ஆவியை உடையவர்கள் ஆவிக்குரியவர்கள். அவர்கள் ஆவியில் பிறந்தவர்கள். அதாவது, மாம்சத்தில் மரித்தவர்கள். ஆவிக்குரியவர்கள் ஆவியில் பிழைப்பவர்கள். ஆவியின் கனியான அன்பு, சந்தோஷம், சமாதானம், சாந்தம், விசுவாசம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், இச்சையடக்கம், இவைகளைத் தங்களுடைய வாழ்க்கைப் பிரமாணமாகக் கொண்டு வாழ்பவர்கள் தங்கள் சுயத்தைச் சாகடித்தவர்கள். ஆவியின் வழிநடத்துதலில் மட்டுமே செல்பவர்கள். இவர்கள் சுயநலமற்ற பொதுநலவாதிகள். ஆவியின் வலிமையையும், வாய்மையையும், வாழ்வாக்கி வழிபாட்டுடன் வளர்ந்துவருகிறவர்கள். வன்முறை என்பது இவர்களது அகராதியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. தூய்மை, வாய்மை, வலிமை, நேர்மை இவர்களது சிறப்பு அம்சம்.
மனுக்குலம் அனைத்தும் ஆவியில் நிறைந்து, ஆவியின் சித்தம் செய்து, ஆவியின் உலகம் படைக்க வேண்டும் என்பதே ஆவியான கடவுளின் அநாதி திட்டம். இத்திட்டத்தை ஆவிக்குரிய தலைமையின் கீழ் செயல்படுத்த பரிசுத்த ஆவியால் உருவான இயேசு நியமிக்கப்பட்டார். இயேசுவே மெய்யான ஆவிக்குரியத் தலைவர். அவர் இத்தலைமைப் பணியின் முன் மாதிரி. இம் முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பது அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு இயேசு கொடுக்கும் நிபந்தனை. இது கடினமானதுதான். ஆனால் அவருடைய அநுக்கிரகத்தால் இலகுவாகின்றது. ஆவிக்குரிய தலைவர் இயேசுவுக்கும், ஆவிக்குரிய தலைவர்கள் என்று தங்களையே கூறிக்கொள்ளும் அல்லது ஒரு கூட்டத்தை ஏற்படுத்தித் தங்களை ஆவிக்குரிய தலைவர் என்று அழைக்கச் சொல்லுபவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் அறிய வேண்டும். மெய்யான ஆவிக்குரிய தலைவர் இயேசுவின் தன்மைகளை ஆராய்வதும், அதன்படி வாழ்வதும் இன்றைய நாட்களில் அவசியமான ஒன்றாகும்.
தரிசனமுள்ள தலைவர்
கடவுள் உலகில் உள்ள அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானவர். அவரே மக்களை பல இனங்களாக, நாட்டவராக, மொழியினராக, நிறத்தவராகப் படைத்தாலும் அவர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கிறார். இயேசு கிறிஸ்து உலக மக்கள் அனைவரின் பாவத்தையும் சுமந்தார். உலகிற்கு இரட்சகராக, சத்தியமாக, உயிராக, பரலோக வழியாக, வாசலாக வந்தார். யூதர்களுக்கு மட்டும் என்றிராதபடி உலக மக்கள் அனைவரைக்குரித்த தரிசனம் உடையவராக இருந்தார். யூத மதம், யூத மொழி, யூத கலாச்சாரம் என்று இல்லாது அதைத் தாண்டி உலகிற்குப் பொதுவான போதனைகளைப் போதித்தார். அவருடைய போதனை எல்லா காலத்திற்கும்ää எந்நாட்டவருக்கும், எந்த கலாச்சாரத்திற்கும் ஏற்புடையதாக இருக்கிறது. அவர் எல்லா இனத்தாரையும் ஏற்றுக்கொண்டார். எல்லாருடையää எல்லா மொழிகளையும் அறிந்திருந்தார். அவர் தனது சீஷர்களிடம் உலகத்தின் கடைசி மட்டும் செல்லுங்கள் என்று கட்டளையிட்டார். அத்துடன் இயேசு கிறிஸ்து பாரபட்சம் பார்க்காது, தம்மை அண்டினோரைக் கைவிடாது காப்பவராகவும் இருக்கிறார்.
ஆவிக்குரிய தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதி, மதம், மொழி, நாட்டுக்கு மட்டுமே ஆவிக்குரிய தலைவர்களாக இருக்க விரும்பாமல், உலக தரிசனம் உடையவர்களாக இருந்து, கிறிஸ்துவின் சரீரமான சபையின் எல்லா அங்கங்களுடன் நல்லுறவை ஏற்படுத்தி, எல்லா அங்கங்களின் நல்வாழ்விற்கான தரிசனம் உடையவராக இருக்கும்போது உலகம் அமைதி பெரும். திருச்சபை சிறப்புறும்.
