பஸ்காப் பண்டிகையில் பரமன்‌

புதன்கிழமை, பிரதான ஆசாரியர் அரண்மனை, அன்னாவும், காய்பாவும், சனகரீப் சங்கத்தைச் சேர்ந்த ஓரிருவர் அமர்ந்திருந்தனர். காய்பா பொருமிக் கொண்டிருந்தார்.

“மாமா! இந்த நாசரேத்தூரானின் அட்டகாசம் சகிக்க முடியவில்லை. இரு தினங்களுக்கு முன் ஆலயத்திற்கு கோவேறு கழுதை மீது பவனியாக வந்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும், கொள்ளுகிறவர்களையும் விரட்டியிருக்கிறான். போர்மை எண்ணத்துடன் வரும் இவன் குதிரை மீது வரவேண்டியதுதானே! சமாதானமாக வருகிறான் என்று மக்கள் அறிந்து கொள்ள கழுதை மீது பவனி!”

ரோம அரசாங்கத்தால் பிரதான ஆசாரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் காய்பா! இதற்கு முன் இருந்தவர் காய்பாவின் மாமனாகிய அன்னா! பிரதான ஆசாரியர் பதவியானது, அவர்களுடைய மரணம் வரை உள்ளதாக யூதர்கள் கருதியதால் அன்னாவையும் பிரதான ஆசாரியராக மதித்தனர்.

“காய்பா! பொறுமையாக இரு! காலம் கடந்து விட வில்லை!” அன்னா பதில் கூறினார்.

சனகரீப் சங்கத்தைச் சேர்ந்த பிக்ரி, “இயேசுவை மேசியா என்று அறிக்கையிடுபவனை, ஜெப ஆலயத்திற்கு புறம்பாக்க வேண்டுமென்று கட்டளையிட்டுக் கூற அவனை அநேகர் பின்பற்றிச் செல்கின்றனரே!”

அநேகர் என்ன? இந்த உலகமே அவனுக்கு. பின்சென்று போகிறது! என்று சொல்” அன்னா பதில் கூற, காய்பா "அநேகர் அழிவதைவிடஇவன் ஒருவன் மரிப்பது நல்லது” என்றார்

“மரித்து நான்கு நாளான லாசருவையே! உயிரோடு எழுப்பிவிட்டானே! சாதாரண அற்புதமா நடக்கிறது? பலத்த அதிசயங்கள் அல்லவா? அவனால் நடப்பிக்கப்படுகிறது!” என பிக்ரி வாய் பிளக்க,

“எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான் அவனுடைய ஆட்டம் முடியப்போகிறது'”.

“அதெப்படி அவ்வளவு திட்டமாகக் கூறுகிறீர்கள்?”

“யூதாஸ் நம்மை சந்திக்க விரும்புவதாகக் கூறிவிட்டிருக்கிறான்

“அப்படியா?”

“அநேகமாக இப்பொழுது வந்து விடுவான். நம்மை இங்கு சந்திக்கும்படி அனுமதி கொடுத்துள்ளேன்!” என்று கூறும்போதே சேவகன் வந்து யூதாஸ் வந்திருப்பதாகக் கூறவே அவனை உள்ளே வரச் சொன்னார்கள். யூதாஸ் வந்து வந்தனம் தெரிவித்தான்.

யூதாஸ்! நீ நல்ல காரியமாகவே வந்திருப்பாய் என நம்புகிறேன், சரிதானே! என்ன அன்னா வினவ

"குருவே! தங்கள் யூகம் தவறாகுமோ? இயேசுவை நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” யூதாஸ் அன்னாவின் விழிகளை பிறருக்கு நேர் சந்தித்தான்.

அன்னாவும், காய்பாவும் கலந்து பேசி முடிவிற்கு வந்தனர்.

"30 வெள்ளிக் காசுகள் தருகிறோம் யூதாஸ்!” அன்னா கூற,

"மிக்க மகிழ்ச்சி! நாளை இரவு என்னுடன் உங்கள் காவலளர்களைஅனுப்புங்கள்.

"மிக்க மகிழ்ச்சி யூதாஸ்! உன்னை யூத சமுதாயம் என்றும் மறக்காது!"

அடுத்த நாள் மேல் அறை ஒன்றில் பஸ்கா விருந்தை அருந்த இயேசுவும் யூதர்களும் கூடினர். இயேசு பந்தியை விட்டெழுந்து மேலாடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ஒரு கலத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி தாம்
கட்டிக் கொண்டிருந்த துண்டினால் துடைத்தார். பின் மேலாடையைக் கட்டிக் கொண்டு தம் இருக்கையில் அமர்ந்தார்.

