கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வு

கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வு

கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் வாழும் வாழ்வுகாணமுடியாத கடவுளை கிறிஸ்து இயேசுவுக்குள் கண்டோம்.நண்பராகக் கண்டோம். நம்மை ஆலயமாக்கிக் கொண்டார். பரிசுத்தம் தந்தார். அவர் தம்மையே மனுக்குலத்துக்கு தந்ததினால் ஈகை இன்னதென்று அறிய வைத்தார். நம்மையும் பிறருக்காக வாழ பயிற்றுவிக்கிறார். அவரால் அன்பு கூறப்பட்டவருக்கு நாமும் கடனாளிகளானோம். பொதுவான சேவை செய்யவும் குறிப்பானவர்களுக்கு ஊழியம் செய்யவும் நம்மை தெரிந்து கொண்டார். இந்த பிரயோஜனமான ஊழியத்துக்கு நம்மை தகுதியுள்ளவராக்குகிறவர் அவரே. அன்பில்லாதவன் தேவனை அறியான் தேவன் அன்பாகவே இருக்கிறார். அன்பினால் ஊழியத்தில் நம்மையும் வல்லமைப்படுத்தினார். கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக. அவர் தந்த இந்த வாழ்வு பூமியிலே பரலோக வாழ்வு. முடிவோ நித்திய வாழ்வு. கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவுக்காக கிறிஸ்துவுடன் என்றும் வாழும் வாழ்வு ஆமென்.

கடவுளுடைய நண்பரானோம் 
இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது. அவர் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக் கொடுத்தார்.2. கொரிந்தியர் 5 : 18

உன் நன்பனைச் சொல் உன்னைச் சொல்கிறேன் என்பது முதுமொழி. உண்மை நண்பர் என்பது நடத்தை, அன்பு, தியாகம், வழியில் வேர் விடும் நட்பின் அடிப்படையில் உறவு கொள்ளும் ஒரு நபர் நேசிக்கிறவர்களையே நேசிப்பதில்லை. எதிராளியாகிய எதிர் வினையில் உள்ளவரையும் ஏற்று அவர்களில் மாற்றம் விளைவித்து அவர்களையும் தன்பால் ஈர்த்துக்” கொள்ளும் வலிமையான கடவுளின் அன்பைப் பெற்றவர். இவ்வன்பை இவ்வுலகம் கண்டதில்லை. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை கிறிஸ்து இயேசுவின் மூலம் கண்டு கொண்டோம். கடவுள் நண்பரானார். பயத்தின் அடிப்படையில் விளைந்த பக்தியானது. இப்போதோ அன்பின் அடிப்படையில் வளரும் உறவானது.அவர் நம்மீது அன்பு கூர்ந்தாரென்றால் நாம் அவருக்கு எதிர் வினையாக செய்த பாவ செயல்களுக்கு தக்க செய்யாமல் உடனுக்குடன் மன்னித்து அன்பை ஈகையாக்கினார். உறவு மலர்ந்தது. நட்பு பிறந்தது. நண்பரானோம்.இனி நாமும் ஒருவருக்காக ஒருவர் வாழ்ந்து அனைவரும் கடவுளுக்காக வாழுவோமென உறுதி கொள்வோம். இதுவே அன்பின் வழி அன்பின் செய்தி.

இச்செய்தியை முன்னே தூரமாயிருந்து நம்மை கடவுளிடம்நெருங்கி சேர வைக்கிறது. இது கடவுளுடைய கிருபை என்கிறோம்.இப்படிப்பட்ட அன்பினால் கவரப்பட்டு அவருக்கே வேலையாட்களாக தொண்டு ஊழியம் செய்கிறோம். உலகம் நம்மை பகைத்தாலும் பரிகசித்தாலும் இந்த நண்பரை விட்டு விலக மாட்டோம். இச்செய்தியினாலே அநேகரை மீட்புக்குள்ளாக்கப் பிரயாசப்படுகிறோம். அனுதினம் நாம் துக்கப்படுத்தப்பட்டாலும் மனமடிவாக்கப்பட்டாலும் நம் செய்தி மூலம் அநேகர் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். செழுமை பெறுகிறார்கள். நாம் ஒன்றுமில்லாதவர்களாயிருந்தாலும் அநேகரை எல்லாமுடையவர்களாக மாற்றியிருக்கிறோம். மனம் திறந்து மனமாறா அன்பு கூர்ந்து பலரை கிறிஸ்துவுக்கு நண்பர்களாக்குகிறோம். 

