கலிலேயா ஒரு சிறிய நாடாக இருப்பினும் கிராமங்களையும், பட்டணங்களையுமுடைய ஒரு நல்ல நாடு. மற்ற நாடுகளிலிருந்து வரும் சாலைகள் அதன் ஊடே சென்றன. மிகுதியான கோதுமை விளையும். வயல்களும் பழத் தோட்டங்களும் மிக்க நாடு. மீன் வளம் செறிந்த பகுதி தொழில்வளம் மிக்க நாடு.
இயேசு மலைப்பகுதி ஓரமாகச் சென்றார். திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்து வந்தனர். எனவே அவர் மலைமீது அமர்ந்தார். திரள் கூட்டமும் அங்காங்கே அமர்ந்தது. அவர் அனைவர்க்கும் திருவாய் மலர்ந்தருளியது.
1. தம் எளிய ஆன்மீக நிலையை உணர்ந்தவர்கள் நற்பேறு பெற்றவர்கள், விண்ணரசு அவர்களுக்குரியது.
2. துயரத்தில் ஆழந்திருப்பவர்கள் நற்பேறு பெற்றவர்கள். அவர்களுக்கு கடவுளின் அருள் கிட்டும்.
3. பணிவுடையவர்கள் நற்பேறு பெற்றவர்கள் அவர்கள் உலகத்தையே உடமையாகப் பெறுவர்.
4. நிதி நிலவ வேண்டுமென்பதில் மிகுந்த வேட்கை கொண்டவர்கள் மற்பேறு பெற்றவர்கள், கடவுள் அவர்கள் வேட்கை நிறைவேறும்படி அருள் செய்வார்.
5. இரக்கம் காட்டுகிறவர்கள் நற்பேறு பெற்றவர்கள் அவர்களுக்கு கடவுள் இரக்கம் காட்டுவார்.
6. தூய உள்ளமுடையவர்கள் நற்பேறு பெற்றவர்கள். அவர்கள் கடவுளைக் காண்பார்கள்.
7. அமைதி நிலவச் செய்கிறவர்கள் நற்பேறு பெற்றவர்கள் அவர்கள் கடவுளின் மைந்தர்கள் எனப்படுவார்கள்.
8. நீதியின் பொருட்டுத் துன்பப்படுகிறவர்கள் நற்பேறு பெற்றவர்கள். விண்ணரசு அவர்களுக்குரியது.
நீங்கள் உப்பைப்போல சாரமுள்ளவர்களாயிருங்கள்! உணவிற்கு சுவை கூட்டுவதும், உணவுப் பொருட்கள் கெடாமல் பாதுகாப்பதும் உப்பு அதைப் போன்று பிறர் வாழ, பிறர் நல்வழி செல்ல நீங்கள் பயன்பட வேண்டும். சாரமற்ற உப்பால் பயனில்லை. நீங்கள் ஒளி! சமுதாய நீதி கேடு, தவறான ஒழுக்கம், அறியாமை, மூட நம்பிக்கை ஆகிய இருளை அகற்றும் ஒளி!
உங்கள் சகோதரன் மீது காரணமின்றி சினங்கொள்வது அவனைக் கொலை செய்வதற்குச் சமமாகும். உன் மனைவியைத் தள்ளிவிடாதே. கெட்ட எண்ணத்துடன் பார்ப்பதே தவறு. ஒரு பெண்ணை ஆணா, அல்லது ஒரு ஆணை ஒரு பெண்ணோ தீய நோக்கத்துடன் பார்த்தாலே அவன், அவள் தவறு செய்து விட்டதாகவே கருதப்படும்.
'பழிக்குப்பழி வாங்காதே. பகைவனையும் நேசி, ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு, பிறர் புகழ வேண்டும் என்பதற்காக உதவி செய்யாதே, நீ செய்யும் அறச் செயல்கள் மறைவாயிருக்கட்டும், அப்பொழுது கடவுள் உனக்கு கைமாறு செய்வார். பிறர் காண போலி பக்தரைப் போல் வேடம் போடாதே! தேவன் உன் மனத்தை அறிவார். பிறர் குற்றங்களை நீ மன்னித்தால் உன் குற்றங்களை கடவுள் மன்னிப்பார். நீ விரதம் இருக்கும்போது அனைவரும் அறியும் வண்ணம் இருக்காதே! பெருமைக்காக விரதம்-காக்காதே.
