கழுகுக்கொடி தூக்கிய போர்வீரன் கம்பீரநடை நடந்து முன்செல்ல இயேசுவும், அவரோடு சிலுவை மரணத்தீர்ப்பிற்குள்ளான இரு கள்ளர் களும் சிலுவையைத் தோளில் தாங்கி நடக்க, சேகவர் கூட்டமும், போர்வீரர் கூட்டமும், நூற்றுக்கதிபதியுடன் நடக்க, பரிசேயர்களும், சதுரேயர்களும் , ஆசாரியர்களும் பரிகாசப் பேச்சுகளுடன்தொடர்ந்து வர, அன்னை மரியாளோடு, அன்புச் சீடன் யோவானும் , கண்ணீர் விட்டுக் கதறும் பெண்கள் குழாமும், வாயிருந்தும் ஊமையராய் நடக்கும் மக்கள் கூட்டமுமாக வேடிக்கை பார்க்கவென்றே வரும் வினோதக் கூட்டமும் சேர, இச்சிலுவை பவனி கொல்கதா மலை நோக்கிச் செல்கிறது.
5 நாட்களுக்கு முன் கோவேறு கழுதை மீது தன் மகன் பவனி வர “ஓசன்னா! ஓசன்னா” என்று மக்கள் குழாம் மழலைப் பட்டாளங்களுடன் ஆர்ப்பரித்து மகிழ்ந்த அந்தகாட்சி அன்னை மரியாளின் நெஞ்சில் படமாகியது. துடித்தார் இன்றோ! தன் மகன் தன் மகனா? இறைமகன் அல்லவா? ஆம். அந்த இறைமைந்தனின் உடல் முழுவதும் வாரினால் அடிபட்டு காயங்களிலிருந்து இரத்தம் வழிய, பாரச் சிலுவையைத் தூக்க முடியாமலும் தூக்கிச் செல்லும் பரமனைப் பார்க்கின்றாள் , ஐயகோ! அதோ! சிலுவையைத் தூக்க முடியாமல் கீழே விழுகிறார் இயேசு. போர்வீரனின் சவுக்கு இயேசுவின் உடலைச் சுண்டி இழுக்கிறது. "உம், தூக்கி நட! கட்டளையிடுகிறான்.
“ஐயோ! கதறுகிறாள் மரியாள். அவ்வழியே வந்த சீமோன் என்பவனைச் சிலுவையைத் தூக்கி வரும்படி வற்புறுத்துகின்றனர். கபாலஸ்தலம் என்ற இடமாகிய கொல்கதா மலை மேட்டை அடைந்தனர். பார்ப்பதற்கு மண்டை ஓடு போல் காட்சியளிப்பதால் அந்த இடம் கபாலஸ்தலம் எனப்பட்டது. இரு கள்ளர்களுக்கிடையில் இயேசுவும் அங்கு சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையின் மீது இயேசு கிடத்தப்பட்டார். இரு கைகளிலும் கூர்மையான ஆணிகளை வைத்து, சுத்தியலால் ஓங்கி அடித்தனர்! இரத்தம் பீறிடுகிறது. கால்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்து ஆணியால் அறைந்தனர். நரம்புகள் அனைத்தும் துடித்தன... வலியோ..... சொல்லுவதற்கரியதாக இருந்தது. உச்சந்தலை முதல், உள்ளங்கால் மட்டும் வேதனை! சிலுவையை நிறுத்தி வைப்பதற்காக ஏற்கனவே வெட்டப்பப் குழியில் “பொத்தென்று” சிலுவையை இறக்கினார் சேவகர்கள். முழுச் சரீரமும் மூன்றாணியில் தொங்கி இழுக்க, சரீர வேதனை எல்லை கடந்தது!
சிலுவையில் அறையப்படுபவர்களுக்கு அவர்களது வேதனை தெரியாமல் இருப்பதற்கு, செல்வந்தர் வீட்டுப் பெண்கள், மயக்கந்தரும் கசப்புக் கலந்த காடியைக் கொடுப்பது வழக்கம். இயேசுவோ அக்காடியைப் பருகவில்லை! மனுக்குலமீட்பிற்காக வாய்திறவா ஆட்டைப்போல அத்தனைப் பாடுகளையும் பொறுமையோடு ஏற்றார் .
