யூதருடைய பஸ்காப்பண்டிகை வந்தது. இஸ்ரவேல் மக்கள் எகிப்தில் அடிமைத்தனத்தினின்று விடுதலையாகி வந்த நானை நினைவு கூறும் திருநாள் இந்த பஸ்காப் பண்டிகை. அடிமைகளாக சொல்லொண்ணா துன்பத்தை ௭கிப்தில் இஸ்ரவேலர் அடைந்தபோது, அவர்களது கண்ணீர் துடைக்க, மோசே ஆரோன் என்பவர்களை அனுப்பி, இஸ்ரவேலரை மீட்டு வர
யெகோவா சித்தம் கொண்டார். மோசே, ஆரோன் மூலமாக பலத்த அற்புதங்களைச் செய்து, எகிப்தியரை வாதித்தும் கூட பார்வோன் இஸ்ரவேல் மக்களை விட மனமில்லை. 10 வது வாதையாக எகிப்திலுள்ள எகிப்தியரின் முதற்பேறுகள் அனைத்தையும் அழிக்க தேவன் சித்தம் கொண்டு சங்கார தூதனை அனுப்புகிறார். சங்கார தூதன், இஸ்ரவேல் மக்களை அழிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரும் ௮ல்லது இரு குடும்பங்கள் சேர்ந்து ஒரு வயதான, பழுதற்ற ஆட்டுக் குட்டியைத் தேர்ந்தெடுத்து அதை அடித்து அதன் இரத்தத்தை வீட்டு வாசல் நிலைக்கால்களிலும் வாசல் மேற்சட்டத்திலும் பூசவேண்டும். ஆட்டுக் குட்டியின் மாம்சத்தைச் சுட்டுப் புசிக்க வேண்டும். நிலைக் கால்களில் இரத்தத்தைப் பார்த்த சங்காரதூதன், இஸ்ரவேல் வீட்டாரைத் தொடாதபடிக் கடந்து போவான்.
கடவுள் தந்த இந்த நியமப்படி இஸ்ரவேல் மக்கள் நடந்தனர். எகிப்தியரின் அரசனான பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் எந்திரம் அறைப்பவனின் தலைப்பிள்ளை வரை அன்று மரித்து போனது. விலங்கினத்திலும் முதற்பேறுகள் அனைத்தும் மடிந்து போயின பார்வோன் மனம் துடித்தது: எகிப்தியர் கலங்கினர். இஸ்ரவேலர் விடுதலையாகி கானான் நாடு நோக்கிச் சென்றனர். அந்நாளை மறவாது பஸ்காப் பண்டிகையாக இஸ்ரவேலர் கொண்டாடி வந்தனர். பாலஸ்தீனம் முழுவதிலும் உள்ள இஸ்ரவேலர் பஸ்காப் பண்டிகை கொண்டாட எருசலேம் நோக்கி வந்தனர். பெத்தானியாவிலே ஒரு பரிசேயருடைய வீட்டில் இராவிருந்து நடந்தது. லாசரு பந்தியில் இருந்தான். மரியாள் விலையுயர்ந்த நளதம் என்னும் தைலத்தில் ஒரு ராத்தல் கொண்டு வந்து, இயேசுவின் பாதங்களில் பூசி துடைத்தாள். வீடு முழுவதும் நறுமணம் கமழ்ந்தது.
யூதாஸ் வேதனைப்பட்டான் "இந்தத் தைலத்தை 300. திநாரியத்துக்கு விற்று ஏழைகளுக்கு கொடுக்கலாமே!” என்றான்.
இயேசு, “இவளை துன்பப்படுத்தாதே, என் அடக்க நாளைமுன்னிட்டு இதைச் செய்தாள். ஏழைகள் உங்களிடையே எப்போதும் இருக்கிறார்கள். நான் எப்பொழுதும் உங்களிடையே இரேன்” என்றார். அந்நாள் சனிக்கிழமை.
மறுநாள் இயேசு சமாதானத் தூதுவர் என்பதற்கு அடையாளமாக கழுதை மீதேறி எருசலேமுக்குச் சென்றார்.
மக்கள் குருத்தோலைகளைப் பிடித்துக் கொண்டு இயேசுவிற்குப் பின்சென்று,
“ஆண்டவரின் திருப்பெயரால் வருகிறவர் கடவுளின் ஆசி பெறுவாராக'! எனப் போற்றிப் புகழ்ந்தனர். அடுத்த நாள் திங்கட்கிழமை ஆலயத்திலுள்ள விற்கிறவர்களை விரட்டி என்னுடைய வீடு ஜெப வீடு. அதைக்கள்ளர் குகையாக்காதீர்கள் என கடிந்துரைத்தார். வேதபாரகரும், பரிசேயரும் கடுஞ் சினம் கொண்டனர்.