கடவுளுடைய ஆலயமானோம் 
நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 2. கொரிந்தியர் 6:16

வாழ்கிற ஆண்டவர் வாழும் மனிதருக்குள் வாழ விரும்புகிறார்.ஏதோ இருக்கிறோம் என்றல்ல, உயிருள்ள வாழ்வோடு வாழ்கிறோம்.ஊனுடலில் உயிருள்ள அசைவை பெற்றுத்தந்தவரே கடவுள். தண்ணீரோடு அடித்துக்கொண்டு செல்லப்படும் செத்தமீன்களல்ல நாம். எதிர் நீச்சலில் செல்லும் உயிரோட்டம் கொண்டவர்கள். உயிருள்ளவருக்கு உகந்தவராய் உயிருள்ள நமக்குள் வாழ்ந்திருக்கும் ஆண்டவர் நீங்களே ஆலயமென நம்மை உறவாக்கிக் கொள்ள விரும்புகிறார். நான்கு சுவருக்குள் அடைப்பட்டு இருப்பவர் அவர் அல்ல. நம்மோடு கலந்து நம்மை ஆலயமாக்கி சுத்தத்தோடு காத்துக்கொள்ள விரும்புகிறார். இதயத்தில் சுத்தமுள்ளவரே. கடவுளை தரிசிப்பார்கள். கடவுள் எங்கோ இருந்து இவ்வுலகை ஆட்டிப்படைக்கிறார் என்றல்ல எனக்குள் இருந்து என்னை ஆளுகை செய்கிறார் என்பதே, அவரின் ஆலயமாக நாம் திகழ்வதின் அர்த்தம். அதுவே அற்புதம். என் ஜனம் என்று கூறி என் ஜனத்தோடு வாழ்வேன் என கூறி குடும்ப உறவை தருகிறவர் அவர். அந்நியர் அல்ல. நாம்அறியாதவரும் அல்ல. நான் அவர்கள் தேவனாயிருப்பேனென உறுதி கூறி உறவு கொள்ளுகிறார். அவர்கள் என் ஜனமாயிருப்பார்களென உறவுக்கு இருபக்க வலுவூட்டுகிறவரும் அவரே. ஆகவே அசுத்த உறவுகளிலிருந்து பிரிந்து பரிசுத்தத்தை ஏற்று அவரது இந்த அழைப்புக்கு சம்மதம் சொல்ல வேண்டியது நமது பொறுப்பு. தகப்பன் மகன் உறவு கடவுள் அவர்தம் மக்கள் உறவு. இதை ஆண்டவரே கூறியிருக்கிறார். இப்படிப்பட்ட வாக்குத்தத்தம் பெற்ற நாம் நம்மை சுத்திகரிப்புக்கு ஒப்புக்கொடுத்து அசுத்தத்தை தொடாமல் நம்மை அவரது ஆலயமாகப் பேணிக்காத்துக்கொள்ள வேண்டும். பரிசுத்தமாக்கப்பட்ட பிள்ளைகளே உலகத்திலும் உலகத்துக்குரியவைகளிலும் அன்பு கூறாதிருங்கள். அழியாத ராஜ்யத்துக்குரியவர்களே, வெளிப்படுத்தப்பட்டவர்களே, வெளிச்சத்துக்குரியவர்களே இருளின் காரியங்களுக்கு உட்படாதிருங்கள். இருளுக்கும் வெளிச்சத்துக்கும் சம்பந்தமேது? தவறான தாக்கங்களுக்கு விலகி வாழுங்கள். கலப்பு எண்ணங்களுக்கு விலகி வாழுங்கள். சுத்திகரிப்பு பெற்று கலப்பில்லாத ஒரே ஞானப்பாலின் பிள்ளைகளாக வாழுங்கள்.

