ஒரு வாலிப பெண், மாம்சமாகுதலுக்கான ஊடகம்
முதல் கிறிஸ்துமஸ் ஒரு விபத்து அல்ல. இது தேவனால் தெய்வீகமாக திட்டமிடப்பட்டது. "நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்" (கலாத்தியர் 4:4,5). தேவன் தம்முடைய குமாரனை அனுப்பியபோது, அவருக்கு மனிதர்களின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. அந்த பொறுப்பில் இருந்த முக்கியமான நபர்களில் ஒருவர் இளம்பெண்ணான மரியாள். ஒரு எளிய, வாலிப பெண் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மாம்சமாகுதலுக்கு ஊடகமாக மாறினார்.
1. ஆண்டவருடைய கிருபை:
மரியாள் தேவனிடம் கிருபை பெற்றாள். தேவனின் அருளைப் பெற அவள் நேர்மையான வாழ்க்கை வாழ்ந்தாள். மனத்தாழ்மை மற்றும் தூய்மையான மனப்பான்மையுடன் அவளது வாழ்க்கை பரிசுத்தமானதாக இருந்ததால் தேவனின் அங்கீகாரத்தையோ அல்லது நற்சான்றிதழையோ பெற முடிந்தது. இது சாதாரண சாதனையல்ல. இன்றைய இளைஞர்கள் உலகின் மிக அழகான அல்லது சிறந்த வடிவமான நபராக முடிசூட்டப்படுவது போன்ற பிரபலத்தைப் பெற கடுமையாக முயற்சி செய்கிறார்கள். சிலர் பெரும் பணக்காரர்களாக மாற கடுமையாக உழைக்கிறார்கள். மக்கள் மற்றும் வளங்களின் மீது அதிகாரத்தைப் பெற முயற்சிப்பவர்கள் சிலர் உள்ளனர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் மரியாள் தேவ தயவைப் பெற ஒரு இலக்கைப் பின்தொடர்ந்தாள். அவளுடைய தார்மீக, ஆவிக்குரிய மற்றும் நெறிமுறை வாழ்க்கைதேவனைப் பிரியப்படுத்தியது. தான் இரட்சகரின் தாயாக வேண்டும் என்பதற்காக அவள் அத்தகைய உன்னத வாழ்க்கையை மெனக்கெடவில்லை, ஆனால் அது அவளுடைய வாழ்க்கை முறையாக இருந்தது. தேவனைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற உந்துதல் உள்ளிருந்து வந்தது, பலனை எதிர்பார்த்து அல்ல.
2. ஆண்டவரிடம் அர்ப்பணிப்பு:
ஆண்டவரிடம் தன்னை அர்ப்பணித்தாள். அவளுடைய விருப்பங்கள் எல்லாம் அவளுடைய லட்சியங்களையோ அபிலாஷைகளையோ நிறைவேற்றாமல் தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவதாக இருந்தது. தேவதூதன் செய்தியைக் கூறிய போது, அவளின் தன்னிச்சையான பதில்; "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்" (லூக்கா 1:38). அவளுக்கு கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தபோதிலும், தேவனின் முழு திட்டத்தையும் புரிந்து கொள்ள முடியாத போதும், அவள் வெறுமனே தேவனின் சித்தத்தைச் செய்ய தன்னை அர்ப்பணித்தாள். தேவ அழைப்பு என்பது ஒரு பெரிய கனம், ஆனால் அதில் ஆபத்துகளும் கடினங்களும் உண்டு. தேவனின் சித்தத்தை நிறைவேற்ற அவள் கஷ்டங்களைச் சகிக்கத் தயாராக இருந்தாள். இரட்சகரின் தாயாக இருப்பது உண்மையில் ஒரு பாக்கியம் ஆனால் விலைக் கிரயம் கொடுக்க வேண்டி இருந்தது. அவளால் அதை அவளது சொந்த பலத்தினாலோ அல்லது வலிமையினாலோ செய்ய முடியாது, ஆனால் அவருடைய கிருபையால் முடியும். அது அவளுக்குக் கொடுக்கப்பட்டது, அவள் அதை ஒரு வேலைக்காரனைப் போல ஏற்றுக்கொண்டாள். அவளுடைய சிந்தனையிலோ அணுகுமுறையிலோ நடத்தையிலோ கீழ்படியாமையோ கலகமோ இல்லை.
