மூன்றாம் நாள் அதிகாலை ஒரு பெரிய நிலநடுக்கம் உண்டானது. ஆண்டவருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையின். வாயிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி அதன் மீது உட்கார்ந்தான். காவலாளர் அச்சத்தால் நடு நடுங்கி செத்தவர்கள் போல ஆனார்கள். சிலபெண்கள் இயேசுவின் கல்லறைக்கு நறுமணத் தைலமிட வந்தனர். கல்லறை திறந்திருக்க, மின்னலைப் போன்ற தோற்றமுடன், பனி போன்ற வெண்ணிற ஆடையில் இருந்த தூதன் பெண்களைப் பார்த்தான்.
கல்லறை வாயிலுள்ள கல்லை நமக்காக யார் புரட்டுவார்கள்? என்ற வினாக் குறியோடு வந்த பெண்கள், திறந்த கல்லறையையும் தூதனையும் கண்டனர். திகைத்தனர். கொடி போன்ற அவர்களது சரீரங்கள் பயத்தால் நடுங்கியது.
தூதன், “நீங்கள் அஞ்ச வேண்டாம். இயேசு இங்கே இல்லை, அவர் தாம் கூறியபடி எழுந்தார்.” எனக் கூறவும், பயமும், மகிழ்ச்சியும் நிறைந்த பெண்கள் வேகமாகப் போய் சீடர்களுக்கு அறிவித்தனர். பேதுருவும், யோவானும் ஓடி, வந்தனர். இயேசு இல்லாத கல்லறையைக் கண்டு வியந்தனர்.
திறந்த கல்லறையில் இயேசுவைக் காணாத மகதலேனா மரியாள் அழுதுகொண்டிருந்தாள். இயேசு அவள் அருகே வந்தார்.
சும்மா! ஏன் அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்? என்றார்.
அவளோ இயேசுவை அறியவில்லை. அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணினாள். அவளுடைய அன்பு உள்ளம் இயேசுவைக் காணத்துடித்தது.
ஐயா! நீர் இயேசுவை எடுத்துக் கொண்டு போனதுண்டானால் அவரை எங்கே வைத்தீர் என்று சொல்லும் நான் போய் அவரை எடுத்துக் கொள்வேன் என்றாள்.
இயேசு, "மரியாளே! என்றார். அவள் கேட்ட அன்பின் குரல் அல்லவா இது? தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்! வியப்பால் அவள் விழிகள் விரிந்தன. "இயேசு... இயேசு” அல்லவா இவர்!
போதகரே! ஆச்சரியத்தாலும், ஆனந்தத்தாலும் தன்னை மறந்து கூவிய மரியாள் மரியாள் அவர் பாதத்தில் பணிந்தாள்.
“என்னைத் தொடாதே! நான் என் தந்தையிடம் இன்னும் ஏறிப் போகவில்லை. என் தந்தையும், உங்கள் தந்தையுமாகிய கடவுளிடம் ஏறிப்போகிறேன். என் சகோதரருக்கு இதைப் போய்த் தெரிவி” என்றார்.
... அன்றலர்ந்ததாமரை போல் அகமும் முகமும் மலர மகதலேனா மிகுந்த மகிழ்வுடன் சீடர்களிடம் போய்த் தெரிவித்தாள்.
எருசலேமிலிருந்து ஏழு அல்லது எட்டு மைல் தூரமான எம்மா ஊருக்கு இருவரில் ஒருவனாகிய கிலெயோப்பா அவரை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தான். “இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ?” எனக் கேட்டான்.
இயேசுவும் ஒன்றும் தெரியாதவர் போல், “எவைகள்?"" என்றார்.
உடனே அவர்கள், “நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே அவர் தேவனுக்கு முன்பாகவும், ஜனங்கள் எல்லாருக்கும் முன்பாகவும் செய்கையிலும், வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். நம்முடைய பிரதான ஆசாரியர்களும், அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டு இரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. ஆனாலும் எங்கள் கூட்டத்தை சேர்ந்த சில ஸ்திரிகள் அதிகாலமே கல்லறையினடத்திற்குப் போய், அவருடை சரீரத்தைக் காணாமல் திரும்பி வந்து, “அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம்” என்று சொல்லி எங்களை பிரமிக்க பண்ணினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் கல்லறையினிடத்திற்குப் போய் ஸ்திர்கள் சொன்னபடியே கண்டார்கள். இயேசுவையோ காணவில்லை!” பெருமூச்சோடு நிறுத்தினார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் நம்புகிறதற்கு புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே! கிறிஸ்து இவ்விதமாய் பாடுபடவும் தமது மகிமையில் பிரவேசிக்க வேண்டியதில்லையா?” எனக் கேட்டு மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகள் எழுதின வேத வாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக் குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். அந்த சமயம் தாங்கள் போகிற கிராமத்திற்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார்.
