திருப்புமுனைகளால் தலைவனான யோசேப்பு

மாற்றம் ஒன்றே மாறாதது. தடுமாற்றம் ஒன்றே திருப்புமுனைக்கு தடையாக இருக்கிறது. ஒவ்வொருவரும் பிறப்பு முதல் இறப்பு வரை எதிர்பார்த்திருப்பது பொருத்தமான திருப்புமுனை. திருப்புமுனை ஒருவரை மேலான இடத்திற்கும் கொண்டு செல்லலாம், அதே வேளை கீழான நிலைக்கும் கொண்டு செல்லலாம். ஒரு பெரிய புயல் காற்றால், பெருந்தீ விபத்தால், பெருவெல்லத்தால், மற்றும் எதிர்பாராத விபத்தால் ஒரு சில நிமிடங்களில் சேர்த்துவைத்த விலைமதிப்பில்லா சொத்துக்கள், உடமைகள் அழிந்துவிடலாம். ஒரு சில தீய நட்ப்பால் வாழ்வில் அதுவரை தற்காத்துவந்த நற்பெயரை அழித்துவிடலாம். ஆனால் நல்ல திருப்புமுனை ஏற்படுவதற்கும் நமக்கு அநேக வாய்ப்புகள் உண்டு. அதனையே நாம் ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படி ஒரு திருப்புமுனையை எதிர்பார்த்து காத்திருந்த ஒரு இளைஞனைப்பற்றி நடந்த கதையை கீழே படிப்போம். 

தகப்பனுக்கு திருப்புமுனை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஊரில் ஒரு கணவன் அவனுக்கு இரண்டு மனைவிகளோடு விவசாயம் செய்து வாழ்ந்துகொண்டிருந்தான். அவனுடைய வயாதான காலத்தில் யோசேப்பு என்னும் அழகான மகன் அவனுக்குப் பிறந்தான். யோசேப்பு மேல் அவனுக்கு மிகுந்த பாசம் இருந்ததால் அவனுக்கு விசேஷமான உடை மற்றும் உணவுகளை வழங்கி அதிகமான பாசத்தை வெளிப்படுத்தினான். அதனால் யோசேப்புடைய மற்ற பதிணொன்று சகோதரர்களும் அவன் மேல் பொறாமைக் கொண்டனர். அவன் மற்ற சகோதரர்களின் தவறுகளைப்பற்றி அவனுடைய தகப்பனுக்கு சொல்லிக்கொண்டுவந்ததாலும் அவனை அவர்கள் அதிகமாக பகைத்தார்கள். 

தமயன்களுக்கு திருப்புமுனை

ஒருநாள் யோசேப்பு இரண்டு கனவுகள் கண்டான். பலவழிகளில் கனவு வருகிறது. அப்துல் கலாம் ஐயா “கனவு காணுங்கள், தூங்கும்போது அல்ல,  உங்களை தூங்கவிடாதிருக்கும் கனவு காணுங்கள்” என்;றார். சிலர் அதிகம் சாப்பிட்டு படுத்தால் அல்லது சில திசைகளில் படுக்கும் போது சில கனவுகள் வரும் என்று சொல்வார்கள். ஆனால் சில நேரங்களில் கனவுகள் நம்வாழ்வில் நடக்கப்போகிறவைகளை முன்குறிக்கிறவைகளாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட கனவுகளைத்தான் யோசேப்பு கண்டான். அந்த கனவுகளுக்கு அவன் பொறுப்பல்ல ஆனால் அந்த கனவுகளை அவனுடைய சகோதரர்களுக்கும் பெற்றோருக்கும் சொன்னபோது அவர்களுடைய வாழ்வில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.

அந்த கனவுகள் என்னவெனில்: அவர்கள் அறுவடை காலத்தில் நெற்கதிர்களை அறுத்து அவைகளை 12 கட்டுகளாக கட்டிவைத்திருக்கிறார்கள். அவைகளில் செழியனுடைய நெற்கதிர் கட்டு மட்டும் நிற்க மற்ற சகோதரர்களின் கட்டுகள் அந்த கட்டைச் சுற்றி கீழே விழுந்துகிடக்கிறது. மற்றொன்று: சூரியனும் சந்திரனும் மற்றும் 11 நட்சத்திரங்களும் அவனை வணங்கியது என்றான். அதைக் கேட்ட அவனுடைய சகோதரர்களும் அவனுடைய பெற்றோரும் அவன் மேல் கோபம் கொண்டனர். அவனுடைய அப்பா அவனைத் திட்டினார். சகோதரர்கள் அவன் மேல் கோபங்கொண்டனர். நீ உயிரோடு இருந்தால்தானே எங்களை ஆளுவாய்? நாங்கள் உனது காலடியில் விழுவோமா? அவனுடைய கனவுகள் பலிக்காதபடி அவனை கொலை செய்யத்திட்டமிட்டு அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர். அவனுடைய அப்பா அந்த கனவைப்பற்றி மனதில் வைத்து சிந்தித்துக்கொண்டிருந்தார்.

திருப்புமுனை 1

வயல் வேலைகளை பார்த்துக்கொண்டு அவர்களின் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த செழியனின் சகோதரர்களுக்கு உணவு கொண்டு செல்லும்படி ஒருநாள் அவனை அவனுடைய தகப்பன் கேட்டுக்கொண்டான். அதன் பெயரில் அவனும் உணவுகளை எடுத்துக்கொண்டு அவனுடைய சகோதரர்களை காண சென்றான். தூரத்திலே யோசேப்பு வருவதை கண்ட அவனுடைய மற்ற சகோதரர்கள் அவனை கொலை செய்யத்திட்டமிட்டனர். அவனைக் கொன்று ஒரு பாழுங்கிணற்றில் போட்டுவிட தீர்மானித்தார்கள். ஆனால் அவர்களில் ஒருவன் இவனைக் கொன்று அந்த பலியை நாமும் நம்முடைய குடும்பமும் ஏற்றால் பிற்காலத்தில் நமது பிள்ளைகள் துன்பப்படுவார்கள். ஆகவே அவனைக் கொல்லாமலேயே அந்த கிணற்றில் போட்டுவிடுவோம் என்றான். அது மற்றவர்களுக்கு ஏற்ற ஆலோசனையாக இருந்தது. 

கொலை செய்யும் திட்டம் மாறி அவன் சாவுக்கு மட்டும் காரணமாயிருக்க நினைத்தார்கள். சட்டப்படி கொலை செய்தவர்களைவிட கொலை செய்ய தூண்டுதலாயிருப்பவர்களே அதிக குற்றவாளி என்பது அவர்களுக்குத் தெரியாது. தவறு செய்கிறவர்கள் எவரும் அதனை சரியாக செய்வதில்லை. தவறு செய்வதில் உள்ள தவறே தவறு செய்கிறவர்களை காட்டிக்கொடுத்துவிடும். செழியன் அவர்களிடம் வந்துவிட்டான். அவனிடம் உள்ள உணவை வாங்கிக்கொண்டு அவனை ஏற்கனவே திட்டமிட்டபடி பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள். எவ்வளவோ கெஞ்சியும் அவர்களிடம் சிங்கம் மற்றும் புலியிடம் மாட்டிக்கொண்ட புள்ளிமானைப் போன்று கத்த முடிந்ததேயொழிய அவனை காப்பாற்றிக்கொள்ளமுடியவில்லை. திருப்புமுனை திரும்பும் இடமெல்லாம் இருக்கிறது. அதை தடுப்பார் யாருமில்லை. கண்ட கனவு பழிக்காமல் போகாது. அது நிறைவேற வழிகளை அதுவே கண்டடையும்.