3. ஆண்டவருக்காக அவமானம் சகித்தல்:
அவள் ஒரு கன்னிப் பெண்ணாக இருந்தாள், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அவளுடைய வருங்கால கணவர் அவளை அமைதியாக விவாகரத்து செய்யலாம் அல்லது அவளை பொதுவில் அவமானப்படுத்தி கல்லால் அடித்துக் கொல்லலாம். அவள் எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் பெண் அல்லது பைத்தியக்காரப் பெண் என்பதாக கூட முத்திரை குத்தப்படலாம். ஆனால் அவள் இந்த துன்பங்களை எல்லாம் சந்திக்க தயாராக இருந்தாள். யோசேப்பு கூட விவாகரத்து பற்றி நினைத்தார்; தேவனுடைய தலையீடு மட்டுமே அந்த நாளை காப்பாற்றியது. நிச்சயமாக, மற்றவர்கள் இதை அறிந்திருக்கலாம், அதைப்பற்றி கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். அவள் இந்த அவமானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், இன்னும் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
4. ஆண்டவருக்காக வலி தாங்குதல்:
மரியாள் கடுமையான சரீர வலியை தாங்க வேண்டியிருந்தது. உணர்ச்சியற்ற வார்த்தைகளால் அவமதிக்கப்படுவது மற்றும் காயப்படுவது மட்டுமல்லாமல் தீர்க்கதரிசனம் நிறைவேறும் வகையில் அவள் பெத்லகேமுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வேறு குழந்தையாக இருந்தால், அவள் அங்கு செல்வதை புறக்கணித்திருக்கலாம். ஆனால் தேவ வார்த்தை நிறைவேற வேண்டும், அதனால் அவள் கர்ப்பமாக இருந்தபோது பாலைவனப் பகுதிகளில் பயணம் செய்து மிகுந்த வேதனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. கர்ப்ப நாட்களில் பயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதானதோ அல்லது வசதியானதோ அல்ல. யோசேப்பும் கர்ப்பிணியான மரியாளும் சுமார் 100 மைல்கள் பயணிக்க வேண்டியிருந்தது. பெத்லகேமில், வீட்டின் அரவணைப்பிலிருந்து விலகி கர்த்தராகிய இயேசுவைப் பெற்றெடுக்கும் கஷ்டத்தை அவள் அனுபவித்தாள். பெத்லகேமில் சுகாதாரமான அல்லது விருந்தோம்பும் சூழ்நிலையும் இல்லை. பிள்ளை பேறும் காலத்தில் வேறு எந்தப் பெண்களின் உதவியும் இல்லாமல், அவள் இயேசுவைப் பெற்றெடுத்தாள்.
சவால்
மரியாள் முழு மனிதகுலத்திற்கும் ஆசீர்வாதத்தின் வாய்க்காலாக இருந்தாள். மேலும் வாலிப பெண்ணான மரியாள் இன்றைய இளைஞர்களுக்கு சவாலாக இருக்கிறாள். வாழ்க்கையின் மூன்று முக்கியமான கொள்கைகளையாவது அவள் கற்பிக்கிறாள். முதலில், இளைஞர்கள் கர்த்தருக்குப் பிரியமான வாழ்க்கையை நடத்த வேண்டும். அதாவது, இளைஞர்களின் வாழ்க்கை முறையே அவருடைய அங்கீகாரத்திற்கும் கைதட்டலுக்கும் தகுதியானதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, தேவனின் சித்தத்தை நிறைவேற்றுவது அற்புதமானது, ஒரு சுயநலமான நிகழ்ச்சி நிரலையோ அல்லது லட்சியங்களைப் பின்தொடர்வது அல்ல. மனித மனதின் கற்பனையால் உருவாக்கப்பட்ட திட்டங்களை விட தேவனுக்கு பெரிய திட்டங்கள் உள்ளன. மூன்றாவதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகவும் அவருடைய ராஜ்யத்திற்காகவும் படும் துன்பம் நித்தியத்தில் வாக்களிக்கப்பட்ட மகிமைக்கு சமமானதல்ல. அவருடைய நாமத்திற்காக துன்பப்படுவது ஒரு பெரிய பாக்கியம். துன்பம் என்பது சரீர பாடுகள், உணர்வு ரீதியாக, மனம் அல்லது உளவியல் ரீதியாகவும் இருக்கலாம்.
Author : Rev. Dr. J. N. Manokaran