கடவுளுக்குள் பரிசுத்தமானோம்
இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக் கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவ பயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். 2. கொரிந்தியர் 7: 1

வாக்குத்தத்தங்கள் பெற்றவர்கள் நாம். நமது நோக்கம் பரிசுத்தமாகுதல். நம்மை அனுதின வாழ்வில் அசுசிப்படுத்தம் அனைத்துக் காரியங்களிலிருந்தும் கழுவி சுத்திகரிக்கப்படுதலே பரிசுத்தம். நம்முடைய சரீர ஆவி ஆத்துமாவை கரைப்படுத்தும் எந்த காரியத்திலும் கவனமாக இருந்து அவைகளினின்று சுத்திகரிக்கப்படுதல் அவசியம். கடவுளுக்குப் பயந்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். அப்படி நடப்பவர்கள் முழுமையான பரிசுத்தத்துக்கு ஆளாவார்கள். சிறுசிறு காரியங்களில் பரிசுத்தத்தின் விளைவு தென்பட வேண்டும். உறவுகளிலே பரிசுத்தம், மனந்திறந்து பவுலைப் போல நாங்கள் யாரையும் குற்றப்படுத்த விரும்பவில்லை. நாங்கள் உங்கள் கூடவே வாழ்வோம் சாவோம் என உறவின் பெலத்தை கூட்டி வழங்க வேண்டும். யாருடைய காரியத்திலும் சுய லாபத்துக்காக நாங்கள் எதுவும் செய்யவில்லை, யாரையும் சீர்குலைக்கவும் விரும்பவில்லை என நிச்சயப்படுத்த வேண்டும். எல்லா இடங்களிலும் சச்சரவுகளும் இதயத்தில் பயங்களும், உள்ள கஷ்ட நேரங்களிலும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிற அனுபவம் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை உண்மைப்படுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் தாங்குகிறவர்களாக இருத்தல் அவசியம். தாக்குகிறவர்களாக அல்ல, தொடர்பு முக்கியம். கடிதத் தொடர்போ, நேரடி தொடர்போ சக மனிதர்களை அனுப்பி வைத்து ஏற்படுத்துகின்ற தொடர்போ எதுவாயினும் செய்து ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும். எந்த விதத்திலும் நம்முடைய எழுத்தோ , பேச்சோ அவர்களுக்கு மனமடிவை ஏற்படுத்தக் கூடாது. ஒரு வேளை மனமடிவைக்கொடுத்தாலும், பின்னால் அது அவர்களுக்கு நல் பாடம் கற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். அடுத்தவரிடத்திலும் குற்றமில்லாமை உண்டென எண்ணி அவர்களது குற்றமில்லாமையை நிரூபித்து அவர்களை பெலப்படுத்த வேண்டும். அவர்களோடு, அவர்களாய் உணர்வுகளிலும், அர்ப்பணிப்பிலும் ஒன்று சேர்ந்து வாழ்வதிலும் முழு பங்கெடுக்க வேண்டும். எப்பொழுதும் சத்தியத்தையே பேசி சத்தியத்தை மேன்மைப்படுத்த வேண்டும். ஒவ்வொருவருடைய விளக்கங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியும் அன்பை ஒருவருக்கொருவர் வழங்கி வாழ வேண்டும். ஒருவரையொருவர் சார்ந்து ஒருவருக்காக ஒருவர் வாழ வேண்டும். உறவுகள், சம்பவங்கள், அனுபவங்கள் இவைகளினூடே கடவுள் தரும் பரிசுத்தத்தை வெளிகொணர வேண்டும். பரிசுத்தமானோமென்றால் அவை அன்றாட நடவடிக்கையில் தெரிய வேண்டும்.