திருப்புமுனை 2 

கிணற்றில் யோசேப்பைப் போட்டுவிட்டு அவன் கொண்டு வந்த உணவை நன்றாக சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவன் அப்பா இவனைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று கேட்டான். அதற்கு அவனை வரும் வழியில் மிருகங்கள் கடித்துக் கொன்றுவிட்டது என்று சொல்வோம் என்றார்கள். அதற்கு ஆதாரம் கேட்டால் என்ன செய்வது? இப்படி பேசிக்கொண்டிருக்கையில் அவ்வழியே சில வியாபாரிகள் கழுதைகள் மேல் வியாபாரம் செய்யும் பொருட்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்களிடம் இந்த யோசேப்பை விற்றுவிட்டால் என்ன? நமக்கும் பணம் கிடைக்கும், அவனையும் கொன்ற பழி நம்மை சுமறாது என்று ஒருவன் சொல்ல அது நல்ல யோசனையாக இருந்ததால் அவனை மீண்டும் கிணற்றிலிருந்து மேலே தூக்கினார்கள். 

அவனை மேலே தூக்கும் போது அவன் நினைத்திருப்பான்,  நான் வேண்டிய தெய்வம் என்னை கைவிடவில்லை. நன்றி கடவுளே, நன்றி அண்ணன்களே என்று சொல்லியிருப்பான், ஆனால் சில விநாடிகளிலேயே அவனுடைய சட்டையை கழற்றி அவனை அந்த வியாபாரிகளிடம் விற்பதற்கான பேரம் பேசியதைக் கேட்டபோது அவனால் துக்கம் தாங்கமுடியாமல் கதறி அழுகிறான். அவர்களிடம் கெஞ்சுகிறான். இனி உங்களைப் பற்றி அப்பாவிடம் தவறாக ஒன்றும் சொல்லமாட்டேன் என்று சத்தியம் செய்கிறான். இதையெல்லாம் காதில் வாங்காத அண்ணன்கள் அவனை நல்ல விலைக்கு விற்றுவிட்டார்கள். அவனை விலைக்கு வாங்கிய வியாபாரிகள் அவனை அவர்கள் ஊருக்கு கொண்டு சென்றார்கள். யோசேப்பின் அண்ணன்கள் அவனுடைய சட்டையை எடுத்து ஒரு ஆட்டை வெட்டி அதன் இரத்தத்தை சட்டையில் நன்றாக தடிவினார்கள். அதனை அவர்களுடைய அப்பாவிடம் கொண்டு சென்று தம்பியை ஏதோ காட்டு மிருகம் கொன்றுவிட்டது, அவனுடைய சட்டை இரத்தக்கறையுடன் கிழிந்திருந்ததை வழியில் பார்த்து எடுத்துவந்தோம் என்று அழுதுகொண்டே சொல்ல அதையும் உண்மை என்று நம்பினார் அவர்களுடைய அப்பா. சில நேரங்களில் பொய்யை பலமுறை பலரால் அழுத்தமாகவும் ஆதாரத்துடனும் சொல்லும்போது அது மெய்யாகவே மாறிவிடுகிறது. உண்மை உறங்கலாம் ஆனால் சாகாது, அதற்கான திருப்புமுனை வரும்போது அது எப்படி எழும்பும் என்பது யாருக்கும் தெரியாது. மகனின் மரணச் செய்தி தகப்பனின் இருதயத்தை உடைத்தது. அழுதுகொண்டே பலநாட்கள் தூங்காமல் சாப்பிடாமல் இருந்து மெலிந்துபோனான். அவனுடைய சந்தோஷம் பறிபோனது. ஆனாலும் என் மகனை நான் காண்பேன் என்று உள்மனதில் எங்கோ ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை அவனை மாற்றியமைத்தது. நமது நம்பிக்கையே நமது பலம். இறைநம்பிக்கையே தன்னம்பிக்கைக்கு தூண்கோலாக இருக்கிறது.

திருப்புமுனை 3

யோசேப்பைக்கொண்டு சென்ற வியாபாரிகள் அவனை வேறு ஒரு நாட்டின் தலைமை செயலாளர் வீட்டு வேலைக்கென்று விற்றுவிட்டார்கள். விதியே என்று அவன் அங்கு வாழவில்லை. அவன் கண்ட கனவு அவனுடைய சிந்தையை துளைத்துக்கொண்டே இருந்தது. கனவு பலிக்குமா? வீட்டு வேலை செய்யும் என்னிடம் என்றைக்கு எனது குடும்பத்தினர் என் கால்களில் விழுந்து வணங்குவார்கள்? இது எப்படி நடக்கும்? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தான். யோசேப்பு பெயருக்கு ஏற்றாற்போல் செழிப்புடன் வளர்ந்ததால் அவனுடைய வயதும் இளமையும் அவனை மெருக்கேற்றி காண்பித்தது. தலைமைச் செயலாளரின் வீட்டில் வேலை, நல்ல சாப்பாடு, வசதியான வீடு என்று ஒருபுறம் மகிழ்ச்சி, மற்றொருபுறம் கவலை. 

இளைஞர்க்கு கவலையா? என்று பலர் கேட்கிறார்கள். இளைஞர்கள் பலகாரணங்களுக்காக கவலைப்படுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அவர்களுடைய எதிர்கால கனவைக் குறித்து கவலைப்படாதவர்கள் ஒருசிலரே, ஆனால் ஒரு சிலரால்தான் அக்கவலைகளை வெளிப்படுத்தமுடியும். காரணம் வாலிப வயதில் வருத்தத்தை வெளிப்படுத்தினால் வருத்தப்படாத வாலிபர்களாக வாலிபத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கமுடியாது. ஆனாலும் மனதில் இருக்கும் வருத்தத்தை யார் அறிவார். நண்பர்களிடம் சொன்னால் கேலி செய்வார்கள். ஆனாலும் மனதின் ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் கடவுள் காண்கிறார்ää அறிகிறார் என்பதை வாலிபத்தில் அறிந்தவர்கள் வெகுசிலரே. ஆனால் யோசேப்பு இந்த அறிவைப் பெற்றிருந்தான். 
ஆனாலும் அவனுடைய கவலைக்குக் காரணம் அவனுடைய கனவை எப்படி நினைவாக்குவது என்பதைவிட, அவனுடைய முதலாளியின் மனைவி இவனிடம் நடந்துகொள்ளும் முறை தவறாக தெரிகிறது. இதை யாரிடம் சொல்லுவது? எஜமான் இவனுடைய கடின உழைப்பையும்,  நேர்மையையும் கண்டு இவனுக்கு பல சுதந்திரங்களை கொடுத்திருக்கிறான், அதற்காக அவனுடைய மனைவியை தொடும் சுதந்திரத்தை யாருக்கு கொடுப்பான்? இதற்கு வழி என்ன? இதன் முடிவு என்னவாக இருக்கும்? முதலாளியின் மனைவியை கையில் போட்டுக்கொண்டு நாம் வளர்ந்து பெரியாளாகிää நம் பெற்றோர்களையும் அண்ணன்களையும் நம்கால்களில் விழவைக்கலாமா? இதுதான் இதற்கான வழியா? என்று பல்வேறு கோணங்களில் சிந்தித்தான். அவனுடைய சிந்தனை தவறு என்று அவனது ஆறாவது அறிவு உணர்த்தியது. கனவு கடவுள் கொடுத்தது. அக்கனவை நிறைவேற்ற அவரே நேர்மையான வழிகளை அருளுவார், நேர்மையான வழிகளில் துன்பங்கள் இருக்கும் ஆனாலும் அதின் முடிவு இன்பமாக இருக்கும்; என்று அவனுடைய அப்பா அவனுக்கு போதித்தது நினைவில் வருகிறது.
இச்சூழலில், ஒருநாள் அவன் வீட்டில் வேலையாக இருக்கும்போது அவனிடம் வந்த எஜமானனின் மனைவி அவனை கட்டித்தழுவினாள்,  செய்வதறியாது அவன் பதறினான். நீங்கள் என் முதலாளியின் மனைவிää உங்களை என் தாய் ஸ்தானத்தில் வைத்திருக்கிறேன். தயவு செய்து இப்படி இனி செய்யாதீர்கள்,  இதை நான் யாரிடமும் சொல்லமாட்;டேன், உங்கள் மகனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கெஞ்சினான். காமத்திற்கு எதுவும் ஏறாது. இவன் சொல்வதெல்லாம் அவள் செவியில் எட்டியதேயொழிய அறிவில் எட்டவில்லை. அவளுடைய சில்மிஷங்களைத் தொடர்ந்தாள், ஒரு நாள்,  இவன் அவளுடைய பிடியிலிருந்து தப்பி ஓடும்போது,  இவனுடைய சட்டை அவளுடைய கையில் மாட்டிக்கொண்டது. அதைப்பொருட்படுத்தாமல் வெளியே ஓடிய அவனை, அவளுடைய கணவனிடம் இவன் என்னை கெடுக்க வந்தான் என்று பெரும் பொய் ஒன்றை சொன்னாள். அவனும் மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஏற்ப இவனிடம் எந்த விசாரனையும் செய்யாமல்,  அவனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இவனை சிறையில் அடைத்தான். சில நேரங்களில் தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால் அதற்காக காலம் வரும்போது பெற்ற தண்டனையைவிட கௌரவமும் மரியாதையும் பெரிதாயிருக்கும். அப்போது அனுபபவித்த துன்பத்தைவிட அனுபவிக்கும் இன்பம் பெரிதாயிருக்கும். 

