தச்சுவேலையில் ஈடுபட்டிருந்தார் யோசேப்பு. குழந்தையேசு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். மரியாள் யோசேப்பின் அருகில் அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் தீவிர சிந்தனை தேங்கி நின்றது.
“மரியா! காலையிலிருந்தே ஏதோ சிந்தனையில் இருக்கிறாயே!''
“இயேசு பிறந்த மறுநாள் மேய்ப்பர்கள் நாமிருந்த மாட்டுக்குடிலுக்கு பாலாடைக்கட்டி, போர்வை, கம்பளிச் சட்டை என்று கொண்டுவந்து இயேசு பாலகனை பணிந்து சென்றதை நினைத்தேன்''.
"அவர்களுக்கு, தேவதூதன் வானிலே தோன்றி விஷயத்தைச் சொல்லி நடத்தியிருக்கிறாரே! அனைத்தையும் படைத்த ஆண்டவன் ஏழை தச்சன் குடும்பத்தில் மாட்டுக் குடிலில் பிறந்திருக்கிறார். ஏழை மக்களுக்கு தேவதூதன் மூலம் பிறப்பின் செய்தியை அறிவித்திருக்கிறார். இது விந்தையிலும் விந்தையல்லவா?
“எருசலேம் தேவாலயத்திலே ஸ்தோத்திரபலி செலுத்தப்போன போது சிமியோன் தாத்தா குழந்தையை கைகளில் வாங்கி, “புற ஜாதிகளுக்கு ஒளியாகவும் இஸ்ரவேலருக்கு மகிமையாகவும் தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக நீர் ஆயத்தம் பண்ணின உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது என்றல்லவா? கூறினார். அப்படியானால் இயேசு உலக மக்கள் அனைவருக்கும் சொந்தம் என்றுதானே பொருள்?”
“ஆமாம் மரியா! இயேசு ஒரு குடும்பத்திற்கோ, ஒரு கோத்திரத்திற்கோ அல்ல உலக முழுமைக்கும் உரிமையானவர்!'' என்ற யோசேப்பின் பதிலுக்கு தலைமையை மட்டும் அசைத்தாள் மரியா. அவள் உள்ளம் “அநேகர் விழுவதற்கும், எழுவதற்கும் விரோதமாகப் பேசப்படுவதற்கும் இவர் அடையாளமாவார். உன்னையும் ஒரு பட்டயம் உருவிப்போகும்' என்று சிமியோன் கூறிய வாசகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.
வெளியே ஆரவாரச் சத்தம் கேட்டது. யோசேப்பு வெளியே வரவும், மூன்று ஒட்டகங்கள் அவர் வீட்டின் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஒட்டகத்திலிருந்து அரசர்களுக்கொத்த அலங்காரத்துடன் இறங்கிய வானநூல் அறிஞர்களைக் கண்ட யோசேப்பு,
“வந்தனம்! வாருங்கள் ஐயா தாங்கள் யாரைத் தேடி வந்துள்ளீர்கள்?”
“ஐயா! இங்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது அல்லவா?
"ஆம் ஐயா! உள்ளே வாருங்கள்!"
“வாருங்கள் ஐயா! வந்தனம்! கரம் குவித்தாள் மரியாள். இயேசு பாலகனை தொட்டிலினின்று எடுத்து படுக்கையில் படுக்க வைத்தாள். புத்தம் புதுமலராய் படுத்திருக்கும் பாலகன் அருகே மண்டியிட்டனர் வானநூல் அறிஞர்கள்.
டைரஸ், “விண்ணுலகும் மண்ணுலகும் வணங்கும் ராஜாதி ராஜவே! உமக்குப் பொன்னை காணிக்கையாகப் படைக்கிறேன்!” என்று பொன்னைப் படைத்தார்.
அற்போனா, ''உன்னையே அழித்து இவ்வுலகை மணம் பெறச் செய்வதால் உமக்கு தூபவர்க்கத்தை காணிக்கையாகப் படைக்கிறேன்” என அவர் படைக்க,
டேனியல், 'இவ்வுலகை மீட்க தன்னையே தரும் தியாகியே வெள்ளை மனம் கொண்ட உமக்கு வெள்ளைப் போளத்தை காணிக்கையாக்குகிறேன் என வெள்ளைப் போளத்தை காணிக்கையாக்கினார்.
