நண்பகலில் யோசேப்பு வந்ததும், தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை அவர் முன் வைத்து, தரை மட்டம் தாழ்ந்து வணங்கினார்கள். யோசேப்பு, “முதிர் வயதான உங்கள் தந்தை நலமா?” என விசாரித்தார்.
“உமது ஊழியக்காரராகிய எங்கள் தந்தை நலமுடன் இருக்கிறார்” என்று கூறி மீண்டும் தரை மட்டும் தாழ்ந்து வணங்கினர். யோசேப்பு தன் தம்பியைப் பார்த்தான். “உங்கள் தம்பி இவன்தானா?” எனக் கேட்டு, “மகனே கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று ஆசிர்வதித்தார். தன் தம்பியைக் கண்டதால், அவர் உள்ளம் பொங்கியது. உள்ளறைக்குச் சென்று கண்ணீர் விட்டார். பின் முகம் கழுவி, உணவருந்த வந்தார். யோசேப்பின் சகோதரர்கள் மூத்தவன் முதல் இளையவன் வரை வயது வரிசைப்படி உட்கார வைக்கப்பட்டதைக் கண்ட அவர்கள் ஆச்சரியப்பட்டனர். யோசேப்பின் முன் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை அவன் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். எல்லாரைப் பார்க்கிலும் பென்யமீனுக்கு 5 மடங்கு அதிகமாய்க் கொடுத்தான். யோசேப்பு அவர்களை கவனித்தான். யாரும் பென்யமீன் மீது பொறாமைப்படவில்லை.
பின்னர் யோசேப்பு தன் வீட்டு மேற்பார்வையாளனிடம், அவர்களுடைய கோணிப்பைகளில் தானியத்தை நிரப்பவும், அவனவன் பணத்தை அவனவன் பைகளில் போடவும், பென்யமீனின் கோணிப்பையில் பணத்தோடு, தான் பானம்பண்ணும் வெள்ளிப் பாத்திரத்தை வைக்கவும் கட்டளையிட்டான். அவன் அவ்வாறே செய்தான். அவர்கள் அனைவரும் சந்தோஷத்தோடு சென்றனர். அவர்கள் நகரை விட்டு சிறிது தூரம் செல்லவுமே, மேற்பார்வையாளனும், அவர்களை விரட்டிப் பிடித்து, யோசேப்பு கூறியனுப்பியபடி, “நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன? நீங்கள் திருடி வந்தது என் தலைவரின் பாத்திரம் அல்லவா? நீங்கள் செய்தது மிகப்பெரிய தீங்கு” என்று சொன்னான்.
அவர்கள், “ஐயா! நாங்கள் கோணிப்பையில் இருந்த பணத்தைத் திரும்பக் கொண்டு வந்தோமே! நாங்கள் திருடிக் கொண்டு போவோமா? எவனிடத்தில் அந்தப் பாத்திரம் இருக்கிறதோ அவன் கொலை செய்யப்படட்டும். நாங்களும் எங்கள் தலைவருக்கு அடிமைகளாவோம்” என்று கூறினர். அது கேட்டு மேற்பார்வையாளன், “நல்லது எவனிடத்தில் பாத்திரம் இருக்கிறதோ அவனே அடிமையாவான். மற்றவர்கள் குற்றமற்றவர்கள்” எனக் கூறினார். அனைவர் கோணிப்பைகளும் சோதிக்கப்பட்டது. வெள்ளிப் பாத்திரம் பென்யமீன் பையில் இருந்தது. “தான் எடுக்கவில்லை” என அவன் கதற, அனைவரும் துக்கம் மிகுதியால் தங்கள் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு கதறினர். பின் அனைவரும் யோசேப்பிடம் வந்து தரைமட்டம் தாழ்ந்து பணிந்தனர்.
யோசேப்பு, “நீங்கள் இப்படிச் செய்தது என்ன? குறி பார்ப்பதில் என்னைப் போன்றவர் யாருமில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கோபமாகக் கேட்டார்.
யூதா, “என் தலைவராகிய உம்மிடம் என்ன சொல்லுவோம்? எப்படி எங்கள் நேர்மையைக் காண்பிக்க முடியும். நாங்கள் அனைவரும் உமக்கு அடிமைகள்” என்றார்.