திருப்புமுனை 4

உரலுக்கு ஒருபக்கம் இடிää மத்தளத்திற்கு இரண்டு பக்கம் இடி, ஆனால் செழியனுக்கு போகும் இடமெங்கும் இடி. யாரிடம் சொல்லி அழ? பெற்றோர்கள் உடன் இல்லை,  உடன்பிறப்புகளே இக்கொடிய நிலைக்குக் காரணம். கனவு கண்டது தவறா? கண்ட கனவை சொன்னது தவறா? நான் என்ன தவறு செய்தேன்? ஒழுக்கமாகத்தானே வாழ நினைத்தேன்! பிறருனுடைய மனைவியின் மேல் கைவைப்பது தவறுதானே! மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்றால், மக்களுக்கு செய்யும் தீமை மகேசனுக்கு செய்யும் தீமைதானே! நல்லவனாக வாழ்வதில் ஏன் இத்தனை சோதனை? கடவுள் நல்லவர்களை சோதிப்பான்,  ஆனால் கடைசியில் கைவிடமாட்டார், ஆனால் கெட்டவர்களை ஒரேயடியாக கைவிட்டுவிடுவார். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையா?

அவனுடைய சிந்தை பலவாறாக சிந்திக்க ஆரம்பித்தது: நான் யாரையும் என் கோபத்தால் கொலை செய்யவில்லை. அப்படி கொலை செய்திருந்தால் நான் இங்கிருப்பது சரியே! நான் யாருடைய பொருளையும் அடித்தோ, ஏமாற்றியோ திருடவில்லை,  அப்படி செய்திருந்தால் என்னை இந்த சிறைச்சாலை ஏற்றுக்கொள்ளுவதில் தவறில்லை. நான் யாருடைய மனைவியையோ மகளையோ கற்பழிக்கவில்லை,  அப்படி செய்திருந்தால் இந்த சிறைச்சாலையே என்னை கொன்று போடட்டும். தவறு செய்து தண்டனை பெறுவதில் ஒரு லாஜிக் உள்ளது, ஆனால் எந்த தவறும் செய்யாமல் மற்றவர் செய்த தவற்றிற்காக நான் ஏன் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்? நான் தவறு செய்திருந்தால் அதை மறைக்காமல் கடவுளிடமும், யாருக்கு தவறு செய்தேனோ அவர்களிடமும் மனம்வருந்தி, மனந்திருந்தி மன்னிப்பு கேட்பேனே! தவறு செய்வது மனித இயல்பு, ஆனால் செய்த தவற்றை மறைக்காமல், மன்னிப்பு கேட்கத்தயங்குவது கோழைத்தனம் என்று என் அப்பா எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். நானும் சிறுவயதில் சில நேரங்களில் செய்த தவற்றிற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறேன். என் அப்பாவும் மன்னித்திருக்கிறார், ஆனால் அதை மறைத்தபோதெல்லாம் என் அப்பாவிடம் பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறேன். ஆனாலும் தங்கத்தை உரசிப்பார்த்தால்தான் அதன் தரம் தெரியும். அப்படியாக என்னுடைய தரம் தெரிவதற்கு நான் இங்கே உரசப்படுகிறேனோ என்று தன்னை அமைதிப்படுத்திக்கொண்டே உறங்கினான். 

இப்படி பலவாறு யோசித்துக்கொண்டே சிறைச்சாலையில் இருந்தான். ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும் அவனுடைய ஒரிஜினல் குணத்தை யாராலும் மறைத்துவைக்கமுடியாது. அவனுடைய நல்ல குணமும்ää பழக்கமும் அவனை எங்கும் எப்போதும் உயர்த்தியே வைத்திருந்தது. நல்லவர்களுக்கு இடம் ஒரு தடையல்ல, எப்படிப்பட்ட இடத்திலும், எப்படிப்பட்டவர்கள் மத்தியிலும் நல்லவர்களாக இருப்பது அவர்களது இயல்பு. சிறையில் அவனது நல்ல குணங்களையும் பழக்கங்களையும் கண்ட சிறை வாடர்ன் அவன் மேல் கரிசனைக் காட்டினார். அவனுக்கு சில பொறுப்புகளை வழங்கினார். அவனை நம்பினார். அந்நம்பிக்கைக்கு பாத்திரமாய் அவனும் நடந்துகொண்டான். உலகத்திலேயே ஒருவரது நம்பிக்கைக்குரியவராக இருப்பது என்பது கடினமான ஒன்றுää நம்மேல் உள்ள நம்பிக்கையை இழக்கவைப்பது எளிதுää நம்பிக்கையை உருவாக்கி வளர்ப்பதால் பலவித நன்மைகள் நமக்கு உண்டு.

சிறைச்சாலையிலும் யோசேப்பு செழிப்புடன் இருந்தான். அங்கும் அவனைக் கண்டவர்கள் அவன்மேல் பொறாமைக்கொண்டார்கள். செழியனிடம் இறையருள் இருந்தது. அந்த இறையருளால் அவனுக்கு கனவுகளுக்கு விளக்கம் சொல்லும் இறைவரம் இருந்தது. ஒவ்வொரு மனிதரிடமும் கடவுள் ஒரு வரத்தை வைத்திருக்கிறார். அவ்வரத்தை நாம் அறிந்துகொள்ளும்போது நாம் கடவுளுக்கும் கடவுள் பெயரில் மனிதர்களுக்கும் சேவை செய்ய அது பயன்படும். வரம் என்பது கடவுளின் குணங்களையும், கடவுளின் அறிவு, மற்றும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிற ஒன்றாகும். யோசேப்பிடம் கடவுள் அருளியிருந்த அந்த வரத்தை அவன் பயன்படுத்தும் நேரம் அவனைத் தேடி சிறைச்சாலைக்கே வந்தது. 
யோசேப்புடன் சிறையில் இருந்த இருவர் ஒரு நாள் ஒரு கனவு கண்டார்கள். அக்கனவால் அவர் கலக்கமாயிருந்தார்கள். அதனைக் கண்ட செழியன் அதனைப்பற்றி விசாரித்தான். மற்றவர்களின் துயரை கண்டுக்கொள்வதால் நமது துயர் துடைக்கப்படும். மற்றவர்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு உதவிகள் தானாக வந்துசேரும். பிறர் துன்பத்தைப் பார்த்தும் பாராமுகமாக இருப்பவர்கள், கண்கள் இருந்தும் குருடர்கள், காதுகள் இருந்தும் செவிடர்கள், உயிர் இருந்தும் மரித்தவர்கள். யோசேப்பின் கனிவான வார்த்தைகள் அந்த இரண்டு சிறைக்கைதிகளின் மனதை தொட்டது. அவனிடம் அவர்கள் இருவரும் ஒரே நாளில் கண்ட இருவேறு பொருள்கொண்ட கனவை அவனிடம் சொன்னார்கள். 