மகனின் பாடுகளைக் காணச் சகியாத அந்த தாய்மையுள்ளம் தவித்தது. கரங்களால் தன் முகத்தை மூடியபடி கதறினாள். மகதலேனா மரியாளுடன் பெத்தானியா மரியாளும் , மற்ற பெண்களும் வாய்விட்டுப் புலம்பினர். கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டது. 'ஆறு நாட்களுக்கு முன் தான் தைலமிட்ட அந்த பொற்பாதங்கள் இரத்தம் வழிய ஆணி கடாவப்பட்டிருப்தைக் கண்டு கதறினாள் மரியாள்.
சிலுவையின் மீது குற்றவாளிகளின் குற்றம் எழுதி வைக்கப்படும். இயேசுவின் சிலுவை மீது “நாசரேத்தூர் இயேசு யூதர்களின் ராஜா” என எபிரேயு, கிரேக்கு, இலத்தீன் ஆகிய மும்மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
சிறைச் சாலையின் கதவு திறக்கப்பட்டது. விடுதலை ஆணையைக் கொண்டு சென்ற நூற்றுக்கதிபதி “பரபாஸ் ! உனக்கு விடுதலை! நீ போகலாம்!" என்றார்,
"என்ன! எனக்கா விடுதலை? ரோம அரசு என்னைவிட்டு விட்டதா?” அதிர்ச்சியுடன் கேட்டான்.
"உனக்கு அதிர்ஷ்டம்! ஆசாரியர்கள் இயேசுவைக் குற்றம் சாட்டி, இயேசுவை சிலுவையில் அறையவும் , உன்னை விடுதலை செய்யவும் கேட்டனர். நேற்றிலிருந்து ஒரே சந்தடி, கூச்சல் ஆக இருந்ததே! உனக்குக் கூட கேட்டிருக்குமே....”
ஆமாம்! ஆமாம்! ஒரே இரைச்சல், நீ என்ன சொன்னாய்? இயேசுவை... இயேசுவை....'”பரபாஸ் அவசரப்பட்டான் .
இயேசுவை சிலுவையில் அறையவும், உன்னை விடுதலை பண்ணவும் ஆசாரியர்கள் கேட்டனர். அவர்களது கைக்கூலிப் பட்டாளங்கள். கூச்சலிட்டனர்! சரி....சரி! உனக்கு விடுதலை நீ போ!
அடித்து வைத்த சிலையானான் பரபாஸ்! “சமயம் வரும்போது உனக்காக என்னுயிரைக் கொடுப்பேன்” என இயேசு அன்றொரு நாள் கூறிய பாகங்கள் அவன் செவிகளில் எதிரொலிக்கிறது.
“ஐயோ! இயேசுவே! உமக்கா சிலுவை மரணம்? என்னால் தாங்க முடியவில்லையே! நான் வருகிறேன். என்னை சிலுவையில் அறையுங்கள். கதறிக் கொண்டே ஓடுகிறான் கொல்கதா நோக்கி.
கொல்கதா மலையில் போர்வீரர்கள், ஆசாரியர்கள் ஆகியோர் 'பிறரைக் காப்பாற்றினான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். நாம் நம்பலாம், எனக் கூறி ஏளனம் பேசினர் .
இயேசு சிலுவையினின்று இறங்கி வந்திருந்தால் ... நமக்கு மீட்பு இல்லை. நமக்காக அத்தனைப் பாடுகளையும் பொறுமையோடு சகித்தார். தாங்க முடியாத கொடிய வேதனையின் மத்தியில், மூச்சு விடுவதே அரிதாக இருந்த அந்த வேளையில், மெல்ல இதழ் திறந்தார்.
“பிதாவே! இவர்களுக்கு மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே' என்றார்.
அவருக்கு இரு புறங்களிலும் அறையப்பட்ட கள்ளர்களில் ஒருவன், “நீ மேசியா என்றால் உன்னையும் காப்பாற்று. எங்களை காப்பாற்று? எனப் பழித்தான்.
மற்றவன் அவனைக் கண்டித்து, “நீ கடவுளுக்குப் பயப்படுவதில்லையா? நீயும் நானும் குற்றம் செய்தவர்கள். தண்டனைக்கு உரியவர்கள், ஆனால் இவர் தகாததொன்றும் செய்யவில்லையே!” என்றான். பின் இயேசுவை நோக்கி, “இயேசுவே! நீர் உமது அரசுரிமையோடு வரும் போது அடியேனை நினைத்தருளும்! எனப் பணிவாக வேண்டினான்.