செவ்வாய்க் கிழமை ஆலயத்தில் வேதபாரகரும், பரிசேயரும் கூடி இயேசுவைக் குற்றப்படுத்தும்படி கேள்விகள் கேட்டனர்.
ஏரோதியரும் இயேசுவிடம், “ராயருக்கு வரி கொடுப்பது நியாயமா? கொடுக்கலாமா? கொடுக்கக் கூடாதா?” என வினவினர்.
இயேசு “கொடுக்கலாம்” என பதில் கொடுத்தால் கானானியர்களாகிய புரட்சிக்காரரின். விரோதத்தை இயேசு சந்திக்க நேரிடும். “கொடுக்கக்கூடாது” என பதில் தந்தால், அரசின் பகைமையை சம்பாதிக்க நேரிடும். எனக்கருதியே இவ்வினாவைக் கேட்டனர்.
இயேசு அவர்களை நோக்கி வரிக்கென்று பயன்படுத்தும் ஒரு நாணயத்தைக் கொண்டுவரும்படி கேட்டு நாணயத்தைச் சுட்டிக் காட்டி இந்த உருவமும் பெயரும் யாருடையது” எனக்கேட்டார்.
"ராயனுடையது” என்றார்கள்.
அப்படியானால் ராயனுடையதை ராயனுக்கும் கடவுளுடையதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என்றார்.
அவர்கள் வியப்படைந்து போய்விட்டார்கள். உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கும் சதுசேயர் இயேசுவிடம் வந்து, “போதகரே! பிள்ளையில்லாத ஒருவன் இறந்து போனால் அவன் மனைவியை, அவனுடைய சகோதரன் மணம் செய்து, தன் சகோதரனுக்கு மகப்பேறு உண்டாக்க வேண்டுமென்று மோசே கட்டளையிட்டிருக்கிறாரே! சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள். மூத்தவன் ஒரு பெண்ணை மணம் செய்து மகப்பேறு இல்லாமல் மரித்தான். இரண்டாம் சகோதரன் அவளை மணம் செய்தான். அவனும் பிள்ளையில்லாமல் இறந்தான். ஏழு சகோதரர்களும் அவளை மணம் செய்து, பிள்ளையில்லாமல் மரித்தனர். அவளும் மரித்துப் போனாள். உயிர்த்தெழுதலில் அவள் யாருக்கு மனைவியாயிருப்பாள்? ஏழு பேரும் அவளை மணம் செய்திருந்தனரே!” என்றார்கள்.
இயேசு, நீங்கள் தவறான வழியில் சிந்திக்கிறீர்கள். உயிர்த்தெழுதலில் கொள்வினையும், கொடுப்பினையுமில்லை. அவர்கள் உயிர்த்தெழுந்து தேவ தூதர்களைப் போல இருப்பார்கள்” என்று பதில் அளித்தார்.
பரிசேயர் இயேசுவிடம் வந்து “நீதிச் சட்டத்தில் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார்கள்.
இயேசு, உன் கடவுளாகிய ஆண்டவரிடம் உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆன்மாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கொள்வாயாக, என்பதே முதன்மையான கட்டளை, இதற்கு ஒப்பான இரண்டாம் கட்டளை, நீ உன்னை நேசிப்பதுபோல் பிறரையும் நேசிப்பாயாக! என்பதே என்று கூற பரிசேயரும் வாயடைத்தவர்களாக அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
இயேசு தம்மைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து. அவர்களுக்கு போதித்தார்.
“வேத அறிஞரும், பரிசேயரும், மோசேயின் பதவியில் வீற்றிருப்பதால் அவர்கள் போதிப்பதைக் கேட்டு நடங்கள். அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள். அவர்கள் தங்கள் நெற்றிப் பட்டங்களை அகலமாக்கி, விருந்துகளில், தொழுகைக் கூடங்களில் முதன்மையான இடங்களைத் தெரிந்தெடுக்கிறார்கள். நீங்களோ பக்திக்குரிய வேடங்களை முக்கியப் படுத்த வேண்டாம் பெருமையை விடுத்து, தாழ்மையாயிருங்கள்.