அவர்களின் கனவின் அர்த்தத்தை அவர்களுக்கு விளக்கிச்சொன்னான். அதன் அடிப்படையில் தவறு செய்யாத ஒருவன் மீண்டும் பழைய நிலைக்கு போய்விடுவான், தவறு செய்தவன் மரண தண்டனைப் பெறுவான் என்று சொன்னான். அத்துடன் பழைய நிலைக்குப் போனவுடன் எனது நிலையை அதிகாரியிடம் சொல்லி குற்றமற்ற என்னை விடுதலை செய்ய நீ உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அதற்கு அவனும் சம்மதித்தான். யோசேப்பு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் இருவருக்கும் நடந்தது. ஆனாலும் பழைய நிலைக்கு சென்ற அந்த சிறைக்கைதி நண்பன் யோசேப்பை மறந்துவிட்டான். மனிதர்களிடம் உயர்வான நன்மைகளை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தரும். நன்றியை மறக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். ஆனால் கடவுள் நமது சிறு சிறு நல்ல செயல்களையும் மறக்காமல், ஏற்ற நேரத்தில் அதற்கான பலனைத் தருவார்.

நல்ல காரியங்கள் எதுவும் கடவுளிடமிருந்துதான் வருகிறது. கடவுள் கொடுக்க நினைத்ததை தடுப்பவர் யாரும் இல்லை, கடவுள் கொடுக்க நினைக்காததை கொடுப்பார் யாரும் இல்லை. கொடுக்கவேண்டும் என்று நினைத்தால், கடவுள் கூறையைப் பிய்த்துக்கொண்டுகூட கொடுப்பார். அவர் கொடுக்கும் விதங்கள் புதிராகத்தான் இருக்கிறது. கடவுள் நமக்கு எதை கொடுக்கவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை எப்போது கொடுக்கவேண்டும் என்றும் கணித்துவைத்திருக்கிறார். அவருடைய நேரத்திற்காக நாம் காத்திருக்கவேண்டும். காலம் கடவுளின் கையில். ஏற்ற நேரம் வந்தது. நாட்டின் அதிபதி ஒரு கோர கனவு கண்டார். அதற்கு விளக்கம் அளிக்க அதிபர் அலுவலகத்தில் யாரும் இல்லை. மிகவும் குழப்பத்தோடு காணப்பட்ட அதிபதியிடம் வேலைப் பார்க்கும் முன்னால் சிறை நண்பர் மிகவும் தயங்கி குழப்பத்திற்கான காரணம் கேட்டான். அதிபதி அவருடைய கனவைப் பற்றி கூறினார். விளக்கம் கொடுக்க யாரும் முன்வரவில்லை. காரணம் தவறாகக் கொடுத்து தவறு செய்துää தண்டனை அனுபவிக்க தயக்கம். அப்போது யோசேப்பின் ஞாபகம் அந்த முன்னாள் சிறை நண்பருக்கு வருகிறது. அவனைப் பற்றி அதிபரிடம் சொல்கிறான். அதிபர் உடனே அவனை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர உத்தரவிடுகிறார். யோசேப்பு பல ஆண்டுகள் கழித்து சிறைச்சாலையிலிருந்து கெம்பீரத்தோடு, நம்பிக்கையோடுää கனவுகள் நிறைவேறும் என்ற ஆசைகளோடு வெளியே வந்தான்.

திருப்புமுனை 5

அதிபர் கண்ட கனவுக்கு விளக்கம் சொல்ல சிறைச்சாலையை விட்டு வெளியே வந்த யோசேப்பு சவரம் செய்து, நேர்த்தியாக உடை உடுத்தி அதிபரிடம் கொண்டு சென்றார்கள். அதிபர் அவனிடம் அவரது கனவைச் சொன்னார். நீ விளக்கம் சொல்லுவாய் என்று நாம் நம்புகிறேன் என்றார். அதற்கு யோசேப்பு மிகவும் அடக்கமாகவும் அமைதியாகவும் கனவுக்கு விளக்கம் சொல்லும் அறிவோ தகுதியோ என்னுடையதல்லää கடவுள் கொடுத்த வரத்தைக்கொண்டு உங்களுக்கு அவர் கொடுக்கும் மங்களகரமான விளக்கம் சொல்கிறேன் என்றான். அந்நாட்டில் முதல் ஏழு வருடங்களுக்கு வரப்போகும் செழிப்பையும் அதனைத் தொடர்ந்து ஏழு வருடங்களுக்கு கடும்பஞ்சமும் வரும் என்று அதிபரின் கனவுக்கு விளக்கம் கொடுத்தான். இந்த விளக்கம் அதிபருக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் ஏற்ற விளக்கமாக காணப்பட்டது. 

யோசேப்பைப் போல கடவுள் அருளையும் அறிவையும் வரத்தையும் பெற்றவர்கள் யாரும் இல்லை என்று அவனைப் புகழ்ந்தார்கள். அதிபரின் கனவுக்கு சரியான விளக்கத்தைக் கொடுத்ததால் யோசேப்பை நாட்டின் பிரதம மந்திரியாக அதிபர் நியமித்தார். அவன் நாட்டை சுற்றிப்பார்த்து விளைச்சல்களை எல்லாம் ஒன்று சேர்த்து பாதுகாக்க களஞ்சியங்களை ஆங்காங்கு கட்டினான். ஏழு வருட பஞ்சகாலத்திற்கு போதுமானதற்கும் அதிகமாகவே சேர்த்துவைத்தான். கடவுள் அருள் இருந்தால் தொட்டதெல்லாம் பொண்ணாகும். அப்படித்தான் யோசேப்பு தொட்டதெல்லாம் பொண்ணானது, வெற்றியும் புகழும் அவனிடம் வந்து குவிந்தது. ஆனால் அவனுடைய பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் வாழும் தேசத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. அவர்கள் உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் போது யோசேப்பு மிகவும் செழிப்புடன் வாழ்ந்து வருகிறான். இவன் வாழ்ந்த நாட்டில் உள்ள செழிப்பை கேள்விப்பட்ட யோசேப்பின் சகோதரர்கள் இங்கு உணவுப் பொருட்களை வாங்க வருகிறார்கள். 

திருப்புமுனை 6

யோசேப்பிடம் உணவு வாங்க வந்த பத்து சகோதர்களுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. காரணம் அவனுடைய உடை, இருப்பிடம், பதவி, அத்தேசத்து மொழி மாறுபட்டிருந்தது. அவர்களுடைய தம்பிதான் அவன் என்று கர்ப்பனை செய்துபார்க்கக்கூட அவர்களால் இயலவில்லை. ஆனால் யோசேப்பு அவர்களை அடையாளம் தெரிந்துகொண்டான். அவர்களிடம் சற்று கடினமாக நடந்துகொண்டான். அவர்களை ஒரு வேவுகாரர்கள் என்று சொன்னான். அதற்கு அவர்கள் நாங்கள் ஒரு தகப்பனின் பிள்ளைகள், எங்களின் ஒரு தம்பி காணாமல் போய்விட்டான், மற்றொரு தம்பி அப்பாவுடன் இருக்கிறான் என்றார்கள். யோசேப்பு இவர்கள் சொல்வது உண்மைதானா என்றும் அவனுடைய கடைசி தம்பியை பார்க்கவேண்டும் என்ற ஆவலிலும் அவர்களை நீங்கள் சொல்வது உண்மையானால் ஒருவர் இங்கே காவலில் இருந்துகொண்டு மற்றவர்கள் உங்கள் தகப்பனுக்கும் குடும்பத்திற்கும் உணவை கொண்டு செல்லுங்கள், நீங்கள் மற்ற தம்பியையும் அழைத்துக்கொண்டுவந்தால்தான் இவனை உங்களுக்கு விடுதலைப்பண்ணுவேன் என்றான். 

