கிறிஸ்மஸ் மரம்

உலகமெங்கும் கொண்டாட்டங்களில் மரங்கள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. இயேசு எருசலேம் நகரில் இராஜாவாக நுழைந்ததை மக்கள் ஈச்ச மரத்தின் கிளைகளைப் பிடித்துக்கொண்டு அதை ஆட்டி அவர்களின் அன்பையும், மகிழ்ச்சியையும் ஆரவாரித்து வெளிப்படுத்தினார்கள். இன்றும் இந்தியாவில் கொண்டாட்டங்களில் தென்னை மர குருத்துகளையும், மாமரத்து இலைகளையும் தோரணமாகக் கட்டுவது வழக்கம். வாழை மரத்தையும் பாக்கு மரத்தையும் வாசலில் கட்டுவதும் வழக்கம். வேப்பமரத்து கிளைகளை அம்மை மற்றும் கிரிமி தொற்று வியாதி வந்தவர்களுக்கு மருந்தாகவும் வீட்டு வாசலில் கட்டுவதும், கொசு மற்றும் விஷஜந்துக்களிடமிருந்து காக்கும்படி சோத்து கத்தாலையை கட்டுவதும் வழக்கம். இவைகள் அழகுக்காக மாத்திரம் அல்ல மாறாக வாழையடி வாழையாக கனி கொடுக்கவேண்டும் என்பதன் அடையாளமாகவும், அத்துடன் செழிப்பு, நம்பிக்கை, புத்துணச்சி, ஊக்கம் மற்றும் இயற்கையின் அடையாளமாகவும் இருக்கிறது. இந்தியாவில் திருமணம், பெண் பூப்பெய்தபோதும், மற்றும் சமய மற்றும் கலாச்சார திருவிழாக்களில் மரங்கள் மிகமுக்கிய இடத்தைப்பிடித்திருக்கிறது. இந்தியாவில் மரங்கள் கடவுள் மற்றும் பிசாசு வசிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது: வேப்பமரம் மற்றும் அரசமரத்தில் கடவுள் இருப்பதாகவும், முருங்கை மற்றும் புளியம் மரத்தில் பேய் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் அதன் மெய்யான பொருள் என்னவென்றால் ஆக்சிஜன் அதிகம் வெளியிடும் மரங்களை கடவுள் மரங்களாகவும் கார்பன்டைஆக்சைடை அதிகமாக வெளியிடும் மரங்கள் பேய் மரங்களாகவும் கருதப்படுகிறது. கிறிஸ்மஸ் மரம் எதைக்குறிக்கிறது?

1. அழகு

முதன் முதலில் கிறிஸ்மஸ் மரம் ஜெர்மனிலும் அதனைத் தொடர்ந்து ரோமாபுரி, நார்வேயில் பரவி மற்ற நாடுகளுக்கும் பரவியது. அவர்கள் மரங்களில் செயற்கையான ஒளிவிளக்குகள் பரிசுப் பொருட்களின் பெட்டிகள் மற்றும் செயற்கையால் அலங்காரப்படுத்தினர். இயற்கையும் செயற்கையும் இணைவது அழகைக்கூட்டுகிறது. மனிதனின் இயற்கை அழகுக்கு உடை என்பது அழகு கூட்டுகிறதாயிருப்பதைப்போன்றே மரங்களை ஜோடிக்கும் போது மிகவும் அழகாயிருக்கிறது. கடவுளின் படைப்பான இயற்கையும் மனிதனின் படைப்பான செயற்கையும் இணைவதில் உள்ள அழகு சொல்லிமுடியாது. இயற்கையான மரத்தில் செயற்கையான நட்சத்திர விளக்குகள், செயற்கையான கனி, அத்துடன் மணி, பந்து, பெட்டி, சாக்லேட், கிறிஸ்மஸ் தாத்தா, ஜிகினா, வண்ண வண்ண காகிதங்களின் தொங்கல்கள், பார்ப்பதற்கு மிகவும் அழகாகத் தோன்றுகின்றன. கிறிஸ்மஸ் பண்டிகை அழகின் ஒரு அடையாளம்.

