யோசேப்பின் இரண்டாவது கனவு

சூரியனும், சந்திரனும், பதினொரு நட்சத்திரங்களும் அவனை வணங்கின. இதை அவன் கூறிய போது அவன் தகப்பன் “நானும் உன் தாயும் 11 சகோதரர்களும் உன்னை வணங்குவோமா?” என்று கேட்டார். ஆனால் இக்கனவை அவன் தகப்பன் மனதில் வைத்துக் கொண்டார். யோசேப்பிற்கு பென்யமீன் என்ற ஒரு தம்பியும் இருந்தான்.

அரசனாவாய் என கனவுகள் கூற, அடிமையாய் அழுகையோடு எகிப்தை அடைந்தான் யோசேப்பு. எகிப்து அரசனான பார்வோனின் அதிகாரிகளில் ஒருவனும் மெய்க்காப்பாளருக்குத் தலைவனுமாகிய போத்திபார், யோசேப்பை விலைக்கு வாங்கினார். யோசேப்போடு கடவுள் இருந்தார். அவன் செய்த எல்லாக் காரியத்தையும், கடவுள் ஆசீர்வதித்தார். கடவுள் அவனோடு இருப்பதையும், அவன் தொட்ட காரியமெல்லாம் சிறப்பாக நடைபெறுவதையும் கண்ட அவன் எஜமான், யோசேப்பை தன் சிறப்புப் பணியாளர் ஆகவும், தன் வீட்டிற்கு மேலாளராகவும் (மேனேஜராகவும்) நியமித்தார். தனக்கிருந்த அனைத்தையும் யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தார். இதனால் ஆண்டவர் போத்திபாரின் வீட்டையும், அவன் வயல் நிலங்களையும், அவனுக்குண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

யோசேப்பு நல்ல உடற்கட்டும், அழகிய தோற்றமும் உடையவனாக இருந்தான். இவனது அழகில் தன் மனதை பறிகொடுத்த போத்திபாரின் மனைவி யோசேப்பைத் தவறான உறவுக்கு ௮ழைத்தாள்... “என் எஜமானுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன். கடவுளுக்கு விரோதமாக நான் பாவம் செய்ய மாட்டேன்” என்று கூறி மறுத்து விட்டான். ஒரு நாள் அவன் தன் வேலையின் நிமித்தம் வீட்டுக்குள் சென்றபோது, போத்திபாரின் மனைவி அவன் மேலாடையைப் பற்றி இழுத்தாள். யோசேப்போ தன் மேலாடையை விட்டு விட்டு வெளியே தப்பி ஓடிவிட்டான். இதனால் ஆத்திரமடைந்த அவள் தன் வீட்டார் அனைவரிடமும் யோசேப்பு தவறாக நடக்க வந்ததாகவும், தான் கூச்சலிடவும், அவன் மேலாடையை விட்டுவிட்டு ஓடி விட்டதாகவும் பொய் சொன்னாள். தன் கணவன் வரவும், கண்ணீரோடு இந்தப் பொய்யைக் கூறினாள். இதனால் மிகவும் கோபமடைந்த போத்திபார் யோசேப்பை அரச கைதிகள் உள்ள சிறையில் அடைத்தான். கர்த்தர் அவனோடு இருந்தார். சிறைச்சாலைத் தலைவன் யோசேப்பின் மீது தயவு வைத்து சிறைச்சாலையில் இருந்த கைதிகளையும், அங்கே நடைபெற்ற வேலைகள் அனைத்தையும் யோசேப்பின் பொறுப்பில் ஒப்படைத்தான். பார்வோனுக்கு மது பரிமாறுவோரின் தலைவனும், அப்பம் சுடுவோரின் தலைவனும் அரசனுக்கு எதிராகக் குற்றம் செய்தபடியால், அவர்கள் இருவரும் இதே சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு நாள் திராட்சரசம் பரிமாறுவோரின் தலைவனும் அப்பம் சுடுவோரின் தலைவனும் கவலையோடு இருந்தனர். இதைப் பார்த்த யோசேப்பு “இன்று உங்கள் முகங்கள் இவ்வளவு வாடியிருப்பதேன்?” எனக் கேட்டான். 

அவர்கள் நாங்கள் இருவரும் கனவு கண்டோம். அதை எங்களுக்கு விளக்கிச் சொல்வார் யாருமில்லை” என்றனர்.

“கனவுக்கு பொருள் சொல்வது கடவுளுக்கு உரியதல்லவா? என்னிடம் விபரமாகச் சொல்லுங்கள்” என்றான். மது பரிமாறுவோரின் தலைவன் என் கனவில் ஒரு திராட்சைச் செடி தோன்றியது. அதில் 3 கிளைகள் இருந்தன. மொட்டு விட்டு, பூத்து, அவற்றில் குலை, குலையாய் பழங்கள் தொங்கின. இந்தப் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, கிண்ணத்தைப் பார்வோன் கரத்தில் கொடுத்தேன்” என்றான்.