அவர்களுக்கு பெரும் தர்மசங்கடமாய்விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் “நாம் நம்முடைய சகோதரனுக்கு செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோதுää அவனுடைய மனகஷ்டத்தை நாம் கண்டும், அவன் கெஞ்சியதை காதில் வாங்கிக்கொள்ளாமல் போனோமே@ ஆகையால்ää இந்த ஆபத்து நமக்கு வந்தது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். ஒருவன் அவர்களைப் பார்த்து: நம் தம்பிக்கு விரோதமாக இப்படிச்செய்யாதீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் என் பேச்சை கேக்காமல் போனீர்கள்; இப்பொழுது, இதோ, அது நம்மிடத்தில் பழிவாங்கப்படுகிறது” என்று அவர்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். யோசேப்பு மொழிப்பெயர்பாளரைக் கொண்டு அவர்களிடம் பேசியதால் அவனுக்கு இவர்கள் பேசிய வார்த்தைகள் புரியாது என்று நினைத்துக்கொணடார்கள். அவர்கள் யோசேப்பின் கால்களில் விழுந்து வணங்கி “நாங்கள் சொல்வது உண்மைதான்” என்று கெஞ்சினார்கள். 

யோசேப்பின் கனவு இப்போது பலித்துவிட்டது. பல ஆண்டுகள் பொறுமையோடும்ää அவனுடைய நல்ல குணங்களும் பண்புகளும் மாறாமல் காத்து வந்தது ஒருபோதும் அவனைக் கைவிடவில்லை. சில நேரங்களில் நமக்கு நடக்கும் தீமைகளால் நம்முடைய நல்ல குணங்களையும் பழக்கவழக்கங்களையும் நாம் மாற்றிக்கொள்கிறோம். தீயவர்களால் நல்லவர்களும் தீயவர்களாகிறார்கள். ஆனால் யோசேப்பு அதற்கு சற்றும் இடம் கொடுக்கவில்லை. அவன் நம்பின இறைவன் அவனைக் கைவிடவில்லை. “கடவுளை நம்பினோர் கைவிடப்படுவதில்லை”. அவர்கள் பேசியதைக் கேட்ட யோசேப்பு உள்ளே போய் அழுதான். பின்பு வெளியே வந்து அவர்களிடம் நீங்கள் போய் உங்கள் தம்பியை அழைத்துவாருங்கள் என்று சொல்லி அவர்கள் கேட்ட உணவு வகைகளை பணத்தை வாங்கிக்கொண்டு கொடுத்தனுப்பினான். 

வீட்டிற்கு திரும்பி சென்ற அவர்கள் நடந்ததை அவர்கள் அப்பாவிடம் சொன்னார்கள். அவர் அவர்கள் சொன்னதை நம்பமுடியவில்லை. ஏற்கனவே ஒருவனை அவன் இழந்துவிட்டான், இப்போது மற்றொருவனை இழந்து வந்திருக்கிறார்கள், மீண்டும் கடைசி பையனையும் கொண்டு செல்ல திட்டமிடுகிறார்கள் என்று அவர்களைக் குறித்துப்பயந்தான் தகப்பன். ஒன்பது சகோதரர்களுக்கும் என்ன சொல்வதுää என்ன செய்வதென்றே தெரியவில்லை. எவ்வளவோ கெஞ்சிப்பார்க்கிறார்கள், அப்பா அவர்களை நம்பவில்லை. ஒருநாள் தவறு வாழ்நாள் முழுவதும் பாதிப்பு. கெட்ட பெயர் எடுப்பது எளிது, ஆனால் நல்ல பெயர் எடுப்பது கடினம். உன் தவறு உன் வாசல்படியில் படுத்துக்கொண்டிருக்கும் என்ற பழமொழிக்கேற்ப அவர்களது ஒரு நாள் தவறு பலவருடங்களாக தொடர்ந்கொண்டுவந்திருக்கிறது. நாம் எதை விதைக்கிறோமோ அதையே அறுக்கனும். 

அவர்கள் வாங்கிச்சென்ற உணவு பைகள் ஒன்றில் அவர்களுடைய பணத்தின் ஒரு பகுதி இருந்ததைப் பார்த்த அவர்களுடைய அப்பா இன்னும் பயந்துவிட்டார். இவர்கள் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்துவிட்டார்கள் என்று நினைத்து அவர்களை திட்டினார். ஆனால் அவர்கள் நாங்கள் ஏமாற்றவில்லை, இது எப்படி பையில் வந்தது என்று எங்களுக்குத் தெரியாது என்று அழுதுகொண்டே கூறினார்கள். அவர்களை நம்புவார் யாரும் இல்லை. தவறு செய்வது இயல்பு, அல்லது சூழ்நிலையில் செய்துவிடுகிறோம் ஆனால் அதிலிருந்து மனவருந்தி, திருந்தும்போது கடவுளின் கருணையும் மனிதர்களின் இரக்கத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற உண்மைப்படி அவர்களை இறுதியில் அவர்களுடைய அப்பா நம்பினார். அப்போதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 

வாங்கிச்சென்ற உணவு தீரும் நிலையில் அவர்கள் யோசேப்பிடம் உணவு வாங்கிவரவும் அங்கே விட்டுவந்த தம்பியை மீட்டுவரவும் மீண்டும் அந்நாட்டிற்கு செல்ல வேண்டிவந்தது. அப்பாவிடம் கெஞ்சிää சத்தியம் செய்து கொடுத்து அவர்களுடைய கடைசி தம்பியை அவர்களுடன் அழைத்துக்கொண்டு சென்றார்கள். அவனுடைய இளைய சகோதரனைக் கண்ட யோசேப்புக்கு அழுகை வந்தது. மீண்டும் உள்ளே சென்று அழுதுவிட்டு, முகத்தை கழுவிவிட்டு வெளியே வந்தான். அவர்களிடம் அவனுடைய அப்பாவின் நலனைக்குறித்து விசாரித்தான். அவர்கள் அப்பா யோசேப்புக்காகக் கொடுத்தனுப்பிய பல்வேறு பரிசுகளை அவனுக்குக் கொடுத்தார்கள். அவர்களை யோசேப்பு அவனுடைய வீட்டிற்கு அழைத்தான். உணவு மேஜையில் அவர்களை பெரியவன் முதல் சிரியவன் வரை வரிசையாக உட்காரவைத்தான். இது அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை வரவழைத்தது. இப்பொழுது பதினோரு பேரும் யோசேப்பின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்களுக்கு தான் யார் என்று காட்டிக்கொள்ளாமலேயே அவர்களிடம் அன்பாயும் இரக்கமாயும் நடந்துகொண்;டான். அதனால் அவர்களால் அவனை அவர்களுடைய தம்பி என்று நினைத்துப்பார்கவே முடியவில்லை. 