அவர்கள் அவரை நோக்கி, "நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று” என அவரை வற்புறுத்திக் கேட்டுக்கொண்டார்கள்.
அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார். இவருடைய விரித்த கரங்களைக் கண்டவர்கள் திகைத்தனர். இரு கரங்களிலும் ஆணிகளினால் உண்டான காயங்களைக் கண்டார்கள். திடுக்கிட்டவர்களாக அவரை நிமிர்ந்து பார்த்தனர். அவரோ புன்னகை பூத்தபடி மறைந்து போனார்.
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி வழியிலே அவர் நம்முடனே பேசி வேத வாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா? என்று கேட்டுக் கொண்டனர்.
அவர்கள் முகங்கள் மகிழ்ச்சியால் பிரகாசித்தன. அவர்கள் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை. உடனே எருசலேமிற்குத் திரும்பினர். இப்பொழுது தானே எட்டு மைல் நடந்து வந்திருந்தனர். அந்தக் களைப்பு, காற்றோடு காற்றாகப் பறந்து போனது. ஆம்... அவர்கள் மீட்பர் உயிரோடு எழுந்து விட்டாரே! இதை அறிவிக்க வேண்டாமா? எருசலேமிற்கு விரைந்தனர். நிகழ்ந்ததை உரைத்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். யூதர்களுக்கு பயந்த சீடர்களில் தாழிட்ட வீட்டினுள் தோமாவைத் தவிர! மற்றவர்கள் கூடியிருந்தனர்.
இயேசு அவர்கள் நடுவே வந்து நின்று, உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக! எனக் கூறினார். சீடர்கள் ஒரு ஆவியைக் காண்பதாக எண்ணிக் கலங்கினார்கள்.
இயேசு, “ஏன் கலங்குகிறீர்கள்? நான்தான். என் கைகளையும், கால்களையும் தொட்டுப் பாருங்கள். எனக்கு தசையும் எலும்புகள் இருப்பது போல் ஒரு ஆவிக்கும் இராதே!" என்று கூறினார். அவர்களோ திகைத்துப் போயிருந்தனர்.
"உண்பதற்கு ஏதாவது இருக்கிறதா? எனக் கேட்டார் பொரித்த மீன் துண்டை அவர்கள் கொடுக்க, இயேசு அவர்கள் முன் சாப்பிட்டார். சீடர்கள் அகமகிழ்ந்தனர்.
தம்மைக்குறித்து எழுதியிருந்தபடி தாம் மரிக்கவும், பின் மூன்றாம் நாள் உயிரோடெழும்ப வேண்டியதும் அவசியம் என்பதையும் அவர்களுக்கு விளக்கினார். தாம் மரித்து உயிரோடு எழுந்ததால்தான், நம் பாவம் மன்னிக்கப்பட்டது என்பதையும் திட்டமாக உரைத்து இவையெல்லாவற்றிற்கும் சீடர்கள் சாட்சிகள் எனக்கூறிச் சென்றார்.
சீடர்கள் மகிழ்வோடு, தோமா வந்ததும் தாங்கள் இயேசுவைக் கண்டதையும், நடந்தவைகள் அனைத்தையும் கூறினர். தோமாவிற்கு நம்ப இயலவில்லை.
தோமா தன்னிடம் இயேசுவைக் கண்டதாகக் கூறியவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகளினால் உண்டான தழும்பை நான் பார்த்து ஆணி இருந்த இடத்தில் என் விரலை இட்டு, அவர் விலாவில் என் கையை வைத்துப் பார்த்தாலொழிய நம்பமாட்டேன்” என்றான்.
எட்டு நாளைக்குப் பின்பு பூட்டிய வீட்டினுள் சீடர்களுடன் தோமாவும் இருந்தான். இயேசு நடுவே வந்து நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்றார். பின் தோமானைப் பார்த்து உன் விரலை நீட்டி என் கைகளைத் தொட்டுப்பார். உன்கையை நீட்டி என் விலாவிலே வை இன்னும் நம்பிக்கையற்றவனாய் இராதே. நம்பிக்கையுள்ளவனாய் இரு” என்றார்.
தோமா, “என் ஆண்டவரே! என் தேவனே!” என்றார். இயேசு “தோமா! என்னைப் பார்த்ததினாலே நீ நம்பினாய்! என்னைப் பார்க்காமலே நம்புகிறவர்கள் நற்பேறு பெற்றவர்கள்” எனக் கூறினார்.