“அது முறையற்ற செயல். பாத்திரம் எவனிடத்தில் இருந்ததோ அவன் மட்டுமே எனக்கு அடிமை, மற்றவர்கள் உங்கள் தந்தையிடம் செல்லுங்கள்” என யோசேப்பு கூறியதைக் கேட்ட யூதா, “என் தலைவரே! ஒருவார்த்தை பேச அனுமதியுங்கள். என் மீது கோபப்பட வேண்டாம். நீர் பார்வோனுக்குச் சமமானவர். நீர் எங்கள் இளைய சகோதரனை நேரில் ௮ழைத்து வரச்சொன்னீர். “அவன் மீது எங்கள் தந்தை அதிக அன்பு வைத்துள்ளார்.
அவனைப் பிரிந்தால், முதிர் வயதிலுள்ள எங்கள் தந்தை இறந்து போவார்' என்று கூறினோம். நீரோ, உங்கள் தம்பியை அழைத்து வராவிட்டால் என் முகத்தில் நீங்கள் விழிப்பதில்லை என்று கூறினீர். எனவே பெஞ்சமீனை அனுப்ப மறுத்த தந்தையிடம், “பென்யமீனை கட்டாயம் பத்திரமாக அழைத்து வருவேன்” என வாக்குறுதி கொடுத்து அழைத்து வந்துள்ளேன். நாங்கள் பென்யமீனை விட்டு விட்டுப் போனால், எங்கள் தந்தை இறந்து விடுவார். ௮தை எப்படி என்னால் பார்க்க முடியும்? ஆகையால் உம்மிடம் மன்றாடுகிறேன். பென்யமீனைத் தன் ௮ண்ணன்மாரோடு போகஅனுமதியுங்கள். பென்யமீனுக்குப் பதிலாக நான் உமக்கு அடிமையாக இருக்கிறேன்” என்று கெஞ்சினான். யோசேப்பு தன் சகோதரர்களின் மனமாற்றத்தை அறிந்து கொண்டார். தன்னை அன்று இரக்கமின்றி விற்றவர்கள் இன்று தன் தம்பியை விட்டுவிட்டுப் போகவில்லை. தன்னையே அடிமையாகத் தர யூதா முன் வருகிறார். தன் தகப்பனாரையும் நேசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டார். இதற்கு மேல் யோசேப்பால் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. தன் பணியாளர் எல்லோரையும் வெளியே போகச் சொன்னார். யோசேப்பு கூக்குரலிட்டு அழுதார். சகோதரர்கள் கண்ணீரோடு திகிலடைந்து நின்று கொண்டிருந்தனர். யோசேப்பு தன் சகோதரர்களைப் பார்த்து, “நான் தான் யோசேப்பு. என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?” எனக் கேட்டார்.
சகோதரர்கள் திகிலடைந்து, பதில் கூறமுடியாத நிலையில் இருந்தனர்.
“என் அருகில் வாருங்கள்” என்றார்.
அவர்கள் அருகில் வந்தவுடன், “நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான். என்னை விற்றது குறித்து நீங்கள் சஞ்சலப்பட வேண்டாம். உயிர்களைக் காப்பாற்றும்படி கடவுள் தான் உங்களுக்கு முன்னே என்னை எகிப்துக்கு அனுப்பினார். அனுப்பியது நீங்கள் அல்ல. கடவுளே என்னை அனுப்பினார்.
இன்னும் 5 ஆண்டுகள் பஞ்சம் இருக்கும். நீங்கள் நம் தந்தையாரிடம் எல்லாவற்றையுஞ் சொல்லி, அவரது குடும்பம் முழுவதையும் இங்கே வரச்சொன்னேன் என்று சொல்லுங்கள். அனைவரும் வாருங்கள்” என்று சொல்லி, தன் தம்பியைக் கட்டியணைத்து அழுதார். பென்யமீனும் தன் அண்ணனைக் கட்டிப்பிடித்து அழுதான். பின் சகோதரர் யாவரையும் கட்டியணைத்து அழுதார். அவர்களும் யோசேப்பைக் கட்டிப்பிடித்து அழுதனர். பிரிந்த உள்ளங்கள் ஒன்றிணைந்தன.
யோசேப்பின் சகோதரர்கள் வந்த விஷயம் பார்வோனுக்கு எட்டியது. பார்வோனும், அவன் வீட்டாரும், அலுவலர்களும் அகமகிழ்ந்தனர். பார்வோன் யோசேப்பிடம், “நீர் உம்முடைய தகப்பனாரையும், உம்முடைய சகோதரர்களையும் அழைத்து வர எகிப்து நாட்டிலிருந்து வண்டிகளைக் கொண்டு போகட்டும். எகிப்து நாட்டின் சிறந்த இடத்தில் அவர்களை குடியேற்றுவிப்பீராக” எனக் கூறினார்.