அவர்களுக்கு விருந்துகொடுத்து, உணவு வகைகளை அவர்களுக்குக் கொடுத்து அனுப்பினான். ஆனாலும் அவர்களின் இளைய சகோதரரின் பையில் அவனுடைய வீட்டில் உள்ள ஒரு வெள்ளிப் பாத்திரத்தை அவர்களுக்குத் தெரியாமல் போட்டு அனுப்பிவிட்டான். கொஞ்சதூரம் சென்றபின்புää வேலையாட்களை அனுப்பி அவர்களுடைய பையில் அந்த வெள்ளி பாத்திரம் இருக்கிறதா என்று பார்த்துவரசொல்ல, அவர்களும் அப்படியே பார்த்து அவர்களை மீண்டும் குற்றவாளிகளாக செழியனுக்கு முன்பாக நிறுத்தினார்கள். அவர்களின் கடைசி சகோதனை அடைமானமாக விட்டு செல்லுங்கள் என்று தீர்ப்பு சொன்னான். சோதனை மேல் சோதனைää போதுமடா சாமி என்று புலம்பினார்கள். ஒரு நாள் ஒருவனுக்கு செய்த துரோகம்ää இப்போது நம்மை ஆட்டிப்படைக்கிறதே என்று நொந்துகொண்டார்கள். நாம் செய்யும் தீமை நமது நிழல் போல் என்றும் தொடரும். இவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்படி கஷ்டப்படுவதற்குபதில் பட்டினி கிடந்து சாவதே மேல் என்று நினைத்தார்கள். கடைசி தம்பி இல்லாமல் வீட்டிற்குப் போனால் தங்களுடைய பிள்ளைகளை கொன்றுவிடுங்கள் என்று தகப்பனிடம் சொன்ன சத்தியத்தை அவர் நிறைவேற்றிவிட்டால் கொல்லிப்போட பிள்ளைகள் இல்லாமல் போய்விடுமே என்று கதறினார்கள். 

அவர்களுடைய கதறலைக் கேட்ட யோசேப்பு அங்கு நின்றுக்கொண்டிருந்த வேலைக்காரர்களை எல்லாம் வெளியே போகச் சொல்லிக் கட்டளையிட்டான். அதற்கும்மேல் அவனுடைய அழுகையையும் பாசத்தையும் அடக்கிவைக்கமுடியாமல் அவர்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறி அழுதான். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது நான் தான் உங்கள் தம்பி யோசேப்பு என்று அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினான். அவர்களுக்கு ஆச்சரியம் ஒருபுறம் பயம் மறுபுறம். சந்தோஷப்படுவதா, தவறு செய்ததற்காக அழுவதா என்று தெரியாமல் அழுதார்கள். அழுகை ஒரு நல்ல மருந்து. அதனால்தான் துக்கத்திலும் அழுவார்கள், தாங்கமுடியாத மகிழ்ச்சியிலும் அழுவார்கள். அழுகை நமது இருதயம் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். அதனால் துக்கம் குறையும்ää மகிழ்ச்சி பெருகும். அழுகையை அடக்காமல் இருப்பது நல்லது. 

திருப்புமுனை 7

சில மணிநேரங்கள் அப்படியே அழுகையும் அமைதியுமாக இருந்தது அந்த இடம். யோசேப்புக்கு மகிழ்ச்சி, ஆனால் மற்றவர்களுக்கோ பயம் பற்றிக்கொண்டது. நாம் செய்த துரோகத்திற்கு பழிவாங்கினால் என்ன செய்வோம். நாம் செய்த தீய செயல் அன்றோடு மறைந்துவிட்டதாக நினைத்தோமே ஆனால் இன்று அது பெரும் மரமாக இல்லை மலையாக வளர்ந்து நமக்கு முன்பாக பெருஞ்சவாலாக நிற்கிறதே! மன்னிப்பு கேட்பது மனிதகுணம், மன்னிப்பது தெய்வ குணம். ஆகவே வெட்கம் பாராமல்ää மூத்தவர்கள் என்றும் பாராமல் அவனுடைய கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்பதே சிறந்த செயல் என்ற முடிவில் அவர்கள் அவனுடைய கால்களில் மீண்டும் விழுந்தார்கள். காலில் விழுவதாக கனவில் கண்டது ஒருமுறைதான், ஆனால் இங்கு அவர்கள் பலமுறை விழுந்துவிட்டார்கள். 

அனைத்து நல்ல குணங்களையும் அவனுக்கு சொல்லிக்கொடுத்த அவனுடைய அப்பாவுக்கு இப்படியும் பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும் அப்பா அம்மா சொல்லிக்கொடுத்த நல்லப் போதனைகள் பிள்ளைகள் எவ்வளவு பெரிய வயோதிபர்கள் ஆனாலும், அல்லது எவ்வளவு பெரிய பதவிகளுக்கு வந்தாலும் அவைகள் ஒருநாளும் அவர்களுடைய இருதயத்தைவிட்டோ மனதைவிட்டோ மறையாது. தேவையான நேரத்தில் அவைகள் நினைப்பூட்டும். அப்படித்தான் இங்கு பன்னிரண்டு சகோதரர்களிடமும் காணமுடிந்தது. பதினோரு சகோதரர்கள் மன்னிப்பு கேட்கவும்ää ஒரு சகோதரன் அவர்களை மன்னிக்கவும் செய்கிறான். மன்னிப்பு கேட்பதும், மன்னிப்பு கொடுப்பதும் உயர்ந்த பண்பு. மன்னிப்புக் கேட்பதிலும், மன்னிப்பு கொடுப்பதிலும் நாம் கஞ்சத்தனமாக ஒருநாளும் இருக்கக்கூடாது. நாம் எவ்வளவு மன்னிக்கிறோமோ அவ்வளவாய் மன்னிக்கப்படுவோம்.

மன்னிப்பதோடு நின்றுவிடாமல் அவர்களுக்கு ஆறுதலாகவும் அவர்களை தைரியப்படுத்தியும் அவர்களிடம் செழியன் பேசினான். இத்தனை நிகழ்வுகளும் நீங்களோ நானோ திட்டமிட்டு நடத்தவில்லை, நம் அனைவருக்கும் மேலான கடவுள் ஒருவர் இருக்கிறார். அவர் இப்படிப்பட்ட பஞ்சம் வரும்ää அப்போது நம் அனைவருக்கும் உணவு கிடைக்கவேண்டும் என்ற தூரப்பார்வையில் திட்டமிட்டு நம்மை இப்படியாக நடத்தியிருக்கிறார். எது நடந்ததோ அது நல்லதுக்கேää எது நடக்கிறதோ அதுவும் நல்லதுக்கே, எது நடக்க இருக்கிறதோ அதுவும் நல்லதுக்கே. நம்மை நேசிக்கும் கடவுள் எதையும் நமக்கு நல்லதுக்கே செய்வார் என்று அவர்களுக்கு அவர்கள் அப்பா போதித்த போதனைகளை நினைப்பூட்டினான். அவர்களின் துக்கத்தின் அழுகை மாறி சந்தோஷத்தால் இன்னும் அதிகமாக அழுதார்கள். நம் தம்பி நமக்கு கிடைத்துவிட்டான். நம் கஷ்டங்கள் நம்மைவிட்டுப் போயின, புது வாழ்வுதான் இனிமேல் என்று மனதில் பாடஆரம்பித்துவிட்டார்கள். 

நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் யோசேப்பு அதிபரிடம் எடுத்துச்சொன்னான். அதிபரும் அதிகாரிகளும் இவனுடன் சேர்ந்து மகிழ்ச்சியைக் கொண்டாடினார்கள்.  உலகத்தில் இப்படிப்பட்ட அதிசயங்கள் எங்கோ, எப்போதோதான் நடைபெறுகிறது. அதிபரின் அனுமதியின் பெயரில் யோசேப்பு அவர்களை மகிழ்ச்சியுடன் அவர்கள் அப்பாவிடம் அனுப்பி, நீங்கள் போய் அப்பா மற்றும் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் இங்கே அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். போகும் வழியில் நீங்கள் ஒருவருக்கொருவர் சண்டை பண்ணிக்கொள்ளாதீர்கள் என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கினான். அறிவுரை எப்படிப்பட்டது என்பதுதான் முக்கியமேயொழிய யார் சொல்கிறார்கள் என்பதல்ல. சிறியவர்கள்கூட சில நேரங்களில் பெரிய பாடம் நடத்துவார்கள். 

