இயேசு கடலோரமாகச் சென்று ஒரு படகில் ஏறி அமர்ந்து அவர்களுக்குப் போதித்தார். “விதைப்பவன் ஒருவன் விதை விதைக்கச் சென்றான் அவன் விதைக்கையில் சில விதைகள் பாதையில் விழுந்தன. அவற்றை பறவைகள் தின்றன. சில விதைகள் மண் ஆழமில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தன. மண் ஆழமில்லாததால், அவை விரைவில் முளைத்தாலும் வெயில் ஏறினபோது வாடி வதங்கி, வேரில்லாமையால் உலர்ந்து போயின. சில விதைகள் முட்செடிகளிடையே விழுந்தன. முட்செடி வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து சில முப்பது மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில நூறு மடங்காகவும் பலன் தந்தது!” என போதித்தார்.
சீடர்கள் அவரை அணுகி, இயேசு போதித்ததின் பொருளைக் கேட்டார்கள்.
“அருளாட்சியின் செய்தியே அதாவது கடவுளின் போதனையே விதை. இப்போதனையை ஒருவன் கேட்டும், அதை அவன் புரிந்து கொள்ளாதபோது தீயோன் வந்து அவன் உள்ளத்தில் இருப்பதை எடுத்துப் போடுகிறான். இவர்கள்தான் பாதையருகே விதைக்கப்பட்டவர்கள்.
கற்பாறை நிலங்களில் விதைக்கப்படுகிறவன், தெய்வ வார்த்தையைக் கேட்டு அதை உடனேமகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறவன். இவனுக்குள் அது வேர் கொள்வதில்லை. எனவே வேதனையும், துன்பமும் உண்டானவுடனே இடறி விடுகிறான். முட்செடிகளுள்ள இடங்களில் விதைக்கப்படுகிறவன் தெய்வ வார்த்தையைக் கேட்கிறான், ஏற்றுக் கொள்கிறான். ஆயினும் உலகக் கவலையும், செல்வத்தின் வஞ்சகமும் தெய்வ வார்த்தையை பெருக்கி விடுகிறதால் அது பலனற்றுப் போகிறது.
நல்ல நிலத்தில் விதைக்கப்படுகிறவனோ, தெய்வ வார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்கிறான், ஏற்றுக்கொள்கிறான். இவன்முப்பது மடங்காய், அறுபது மடங்காய், நூறு மடங்காய் பலன் தருகிறான்” என்றார்.
கப்பர் நகூமிலிருந்து இத்துரேயா நாட்டிலுள்ள பெத்சாயிதாவிற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்டுத் திரளான ஜனங்கள் பல ஊர்களிலிருந்து அவரிடம் வந்தனர். நோயாளிகளை குணப்படுத்தினார். மாலை நேரமாகியது. சீடர்கள் இயேசுவை அணுகி, “இது மனித நடமாட்டமில்லாத இடம். நேரம் ஆகிவிட்டது, அவர்கள் ஊர்களுக்குப் போய் தங்களுக்கு உணவு வாங்கிக் கொள்ளும்படி அனுப்பி விட வேண்டும்” என்றார்கள்.
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” இயேசு மறுமொழி கூறினார். சீடர்கள் திகைத்தனர். இயேசுவிற்கு அருகே அமர்ந்திருந்த ஒரு சிறு பையன் எழுந்தான், முகமலர்ச்சியோடு தன் அன்னை தனக்கெனத் தந்திருந்த 5 அப்பம் இரு மீன்களை இயேசுவிடம் தந்தான்.
5 அப்பம், இரு மீன்களை எடுத்து வானத்தை நிமிர்ந்து பார்த்து துதி செலுத்தி, அப்பங்களைப் பிட்டுச் சீடரிடம் கொடுத்தார். அங்கிருந்த பசும்புல் தரைமீது மக்களை பந்தியிருக்கச் செய்து, அப்பங்களையும், மீன்களையும்
பறிமாறினார்கள். அனைவரும் சாப்பிட்டு திருப்தியடைந்தனர். மீதியானதை 12 கூடை நிறைய எடுத்தார்கள். சாப்பிட்ட மக்கள், பெண்கள், பிள்ளைகள் தவிர ஆண்கள் மட்டும் 5000 பேர்.
