தாமார் தன் இல்லத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள். அவள் எதிரே வைத்தியர் லூக்கா அமர்ந்திருந்தார். ஒரு காலத்தில் அந்த வீட்டினர் செல்வந்தர்களாக வாழ்ந்திருந்தனர் என்பதை அவ்வீடு பறை சாற்றி நின்றது.
வைத்தியரே! என் செல்வம் அனைத்தும் கரைந்தும் கூட என் வியாதி தீரவில்லையே!'' அங்கலாய்த்தாள்.
அம்மா என்னால் முடிந்தவரை நான் பார்த்து விட்டேன். என்ன செய்வது? வைத்தியத்தை மிஞ்சிய ஒரு சக்தியிருக்கிறது. அதுதான் கடவுளின் சக்தி!
வைத்தியரே! அந்தக் கடவுள் எங்கே? என்னை இவ்வளவு வேதனைப்படுத்துகிறாரே! நான் யாருக்கு என்ன தீமை செய்தேன்?” புலம்பினாள்.
அம்மா! கலங்காதீர்கள், இயேசு என்று ஒருவர் இருக்கிறார். அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகளாக இருக்கின்றன. தொழுநோயாளன் ஒருவனையே அவர் சுகமாக்கி விட்டார். ஒரு நாள் குருடர் இருவரின் கண்களைத் திறந்தார். ஊமையனைப் பேச வைத்தார். பலர் அவரால் சுகம் பெற்றனர். அவரை நீங்கள் போய்ப் பார்த்தால் நல்லது என நினைக்கிறேன்.”
“நானும் கூட கேள்விப்பட்டேன் வைத்தியரே! ஆனால் அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லையே!"
வெளியே ஆரவாரச் சத்தம் கேட்டது. மக்கள் கூட்டம் நகர்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தினரை விசாரித்தாள். வியாதியாயிருக்கும் ஜெப ஆலயத்தலைவன் யவீருவின் மகளை குணமாக்க இயேசு போகிறார் எனக் கேட்ட தாமார் கூட்டத்தினரிடையே கலந்தாள். மெல்ல மெல்லப் புகுந்தாள். இயேசுவை நெருங்கி விட்டாள்.
“கடவுளின் திருவுருவம் இவர் என்றால் இவருடைய ஆடையை நான் தொட்டாலே போதும், நான் குணமடைந்து விடுவேன்” அவள் மனம் தீர்மானித்தது. அவள் இயேசுவின் ஆடையைத் தொட்டாள். உடனே அவளுடைய வியாதியான பெரும்பாடு நின்று போயிற்று!
இயேசு திரும்பிப் பார்த்து, “என்னைத் தொட்டது யார்?” என்றார்.
உடனேபேதுரு, "ஐயரே! திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே!" என்றார்.
“ஒருவர் என்னைத் தொட்டதுண்டு! என்னைத் தொட்டதால் என்னிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டது''
உடனே தாமார் நடுங்கி அவர் பாதத்தில் விழுந்து தான் தொட்ட காரணத்தையும் சுகம் பெற்றதையும் கூறினாள்,
இயேசு அவளிடம், மகளே! உன் நம்பிக்கை உன்னை குணமாக்கியது. சமாதானத்துடன் போ” எனப் பகர்ந்தார். அதே வேளை யவீருவின் வீட்டிலிருந்து வந்தவன்,, யவீருவை நெருங்கி, “உமது மகள் மரித்துப் போனாள். போதகரை தொந்தரவு படுத்த வேண்டாம்!'” என்றான்.
இயேசு, யவீருவிடம், பயப்படாதே! நம்பிக்கையோடு இரு. உன் மகள் நலம் பெறுவாள்” என்றார்.
அனைவரும் வீட்டை அடைந்தனர் சாவு வீட்டில் அனைவருமே அழுது அரற்றிக் கொண்டிருந்தனர். இயேசு அங்கு சென்று, “அழாதீர்கள் அவள் சாகவில்லை, உறங்குகிறாள்,” என்றார்.
அவள் இறந்துபோனதை அங்கிருந்த அனைவரும் அறிந்தபடியால் கூடியிருந்தவர்கள் இயேசுவைப் பார்த்து நகைத்தனர்.
அனைவரையும் வெளியே போகச் சொன்னவர், பெண்ணின் தாயையும், தகப்பனையும் மட்டும் அழைத்துக் கொண்டு போய், சிறுபெண்ணின் கையைப் பிடித்துத் தூக்கி, “சிறு பெண்ணே! எழுந்திரு” என்றார்.