கடவுள்மீது நம்பிக்கையுடையவனாய் இரு, வானத்துப் பறவைகளையும், வனத்துப் பூக்களையும் பார், அவைகளைப் பராமரிக்கும் பரமன் உன்னைப் புறக்கணிப்பாரா? எனவே கவலைப்படாதே! கடவுளைத்தேடு, கடமையைச் செய்! ஆசீர்வாதத்தால் கடவுள் நிரப்புவார்.
கேள்! கொடுக்கப்படும்!
தட்டு! திறக்கப்படும்!
தேடு! கண்டடைவாய்!
நீதியின் பாதையில் செல்வது கடினமானதுதான் இடுக்கமான வாயில்தான், ஆனால் அப்பாதை உன்னை சொர்க்கத்திற்கு வழி நடத்தும், அநீதியின் பாதை விசாலமானது. அதில் நடப்பதும் எளிதானது. ஆனால் அது நரகத்திற்குக் கொண்டு செல்லும். பக்திவேடம் போட்டுக்கொண்டு, நெறி தவறி வாழ்பவர்கள் சொர்க்கத்தை சுதந்தரிக்க முடியாது. நான் கூறியபடி வாழ்பவர்களே சொர்க்கத்தை சுதந்தரிப்பர்.'
இயேசுவின் போதனையைக் கேட்டவர்கள் வியப்பினால் வாயடைத்துப் போயினர்.
இயேசு மலையிலிருந்து இறங்கினார், திரளான ஜனங்கள் பின் சென்றனர். அது சமயம் தொழு நோயாளன் ஒருவன் இயேசுவை நோக்கி வந்தான். அவனைக் கண்ட ஜனங்கள் அலறி ஓடினர். சிலர் அவனைக் கல்லலெறிந்தபடி ஓடினர்...
தொழுநோய் என்பது பல ஆண்டுகள் நீடிக்கும் ஒரு தோல் நோய். சில குறிகள் தோலில் தோன்றி, பின் அவை துர்நாற்றதுடன் கூடிய புண்களாகும். நரம்புகள் செயலிழந்து போகும். நோவு உணர்ச்சியின்றி விரல்களை இழந்து போவான். இது மெதுவான மரணம் போன்றது. அக்காலத்தில் தொழுநோயாளன் ஒரு பாவியாக தீண்டத்தகாதவனாக ஏன்? பார்க்கக் கூடாதவனாக, கருதப்பட்டான். ஊரை விட்டு அவனைத் தள்ளி விடுவர்.
அவனுடைய உறவினர். அவனுக்குரிய உணவை எடுத்துச் சென்று, ஊருக்கு வெளியே குறிப்பிட்ட இடத்திலிருக்கும் அவனுடைய பாத்திரத்தில் வைத்துவிட்டு வந்து விடுவர். அவர்கள் சென்றபின் இவன் எடுத்துச் சாப்பிட வேண்டும். தொழுநோயாளனை, சமுதாயத்தினர் வெறுத்தனர். தொழுநோயாளான் நடந்து சென்ற தெருவிலுள்ள முட்டையைக் கூட... குரு வாங்க மாட்டார். தொழுநோயாளனைக் கண்டால். கல்லெறிந்து விரட்டுவர். தொழுநோயாளன் தனது தலையை ஒரு வீட்டினுள் நீட்டினால் அவ்வீடு தீட்டுப்பட்டதாகக் கருதப்படும். தொழுநோய் கண்ட ஒரு மனிதன் இருந்தால் அவனை திருச்சபைக்குக் கொணர்ந்து, குரு அடக்க ஆராதனையை வாசிப்பார். அவன் இறந்ததாகவே கருதப்படுவான் என வரலாற்று ஆசிரியர் ஜோஸிபஸ் கூறுகிறார்.