"நான் உங்களுக்குச் செய்ததைப் புரிந்து கொண்டீர்களா? நீங்கள் என்னைப் போதகர் (குரு) என்று கூறுகிறீர்கள் உண்மைதான். குருவாகிய நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால் நீங்கள் எவ்வளவு தாழ்மையாக ஒருவருக்கொருவர் நடந்துகொள்ள வேண்டுமென அறிந்து கொள்ளுங்கள். 

கேளுங்கள். என் பெயரால் நீங்கள் எதைக் கேட்டாலும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி அதைத் தருவேன். நான் உங்களுடன் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரோடு ஒருவர் அன்புள்ளவர்களாயிருங்கள், ஒற்றுமையாயிருங்கள். என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு கீழ்ப்படிந்து நடப்பதே என்மீது நீங்கள் அன்பாயிருப்பதாகும். திராட்சைக் கொடி செடியில் நிலைத்திருப்பது போல நீங்கள் என்னில் நிலைத்திருங்கள். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ, அது உங்களுக்குக் கிடைக்கும்.

நான் உங்களை விட்டு செல்லப்போகிறேன். நான் போவது நல்லதே, நான் உங்களை விட்டுப் போனபின் உங்களுக்காக என் தந்தையாரிடமிருந்து தூய ஆவியாகிய சகாயரை அனுப்புவேன், அவரே சத்தியராகி ஆவியானவர். அவர் உங்களோடு தங்கி, உங்களுடன் இருந்து உங்களை வழிநடத்துவார்!” என்றார்.

இயேசு அப்பத்தை எடுத்து துதிசெலுத்தி அதைப்பிட்டு சீஷருக்குக் கொடுத்து; “எல்லோரும் இதிலுள்ளதை அருந்துங்கள். ஏனெனில் இது உடன்படிக்கைக்குரிய என் இரத்தம். பாவமன்னிப்புக்கென்று இது எல்லோருக்காகவும் சிந்தப்படுகிறது” என்று கூறினார்.

விருந்தருந்தும் போது, “உங்களில் ஒருவன் என்னைக் காட்டி கொடுப்பான்” என்றார்.

“நானோ? நானோ?” என ஒவ்வொருவராகக் கேட்டனர். சீடர்கள் முகங்கள் முகிலுண்ட மதியம் போல் ஆயிற்று. ஏற்கனவே மூன்று முறை, தம்மை எருசலேமில் கொலை செய்வார்கள் என தம் மரணத்தைப் பற்றி இயேசு கூறியிருந்ததை நினைவுகூர்ந்து மிகவும் வருந்தினர். தற்போது சீடர்களாகிய தங்களில் ஒருவனே காட்டிக் கொடுக்கப் போகிறான் எனக் கேள்விப்படவும் மிகவும் சஞ்சலம் அடைந்தனர்... அவனை இனம் கண்டு கொள்ளத் துடித்தனர். இயேசுவின் வலப்புறம். யூதாஸும், இடப்புறம் இயேசுவிற்கு அன்பான யோவானும் அமர்ந்திருந்தனர். யோவான் இயேசுவின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தான். பேதுரு யோவானிடம் “யார் காட்டிக் கொடுப்பான்?!” என கேட்கும்படி சைகை காட்டினான். யோவானும் “ஆண்டவரே! யார் அவன்? எனக் கேட்டான்.

பஸ்கா அருந்தும் போது அதைப்பிட்டு அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவர் தனக்குப் பிட்டுக் கொண்டு அதை அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும். இயேசு இந்த அப்பத்தை யாரிடம் கொடுக்கிறோனே அவன் தான் எனக் கூறும் போது அப்பத்தை யூதாஸிடம் கொடுத்துவிட்டார். யூதாஸ் அடுத்தவர்களுக்குக் கொடுக்க அப்பம் சுற்றிவர ஆரம்பித்துவிட்டது.

யூதாஸ் பந்தியை விட்டு எழுந்தான். "இயேசு நீ செய்வதை சீக்கிரம் செய்” என்றார். அவன் வெளியே போனான். “பண்டிக்கைக்காக ஏதாவது வாங்கும்படி கூறியிருப்பார் அல்லது ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்குபடி கூறியிருப்பார்' என நினைத்துக் கொண்டனர் ஏனெனில் பொருளாதாரம் அனைத்தும் அவன் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.

இன்று இரவு என்னை விட்டு எல்லோரும் ஓடிப் போவீர்கள்” என்றார்.

இயேசுவே! உம்மோடு மரிக்க வேண்டியதாயிருந்தாலும், நான் ஆயத்தமாயிருக்கிறேன்,' என்றார் பேதுரு.

“பேதுருவே! இன்று சேவல் கூவுவதற்கு முன்னே நீ என்னை உனக்குத் தெரியாதென்று நீ மூன்று முறை மறுதலிக்கப் போகிறாய்! 