வீட்டினுள் அடைந்து கிடப்பது மிகக் கடினமாக இருந்தது சீடர்களுக்கு பேதுரு, “மீன் பிடிக்கப் போகிறேன்” என கூறவும், தோமாவும், நாத்தான்வேலும், யாக்கோபு, யோவான் இன்னும் சீடர்களும் தாங்களும் வருவதாகக் கூறினர். கலிலேயாக் கடலில் சீடர்களின் படகு ஆடி அசைந்தது. இராமுழுதும் முயன்றும் மீன் ஒன்றும் அகப்படவில்லை; உதயணன் உதயமாக ஆரம்பித்தான். தக தகக்கும் அவன் பொன்னொளிர் கதிர்கள் மெல்ல மெல்ல எழுந்து விரிந்தன. கடலன்னையின் அலை கரங்கள் படகை தொட்டில் போல தாலாட்டியது. ஆனந்தமயமான அந்த வேளை சீடர்களுக்கு மகிழ்ச்சியூட்டவில்லை. அவர்களது சுய முயற்சியின் பலன் பூஜ்ஜியம்தான் என்பதைக் கூறாமல் கூறுவதாகவே அந்த வட்ட வடிவக் கதிரவன் காணப்பட்ட்டான். அவர்கள் கண்களுக்கு கடலன்னையின் அலைகரம் கரையில் தட்டி ஓசையெழுப்புவது தங்களைக் கேலி செய்வதாகவே உணர்ந்தனர்.
அந்த வேளையில் இயேசு கரையில் நின்றார். அவர்களோ அவரை இயேசு என அறியவில்லை. இயேசு அவர்களை நோக்கி, “பிள்ளைகளே! புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா? என்றார். அதற்கு அவர்கள், “ஒன்றுமில்லை” என்றார்கள். அப்பொழுது அவர், “நீங்கள் படகுக்கு வலது புறமாக வலையைப் போடுங்கள் அப்பொழுது அகப்படும் என்றார். போட்டார்கள் திரளானமீன்கள் அகப்பட்டது. அவர்களது அகக் கண்களும், புறக் கண்களும் திறந்தன. இயேசுவிற்கு அன்பாயிருந்த யோவான் கர்த்தர், (இயேசு) என்றான். உடனே பேதுரு கடலில் குதித்தான். மற்றவர்கள் தாங்கள் கரைக்கு இருநூறுமுழ தூரத்தில் இருந்தபடியால் படவிலிருந்தபடியே வலையை இழுத்துக் கொண்டு வந்தார்கள். 153 பெரிய மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
கரையில் கரி நெருப்பு போட்டிருக்கிறதையும், அதின் மேல் மீன் வைத்திருக்கிறதையும் அப்பத்தையும் கண்டார்கள். இயேசு, “இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்” என்றார்.
கரையேறிய பேதுரு, வலையை கரைக்கு, இழுத்தான். ஒருவரும் அவரிடம் ஒன்றும் கேட்கவில்லை. இரவெல்லாம் பிரயாசப்பட்ட அவர்களுடைய சோர்வை நீக்கும் வண்ணமாக இயேசு மீனையும், அப்பத்தையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் போஜனம் பண்ணின பின்பு பேதுருவை நோக்கி.
யோனாவின் குமாரனாகிய சீமோனே! இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என இயேசு கேட்டார்.
பேதுரு, “ஆம் ஆண்டவரே! உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்” என்றார்.
இயேசு “என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக:" என்றார். பின் மறுபடியும் இயேசு, யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?" என இயேசு கேட்டார்.
பேதுரு, “ஆம் ஆண்டவரே! உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர், என்றான்.
என் ஆடுகளை மேய்ப்பாயாக!” என்றவர் மீண்டும் மூன்றாம் முறையாக. “யோனாவின் குமாரனாகிய சீமோனே! நீ என்னை நேசிக்கிறாயா? என்று வினாவினார்.
மூன்றாம் முறையாக இயேசு கேட்டவுடன் சீமோனின் உள்ளம் துக்கத்தால் நிறைந்தது, “உமக்காக என்இன்னுயிரையும் தருவேன் என்று கூறிய தான் அதே இரவில் இயேசுவை தெரியாது எனக்கூறி மூன்றுமுறை மறுதலித்ததை இயேசு நினைவூட்டுகிறாரா? என அவன் அபல உள்ளம் எண்ணியது. இயேசுவை மறுதலித்தபின் தான் மனங்கசந்து கதறி அழுததையும், மனந்திரும்பியதையும் அறியாதவரா கர்த்தர்?” அவன் உள்ளம் துடித்தது. கண்களில் கண்ணீர் முத்துக்கள் திரள, “ஆண்டவரே! நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.” நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்”! என்றான்.