கடவுளுக்குள் உதாரத்துவமானோம்
2. கொரிந்தியர் 8 : 7 பின் பாகம்

எல்லாமுடைய அவர் நம்மை உதாரத்துவமுள்ளவராக மாற்றுவதற்காக அவர் வளங்களையெல்லாம் நமக்கு வழங்குவதற்காக அவர் தரித்திரரானார். நாம் வளம் பெற்றோம். அவர் தம்மையே நமக்காக சிலுவையிலே கொடுத்ததினாலே அப்படியாயிற்று. பெற்றுக் கொள்வதை விட கொடுத்தலே மேலானது என அப்படியானார். அவரைப் பெற்ற நாம் இந்த அன்பின் பணிவிடையிலே பிறருக்கு கொடுத்து வாழும் வாழ்விலே பூரணராகக் கடந்து செல்வோம். உதாரத்துவமாய்க் கொடுக்கிறவனிடத்தில் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். என்னை முதலாவதாக இப்பணிக்குக் கொடுப்பதின் மூலம் எனது உடைமைகளையெல்லாம் தாராளமாக அளிக்க முன் வருகிறேன் என்ற அர்ப்பணிப்பை பெற்றுக் கொள்கிறோம். கொடுத்தலுக்கும் அவரே மாதிரியானார். பொது வாழ்வில் அவர் பணிக்காக எனது பொருள்களை தாராளமாகக் கொடுக்கிறேன். எங்களால் முடிந்ததை அதிலும் மேலாக சுயசித்தத்தின்படி பிரியமாய் அப்படி செய்கிறோம். இந்த உதவி கடவுளுடைய மக்களுக்கு போய் சேர்வதால் அப்படி செய்கிறோம். நாம் கொடுப்பதால் மற்றவரையும் கொடுக்கச் செய்கிறோம். விசுவாசத்திலும், அறிவிலும் பேச்சாற்றலிலும் வளம் பெற்றோம். இந்த வளமும் கர்த்தருக்காக செலவழிக்க விழைகிறோம். கொடுத்தலின் பிரமாணத்திலே யாதொருவரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ஏனென்றால் இந்த ஈகை அன்பின் அடிப்படையில் வெளியாக வேண்டிய ஒன்று. என்ன கொடுத்தோம் எப்போது கொடுத்தோம் என்று கணக்கு வைப்பதில்லை. இச்செயலுக்கு உடன்பட்டு பிரியத்தோடு செய்கிறோம். துவங்கிய இந்நற் செயலை இடையிலே விடுவதாக இல்லை. தொடர்ந்து கொடுப்போம். கொடுப்பதிலும் சம பிரமாணத்தை வலியுறுத்த வேண்டும். எளியவர் வலியவர் என்றல்ல பெலவீனர் பெலனுள்ளவர் என்றுமல்ல அவரவருக்கு அளிக்கப்பட்ட கிருபையின்படி இந்த ஈகையின் வரம் வெளிப்படும். இந்த பணிவிடையில் மனமுவந்து கொடுப்பதை சேகரிப்பவர்களின் கூட்டான்மையும் வரவேற்கத்தக்கது. சேகரிப்பதை செலவழிக்கும் உக்கிராணத்துவமும் முக்கியம். இவ்வூழியம் கடவுளது கண் பார்வையிலே வைக்கப்பட்டிருக்கிறது. அன்பினால் ஏவப்பட்டு கொடுப்பவர்களும், கொடுக்க தூண்டுபவர்களும், சேகரிப்பவர்களும், சேகரித்ததைச் சரியான தேவை உள்ளவர்களுக்கு சேரப்பண்ணுகிறவர்களும் அனைவரும் திருச்சபையின் பிரதானிகள் திருச்சபையின் புகழுக்காக கடவுளின் மகிமைக்காக இப்பணி செயலாகிறது. ஆமென்.

Author Bro. C. Jebaraj



Topics: Bible Articles Bro. C. Jebaraj

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download