திருப்புமுனை 8

பத்து சகோதரர்களும் யோசேப்பு உயிரோடுதான் இருக்கிறான் என்று சொன்னதைக் கேட்கவே யோசேப்பின் அப்பாவுக்கு தலைசுற்றியது. தன்னுடைய செல்ல மகன் செழியன் உயிருடன் இருக்கிறான் என்ற செய்தி மகிழச்சியைக் கொண்டுவந்தாலும், இவ்வளவு காலம் இவர்கள் இந்த உண்மையை மறைத்துவிட்டார்களே, இவர்களைப் பெற்ற நான் சபிக்கப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டு நெஞ்சிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறி அழுதார். தவறு செய்வது இயல்பு ஆனால் அதை மறைத்த நீங்கள் உருப்படவேமாட்டீர்கள் என்று அவருடைய பிள்ளைகளை சபித்தார். மகன்கள், நாங்கள் ஏற்கனவே செய்த பாவத்திற்காக சபிக்கப்பட்டு நாசமாய் போயிருக்கிறோம் என்று அழுதார்கள். செய்த பாவத்திற்காக எங்களால் ஒருநேரம்கூட நிம்மதியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியாமல் கஷ்டப்படுகிறோம். எங்களுக்கு மன்னிப்பே கிடையாதா? என்று ஏக்கத்தோடு கேட்டார்கள். என்னிடம் மன்னிப்பு கேட்காதீர்கள் நீங்கள் செய்த பாவம் கடவுளுக்கு விரோதமானது, உங்கள் தம்பி யோசேப்புக்கு விரோதமானது, அவர்களிடமே கேளுங்கள், அவர்கள் மன்னித்தால் உங்களுக்கு மன்னிப்பு உண்டு என்றார் அப்பா.

 மகன் யோசேப்பு உயிருடன் இருக்கிறான் என்ற செய்தியால் அப்பாவிற்கு மறுபக்கம் சந்தோஷத்தை அடக்கமுடியவில்லை. கடவுளுக்கு கோடாகோடி நன்றி என்று கத்திக்கத்தி சொல்லிக்கொண்டே இருந்தார். பைத்தியம் பிடித்தவரைப் போன்று கடவுளைப் பாடிப்புகழ்தார். பார்ப்பவர்களிடம் எல்லாம் என் மகன் கிடைத்துவிட்டான், அவன் உயிரோடுதான் இருக்கிறான், அவன் ஒரு நாட்டிற்கு பிரதமமந்திரி என்று எல்லாரிடமும் சொல்லி சொல்லி பூரிப்படைந்தான். மகனை சந்திக்கும் நாளை எண்ணிக்கொண்டிருந்தான். ஒருநாள் ஒரு வருடமாக தெரிந்தது. 

யோசேப்பின் அப்பாவை இங்கு கூட்டிவாருங்கள் என்று மகன்கள் சொன்னதை நம்பவில்லை ஆனால் யோசேப்பு அவர்களை கூட்டிவர அனுப்பிய வாகனத்தைப் பார்த்தபின்பு மகனைக் குறித்த பெருமையில், கெம்பீரமாக வாகனத்தில் ஏறினான். பெற்றால் இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை பெறவேண்டும் என்று நினைத்தான். இன்னாருடைய மகன் என்பதிலிருந்து இன்னாருடைய அப்பா என்று பெயர் வாங்குவது அவ்வளவு எளிதல்ல. அதற்காக அதிகமாக உழைப்புää தியாகம் போன்ற மூலதனங்களை செலுத்தும் போது ஒருநாள் அதன் பலனை அடையலாம் என்பதை நம்பினான். அவனுடைய அனைத்துப் பிள்ளைகளுக்காகவும் ஒவ்வொரு நாளும் செய்த போதனைகள் மற்றும் பிரார்த்தனைகள் வீண்போகவில்லை என்று மகிழ்ச்சியுடன் பெருமூச்சுவிட்டான். காரணம் அவனுடைய மற்ற பிள்ளைகளின் கெட்ட செயல்கள் மற்றும் குணங்களால் அவன் அழாத நாள் இல்லை. இரவில் தூங்காமல் இப்படிப்பட்ட மகன்களை பெற்றுவிட்டோமே, நாம் என்ன பாவம் செய்தோம், என்று புலம்பிய இரவுகள் அவன் நினைவில் வந்துபோகிறது. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதன் அர்தத்தைப் புரிந்துகொண்டான். தெய்வம் நின்று திருத்தும் என்னும் உண்மையை புரிந்துகொண்டவனாய் வாகனத்தில் அமர்ந்து தெய்வத்தை நன்றியுடன் நினைத்தான். நான் சாவதற்குள் என் மகனைப் பார்த்து மற்ற மகன்;களும் நல்லவர்களாக மாறியதைப் பார்க்க நான் கொடுத்துவைத்திருக்கவேண்டும். நான் செய்த புண்ணியங்கள் என்னை கைவிடவில்லை என்று தன்னைக்குறித்து சிந்தித்துக்கொண்டே உறங்காமல் மகன் இருக்கும் நாட்டிற்கு வந்து சேர்ந்தான்.
அப்பாவுக்கு மட்டுமல்ல இங்கே மகனுக்கும் அதே நினைவுதான். உறங்காமல் குட்டிப்போட்ட பூனை மாதிரி சுற்றி சுற்றி வந்தான். சந்தோஷத்தை அடக்கமுடியவில்லை. எப்படி அப்பாவை வரவேற்பது என்று பலவாறு கர்ப்பனை செய்துக்கொண்டிருந்தான். அவனுடைய மனைவி பிள்ளைகளுக்கு இவனைப் பார்க்கும் போது அத்தனையும் புதுமையாக இருந்தது. அவர்களும் இவனுடன் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர். அப்பா இங்கே வரும் வரை நாம் காத்திருப்பது நல்லதல்ல என்று நினைத்த யோசேப்பு அவன் ஒரு வாகனத்தில் ஏறி அவரை வரவேற்க அந்நாட்டின் எல்லைக்கே சென்றுவிட்டான். நேரம் வந்தது, பிரிந்தவர்கள் மீண்டும் சேரும் நேரம் வந்தது, வருத்தங்கள் மாறி சந்தோஷம் பெருவெல்லமாக பெருக்கெடுத்து ஓடும் நேரம் வந்தது. 

அப்பாவின் வாகனத்தை தூரத்திலேயே கண்ட யோசேப்பு தனது வாகனத்தைவிட்டு இறங்கி ஓடிப்போய் அவனுடைய அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு பலமணிநேரங்கள் விடாமல் அழுதான். அப்பாவும் அழுதார். இதை தடுக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. அவர்களின் இந்த நெகிழ்ச்சியை கண்ட சகோதரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் அழுகிறார்கள். மகிழ்ச்சியின் அழுகை ஆறாக ஓடுகிறது. மகனைக் கண்ட அப்பா “நான் இனி செத்தாலும் கவலை இல்லை” என்றான். இப்படியொரு நாளுக்காக நான் ஏங்காத நாள் இல்லை. கடவுள் என் வேண்டுதல்களை கேட்டார். என் கண்ணீரைக் கண்டார். என் வேதனைகளை மாற்றிவிட்டார். இனி நான் மகிழ்ச்சியுடன் மரிப்பேன் என்றார். இருவரும் ஒரே வாகனத்தில் ஏறி யோசேப்பு வீட்டிற்கு வருகிறார்கள். அனைவருக்கும் அனைவரையும் அறிமுகம் செய்துவைக்கிறான். புதிய உடைகளை கொடுத்து மகிழ்கிறான். வாங்குவதைக் காட்டிலும் கொடுப்பதே மகிழ்ச்சி. நாம் கொடுப்பதில் பிறர் மகிழ்வதில் இறைவனை காணலாம். அப்படியாக அந்தநாளில் அவர்கள் இறைவனின் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்கும் சோறு போடும் ஒரு விவசாயி இன்று ஒரு பிரதம மந்திரியின் வீட்டில் விருந்துண்கிறார். இதைவிட பெருமை வேறு என்னவாக இருக்கமுடியும்!