“என் ஆடுகளை மேய்ப்பாயாக” என்ற இயேசு அவனது எதிர்கால ஆடுகள் என்றால் பெரியவர்கள், ஆட்டுக்குட்டிகள் என்றால் சிறியவர்கள், சிறியோர் முதல் பெரியோர் வரை கடவுளுக்கு உகந்தவர்களாக நல்ல பாதையில் வழி நடத்து என்பதே ஆடுகளை மேய்ப்பாயாக என்பதன் பொருளாகும்.
40 நாள் இயேசு பலமுறை பலருக்குக் காட்சியளித்தார். கடவுளின் அரசு பற்றி போதித்தார். பின் பெத்தானியா வரை சீடர்களை அழைத்துக் கொண்டு போனார். “உலக மக்களுக்கு பாவமன்னிப்பின் நற்செய்தியைக் கூறுங்கள், கடவுளின் அரசுக்கு ஏற்றவர்களாக நல்வாழ்வு வாழ்வு செய்யுங்கள். எனது கட்டளைகளை கடைப்பிடியுங்கள். உலகின் இறுதிவரை உங்களோடு இருக்கிறேன்” என்று கூறி அவர்களை ஆசீர்வதித்தார்.
சீடர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, இயேசு விண்ணுலகிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார், சீடர்கள் மகிழ்ச்சியோடு திரும்பி வந்து திருக் கோவிலில் கூடி கடவுளைப் புகழ்ந்து போற்றினார்கள். பின் உலகமெங்கும் சிதறிப் போய் இந்நற்செய்தியை மக்களுக்கு பிரசித்திப்படுத்தினார்கள்.
விண்ணுலகு சென்ற, இயேசு நியாயாதிபதியாக வரப் போகிறார் அவர் வருவதற்கான அடையாளங்கள் நிறைவேறி வருகின்றன. மக்களுக்குத் தீர்ப்பு வழங்க வரப்போகிறார்.
சொர்க்கமும், நரகமும் உண்டு என்பதை அனைத்து சமய நூல்களும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. இறைவனின் ஆலயமாகிய தனது சரீரத்தை தீய எண்ணங்களாலும், தீய செயல்களாலும் கறைபடுத்தியவர்களும், திக்கற்ற ஏழைகளைப் புறக்கணித்தவர்களும் முக்திப் பேறு அடையமுடியாது.
கடவுளாகிய இயேசு கிறிஸ்துவுக்கு தன் இதயக் கோவிலில். இடம் கொடுத்து, கறைபடாதபடி தூய வாழ்க்கை வாழ்ந்து, திக்கற்றவர்களுக்கு உதவி புரிந்து தானும் வாழ்ந்து, பிறரையும் வாழ வைத்தவர்கள் சொர்க்கமாகிய ஆனந்த வாழ்வைப் பெறுவர்.
எனவே நம்மை ஆராய்ந்து பார்ப்போம். இறைவனது ஆலயமாகிய நமது உள்ளமும், உடலும் கறைபட்டிருந்தால். இன்றே... இப்பொழுதே கடவுளாகிய இயேசுவிடம் திரும்புவோம்.
நமது பாவங்களுக்காகத்தானே இயேசு சிலுவையில் அறையப்பட்டார்! அதை உறுதியாக நம்புவோம், அறிக்கையிடுவோம்.
"என் பாவங்களுக்காக பலியான பராபரனே! என்னைக் கழுவும், என் போவங்களைப் போக்கி, என்னைத் தூய்மைப்படுத்தும், உமக்குகந்தவனாக மாற்றும்” எனக் கெஞ்சுவோம். தாயினும் மேலான அன்புடை தயாளன் நம் பாவங்களை மன்னிப்பார். சாந்திதனை நம் உள்ளங்களில் அருளுவார். அதன்பின் பழைய பாவங்கள் நம்மை அணுகாதபடி தூய வாழ்க்கை வாழ்வோம். ஏழைகளையும், அனாதைகளையும் ஆதரிப்போம். நம்மால் முடிந்த உதவிகளை அவர்களுக்குச் செய்வோம்.
இராஜாதி ராஜனும், தேவாதி தேவனுமாகிய இயேசு வரும்போது ஆனந்தமடைவோம், மோட்சமாகிய சொர்க்க வாழ்வினை சுதந்தரிப்போம்.
உதய தாரகை எழுத உதவிய நூல்கள்
1) புனித திருமறை
1 இறையியல் நீட்டிப்புக் கல்வி புத்தகங்கள்