எனவேதான் ஜனங்கள் அலறி ஓடினர். இயேசு அவன்மீது மனதுருகினார். இயேசுவிடம் வந்தவன் அவர் காலில் வீழ்ந்தான், “ஆண்டவரே! உமக்கு மனமுண்டானால் என்னை சுத்தமாக்க உம்மால் ஆகும்!” என கண்ணீருடன் கதறினான்.
இயேசு தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு, "எனக்கு சித்தமுண்டு சுத்தமாகு” எண மொழிந்தார். அவன் தொழுநோய் அவனை விட்டு மறைந்தது. அவன் ஆனந்தக் களிப்புடன் துள்ளி எழுந்தான் இயேசு அவனைப் பார்த்து, “இதை யாருக்கும் சொல்லாதே! ஆனால் ஆசாரியரிடம் போய் உன்னைக் காட்டி மக்களுக்கு உன்னைக் குறித்து சான்று தரும் வகையில் மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்து” என்று கூறினார். ௮வனோ, அவன் மகிழ்வை அடக்கிக் கொள்ள முடியாதவனாக அனைவருக்கும் இயேசுவைக் குறித்துக் கூற ஆரம்பித்தான்.
மகா ஏரோது பல மனைவிகளை உடையவனாக, பல குமாரர்களையுடையவனாக இருந்தான். அதில் பிலிப்பு (ஏரோது |, | ஏரோது என்பது யூத அரசர்களைக் குறிக்கும் சொல்) இவன் தகப்பனிடம் சுதந்திரவீதம் பெறவில்லை. ரோமாபுரிக்குச் சென்று வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஏரோதியாள். இத்துரேயா நாட்டை ஆண்டவன் ஏரோதுவின் மகன் பிலிப்பு ॥. இவன் ஒரு நல்ல அரசன். கலிலேயா, பெரேயா நாட்டை ஆட்சி செய்து வந்த ஆண்டிபாஸ் தன் சகோதரனாகிய பிலிப்பு ஏரோது | மனைவியாகிய ஏரோதியாளை அழைத்துச் சென்று தன் அரண்மனையில் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். ஏரோதியாளின் மகள் சலோமியும் அரண்மனையில் இருந்தாள். இத்தகாத செய்கையை யாரும் கண்டிக்க முடியவில்லை. ஆனால் யோவான் திருமுழுக்குநர் இச் செய்கையை கண்டித்து வந்தார். இதனால் ஏரோதியாள் ஆத்திரமடைந்தாள்.
கோபாவேஷமாக ஆண்டிபாஸின் முன் வந்தாள் ஏரோதியாள். '“அந்தக் காட்டு மிராண்டி கத்துவது உங்கள் காதுகளில் விழவில்லையா?
“ஏரோதியா? கோபப்படாதே! அவர் கடவுளின் தூதர். அவர் சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டுமே நமக்குள் பிரிவா ஏற்படப்போகிறது? அல்லது மக்கள் தான் பொங்கி எழப் போகிறார்களா என்ன?'" சமாதானப்படுத்தினான் ஆண்டிபாஸ்!
“போதும் நிறுத்துங்கள்! நாடாளும் வேந்தன் நீங்கள், நான் மகாராணி, நம்மை அவமானப்படுத்தி வரும் அந்த அற்பப்பதரை அழிக்க உங்களுக்கு மனமில்லை! நான் போகிறேன்”.
“ஏரோதியா! என்ன சொல்கிறாய்?” பதட்டத்துடன் கேட்டான்.
“இந்த நாடே என்னைப் பார்த்து சிரிக்கும் போது... நான் இருந்தால் என்ன? இறந்தால் என்ன?
“அப்படிச் சொல்லாதே! நீயில்லாமல் நான் இல்லை! ஏரோதியா।! உன்னை விட்டு நான் எப்படி வாழ்வேன்?"
நம்மைக் கேவலபடுத்தும் அவனைத் தண்டித்தால்தானே மற்றவர்களுக்கும் பயம் வரும். யாரும் நம்மைப் பற்றி பேச மாட்டார்கள்.
அன்பே! கட்டளையிடுகிறேன் அவனைக் கைது செய்ய.