பேதுரு, “இல்லை! ஆண்டவரே! அப்படிச் செய்யமாட்டேன் என்றார். எல்லா சீடர்களும் அப்படியே சொன்னார்கள். 

இயேசுவும் அவருடைய சீடர்களும் கெத்செமேனே தோட்டத்திற்குச் சென்றனர். சீடர்களை அங்கே' இருக்கச் சொல்லிவிட்டு, யாக்கோபு, யோவான், பேதுரு இம்மூவரை மட்டும் அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்றார். இயேசு சீடர் மூவரையும் நோக்கி மரணத்துக்கேதுவான கடுந்துயரத்தால் நிறைந்திருக்கிறேன். நீங்கள் என்னோடு விழித்திருங்கள். எனக்காக வேண்டுதல் செய்யுங்கள்” எனக் கூறி சற்று அப்பாற் சென்று, “என் தந்தையே! கூடுமானால் இந்த துன்பக்கலம் என்னை விட்டு நீங்கட்டும். என்றாலும் என் விருப்பத்தின்படியன்று. நீர் விரும்புகிறபடியே நடக்கட்டும்” என்றார்.

அவரது வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது. அவரது உள்ளம் இம்மனுக்குலத்தின் மீட்புக்காக மரிக்கப் போகிறேன். என்று ஆனந்தப்பட்டாலும் இம் மனித உடலில் படப்போகும் வாதைகளை எண்ணியபோது, அவர் மனம் கலங்கியது. சீடர்களிடம் வந்தார் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். பேதுருவை நோக்கி” ஒரு மணி நேரம் என்னோடு விழித்திருக்க உங்களால் இயலவில்லையா? உள்ளத்தில் ஆர்வம் இருக்கிறது. உடலோ ஆற்றலற்றதாயிருக்கிறது. ஆகையால் சோதனைக் குட்படாதபடி விழித்திருந்து ஜெபம் செய்யுங்கள்” என்றார். 3 சீடர்களும் துடித்தெழுந்தனர். கண்களைக் கசக்கிக் கொண்டு முழந்தாள் படியிட்டனர். இயேசு அப்புறம்போய், இவற்றை நான் அனுபவிக்க வேண்டுமென்பது உமது விருப்பமெனில் உமது திருவுளமே நிறைவேறட்டும்” என்று வேண்டினார்.

திரும்பவும் வந்து 3 சீடர்களும் உறங்குவதைக் கண்டார். பின்மூன்றாம் முறையும் போய் தாம் முன்பு கூறிய வார்த்தைகளையே கூறி ஜெபித்தார். பிறகு தம் சீடரிடம் வந்து, “இன்னுமா தூங்கி இளைப்பாறுகிறீர்கள்? வேளை வந்து விட்டது எழுந்திருங்கள் போவோம். என்னைக் காட்டிக் கொடுக்கிறவன் இதோ நெருங்கி வந்து விட்டான்” என்றார்.

அப்பொழுது யூதாஸ் வந்தான். வாள்களோடும் தடிகளோடும் ஒரு பெரிய கூட்டத்தார் வந்தனர். யூதாஸ் இயேசுவின் அருகில் வந்து,

“ரபீ! நீர் வாழ்க!” என்று கூறி முத்தமிட்டான்.

“நண்பனே! என்னை முத்தத்தினாலேயாக் காட்டிக் கொடுக்கிறாய்?” என்றார். காவலர்கள் இயேசுவை காவலர்கள் பிடித்தனர். பேதுரு தன்னிடமிருந்த வாளால் தலைமை ஆசாரியனின் வலது காதை வெட்டினான்.

இயேசு பேதுருவைப் பார்த்து “உன் வாளை உறையிலே போடு வாளை எடுக்கிறவர்கள் வாளாலே மடிவார்கள்” நான் என் தந்தையிடம் வேண்டிக் கொண்டால் 12 லேகியோன்களுக்கு (இலேகியோன் 6000 போர்வீரர் அடங்கிய ரோமப்படைப் பிரிவு) மேற்பட்ட தூதரை என்னிடம் அனுப்பமாட்டாரா? இவையெல்லாம் நடந்தே தீர வேண்டும்:” என்று கூறியவர் அறுந்த காதை எடுத்து வேலைக்காரனின் காதைத் தொட்டு சுகப்படுத்தினார்.

இயேசுவைப் பிடித்துக் கொண்டு போனார்கள். சீடர்கள் அனைவரும் இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள்.. பேதுரு தூரத்திலே பின் தொடர்ந்தான்.

இதன் தொடர்ச்சி சிலுவைத் தீர்ப்பு! என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Bible Articles Tamil Christian Story Udhaya Thaaragai - Story

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download