பார்வோன் கட்டளைப்படி யோசேப்பு தங்கள் சகோதரருக்கு வண்டிகளையும், வழிப்பயணத்திற்குத் தேவையான உணவுப்பண்டங்களையும், ௮னைவருக்கும் புத்தாடைகளையும், பென்யமீனுக்கு 30௦ வெள்ளிக்காசும், 5 புத்தாடைகளும் கொடுத்தார். எகிப்தின் சிறந்த பொருட்களையும், உணவு வகைகளையும் கொடுத்து அனுப்பினார். களிப்போடு கானான் நாட்டிற்கு வந்த யோசேப்பின் சகோதரர்கள் தங்கள் தகப்பனாரிடம் “யோசேப்பு உயிரோடு இருக்கிறார். அவரே எகிப்து நாட்டின் ஆளுநர்” என்று கூறினர். யாக்கோபு அதிர்ச்சியடைந்தார். பின் ௮வர்கள் கூறிய அனைத்தையும் கேட்டு, வண்டிகளையும், மற்ற பொருட்களையும் பார்த்ததும், புத்துயிர் பெற்றார். “என் மகன் யோசேப்பு உயிரோடு இருக்கிறானா? எனக்கு அது போதும். நான் இறக்கும் முன் அவனைப் போய்ப் பார்ப்பேன்” என மகிழ்ச்சியோடு கூறினார்.
யாக்கோபு கடவுளை நோக்கிப் பிரார்த்தனை பண்ணி விசாரித்தார். கடவுள் யாக்கோபை எகிப்துக்குச் செல்லும்படி கூறினார். தன் பிள்ளைகளையும் அவர்கள் குடும்பங்களையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குப்போனார். யாக்கோபு கோசேனுக்கு வரவும், யோசேப்பு தன் தேரைப் பூட்டிக் கொண்டு கோசேனுக்குப் போனார். தந்தையைக் கண்டதும், தேரை விட்டு இறங்கி ஓடி, தந்தையைக் கட்டிக் கொண்டு, வெகுநேரம் அழுதார். ௮வர் தம் தந்தையும், “உன் முகத்தைப் பார்த்தேனே. எனக்கு அது போதும். இனி எனக்கு மரணம் வந்தாலும் வரட்டும்” என்று கூறி தன் மகனைக் கட்டித்தழுவி மகிழ்ந்தார். பார்வோன் கட்டளைப்படி எகிப்தின் வளமான இடத்திலே யாக்கோபு குடும்பம் குடியேறியது. 110 வயது வரை யோசேப்பு வாழ்ந்தார்.
யோசேப்பு கடவுளுக்கு பயந்தவராக, நீதி நேர்மையுள்ளவராக இருந்ததால்தான் ஒரு நாட்டின் அதிபதியாக உயர்த்தப்பட்டார். யோசேப்பு 12 ஆண்டுகள் செல்லப்பிள்ளையாக வாழ்ந்தாலும் 13 ஆண்டுகள் அடிமையாகவும், சிறையிலும் தன் வாழ்நாளைக் கழிக்க வேண்டிய நிலை வந்தது. அந்தப் பாடுகள் தான் அவரை நற்குணசாலியாக வனைந்தது. தனக்கு தீமை செய்த சகோதரரை, தன் எஜமானின் மனைவியை மன்னிக்க வைத்தது. 80 வருடம் அதிபதியாய் ஆனந்தமாய் அனைவருக்கும் ஆசீர்வாதமாய் வாழ வைத்தது. அவர் வணங்கிய கடவுள்தான் வானத்தையும், பூமியையும், அனைத்து உயிர்களையும் படைத்த சர்வேசுவரன். அவர் மனிதர்கள் பாவம் செய்த போது, அவரே மனிதனாக இவ்வுலகில் பிறந்து, எப்படி வாழவேண்டும் என்பதை போதித்து, மனிதர்களின் பாவங்களுகாக தன்னையே பாவம் போக்கும் பலியாக சிலுவையிலே ௮றையப்பட ஒப்புக் கொடுத்தவர். அவர் மரித்தாலும், கடவுளாக இருப்பதால் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து, அநேகருக்கு தரிசனமானார். ௮வர் தான் இயேசு கிறிஸ்து.
இந்தக் கதை வெற்றித் திருமகன் என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.