மாட்டுக் குடிலின் வெளியே நடைபயின்று கொண்டிருந்த யோசேப்பின் செவிகளின் '*குவா... குவா” என குடிலின் உள்ளிருந்து வந்த குழந்தையின் அழுகுரல் தேவகானமாய் ஒலித்தது. அதே சமயம் விண்ணிலே ஓர் தாரகை (நட்சத்திரம்), உதயமாகி ஒளி சிந்தியது. ஒரு சில மணித்துளிகளில் இரு பெண்கள் குடிலிலிருந்து வெளியே வந்தனர்.
“ஐயா! தங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது எங்களது வாழ்த்துக்கள்'' என மகிழ்ச்சியுடன் கூறி அவ்விடம் விட்டு அகன்றனர்.
ஆவலே வடிவமாக உள்ளே சென்றார் யோசேப்பு. சோர்ந்திருந்தாலும், சந்தோஷமாக இருந்த அருமை மனைவியையும் அருகில் கந்தைத் துணியில் பொதிந்து புல்லணையை பஞ்சணையாக்கி படுத்திருந்த பச்சிளம் பாலகனையும் கண்டார். பரவசமானார்.
அதே இரவில் பெத்லெகேமின் நாட்டுப் புறத்தே மேய்ப்பர்கள் வெட்ட வெளியில் தம் ஆடுகளைக் கவால் காத்துக்கொண்டிருந்தனர். திடீரென வானிலே ஒளி வெள்ளம், மேய்ப்பர்கள் மருண்டனர். மறுவிநாடி தேவ தூதன் தோன்றினான்.
பயப்படாதீர்கள்! உங்களுக்காக பெத்லெகேம் ஊரில் மீட்பர் பிறந்திருக்கிறார் பிள்ளையைத் துணிகளில் சுற்றி கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம் என்று
தூதன் கூற, தூதர் கூட்டம் விண்ணிலே தோன்றி,
உள்ளதத்திலே கடவுக்கு மாட்சிமை
மண்ணிலே மனிதரிடை சமாதானம்
மனிதர் மேல் அவர்க்கு அன்பு
உண்டாயின... உண்டாயின''எனப் பாடிப் புகழ்ந்தனர்.
முதிய மேய்ப்பனிடம் இளைஞன் மகிழ்ச்சி பொங்க, ''தாத்தா எவ்வளவு அருமையான காட்சி! நான் என் வாழ்நாளில் இதுபோல் பார்த்ததே இல்லை! என்றான்.
காலேப்! காட்சியை விட அவர் சொன்ன செய்தியைப் பார்த்தாயா? மேசியா பிறந்திருக்கிறாராம். ஏழைகளும் பாமரருமான நமக்கு கடவுள் சொல்லி விட்டிருக்கிறார். இதை நினைக்கிறப்ப என் மனம் எப்படி பொங்குது தெரியுமா?”
அண்ணே! பேசிக் கொண்டே நேரத்தைப் போக்க வேண்டாம். நாம் சீக்கிரம் போய் அந்த மீட்பரைப் பார்ப்போம்!'”
“என்ன கொண்டு போகலாம்? உ....ம் என்னிடம் ஒரு கம்பளிச் சட்டை இருக்கிறது. அதைக் கொண்டுவருகிறேன்”
“நான் பாலாடைக் கட்டிகளைக் கொண்டு வருவேன்'”
“என்னிடம் சிறிய போர்வை இருக்கிறது! குளிருக்குப் போர்த்திக்கலாம். அதைக் கொண்டு வாரேன்”
மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புறப்பட்டுச் சென்றனர்.
ஏரோது அரண்மனை மூன்று வானநூல் அறிஞர்கள் வாயிற்காவலனை அணுகி தங்கள் வருகையை அரசர்க்கு அறிவிக்கும்படி கூறினர். வாயிற்காவலன் மூலம் அரச அணுமதி பெற்ற சாஸ்திரிகள் அரண்மனைக்குள் சென்றனர். மகா ஏரோது சாஸ்திரிகளை வரவேற்றான்.
“மாமன்னா! வணக்கம்!'”