“நான் உனக்குச் சொல்லுகிறேன். இன்றைக்கு நீ என்னோடுக் கூடவே பேரின்ப வீட்டில் இருப்பாய்” என்றார்.
தன்னைத் தூக்கி வளர்த்த அந்த தாயுள்ளம் படும் வேதனையைக் காண தன் கருணை விழிகளைத் திருப்பினார்.
“இயேசு குழந்தையாயிருந்தபோது, ஆலயத்திற்கு கொண்டு சென்ற சமயம் சிமியோன் தாத்தா, “உன் ஆத்துமாவை ஒரு பட்டயம் ஊடுருவும்! என்றாரே. அதுதான் இந்நிகழ்ச்சியோ? எனத் துடித்துக் கொண்டிருந்தாள் பேதை! அழுவதற்குக்கூட பெலனில்லாமல் போகும்மட்டும் கதறிக் கொண்டிருந்தாள். வற்றாத நீரூற்றென கண்ணீர் வந்துகொண்டேயிருந்தது.
தன் தாயைப் பார்த்தார் இயேசு. சிலுவை வரைத் தன்னை பின் தொடர்ந்து வந்து, கலங்கி நிற்கும் தன் அன்பிற்குரிய சீடன் யோவானை பார்த்தார். தன் கடமையை உணர்ந்தவர், தன் தாயை நோக்கி, “அம்மா அதோ உன் மகன்"" என்றார்.
யோவானைப் பார்த்து, “அதோ! உன் தாய் !” என்றார். யோவான், மரியாளைத் தன்னிடமாய் ஏற்றுக் கொண்டான்.
பகல் பனிரெண்டு மணியிருக்கும். சிருஷ்டிகர்படும் வேதனையை சிருஷ்டியால் தாங்க முடியவில்லை. நீதியின் சூரியனாகிய இயேசு படும் வேதனையைக் காணமாட்டாமல் சூரியன் தன் முகத்தை மறைக்கக் காரிருள் உலகைச் சூழ்ந்தது. 12 மணியிலிருந்து 3 மணி வரை இருள் சூழ்ந்திருந்தது. இந்த இருள் எப்படி வந்தது? சூரிய கிரகணத்தால் வந்த இருள் அன்று! அம்மாவாசை அன்றுதான் சூரிய கிரகணம் வரும். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாள் முழுநிலா நாள், இஃது வெறும் கட்டுக்கதை அல்ல! உலகம் முழுவதும் காணப்பட்ட இவ்விருள் பற்றி சீனருடைய நாளாகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எகிப்திலிருந்த வான சாஸ்திரி தியோனிசியஸ் என்பவர் இவ்விருளைக் குறித்து, “ஒன்று தேவர்கள் இவ்வேளை பாடுபட வேண்டும் அல்லது உலகமே நிலை குலைந்து அழிய வேண்டும் ” என்று சொன்னாராம். ஆம் வரலாற்று பின்னனியத்தைக் கொண்டதுதான் கிறிஸ்தவம் .
கி. மு., கி. பி. அதாவது கிறிஸ்துவிற்கு முன் , கிறிஸ்துவிற்குப் பின் என்றுதானே வரலாற்றையே வகுக்கிறோம் . சரி! கொல்கதா மலைக்கு வருவோம் ! உலகின் பாவப்பாரம் அவரை அழுத்த வேதனை.... ஆத்தும வேதனையை அனுபவித்தார் .
"என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்!” என பொழிந்தார் . மூன்று மணி நேர போராட்டத்தில் தானே தனித்து நின்று பாவத்தின் மூலமாக விளைந்த சாபத்தை துடைத்தெறிந்தார் என்பதை விளக்கின அவர்தம் வாசகங்கள் .
உலக மக்கள் அனைவரும் மீட்புபெற்று இறைமக்களாய் வாழ்வதே தன் ஆவல் என்பதை உணர்த்த “தாகமாயிருக்கிறேன் '' எனவுரைத்தார்.