காணிக்கை கொடுப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் போலி பக்தர்கள் நியாயம், இரக்கம், கடவுளைப் பற்றும் நம்பிக்கை ஆகியவற்றை விட்டு விட்டார்கள். நீங்களோ உங்கள் சம்பாத்தியத்திலெல்லாம் பத்திலொரு பங்கை கடவுளுக்குப் படைப்பதுடன் இரக்கம், நியாயம், கடவுள் நம்பிக்கை. இவற்றுடன் வாழ்க்கை நடத்துங்கள். மாசு படிந்த வாழ்வு நடத்திக் கொண்டு, ஆலயத்திற்கு அள்ளிக் கொடுத்தால் ஆண்டவன் மகிழ்வடைய மாட்டா.
உணவுப் பாத்திரத்தின் வெளிப்புறத்தை மட்டும் தூய்மையாக்க முயலாதீர்கள். முதலாவது பாத்திரத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்கு. அப்பொழுது பாத்திரத்தின் வெளிப்புறத்தையும் சுத்தமாக்குவாய். அதைப்போல பக்திக்குரிய வேடமல்ல! உன் உள்ளம் உண்மை பக்தியில் நிரம்பட்டும்!
இயேசு பேசப் பேச கூடியிருந்தவர் தெளிந்த ஞானம் பெற்றனர். பின் ஒலிவமலை நோக்கி தம் சீடருடன் சென்றார்.
கிதரோன் பள்ளத்தாக்கை கடந்தபின் எருசலேமைப் பார்த்துக் கலங்கினார்.
“எருசலேமே! எருசலேமே! தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று, இதோ! உங்கள் வீடு உங்களுக்கு பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்,” என்று கூறினார்.
மாலை நேரம்! இனிய தென்றல் தவழ்ந்தது. பண்டிகைக்கு வந்து ஒலிவ மலையில் கூடாரமிட்டுத் தங்கியிருந்த இயேசுவின் அடியார்கள் அவரிடம் கூடி வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார். “எருசலேம் திருக்கோவில் இடிக்கப்படும். பாழாக்கும் அருவருப்பு திருக்கோவிலில் நிற்கும்போது இது நிகழும். அப்பொழுது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக் கடவர்கள். இந்த உலகை நியாயந்தீர்க்க கடவுளின் மைந்தர் மேகங்களின் மேல் வருவார்.”
“ரபீ அவர் எப்பொழுது வருவார்? அவரது வருகைக்கான அடையாளங்கள் யாவை?” என அவர் அடியார் ஒருவர் வினவ,யுத்தங்களையும், யுத்தச் செய்திகளையும். அதிகமாகக் கேள்விப்படுவீர்கள். பஞ்சம் தலை விரித்தாடும். நிலநடுக்கம் உண்டாகும். பொய்யான தீர்க்கதரிசிகளும், போலியான கடவுள்களும் தோன்றுவர். அரிய, பெரிய செயல்களையும். அற்புதங்களையும் செய்வார்கள். “கடவுள் வந்துவிட்டார். அதோ வனாந்திரத்தில் இருக்கிறார்' என்று சொன்னால் புறப்பட்டுப் போகாதீர்கள்...
“இதோ உள்ளறையில் இருக்கிறார்” என்றால் நம்பாதீர்கள். கடவுளின் வருகை மின்னல் கிழக்கில் தோன்றி மேற்கு வரை மின்னுவது போல இருக்கும். அந்த நாளில் கதிரவன் இருண்டு விடும் சந்திரன் ஒளி வீசாது. விண்மீன்கள் வானத்தினின்று” விழும். வானத்தின் ஆற்றல்கள் அசைக்கப்படும். கடவுளின் மைந்தர் வல்லமையோடும், மாபெரும் மாட்சிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருவார்”
அந்த நாள் எந்த நாள்? யார் அறிவார்? கடவுளின் மைந்தராகிய நீர் அறிவீரோ! என ஒருவர் கேட்டார்.
அந்த நாளையும், நாழிகைகளையும் விண்ணகத் தந்தை ஒருவர் தவிர வேறு ஒருவரும் அறியார். தேவ தூதர்களும் அறியார். கடவுளின் மைந்தரும் அறியார்!
“நாங்கள் என்ன செய்ய வேண்டும்?”
விழித்திருங்கள். அதாவது கடவுளின் மைந்தரை வரவேற்க ஆயத்தமாயிருங்கள். உங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி, கடவுளின் திருவுளப்படி, தூய்மையான வாழ்க்கைக்குப் பாத்திரராயிருங்கள்.” என்று கூறினார்
ஒலிவ மலைச் சொற்பொழிவு முடிந்தது.
இதன் தொடர்ச்சி பஸ்காப் பண்டிகையில் பரமன் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.