“வாருங்கள்! வானசாஸ்திரிகளே! வாருங்கள்! தங்கள் வருகையால் எம் அரண்மனை சிறப்புப் பெற்றது. தங்களை வரவேற்பதில் யாம் பெரு மகிழ்வு கொள்கிறோம். அவன் ஆசனத்தில் அமருங்கள். தாங்கள் எம்மை நாடி வந்ததற்கு சிறப்பான காரணம் ஏதாவது உண்டா?”
ஒரு வானநூல் அறிஞர் தன்னையும் மற்றவர்களையும் அறிமுகம் செய்தார்!
அரசே! என் பெயர் டைரஸ், இவர் பெயர் அற்போனோ, இவர் பெயர் டேனியேல். பின் தொடர்ந்து மன்னா! யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவரைப் பணிந்து கொள்ளவந்தோம். கிழக்கில் அவருடைய விண்மீனைக் கண்டோம்.
என்ன யூதருக்கு ராஜாவா! இந்த அரண்மையில் ஒரு குழந்தையும் பிறக்கவில்லையே. ஏரோதின் மனதில் கலக்கம்.
சேவகா வேதபாரகரையும், பரிசேயரையும் அழைத்து வா....
அப்படியே அரசே!'”
வேதபாரகர்களும், பரிசேயர்களும் அழைத்து வரப்பட்டனர்.
யூதருக்கு ராஜாவானவர் எங்கே பிறப்பார்? வேத நூல்கள் யாது கூறுகின்றன?”
யூதேயாவிலுள்ள பெத்லெகேமில் பிறப்பார். அதேனென்றால் யூதேயா தேசத்திலுள்ள பெத்லெகேமே யூதாவின் பிரபுக்களில் நீ சிறியவனல்ல... என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும்பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது அரசே!
அப்படியா? நீங்கள் போகலாம்!”
வேதபாரகர் அவ்விடத்தை விட்டு. அகலவும், வானநூல் அறிஞர்களைப் பார்த்து மகா ஏரோது, “வானநூல் அறிஞர்களே! நீங்கள் அந்த ராஜாதி ராஜனைக் கண்டு பணிந்து பின் எனக்கு வந்து, தெரிவியுங்கள். பின் நானும் வந்து அந்தப் பாலகனைப் பணிந்து கொள்கிறேன் மிக்க பணிவுடன் கூறுவது போல் கூறினான்.
அப்படியே செய்கிறோம் அரசே! என பதிலிருத்த வானநூல் அறிஞர்கள் அரண்மனையை விட்டகன்றனர். வானிலே தோன்றிய தாரகையைக் கண்டனர்.
"அதோ! நம்மை வழிநடத்திய விண்மீன்!'' என டைரஸ் கூற மற்றவர்களும் நோக்கினர்.
விண்மின் நகர்ந்தது!
யூதேயாவரை வழி நடத்திய விண்மீனைத் தொடர்ந்தே வந்த நாம், யூதேயா வந்தவுடன், நாமாக அரசன் என்றால் அரண்மனையில்தான் பிறந்திருப்பார் என்று கணித்துக் கொண்டு அரண்மனைக்கு சென்று தவறு செய்து விட்டோம். என்று டேனியல் கூற,
உண்மைதான்! விண் பார்த்து வந்த நாம் மண்பார்க்க ஆரண்பித்தது தவறுதான். உண்மையான வருத்தம் அற்போனா முகத்தில் தெரிந்தது.
விண்மீனைத் தொடர்ந்தனர் மூவரும்.
அண்மையில் ஏரோது அட்ட காசமாகச் சிரித்தான். அவன் கண்கள் சிவந்தன தோள்கள் துடித்தன. நெஞ்சம் விம்மி விம்மி எழுந்தது.
யூதருக்கு ராஜாவாம்! யாரவன்? நானிருக்க இன்னொரு அரசனா? என் குலக் கொழுந்தல்லவா ஆட்சி பீடம் ஏறவேண்டும். வரட்டும் வான சாஸ்திரிகள் என்னிடம் வந்து சொன்னதும், அந்தப் பாலகனை என் வாலுக்கு இரையாக்கி விடுகிறேன். அவனது சிரிப்பொலியால் அரண்மனையே ஆடியது என்று கூறலாம்.
இதன் தொடர்ச்சி காவலன் ஆணையும், கடவுளின் வழி நடத்தலும் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.