கொல்கதா நோக்கி ஓடிவரும் பரபாலைக் காண்போம். இயேசுவின் இரத்தச் சுவடுகள் வழியே பதிந்து, அவனுக்கு வழிகாட்ட, உள்ளம் பதை பதைக்க... ஓடி வந்தவன் கொல்கதா முகட்டை அடைந்து விட்டான். அந்தோ! இவன் போய்ச் சேர்ந்த நேரம் ... எல்லாம் முடிந்து விட்டது. குருசினில் குருதி வழியத் தொங்கும் கோமகனைப் பார்க்கிறான் . கண்ணீர் வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
இயேசுவே! சொன்னபடி... எனக்காக.... இந்தப் பாவிக்காக உம் உயிரைத் தந்துவிட்டீரே! ... நான் .... நானல்லவா சிலுவையில் அறையப் பட வேண்டும். ஐயோ! இதை என்னால் தாங்க முடியவில்லையே!” கதறுகிறான் .
போர்வீரர்கள் விரட்ட, விரட்ட பொருட்படுத்தாது, இயேசுவின் சிலுவையின் கீழ் மண்டியிட்டுக் கதறுகிறான் .
தான் பூமிக்கு வந்தபணி “முடிந்தது' என்பதை உணர்ந்த இயேசு "முடிந்தது!” எனக் கூறியபடி, பரபாஸை பார்க்கிறார் . இயேசுவின் இரத்தம் அவன்மீது விழுகிறது. இயேசுவின் கருணை விழிகள், பரபாஸின் கண்ணீர் விழிகளைச் சந்தித்தது. மறுகணம் ...
“தந்தையே! என் ஆவியை உன் கைகளில் ஒப்புவிக்கிறேன். “என்று கூறி தன் தலையைச் சாய்த்தார். அவர் ஆவி பிரிந்தது. திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது. பர்வதங்கள் அதிர்ந்தன. கன்மலைகள் பிளந்தன. கல்லறைகள் திறந்தன.
நடந்ததைக் கண்ட நூற்றுவர் தலைவன் 'மெய்யாகவே இந்த மனிதன் நீதிபரன் ” என சாட்சி பகர்ந்தான். காவலர்கள் பயந்தனர்.
பரபாஸ் மெல்ல எழுந்தான். அவன் இதயம் இலேசாக, பாரமற்று இருப்பதையுணர்ந்தான். ஓர் புதிய உணர்வு உள்ளமெல்லாம். நிரம்பி, உணர்வுகளை ஆட்கொள்வதை அவனால் உணர முடிந்தது.
“இயேசுவே! எனக்காக உயிர்தந்த தேவகுமாரனே! உம் இரத்தத்துளிகளால் நான் சுத்தமானேன் . வன்முறைக்காக என்னோடு இணைய மறுத்த உம் கரம் , புதிய வாழ்வுக்காக, என்னோடு. இணைந்து, என்னை வழி நடத்தப் போவதை ஆத்துமத்திலே உணர்கிறேன். வாழ்கிறேன். இனி எனக்காக அல்ல!.... உமக்காக - நீர் காட்டிய பாதையில்!"
இதழ்கள் இசைத்தன. கொல்கதா மலையை விட்டுக் கீழிறங்கினான்.
ஆம் ! அவன் அகம்பாவம் ... ஆணவம் ... வன்முறை... ஆகிய குணங் களை விட்டும் கீழிறங்கினான். அவன் வாழப்போகிறான் .... தனக்காக அல்ல! பிறருக்காக! வன்முறை வழியிலல்ல! அன்பின் அறவழியில்!
இயேசுவின் அந்தரங்க சீடரும், தலைமைச் சங்கத்தாருள் ஒருவராயினும், இயேசுவைக் கொலை செய்யும் தீர்மானத்திற்கு உடன்படாதவரான யோசேப்பும், நிக்கொதேமு என்னும் பரிசேயரும் பிலாத்துவிடம் அனுமபெற்று இயேசுவை. யோசேப்பின் கல்லறையில் நறுமணப் பொருட் களுடன் அடக்கம் செய்தனர்.
இயேசு உயிருடன் இருந்தபோது 'நான் மரித்த பின் மூன்றாம் நாளில் உயிருடன் எழும்புவேன் எனக் கூறியதை நினைவு கூர்ந்த ஆசாரியர் கூட்டம் பிலாத்துவின் அனுமதி பெற்று கல்லறைக்குக் காவல் வைத்து, கல்லுக்கு முத்திரையும் இட்டு பத்திரப் படுத்தினார்கள்.
இதன் தொடர்ச்சி உயிர்த்தெழுந்த உன்னத தேவன்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.