திருப்புமுனை 9

தனது அப்பாவையும் அண்ணன்கள் குடும்பத்தையும் அதிபருக்கு அறிமுகம் செய்துவைக்கிறான் யோசேப்பு. அதிபருக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது நாட்டில் இப்படியொரு அதிசயம் நடந்திருக்கிறதே என்று பெருமைக்கொள்கிறார். தான் ஒரு அதிபர் என்றும் பாராமல் செழியனின் தகப்பனாகிய விவசாயின் காலில் விழுந்து தன்னை ஆசீர்வதிக்கும்படி கேட்டார். அவரும் அதிபரை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறார். பெரியவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் நமக்கு அவசியம். பெரியவரின் வாக்கு பெருமாள் வாக்கு. ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட அதிபர் யோசேப்பின் அப்பா மற்றும் சகோதரர்களின் குடும்பத்தினருக்கு நாட்டின் ஒருபகுதியை அவர்கள் தங்குவதற்கென்றும் விவசாயம் செய்வதற்கென்றும் ஒதுக்கிக்கொடுத்தார். விவசாயிகளையும் அவர்கள் குடும்பத்தையும் பெருமைப்படுத்துவோர் சிறந்திருப்பர், பெருமைப்படுத்தும் நாடு சிறந்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அந்த நாடு மிகவும் செழிப்புடன் யோசேப்பின் ஆட்சியில் விளங்கியது.

அந்நாட்டில் அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு அதிக பஞ்சம் ஏற்பட்டதால் மக்கள் அதிகப்பணம் கொடுத்து உணவை வாங்கினார்கள். மக்களின் பணம் குறைய ஆரம்பித்தது. மக்களின் பணத்திற்கு பதில் அவர்களின் ஆடு மாடுகளையும் பின்பு விவசாய நிலங்களையும் அரசாங்கத்திடம் விற்று உணவை வாங்கிக்கொண்டார்கள். தனியார் நிலங்கள் அரசாங்க நிலங்களாக மாற்றப்பட்டபின்புää யோசேப்பு அவர்களுக்கு விதைகளைக் கொடுத்து விவசாயம் செய்யச்சொன்னான். இப்போது மக்கள் விவசாயத்தை அரசாங்கத்தொழிலாக செய்தார்கள். விவசாயம் பெருகியது. ஆடு மாடு மேய்க்கும் பணியையும் அரசாங்கத்தொழிலாக செய்தார்கள். விளைச்சல்களை அரசாங்கமும் உழைக்கும் விவசாயிகளும் பங்கு போட்டுக்கொண்டார்கள். உற்பத்தியும் பெருகியது. நாட்டில் விவசாயம் மற்றும் வீட்டு விலங்குகள் செழிப்புடன் இருந்தால் நாடு செழிப்புடன் இருக்கும் என்னும் உண்மையை மக்களுக்கு விளக்கி நாட்டை செழிப்புடன் காத்துவந்தான் யோசேப்பு. 

திருப்புமுனை 10

யோசேப்பின் அப்பா அந்நாட்டில் நீண்ட காலம் தீர்க்காயுசுடன் வாழ்ந்து மரித்தார். யோசேப்பின் குடும்பத்தார் அந்நாட்டில் ஒரு பெருங்கூட்டமாக வளர்ந்தார்கள். ஏறக்குறைய 400 ஆண்டுகள் அந்நாட்டில் இருந்தார்கள். அவர்கள் விட்டுவந்த நாடு இப்போது செல்வசெழிப்பில் தழைத்தோங்கியிருந்தது. செழிப்பு இருந்த அளவு மக்களிடையே அநியாயமும் அக்கிரமும் பெருகியிருந்தது. விபச்சாரங்கள் பெருகி விபச்சார விடுதிகள் எங்கும் நிறைந்திருந்தன. ஓரின சேர்க்கை பரவலாக இருந்தது. ஏழைகளை ஏமாற்றி பணம் சம்பாதித்த கயவர்கள் குற்றவாளிகளாக கருதப்படவில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் மற்றும் கொடுமை அனுதினமும் அதிகமாக அரங்கேறியது. கடவுள் பெயரில் கோவில்களை கொள்ளையடிக்கும் கூட்டம் பெருகியிருந்தது. கடவுள் நம்பிக்கையும் கடவுள் பயமும் இல்லாமல் மக்கள் வளர்ந்தும் வாழ்ந்துக்கொண்டிருந்தார்கள். பெரியவர்களை மதிக்காமல், பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சார சீரழிவுகள் கேளிக்கைக்காரர்களால் அழிந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் போதை மற்றும் திருட்டுத்தொழில் போன்ற தீய பழக்கங்களுக்கு நேராக வழிநடத்தப்;பட்டனர். அரசாங்கமும் நீதிமன்றமும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்ததால் அடுத்த தலைமுறையை வழிநடத்தும் நல்ல தலைவர்கள் குறைந்துபோனார்கள்.
இப்படிப்பட்ட ஒரு நாட்டை அழித்து அங்கே பரந்து வளர்ந்த செழியனின் குடும்பத்தை குடியேற்ற கடவுள் விருப்பம் கொண்டிருந்தார் என்று சொல்லும்படியாக பின்பு ஒரு நாளில் அவர்கள் வந்தபடியே திரும்பப்போய் அவர்கள் நாட்டில் உள்ள தீயவர்களை சண்டை போட்டு வெற்றிப்பெற்று அந்நாட்டை மீண்டும் தங்களுடைய நாடாக மாற்றிக்கொண்டார்கள். இப்படியாக ஒரு பழைய நாடு புதிய பொழிவுள்ள புதிய நாடாக உருவாகக் காரணமாயிருந்தான் யோசேப்பு. 

நம் வாழ்வில் ஏற்;படவேண்டிய திருப்புமுனை

திருப்புமுனை ஒவ்வொருவர் வாழ்விலும் எப்போது வரும், எப்படி வரும் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அது வரவேண்டிய நேரத்தில் வரும் போதுää அதனை தப்பவிட்டுவிடக்கூடாது. வாய்ப்பை நழுவவிட்டால் அடுத்த வாய்ப்பு வருமோ வராதோ என்பதால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வாழ்வில் திருப்புமுனையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அலை நிற்கட்டும் நான் கடலில் இறங்குகிறேன் என்றால் ஒருநாளும் கடலில் இறங்கமுடியாது. இந்த உலகில் நாம் போராடிதான் ஜெயிக்கவேண்டும். அந்த போராட்டம் நம் எதிர்கால வாழ்விற்கும் நம் குடும்பத்தினர் மற்றும் நம் பரம்பரைக்கும் நல்ல அஸ்திபாரமாக இருக்கும் வகையில் அமையவேண்டும். குறுக்குவழியில் சம்பாதித்தால் அதன் வேதனை நம்மால் சுமக்கமுடியாத காலத்தில் அதிகரிக்கும். ஆகவே ஞானியின் கூற்றுபடி இளம் வயதில் கடினமாக உழைத்தால் முதிர் வயதில் மகிழ்ச்சியுடன் அமர்ந்து அமைதியுடன் வாழலாம். 

நேர்மையாய் வாழ்வோர் நிறைவான வளத்துடன் நிறைந்திருப்பார்கள். அதற்கு யோசேப்பின் வாழ்வே நமக்கு நல்ல உதாரணம். நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுக்கவேண்டும். நல்லதை விதைத்தால் நல்லதை அறுப்போம். தீமையை விதைத்தால் தீமையை அறுப்போம். பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதிருப்போம். நன்மைக்கு நன்மை செய்யாவிட்டாலும் நன்மைக்கு தீமை செய்யாதிருப்போம். பிறருக்கு நன்மை செய்யும் ஆற்றலை கடவுள் நமக்கு தந்தருளட்டும். திருப்புமுனை நம்வாழ்மை மலரச்செய்யட்டும். 

Author: Rev. Dr. C. Rajasekaran



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download