“இன்னும் 3 நாட்களில் பார்வோன் உன்னை விடுதலையாக்கி, உன் வேலையில் உன்னை வைப்பார். நீ பார்வோனுக்கு மது பரிமாறுவாய்” என்று கூறிவிட்டு “நான் எபிரெயரின் நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டேன். இச்சிறையில் என்னை வைக்கும்படி நான் ஒரு தவறும் செய்யவில்லை. உனக்கு நல்வாழ்வு கிடைத்ததும். என்னைப் பற்றி பார்வோனிடம் கூறி எனக்கு விடுதலை வாங்கீக் கொடு என யோசேப்பு கேட்டுக் கொண்டான்.

உடனே இப்பம் சுடுவோரின் தலைவன் நானும் ஒரு கனவு கண்டேன். 3 வெள்ளைக் கூடைகள் என் தலையில் இருந்தன. மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகையான இப்பங்கள் இருந்தன. பறவைகள் வந்து, என் தலைமேல் உள்ள கூடையிலிருந்த அப்பங்களைத் தின்று விட்டன.” என்றான்.

“3 கூடைகளும் 3 நாட்களாம். இன்னும் 3 நாட்களில் பார்வோன் உன் தலையை வெட்டி, உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான். உன் சதையை பறவைகள் தின்னும்” என்று கூறினான். மூன்றாம் நாள் பார்வோனின் பிறந்த நாள். ௮ன்று மது பரிமாறுவோரின் தலைவனை விடுவித்து முன்னிருந்த பதவியில் வைத்தான். அப்பம் சுடுவோரின் தலைவனை கமுமரத்தில் ஏற்றினான். மது பரிமாறுவோரின் தலைவன் யோசேப்பை மறந்து போனான்.

இரு ஆண்டுகள் கடந்தன. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதிக்கரையில் ௮வன் நின்று கொண்டிருந்தான். அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து புல் மேய்ந்தது. அவற்றைத் தொடர்ந்து நலிந்து, மெலிந்திருந்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறி வந்து கொழுத்த பசுக்களை விழுங்கி விட்டன. இப்படிக் கனவு கண்டு விழித்துக் கொண்டான். பின் சற்றுநேரம் கழித்து மீண்டும் தூங்கினான். அவன் இரண்டாவது கனவு கண்டான்.

பொன்நிறமான ஏழுகதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்திருந்தன. அதன்பின் சாவியானதும், கீழ்க்காற்றினால் தீய்ந்து போனதுமான ஏழு கதிர்கள் முளைத்தன. அவை செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. காலையிலே பார்வோன் கலக்கமுற்றான். எகிப்து நாட்டிலுள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும் வரவழைத்து, தன் கனவுகளைக் கூறினான். ஆனால் ஒருவராலும் அவற்றை அவனுக்கு விளக்கிக் கூற முடியவில்லை. அப்பொழுது மதுபரிமாறுவோரின் தலைவன் பார்வோனிடம் தான் சிறையில் இருந்தபோது, தானும், அப்பம் சுடுவோனின் தலைவனும் கண்ட கனவுகளையும், அதற்கு யோசேப்பு விளக்கம் கூறியதையும், அதன்படி நடந்ததையும் கூறினான். உடனே பார்வோன் யோசேப்பை அழைத்து வரக் கட்டளையிட்டான். யோசேப்பு சுத்திகரிக்கப்பட்டவனாய் புத்தாடை அணிவிக்கப்பட்டு, அழைத்து வரப்பட்டான். 

பார்வோன் யோசேப்பைப் பார்த்து, “நீ கனவுக்குப் பொருள் கூறுவாய் எனக் கேள்விப்பட்டேன்” என்று கூறவும்,

யோசேப்பு பணிவுடன், “நானல்ல! கடவுளே பார்வோனுக்கு மங்களகரமான உத்தரவு அருளுவார்” எனப் பணிவுடன் கூறினான். பார்வோன் கனவுகளைக் கூறினான். யோசேப்பு பார்வோனைப் பார்த்து, “இரண்டு கனவுகளும் ஒரே பொருளை உடையன. கொழுமையான 7 நல்ல பசுக்களும், 7 நிறைமணிக் கதிர்களும் மிக வளமான 7 ஆண்டுகளைக் குறிக்கும். மெலிந்த 7 பசுக்களும், 7 சாவியான கதிர்களும் பஞ்சமான 7 ஆண்டுகளைக் குறிக்கும். கடவுள் தாம் செய்யப் போவதை பார்வோனுக்கு தெரிவித்திருக்கிறார். எகிப்து நாடெங்கும் வளமான 7 ஆண்டுகள் வரப் போகின்றன. அதன்பின் ஏழு ஆண்டுகள் கொடிய பஞ்சம் இருக்கும். இது விரைவில் நடக்கும் என்பதை தெரிவிக்கவே இரண்டு கனவுகள் வந்தன.

இதன் தொடர்ச்சி யோசேப்பை உயர்த்தின தேவன்! என்ற தலைப்பில் உள்ளது.

இந்தக் கதை  வெற்றித் திருமகன்  என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Bible Articles Tamil Christian Story Vetrithirumagan - Story Sis. Vanaja Paulraj

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download