ஏரோதியாள் ஒருவாறு சமாதானமடைந்தாள். ஆண்டிபாஸ் ஆணை பறந்தது யோவான் கைது செய்யப்பட்டார்.
கலிலேயாக் கடலோரம் இயேசு சென்றார். இரு படகுகள் நின்றுகொண்டிருந்தன. மீனவர்கள் வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். இயேசு அந்தப் படகில் ஏறி அமர்ந்து மக்களுக்குப் போதித்தார். பின் அந்தப் படகின் சொந்தக்காரனான சீமோனை நோக்கி, “படகை ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
சீமோன், குருவே! இரவு முழுவதும் முயற்சி செய்தும் ஒன்றும் அகப்படவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே போடுகிறேன்? எனக்கூறி படகை ஆழத்தில் தள்ளிக் கொண்டு போய் வலையைப் போட்டான். வலையை இழுக்க முடியவில்லை. உதவிக்கு மற்ற படகிலிருந்த நண்பர்களை அழைக்க அவர்களும் வ்ந்து உதவ, இரு படகுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினர். சீமோன் இயேசுவின் பாதத்தில் விழுந்தான், “நான் பாவியான மனிதன். நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றான்.
இயேசு அவனைத் தூக்கி நிறுத்தினார், இனி நீ மனிதரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். யூதேயாநாட்டில் இயேசுவை அவன் சந்தித்திருந்தது நெஞ்சில் படமாகியது. யோவான், யாக்கோபு, பேதுரு, அந்திரேயா ஆகிய நான்கு மீனவர்களும் இயேசுவின் சீடராக மாறினர்.
ரோமரது படையில் 6000 வீரர் கொண்ட படைக்கு லேகியோன் எனப் பெயர். 100 போர் வீரர்களுக்கு ஒரு படைத்தலைவன் இருப்பான். அவன் நூற்றுவர் தலைவன் எனப்படுவான். இயேசு கப்பர்நகூம் என்ற கடற்கரைப் பட்டிணத்திற்கு வந்தபோது, ஒரு நூற்றுவர் தலைவன் அவரிடம் வந்தான்.
ஐயா! நீர் என் வீட்டிற்குள் வர நான் தகுதியற்றவன், ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகமடைவான். நான் அதிகாரத்திற்கு உட்பட்ட மனிதன்தான். எனக்குக் கீழேயும் படைவீரர் உண்டு. ஒருவனை போ என்றால் போகிறான். மற்றொருவனை வா என்றால் வருகிறான். என் அடிமையிடம் இதைச் செய் என்றால் செய்கிறான். அமைதியாகப் பதிலிறுத்தான்.
இயேசு மசிழ்ச்சியடைந்தார். தன்னைச் சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, இத்தகைய நம்பிக்கையை நான் இஸ்ரவேலரிடமும் கண்டதில்லை. இஸ்ரவேலராகப் பிறந்தவர்கள் விண்ணரசை சுதந்தரிக்காமல் போனாலும் போகலாம். இப்படிப்பட்ட அநேகர் விண்ணரசை சுதந்தரிப்பர். என்று கூறியவர் நூற்றுவர் தலைவனைப் பார்த்து.
“நீ போகலாம் நீ நம்பினபடி உனக்கு நடக்கும்” என்றார்.
அந்நேரமே அவன் வேலைக்காரன் குணமானான். இயேசு பேதுருவின் வீட்டிற்குச் சென்றார். பேதுருவின் மாமி ஜுரமாய்க் கிடந்தாள். அவர் அவளுடையக் கையைத் தொட்டார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கிற்று. அவள் முழு பலம் பெற்றவளாக எழுந்து அவருக்குப் பணிவிடை செய்தாள்.
மாலை நேரம் பிசாசு பிடித்தவர்களையும், பிணியாளிகளையும் அவரிடம் கொண்டு வந்தனர். பேய்களைச் சொல்லாலேயே விரட்டினார். பிணியாளிகளை குணமாக்கினார்.
இதன் தொடர்ச்சி சர்வ வல்லவர் என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.