பாவமும் சாபமும் பறந்த மாயம்!

எர்மோன் மலை, பனி படர்ந்த அழகிய மலை. 3000 மீ உயரமுடைய அதன் சிகரங்களை எப்பொழுதும் பனி மூடியிருக்கும், யோர்தான் நதி இங்கு உற்பத்தியாகி உருகி பனியினால் நிரப்பப்படுகிறது. வற்றாத ஜீவநதியின் பிறப்பிடமாம். எர்மோன் மலையின்மேல் இயேசு பேதுரு, யாக்கோபு, யோவானுடன் சென்றார். அங்கே அவர் முகம் கதிரவனைப் போல் பிரகாசித்தது. அவர் ஆடைகள் வெளிச்சத்தைப் போல் வெண்மையாயிற்று. மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு பேசினார்கள். சீடர்கள் அந்தக் காட்சியைக் கண்டபோது, பேதுரு, “இங்கே உமக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவிற்கு ஒன்றுமாக 3 கூடாரங்களைப் போடுவோம்'” என்றான்.

அந்நேரம் ஒளியுள்ள மேகம் நிழலிட்டது. “இவர் என் அன்பான குமாரன் இவரால் பெருமகிழ்வு அடைகிறேன். இவர்க்குச் செவிகொடுங்கள்” என்ற வாக்குப் பிறந்தது.

சீடர்கள் பயத்தினால் முகங்குப்புற விழுந்தனர். இயேசு அவர்களைத் தொட்டு, "எழுந்திருங்கள். பயப்படாதீர்கள்” என்றார். சீடர்கள் எழுந்தனர். அங்கு இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை.. 

நால்வரும் கீழே இறங்கினர், “கடவுளின் மைந்தர் உயிரோடெழும்பும் வரை. இக்காட்சியை யாருக்கும் சொல்லாதீர்கள்”, எனக் கட்டளையிட்டார் கீழே வந்ததும், ஒருவன் இயேசுவின் முன் முழந்தாள் படியிட்டு என் ஒரே மகன் வலிப்பு வியாதியால் கஷ்டப்படுகிறான். உம் சீடரிம் கொண்டு வந்தேன். அவர்களால் குணமாக்க இயலவில்லை”என்றான். 

அவனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்றார். அவன் நுரை தள்ளி தரையில் விழுந்து புரண்டான்.

“இது இவனுக்கு எவ்வளவு காலமிருக்கிறது” எனக் கேட்டார்.

சிறு வயது முதல் இருக்கிறது. இந்தவியாதி இவனை அநேக நாள் தண்ணீரிலும், நெருப்பிலும் தள்ளுகிறது. உம்மால் குணமாக்க இயலுமானால், எங்களுக்கு இரங்கும்! எனக் கெஞ்சினான்.

முடியுமானால்... என்று கூறுகிறாய், நம்பிக்கை உனக்கிருக்குமானால், எல்லாம் ஆகும் என்றார்.

நம்புகிறேன். என் நம்பிக்கையின்மையை என்னை விட்டு நீக்கியருளும்" கதறினான்.

இயேசு அசுத்த ஆவியை அதட்டி விட்டு, பையனை குணமாக்கித் தகப்பனிடம் ஒப்படைத்தார். அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இயேசு எருசலேம் நோக்கிப் பயணமானார். யோர்தானைக் கடந்ததும் முதல் பட்டிணம்... எரிகோ, நல்ல நீர்ப் பாய்ச்சலுள்ள நிலம், தென்னை, பனை, குங்கிலியம், தேன் மற்றும் ரோஜாத். தோட்டங்கள் மிகுந்திருந்தன. ஒரு காலத்தில் இந்த இடம் ரோமப் படையின் பெருந்தளபதி அந்தோனிக்கு சொந்தமாயிறுந்தது. ஆண்டனிதான் மிகவும் நேசித்த எகிப்திய இளவரசி கிளியோபத்ராவுக்கு இதனை கொடுத்தான். அவள் மகா ஏரோது ராஜாவுக்கு இந்த இடத்தை விற்றுப் போட்டாள். பதவிப் ப:

எரிகோவின் வழியாக வரும்போது ஆயக்காரர்களின் தலைவனான சகேயு. இயேசுவைக் காண ஆசைப்பட்டு, அவன் குள்ளனானபடியால், அவர் வரும் வழியில் முன்னாக ஓடி காட்டத்தி மரத்தில் ஏறி பார்த்துக்கொண்டிருந்தான். இயேசு அம்மரத்தின் அடியில் வந்து நின்று சகேயுவே! கீழே இறங்கி வா நான் உன் வீட்டில் தங்க வேண்டும் என்றார். ஆச்சரியமும் ஆனந்தமுமாக இறங்கியவன் இயேசுவைத்தன் இல்லத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தான்.

கூட்டத்தினரிடையே இருந்து பரிசேயர் முணுமுணுத்தனர். ஆயக்காரனின் வீட்டில் தங்கும்படி போகிறார். இவர் பரிசுத்தவான் என்றால் பாவியுடன் ஏன் ஐக்கியம் கொள்கிறார்?” இவ்வாறு பேசுவார்கள் என்பதை அறியாதவனா சகேயு? அவன் இதயம் குத்தப்பட்டது. மனச்சாட்சி பேசியது. எனவே, இயேசுவைப் பார்த்து, “இயேசுவே என் சொத்தில் பாதியை ஏழைகளுக்குத் தருகிறேன். நான் யாரிடமாவது அநியாயமாய் வாங்கியிருந்தால் நாலத்தனையாகத் திரும்பத் தருகிறேன்” என்றான்.

இயேசு அகமகிழ்ந்தார். “இன்று இந்த வீட்டுக்கு மீட்பு வந்தது” ௭ன பதிலிருத்தார். 

