் பாவமில்லாதவராகவே வாழ்ந்தார்.
பாவம் நிறைந்த இந்த உலகில் நாம் பரிசுத்தமாக வாழ்வது சாத்தியமற்றது என்று வாதிடும் மக்கள் பலர் உண்டு. அல்லது இயேசு கடவுள் அதனால் அவர் பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று வாதம் செய்வோரும் உண்டு. ஆனால் அவர் நம்மைப் போல சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாதவராகவே வாழ்ந்தார் என்று எபிரேய ஆசிரியர் எழுதுகிறார் (4:15). பாவம் என்பது பாலுறவு தொடர்புடையது மட்டுமல்ல, மேற்கூறப்பட்ட அனைத்தும் அத்துடன் இயேசுவில் காணப்பட்ட பண்புகள் அனைத்தும் பரிசுத்தத்தின் பண்புகள். ஆகவே யோவான் சொல்வது போல ‘தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்@ அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும்.’ (1யோவா-4:12) என்ற வார்த்தையின் படி நாம் மற்றவர்களுடன் அன்பாயிருப்பதே கடவுளுடைய பரிசுத்தம். அப்பரிசுத்த கிறிஸ்மஸ்-ஐ நாம் கொண்டாடுவோம்.
பலமுள்ள உரு: இயேசுவின் உரு ஒரு பெலவீனமான உரு அல்ல. அவர் அனைத்து சோதனைகளையும், பாவங்களையும், பழிகளையும், பெலவீனங்களையும், தண்டனைகளையும் ஏற்கும் உருவாக இப்பூமியில் பிறந்தார். அவர் எதையும் தாங்கும் இதயம் உள்ளராக இருந்தார். எவரையும் தாங்கும் உள்ளமுடையோராக வாழ்ந்தார். எத்தீங்கையும் எதிர்க்கும் பலமுள்ளவராக இருந்தார். அவருடைய பலத்தின் இரகசியம், ‘கொடுப்பதை திரும்பப் பெற்றுக்கொள்வேன் என்ற அவருடைய நம்பிக்கை’ (யோவான் 10:17), அவர் மேல் விழுந்த பொறுப்பை நிறைவேற்றும் பொறுப்புணர்வு, கடமையுணர்வு, பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக கீழ்படிதல் போன்றவைகளையே அவர் தன்னுடைய பலமாகக் கருதினார். பிதாவுடன் கொண்டிருந்த இடைவிடாத உறவு, அவர்மேல் கொண்டிருந்த மற்றற்ற அன்பு, அவரை எப்போதும், எதற்கும் சார்ந்திருத்தல், அவருடைய சித்தத்தையே தன்னுடைய சித்தமாகக் கொண்டிருந்த பற்றுறுதி போன்றவை அவருடைய பலத்தின் இரகசியம் என்று வேதம் சொல்கிறது.
அவரை விசுவாசிப்பவர்களுக்கு அவரைப் போன்ற பலமும், அவரைவிட அதிகம் செய்யக்கூடிய பலமும் உண்டாகும் என்று இயேசு கூறுகிறார் (யோவான் 14:12). கடவுளின் மனு-உருவை ஏற்றுக்கொண்டவர்களின் பல்வேறு பிரிவினர், பல்வேறு கொள்கையில் வாழ்ந்தாலும், நம் தேசத்தில் அப்படிப்பட்ட நம்பிக்கையுடையோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், நமது பலம் இவ்வுலகை ஆளுகிற அனைத்து சக்திகளைவிடவும் அதிக பலமுள்ளது. கடவுள் நமக்கு பலவீனமுள்ள ஆவியைக் கொடாமல், பலமுள்ள ஆவியைக் கொடுத்திருக்கிறார். பலவீனங்களில் உதவிசெய்யும் ஆவியான தேவன் நம்முடன் இருக்கிறார் (ரோமர் 8:26), நாம் பலவீனமாயிருக்கும் போதே நாம் பலமுள்ளவர்களாயிருக்கிறோம் என்று பவுல் கூறுகிறார் (2கொரி. 12:10). நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருக்கும் பலம், இவ்வுலக அதிபதியை எதிர்த்து நின்று வெற்றிப் பெரும் பலன், நித்திய அழிவிற்கு போகும் மக்களை நித்திய ஜீவனுக்குள் கொண்டு சேர்க்கும் நற்செய்தியை எச்சூழலிலும் உறுதியாக வெளிப்படுத்தும் பலம், கடவுளுக்காக நம் ஜீவனையே இழக்கும் பலம் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. அப்பலனுடன் கிறிஸ்மஸ் கொண்டாடுவோம்.
Author. Rev. Dr. C. Rajasekaran