பிறகு இயேசு சீடரைத் தமக்கு முன் மறுகரைக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினார். பின்ஜெபம் செய்வதற்காக தனியே ஒரு மலையின்மீதேறி பிரார்த்தனை செய்தார். அதிகாலை 3 மணி! படகு நடுக்கடலில் இருந்தது. எதிர் காற்றால் அலைக்கழிக்கப்பட்டது. இயேசு நீர் மேல் நடந்து, படகை நோக்கி வந்தார். சீடர்கள் அவரை “ஆவி! என நினைத்து அலறினார்கள் இயேசு அவர்களோடு பேசி, பயப்படாதீர்கள். நான்தான்” என்றார்.
உடனே பேதுரு, “ஆண்டவரே! நீர் தான் என்றால் நான், தண்ணீரின்மேல் நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும் என்று கூறினார்.
இயேசு, “வா” என்றார்.
அப்பொழுது பேதுரு நீரில் இறங்கி, இயேசுவைப் பார்த்து நடந்தார். மறு மணித்துளி, கடுங்காற்றைப் பார்த்தவர் அஞ்சி அமிழத் தொடங்குகையில், “ஆண்டவரே காப்பாற்றும்” என அலறினார்.
இயேசு கையை நீட்டி அவரைப் பிடித்து, “அற்ப நம்பிக்கை உள்ளவனே! ஏன் சந்தேகப்பட்டாய்?” என வினவினார்.
இருவரும் படகில் ஏறி அமர்ந்தனர். சீடர்கள் அவர் பாதத்தில் வீழ்ந்து பணிந்தனர்: “நீர் உண்மையிலேயே கடவுளின் மைந்தர்” எனப் போற்றி மகிழ்ந்தனர். கெனேசரேத்து ஊரை அடைந்து, அங்கு பல 'நோயாளிகளை குணப்படுத்தினார்.
யூதாஸ் கவலை தோய்ந்தவனாக அமர்ந்திருக்க சீமோன் அவனருகே வந்தான்.
“யூதாஸ்! உன் முகத்திலே ஏன் இந்த வாட்டம்?”
“சீமோன் நான் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டேனோ? என அஞ்சுகிறேன்!"
“ஏன் அப்படி நினைக்கிறாய்?'
“பரபாஸீடம் இருந்தபோது நம் யூதர்களை ரோம ஆட்சியினின்று என்றாவது ஒருநாள் விடுவிப்போம் என்ற நம்பிக்கையில் இருந்தேன். இயேசுவைப் பார்த்ததும், அவரது போதனையும், அவர் செய்த அற்புதங்ளையும் கண்டபோது.... இவரே நாம் எதிர்பார்க்கும், மேசியா எனக் கறுதி அவரோடு இணைந்தேன். என்னைப் பன்னிருவரில் ஒருவனாக அழைத்த
போது அகமகிழ்ந்தேன் ஆனால்...
“ஆனால்... ஏன் நிறுத்தி விட்டாய் சொல்,”
“அன்று சமாரியாப் பெண்ணிடம் இவர் பேசியது, அங்கு நாம் தங்கியிருந்தது, என் மனதிற்கு வேதனையளித்தது. நம் ஆலயத்தில் கூட சமாரிருக்கு புறஜாதியார் முற்றம் என்று தனியாக இருக்கிறதே!.... அப்படியிருக்கும் போது....
யூதாஸ்! இயேசு அனைவருக்கும் சொந்தம். மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வு பார்ப்பது தவறு. சமாரியர் அநேகர் இவரை மேசியாவாக ஏற்றுக் கொண்டனரே! சமாரியப் பெண்ணின் முறைகேடான வாழ்வே மாறியது என கேள்விப்பட்டோம் அல்லவா?”