2. ஆனந்தம்

பண்டிகை என்றால் அழகு மட்டுமல்ல அழகுடன்கூடிய ஆனந்தமுமாயிருக்கிறது. பண்டிகை அன்று மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பது அனைவர்க்கும் இருக்கும் பொதுவான எண்ணம் மற்றும் ஆசை. இதை நிறைவேற்றுவதற்கு நாம் எதைவேண்டுமானாலும் செய்வர். ஏழைகள் கடன் வாங்கியாவது தங்களையும் தங்கள் வசிப்பிடங்களையும் அழகுப்படுத்தி மகிழ்ந்திருப்பர். சிலர் மற்றவர்களுக்கு பரிசளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். இயற்கையான மரமும் செயற்கையான அலங்காரங்களும் இணைவதில் உள்ள அழகைப் பார்ப்பவர்கள் கட்டாயம் அதில் மகிழ்வர். கடவுளுடைய இயற்கையும் மனிதனுடைய செயற்கையும் இணைவதில் அழகு மட்டுமல்ல ஆனந்தமும் அங்கு உண்டு: படைப்பின் கடவுள் படைக்கப்பட்ட மனிதனாகப் பிறந்தது பெரும் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்று தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார்கள். இப்பிறப்பில் மனிதர்கள் மட்டுமல்ல தேவதூதர்களும் மகிழ்ந்தார்கள், மனிதனாகப் பிறந்த கடவுளும் மகிழ்கிறார். கிறிஸ்மஸ் மரம் ஆனந்தத்தின் அடையாளம்.

3. ஆசீர்வாதம்

முதன் முதலில் 1841ல் பிரிட்டீஸ் இளவரசர் ஆல்ஃபரட் கிறிஸ்மஸ் மரத்தை பரிசுப்பொருட்கள் மற்றும் வண்ண வண்ண ஒளிகொடுக்கும் மெழுகுவர்த்திகள் மூலமாக அலங்கரித்து அழகுப்படுத்தி மகிழ்தார். அவருக்குப் பின்பு அச்செயலை ஆசீர்வாதமாகக் கருதி மக்கள் அதை பின்பற்ற ஆரம்பித்தனர். மற்றவர்களுக்கு பரிசு கொடுப்பது நமது அழகு, ஆனந்தம் மட்டுமல்ல கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கும் அடையாளம். “நான் உன்னை ஆசீர்வதிப்பேன் நீ ஆசீர்வாதமாய் இருப்பார்” என்ற வாக்கு நிறைவேறுகிறது. கிறிஸ்மஸ் மரம் ஆசீர்வாதத்தின் அடையாளம்.

4. அறம்

ஜெர்மானியர் இந்த கிறிஸ்மஸ் மரத்தை அவர்களின் நன்றிக்காணிக்கையாக இங்கிலாந்திற்கு கொடுத்த நாள் முதல் இங்கிலாந்து மக்கள் இந்த கிறிஸ்மஸ் மரத்தை அவர்களுடைய இல்லங்களில் கிறிஸ்மஸ் காலங்களில் வைத்து அழகுப்படுத்தி மகிழ்வது வழக்கம் என்று வரலாறு கூறுகிறது. விவசாயிகளாக இருக்கும் டுரின் என்ற பழங்குடியினர் அவர்களுடைய அறுவடை பண்டிகைக் காலங்களில் இயற்கையை மனிதர்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றிக்காணிக்கையாக ஓச் மரத்தை அலங்காரப்படுத்துவார்களாம். மரங்களை வைத்தும் அல்லது மரங்களை அழகுப்படுத்து அதனைப் படைத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் அறச்செயலைக் குறிக்கிறது. அறுவடைப் பண்டிகை கடவுளுக்கு நன்றி செலுத்தும் அறச்செயலாகவே கருதப்படுகிறது.

பண்டிகையில் அழகு, ஆனந்தம், ஆசீர்வாதம் ஆகிவற்றோடு அறம் இல்லையேல் மற்ற அனைத்தும் அர்த்தமற்றதாகிப்போய்விடும். ஆகவே கிறிஸ்மஸ் மரம் மேற்கண்ட அர்த்தமுடையதாய் இருந்தால் நமது வீட்டில் அலங்காரமாக, அழகாக, ஆடம்பரமாக வைக்கப்படும் கிறிஸ்மஸ் மரம் நமது வீட்டிற்கும் நம் வீட்டிற்கு வருகிறவர்களுக்கும் பெரும் ஆசீர்வாதமாய் இருக்கக்கூடிய அறச்செயலாக அது அமையும், அது நமது ஆனந்தமாகவும் நமக்கு ஆசீர்வாதமாகவும் இருக்கும். அழகு, ஆனந்தம், ஆசீர்வாதம் மற்றும் அறம் நிறைந்த கிறிஸ்மஸ் பண்டிகையாக நமது பண்டிகை அமையட்டும்.

Author. Rev. Dr. C. Rajasekaran



Topics: Bible Articles Tamil Christmas message Christmas Devotion in Tamil Christmas Message in Tamil

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download