இயேசு எருசலேம் சென்று பீட அர்ப்பணிப்பு பண்டிகையில் கலந்தது கொண்டார். இயேசுவிற்கும் பரிசேயர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டபடியேயிருந்தது. ஏனெனில் ஓய்வுநாளில் அநேகரை இயேசு குணப்படுத்தி வந்தார். ஓய்வுநாள் என்றால் ஒருவேலையும் செய்யக்கூடாது என்று கட்டளையிருந்தது. அன்று கோழி முட்டையிட்டால் கூட அது கோவிலுக்குரியது என வாங்கிக் கொள்வர்.

38 ஆண்டுகளாக நோயுற்றவனாக பெதஸ்தா என்ற குளக்கரை மண்டபத்தில் ஒருவன் இருந்தான். அந்தக் குளத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், அக்குளத்தைச் சுற்றி 5 மண்டபங்களுண்டு. அந்த மண்டபங்களில் குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் பலர் படுத்திருந்து குளத்து நீர் எப்பொழுது கலங்கும் எனக் காத்திருப்பர். ஏனெனில் சில வேளைகளில் தேவதூதன் அக்குளத்தில் இறங்கிக் கலக்குவான் தண்ணீர் கலங்கியதும் முதலில் யார் இறங்குகிறார்களோ? அவன் எப்பேர்ப்பட்ட வியாதியஸ்தனானாலும் சுகமடைவான், ஒருமுறை இயேசு அந்த பெதஸ்தா குளத்திற்குச் சென்றார். முப்பத்தெட்டு ஆண்டுகளாக வியாதியாய்க் கிடந்த அவனைக் கண்டு “நீ குணமடைய வேண்டுமென விரும்புகிறாயா?” எனக் கேட்டார்.

அவன் தண்ணீர் கலங்கும்போது என்னைக் கொண்டு போய்விடுகிறவன் ஒருவனுமில்லை'' என்றான். உடனே இயேசு அவனிடம், உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குப் போ என்றார். அவன் உடனே எழுந்தான். நலமும், பெலமும் பெற்றவனாக, படுக்கையை எடுத்துக் கொண்டு நடந்தான். அந்த நாள் ஓய்வு நாள். உடனே அவனை பரிசேய, சதுசேயக் கூட்டத்தினர் தடுத்தனர். "ஓய்வு நாளில் நீ வீட்டிற்கு போவது தகாது”, என்றனர். 

அவனோ “என்னை குணமாக்கியவர் வீட்டிற்குப்போகச்சொன்னார்”. எனக் கூறிவிட்டுப் போய் விட்டான்.

மற்றொருமுறை ஜெப ஆலயத்திற்கு வந்திருந்த 18 ஆண்டுகள் கூனியாயிருந்த பெண்ணைக் குணப்படுத்தினார், ஜெப ஆலயத் தலைவர்களான பரிசேயர்கள். “ஒய்வு நாளில் குணமாக்குதல் கூடாது என வாதாடினர்.

இயேசுவோ, “உன் வளர்ப்புப் பிராணி ஓய்வுநாளில் குழியில். விழுந்திருந்தால் நீ தூக்கி விட மாட்டாயோ? நோயிலுள்ள இவர்களை ஏன் குணமாக்கக் கூடாது? எனக் கேட்டார். இயேசுவுக்கு பதில் சொல்ல அவர்களால் முடியவில்லை. மக்களிடமிருக்கும் தங்கள் செல்வாக்கு குறைந்து வருவதை அறிந்த அவர்கள்; இயேசுவைக் கொலை செய்ய திட்டம் தீட்டினர்.

பெத்தானியாவிலே இயேசுவை ஏற்று உபசரிக்கும் ஒரு குடும்பத்தினர் இருந்தனர். மார்த்தாள், மரியாள் என்ற இரு சகோதரிகளும், லாசர் என்ற ஒரு சகோதரனும் இருந்தனர். லாசர் வியாதியாயிருந்தான். இயேசுவுக்கு சொல்லி அனுப்பினார்கள். இயேசுவோ வரவில்லை, லாசருவோ மரித்துப் போனான். நான்காம் நாள் இயேசு வந்தார். இயேசு வருவதைக் கேள்விப்பட்ட மார்த்தாள் ஓடி வந்தாள். இயேசுவிடம், “ஆண்டவரே! நீ இங்கிருந்திருந்தால் என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” என்றாள். .

உன் சகோதரன் உயிரோடெழுந்திருப்பான்!' என்றார். அவளுக்கு புரியவில்லை. தன் தங்கையிடம் கூற, மரியாளும் இயேசுவிடம் வந்தாள். அவர் பாதத்தில் வீழ்ந்தாள்...

“ஆண்டவரே! நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் மரித்திருக்க மாட்டான்” எனக்கூறி அழுதாள். அவளோடு வந்த யூதர் அனைவரும் அழுதனர். இயேசு கண்ணீர் விட்டார்.
 
அவனை எங்கே வைத்தீர்கள்?” என்றார்.

அங்கிருந்து கல்லரைக்குச் சென்றனர். அது ஒரு குகை, வாயிலிலிருந்தக் கல்லைப் புரட்டச் சொன்னார். புரட்டினர். “லாசருவே! வெளியே வா என்றார்".

லாசரு உயிரோடு எழுந்து வந்தான். அனைவரும் ஆனந்தம் அடைந்தனர். திரும்ப கலிலேயா நாட்டிற்குச் சென்று விட்டார் இயேசு!

இதன் தொடர்ச்சி ஒலிவ மலைச் சொற்பொழிவு என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Bible Articles Tamil Christian Story Udhaya Thaaragai - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download