"சரி! நீ சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன். கடந்த மாதம் தீரு, சீதோன் பட்டணங்கள் வழியே பெனிகேயா நாட்டிற்குப் போனபோது, ஒரு கானானியப் பெண் வந்து இயேசுவைப் பணிந்து பேய்பிடித்த தன் மகளை குணப்படுத்த வேண்டியபோது, இயேசு சொன்னதை கவனித்தாயா?!
நான் யூதர்களுக்காகவே வந்தேன். பிள்ளைகளின் உணவை எடுத்து நாய் குட்டிகளுக்குப் போட மாட்டேன்! என்று சொன்னாரே, அதை சொல்லுகிறாயா?
"ஆமாம்! சீமோன் சமாரியருடன் உறவாடும் இவர் கானானியப் பெண்ணை ஏன் நாயென இழிவாகப் பேச வேண்டும்?”
யூதாஸ்! இந்த சொல்லுக்காக அவளே வருத்தப்படவில்லையே. 'மேஜையிலிருந்து சிந்தும் துணிக்கைகளை நாய் தின்னுமே” என்று கூறி இயேசுவின் பாராட்டை அல்லவா அவள் பெற்றாள். அவளுடைய மகளும் சுகமானாளே. அவளிடம் காணப்பட்ட பணிவை இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்ட, இயேசு அப்படி கூறியிருக்கிறார்”.
"தெக்கபோலி பட்டணத்தில் 7 அப்பத்தையும், சில சிறு மீன்களையும் ஆசீர்வதித்து 4000 பேருக்கு உணவளித்தார் அல்லவா? அதன் பின் நான் மட்டும் இயேசுவை தனிமையில் அழைத்துச் சென்றேன். உனக்கு நினைவிருக்கிறதா?”
ஆமாம். நானும் கூட கவனித்தேன். உன்னைக் கேட்க நினைத்தேன். எங்கே அழைத்துச் சென்றாய்?!” ஆவலோடு கேட்டான் சீமோன்.
'பரபாஸ் வந்திருந்தார். இயேசுவைக் காணவேண்டும் எனச் சொல்லியனுப்பியிருந்தார். அழைத்துச் சென்றேன். பரபாஸ் இயேசுவிடம் “என்னிடம் வீரம் இருக்கிறது. என்பின் ஒரு கூட்டமே ரோம அரசிற்கு எதிராக செயல்படுகிறது. உம்மிடம் அற்புதம் செய்யும் ஆற்றல் இருக்கிறது. நாமிருவரும் இணைந்தால் நம் யூத மக்களை மீட்டு வாழவைக்க முடியும் என கூறி கரம் நீட்டினார், அதற்கு இயேசு என்ன சொன்னார் தெரியுமா? என் நோக்கம் அருளரசை நிறுவுவதுதான். உனது அழைப்பிற்கு நான் இணங்க இயலாது. ஆனால் சமயம் வரும்போது உனக்காக என் உயிரைத் தருவேன்!" என்று கூறிவிட்டு வந்து விட்டார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது,” வேதனை அவன் சொல்லில் வெளிப்பட்டது.
சீமோன்! நேற்று இயேசு கூறியதைக் கேட்டாயா? இவரை எருசலேமில் கொன்று விடுவார்கள் என்றல்லவா கூறினார். அப்படியென்றால்... வெறும் சூனியத்தை நம்பி வந்தது போலல்லவா இருக்கிறது?”
“யூதாஸ்! அவரைக் கொன்றபின் மூன்றாம் நாளில் உயிரோடு வருவேன் என்றார் அல்லவா எனக்குக் கூட புரியவில்லை. ஆனால் சில உவமைகளை நமக்குப் பின்னால் விளக்குவது போல்... இதிலும் ஏதாவது இருக்கும். பின்னால் நமக்குச் சொல்லுவார். நீ எதையும் நினைத்துக் குழம்பாதே, இப்பொழுது எர்மோன் மலைக்குப் புறப்படுகிறோம், வா.... போகலாம்” சீமோன் யூதாஸை அழைத்துச் சென்றான்.
இதன் தொடர்ச்சி பாவமும் சாபமும் பறந்த மாயம்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.