பெரியோர்களே! தாங்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பீர்கள்போல் தெரிகிறது. இன்று இங்கேயே தங்கிச் செல்ல வேண்டுகிறேன். பெரியவர்களாகிய தங்களுக்கு எங்கள் சிற்றில்லம்.....”*
ஐயா! சிற்றில்லம் எனத் தயங்குகிறீர்கள். இந்தச் சிற்றில்லத்தில் இருக்கும் குழந்தை சாதாரணமானது அல்ல! அவரே இங்கு பிறந்திருக்கும்போது நாங்கள் தங்குவதற்கு என்ன?'”
எல்லாம் யெகோவா எங்கள் மீது கொண்ட கருணை. அனைவரும் தத்தம் அனுபவங்களைப் பரிமாறியபின் இரவு உணவை அருந்தி உறங்கச் சென்றனர்.
இரவு வளர்ந்தது. இறைவன் அவர்களுக்கு தேவ தூதன் மூலம் கட்டளையிட்டான். திடுக்கிட்டு எழுந்தார் டேனியல் மற்றவர்களும் உடனே எழுந்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் ஆச்சரியத்துடன் நோக்கினர்.
வானில் தேவதூதன் தோன்றி 'நீங்கள் வந்த வழியே உங்கள் நாடுகளுக்குச் செல்ல வேண்டாம். வேறுமார்க்கமாகச் செல்லுங்கள். ஏனென்றால் ஏரோது பிள்ளையைக் கொலை செய்ய முயல்வான்'' என்று என்னை எச்சரித்தார்!
“என் கனவும் அதுவே!'' என அற்போனா அதிசயிக்க, டைரஸ், “நண்பர்களே! நானும் அவ்வாறே கனவு கண்டேன். ஏதோ ஒரு சதி நடைபெறுகிறது. நாம் தேவதூதன் எச்சரித்தபடி வேறுமார்க்கமாக நம்நாடுகளுக்குச் செல்வோம்'”
பொழுது புலர்ந்தது. “நாங்கள் சென்று வருகிறோம்'' என டைரஸ் கூற
“மிக்க நன்றி சென்று வாருங்கள்!” என யோசேப்பும் பதிலிறுத்தார்.
“ஐயா! நீங்களும் கூட வேற்றிடம் செல்வது நல்லது ஏனென்றால்...” என்று டேனியல் ஆரம்பிக்கவும்.
"நாங்கள் இன்றே எகிப்திற்குப் புறப்படுகிறோம். ஏனென்றால் நேற்று இரவு தேவதூதன் தோன்றி ''பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்திற்குப் போ. ஏரோது, இயேசுவைக் கொலை செய்ய வகைதேடுவான்'' என எச்சரித்தார்”
“அப்படியா? சர்வ வல்லவர் அறியாத மறைபொருள் உண்டோ?” மூவரும் விடைபெற்றனர்.
ஏரோது அரண்மனையில் கர்சித்தான், “அமைச்சரே! வானசாஸ்திரிகள் நம்மை வஞ்சித்து விட்டனர்””.
“அரசே! கட்டளையிடுங்கள் தங்கள் ஆணையை நிறைவேற்றுகிறோம்'” அமைச்சர் பணிவுடன் பகர்ந்தார்.
“பெத்லெகேமிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உள்ள இரண்டாண்டுக்குட்பட்ட எல்லா ஆண் குழந்தைகளையும் கொலை செய்யுங்கள். இது மாமன்னர் ஏரோதுவின் ஆணை!”
அப்படியே செய்கிறோம் அரசே!''
“ராஜாதி ராஜனாம்! அந்த அற்பப் பாலகனும் செத்துத் தொலைவான்.. என்னை ஏமாற்றமுடியுமா?'' என அட்டகாசமாகச் சிரித்தான். ஆனால் அவன் கொலை செய்ய விரும்பிய, இயேசு பாலகன் எகிப்துக்குத் தப்பிப்போய்விட்டார் என்பதை அவன் அறியவில்லை.
இதன் தொடர்ச்சி சோதனையும் சாதனையும் ... என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.