உடனே உறக்கத்திலிருந்து எழுபவள் போல் அவள் எழுந்தாள். தாய் தகப்பன்மார் ஆச்சரியம் அடைந்தனர். அவளுக்கு உணவு தரும்படியும், இந்நிகழ்ச்சியை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் இயேசு கட்டளையிட்டார். ஆனால் யவீரு தம்பதியினரால் தங்கள் ஆனந்தத்தை அடக்க முடியவில்லை. தங்களுடைய மரித்துப் போன ஒரே மகளை இயேசு உயிரோடெழுப்பியதை ஊரெங்கும் பரப்பினர். இயேசுவின் புகழ் பரவியது
இரவு முழுவதும் மலை மீதிருந்து ஜெபம் செய்தார். விடிந்ததும் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களுள் 12 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்கள் யாரெனில் பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்லோமெயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, சீமோன், யூதா, யூதாஸ்காரியோத் என்பவர்கள்.
அவர்களைப் பார்த்து இயேசு, “விண்ணரசு நெருங்கியுள்ளது அனைவருக்கும் அறிவியுங்கள். நோயாளிகளை குணமாக்குங்கள். இறந்தாரை உயிர்ப்பியுங்கள். பேய்களை ஓட்டுங்கள். தொழு நோயாளிகளை குணமாக்குங்கள். இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள்” என கட்டளையிட்டார்.
சிறையிலிருந்தி யோவான் திருமுழுக்குநர் அமைதியாக இருக்கவில்லை. நள்ளிரவில்.... “ஆண்டிபாஸ்! உன் சகோதரன் மனைவியை உனக்கு மனைவியாக வைத்திருப்பது மாபெரும் பாதகம், நீ திருந்தாவிடில் உன் குடும்பம் அழியும், “யோவானின் கம்பீரமான குரல் அரண்மனை சுவர்களில் மோதி எதிரொலித்தது. ஆண்டிபாஸும், ஏரோதியாளும் நிம்மதியிழந்தனர். யோவானைக் கொலை செய்ய ஏரோதியாள் துடித்தாள். கடவுளின் தூதர் ஆயிற்றே என்ற பயம் அந்திப்பாவைத் தயங்க வைத்தது.
இந்நிலையில் அந்திப்பா (ஆண்டிபாஸ்) வின் பிறந்தநாள் வந்தது. ஏரோதியாளின் மகள் சலோமி நடனமாடி அனைவரையும் களிப்புற வைத்தாள். அக மகிழ்ந்த ஆண்டிபாஸ், சலோமியிடம், “எது வேண்டுமானாலும் கேள் தருகிறேன், என ஆணையிட்டு வாக்களித்தான். சலோமி தன் தாய் கற்றுக் கொடுத்தபடி, “யோவான் திருமுழுக்குநரின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தரவேண்டும்” என்றாள். அரசன் திகைத்தான். வருத்த முற்றான்.
சலோமி! கேட்பதை நன்கு யோசித்துக் கேளம்மா! நாட்டிலே பாதியைக் கேட்டாலும் தருகிறேன்.” ஆண்டிபாஸின் வார்த்தைகள் கெஞ்சின.
சலோமியோ தன் தாய் கற்றுக் கொடுத்தப்டி யோவானின் தலையைத்தவிர வேறு எதையும் வாங்க மறுத்தாள். தாங்கொண்ணா வேதனையை அவன் அடைந்தாலும், தன் ஆணையினிமித்தம் யோவானின் தலையைக் கொணர ஆணையிட்டான். யோவான் திருமுழுக்குநரின் தலை வெட்டப்பட்டு ஒரு தட்டில் வைக்கப்பட்டு சலோமியிடம் தரப்பட்டது. சலோமி அதை தன் தாயிடம் கொடுத்தாள்.
யோவானின் நாக்கை அறுத்த ஏரோதியாள் அட்டகாசமாகச் சிரித்தாள். “என்னைக் கேவலமாகப் பேசிய உன்னை அறுத்து விட்டேன். நீ அழிந்து போனாய்!”' எட்டி உதைத்தாள். தீர்க்கனைக் கொன்ற அவனும் அவளும் சீக்கிரமே அழியப் போகிறார்கள் என்பதை அவள் சற்றுகூட உணரவில்லை.
ஒரு சில ஆண்டுகளிலேயே ஆண்டிபாஸின் முதல் மனைவியின் தகப்பன் அராபிய அரசன், தன் மகளைப் புறக்கணித்த ஆண்டிபாஸின் மீது போர் தொடுத்தான். போரில் ஆண்டிபாஸுக்கு பெருத்த இழப்பு ஏற்பட்டது. ரோமப் பேரரசனால் ஆண்டிபாஸ் பதவியிலிருந்து விலக்கப்பட்டான். நாட்டையும் செல்வத்தையும் ரோம அரசு எடுத்துக் கொண்டது. நாடு கடத்தப்பட்ட ஆண்டிபாஸும், ஏரோதியாளும், தங்களது. நாட்டிற்கு வெளியே மிகுந்த துயரத்துடன் தங்களது நாட்களைக் கடத்தினார்கள். என வரலாற்று ஆசிரியர் ஜொஸீபஸ் எழுதியிருக்கிறார்.
இதன் தொடர்ச்சி கடல் மீது கருணாகரன்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.