காலைக் கதிரவன் (சூரியன்) தன் சிவந்த கதிர்களால் பூமியில் வெப்பத்தைப் பரப்பிக் கொண்டிருந்தான். பாலஸ்தீன தேசத்தில் ஏபால், கெரிசீம் என்ற கருமலைகளுக்கிடையேயிருந்த சீகேமின் வெளிநிலங்களில் பதினேழு வயது நிரம்பிய இளைஞன் நடந்து கொண்டிருந்தான். கள்ளம் கபடமறியா குழந்தையுள்ளம், அவன் அழகிய முகத்தில் தெரிந்தது. சிவந்த அவன் மேனி வெயிலால் இன்னும் சிவந்தது. அவன் அணிந்திருந்த பல வர்ண ஆடை வானவில்லை நினைவூட்டிக் கொண்டிருந்தது. ஞான ஒளி வீசும் அவன் விழிகள் அங்கும் இங்கும் ௮லைபாய்ந்தன. அவன் யாரையோ தேருகிறான். அவன் தான் யோசேப்பு. அங்கே வந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “யாரைத் தேடுகிறாய்?” எனக் கேட்க.
“என் ௮ண்ணன்மார் 10 பேர் ஆடு மேய்க்க வந்தாங்க. அவர்களை நீங்க பார்த்தீங்களா?” ஆவலோடு கேட்டான்.
“ஆமா, ஆமா நான் பார்த்தேன். அவங்க உன் அண்ணன்மார்களா? தோத்தானுக்குப் போவோன்னு பேசிக்கிட்டாங்க. நீ தோத்தானுக்குப் போ”
“நன்றி” எனக்கூறியபடி தோத்தானை நோக்கி நடந்தான். தூரத்தில் அண்ணன்மார்கள் இருப்பது தெரிந்தது. ௮ண்ணன்மார்களும் அவனைப் பார்த்து விட்டனர்.
மூத்த அண்ணன் ரூபன், அடுத்து சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன் எனப் பத்து அண்ணன்மார்கள் அவனுக்கு இருந்தனர்.
“இதோ! சொப்பனக்காரன் வருகிறான். நாம் அவனைக் கொன்று குழியில் போட்டு விடுவோம். ௮வன் சொப்பனங்கள் எப்படி முடியும் என்று பார்ப்போம்” என ஒருவரோடு ஒருவர் சொல்லிக் கொண்டார்கள். மூத்தவனாகிய ரூபன் யோசேப்பைக் காப்பாற்ற நினைத்து, “நாம் அவனைக் கொல்ல வேண்டாம். இந்தப் பாழுங்குழியில் போட்டு விடுவோம்” என ஆலோசனை சொன்னான்.
அதற்கு அவர்கள் சம்மதித்து, அவனுடைய பல வருண அங்கியைக் கழற்றிவிட்டு, அவனைத் தண்ணீரில்லாத வெறுங்குழியில் போட்டு விட்டார்கள். யோசேப்பு கதறினான். தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினான். அவர்களோ கீரக்கமற்றவர்களாக அவன் கொண்டு வந்திருந்த பலகாரங்களைச் சந்தோஷமாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரூபன் அவர்களை விட்டு விலகியிருந்தான். அந்த சமயம் கீலேயாத்திலிருந்து வாசனை திரவியங்களை சுமந்து கொண்டு மீதியானிய வியாபாரிகள் எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். யூதா தன் சகோதரர்களைப் பார்த்து, “யோசேப்பை இந்த மீதியானியரிடம் விற்றுப் போடுவோம்” என்று கூற, யோசேப்பைக் குழியினின்று தூக்கி எடுத்து, 2௦ வெள்ளிக்காசுக்கு மீதியானியரிடம் விற்றுப்போட்டனர். யோசேப்பின் கண்ணீர் கதறல் எதுவும் ௮ண்ணன்மார்களை அசைக்கவில்லை. ரூபன் யோசேப்பைக் காப்பாற்ற நினைத்து, குழியினிடம் வந்து பார்த்து, யோசேப்பு இல்லாததைக் கண்டு கலங்கினான். பின் விவரம் அறிந்தான். செய்வதறியாது திகைத்தான்.
ஒரு வெள்ளாட்டுக் கடாவை இழித்து, அதன் இரத்தத்தில் பலவருண அங்கியை நனைத்து தங்கள் தகப்பனிடத்திற்குக் கொண்டு போய், “இதை நாங்கள் கண்டெடுத்தோம். இது உம்முடைய குமாரன் ௮ங்கியோ?” எனக்கேட்க.
“என் குமாரன் அங்கி தான். ஒரு துஷ்ட மிருகம் அவனைக் கொன்று போட்டது” எனப் புலம்பி அழுதான், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபு.
வானத்திலே வெண்ணிலா பவனி வரத் தொடங்கியது. விண்மீன்கள் கண்சிமிட்டிச் சிரித்தன. மீதியானிய வியாபாரிகளோடு சென்று கொண்டிருந்த யோசேப்பின் நெஞ்சினிலே அவன் கண்ட கனவுகள்படமாயின.
இதன் தொடர்ச்சி யோசேப்பின் முதல் கனவு! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை வெற்றித் திருமகன் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.