தன்னைப் பகிர்ந்தளித்தவர்
அன்பில்லார் எல்லாம் தமக்குரியர், அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு என்ற ஆவிக்குரிய உண்மையை வாழ்க்கை விதியாகக் கொண்டவர் இயேசு. உயிருடன் வாழ்ந்த நாள் முழுவதும் தன்னை மற்றவர்களுக்கென்று அர்ப்பணித்தவர். சுயநலம் கருதாமல் வாழ்ந்தவர். தன்னுடைய ஓய்வுää உணவு என்று கருதாமல் அதற்கென்று நேரத்தினைப் பிரத்தியேகமாக ஒதுக்காமல், மக்களுடைய தேவையினைப் பூர்த்தி செய்வதையே தனது உணவாகக் கொண்டார். என் கடன் பணி செய்து கிடப்பதே என்பதை தனது பிரமானமாகக் கொண்டு வாழ்ந்தார். கடைசியாக, தன்னையே பலியாகக் கொடுத்தார். தனது சரீரத்தை மெய்யான போஜனமாகவும்ää தனது இரத்தத்தை மெய்யான பானமாகவும் கொடுத்தார். தன்னை முழுவதுமாக மக்களின் நலனுக்காக அர்ப்பணித்து விட்டார். அதன் விளைவு தான் அவர் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தைப் பெற்று வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரத்தையும் பெற்றவராக இருக்கிறார். பெற்ற அதிகாரத்தையும் தரிசனத்தையும் தனக்கென்று வைக்காமல் எல்லோருக்கும் பகிர்ந்தளித்தார்.
பவுலும் இயேசுவைப் போல மக்கள் பணிக்காக வார்க்கப்படுகிறேன் என்கிறார். சபையின் மீட்புக்காக இயேசுவின் பாடுகளின் குறைவை தனது பாடுகளால் நிறைவாக்கத் தன்னை சபைக்காகப் பகிர்ந்தளித்தார். ஆவிக்குரிய தலைவர்கள் பலர் தங்களுடையதைப் பகிர்ந்தளிப்பதை விட்டு தங்களிடம் வருபவர்களிடம் இருந்து தங்களுக்கென்று பகிர்ந்தளிக்க வேண்டுகிறார்கள். மற்றவர்களுக்கு என்றில்லாமல் தங்களிடம் வருபவர்கள் தங்களுக்கு என்று அனுபவிக்க ஆசிக்கிறார்கள். ஆவிக்குரிய தலைவர்கள் தங்களின் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் பகிதுந்துகொள்ள வேண்டும். நான் இல்லையென்றால் சபை அழிந்துவிடும், நிர்வாகம் கெட்டுவிடும், சங்கம் இல்லாமல் போய்விடும் என்ற எண்ணம் உடையோர் ஆவிக்குரிய தலைவராக இருக்க முடியாது. இந்நிலையை மாற்றினால் ஆவிக்குரிய தலைவர்கள் பூமிக்கு வித்தாகி அநேக ஆவிக்குரிய தலைவர்களை விளைவிப்பார்கள்.
தவறே செய்யாதவர்
தலைவர் என்ற நிலை உயர்ந்த நிலை. உயர்ந்த நிலைக்கு வரும் முன்பு பல தவறுகள் மூலம் பல பாடங்கள் கற்றுக்கொண்டு வருகின்றனர். தலைவரான பின்ப தவறு செய்வது தலைமைக்கு அழகல்ல. இயேசு தவறே செய்யாதவராக வாழ்ந்தார். தவறு செய்யும் வாய்ப்பை அநேக நேரம் பெற்றிருந்தாலும் அதில் தன்னை ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை. நெருக்கடியான சூழ்நிலையிலும் தன் தவறு அவற்றை மாற்றிப்போடலாம் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் தவறு செய்யவில்லை. ஆவிக்குரிய தலைவர்கள் தவறு செய்வது இன்றைய நாட்களில் இயல்பாகி விட்டது. அந்த தவற்றினை மறைப்பதும், நியாயப்படுத்துவதும் மற்றவர்கள் மேல் சுமத்துவதும் அதனால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஜனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டிருக்கிறது. மற்றவர்களின் தவற்றை தான் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தன் தவறினை மற்றவர்கள் மீது சுமத்தாத, தவற்றை முழுமையாகத் தனது ஜீவனிலிருந்து நீக்கப்பெற்ற ஆவிக்குரிய தலைவர்கள் எழும்பும்போது தூய்மை ஆட்சி செய்யும். தவறுகள் திருத்தப்படும். தேசம் சிறப்பை அடையும். மேய்ப்பனின் வீழ்ச்சி மந்தைக்கு அழிவு. போதனைகளின் வீழ்ச்சி சபைக்கு அழிவு.
நாம் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய தலைவர்களாக மற்றவர்களுக்கு மாதிரிகளாக இருக்க அழைக்கப்பெற்றோம். அழைத்த அழைப்பிற்கு ஏற்றவர்களாய் வாழ்வோம்.
Author: Rev. Dr. C. Rajasekaran