அந்நிய பாஷை - ஒரு மிஷனெரி அடையாளம்

முன்னுரை

அந்நியபாஷை என்றாலே கிறிஸ்தவர்கள் பலர் அதிர்ச்சியடைகிறார்கள். ஆனால் ஆச்சரிப்படவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. அந்நியபாஷை ஒரு மிஷniரியின் அடையாளமாக வேதம் மிக அழகாக அதிகாரப்பூர்வமாக ஆதாரங்களுடன் நமக்கு விளக்கமளிக்கிறது. அந்நியபாஷை நம்மை குழப்புவதைவிட அந்நியபாஷை என்ற பெயரில் அதையே பரிசுத்த ஆவியின் நிரப்புதலின் அடையாளமாக போதிக்கும் போதகர்கள் மற்றும் அவர்களின் சபையார்கள் மூலம்தான் அதிக குழப்பம் அடைகிறோம். ஆரோக்கியமான குழப்பம் தெளிவையும் ஆரோக்கியமான விசுவாசத்தையும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு நேராகவும் அத்துடன் ஆவியின் கனியின் நிறைவுக்கு நேராகவும் வழி நடத்தும்.

மக்கள் தங்களை வெள்ளத்திலிருந்து காத்துக்கொள்ள பாபேல் கோபுரத்தை கட்டினார்கள், அப்பொழுது கடவுள் மக்களின் பாஷைகளை தாருமாறாக்கி, ஒருவர் பேசுவதை மற்றவர்கள் புரியாதபடியாக்கினார். அதே ஆண்டவர் பெந்தேகோஸ்தே நாளான்று பாஷை வரத்தைக் கொடுத்து ஒருவர் பிறர் பேசுவதை புரிந்துக்கொள்ளவும், நமக்கு புரியாத பாஷையில் மற்றவர்கள் புரிந்துக்கொள்ளும்படி பேசவும் இப்பாஷை வரத்தை தேவன் கொடுத்தார்.

அந்நியபாஷை

அந்நியபாஷை என்றால் நாம் அறியாத மொழி. வரங்களில் மொழி வரமும் ஒன்று. பிறரோடு நாம் தொடர்பு கொள்ளும் சாதனங்களில் ஒன்று தான் மொழி. இது வார்த்தை மொழியை மட்டும் குறிப்பதல்ல. பார்த்தல், கேட்டல், தொடுதல், அமைதிகாத்தல், புன்முறுவல் செய்தல், கை மற்றும் தலை அசைத்தல் போன்றவற்றின் மூலமாகவும் பிறரோடு தொடர்பு கொள்கிறோம். எல்லோருக்கும் தாய்மொழி ஒன்று உண்டு. தாய் மொழியைத்தவிர மற்ற அனைத்து மொழிகளுமே நமக்கு அந்நிய மொழிதான்.

அந்நியர் புரியும் பாஷை

எல்லா மொழிகளுக்குமே பொருள் உண்டு. பொருள் இல்லாமல் மொழி இல்லை. குழந்தைகள் பேசும் அறை குறை வார்த்தைகளும் உடல் அசைவுகளுக்கும்கூட பொருள் உண்டு. அந்நியபாஷை என்ற வரம் முதலாவது பெந்தேகோஸ்தே நாளன்று மனதர்களுக்கு கொடுக்கப்பட்டபோது அதை பேசினவர்களுக்கு புரியவில்லை ஆனால் அங்கு கூடியிருந்த ஏறக்குறைய 13 மொழியினர் தங்கள் தங்கள் தாய் மொழியில் அப்பாஷைகளை தெரியாதோர் பேசக்கேட்டார்கள். அதைப்புரிந்து கொண்டு தேவனுடைய மகத்துவத்தை பேசுகிறார்கள் என சாட்சி கூறினர். அவர்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் திருச்சபையில் அனறையதினமே சேர்க்கப்பட்டார்கள். அந்நியர்களுக்கு புரியும் பாஷைதான் அந்நியபாஷை. இன்று அந்நியபாஷை என்ற பெயரில் பேசப்படும் மொழியை பிறர் புரிந்து கொண்டனர் அது தன் மிஷனெரிப்பணியை செய்தது என எங்கும் கேட்கவோ பாhப்பதோ அரிதாயிருக்கிறது. யாருக்கும் புரியாத பாஷை அல்ல அந்நியபாஷை. அந்நியருக்கு புரியவேண்டிய பாஷைதான் அந்நியபாஷை.

அந்நியருக்கு பிரயோஜனமான பாஷை

புரிந்துகொள்கிற மொழியெல்லாம் பயனுள்ளது என கூறிவிடமுடியாது. ஆனால் கடவுளின் வரமான அந்நியபாஷை அந்நியருக்கு புரிவதுடன் நின்றுவிடுவதில்லை. அதற்கும் மேலாக புரிந்ததை தங்கள் வாழ்வில் பயன்படுத்திக்கொள்ளும் ஞானத்தையும் கொடுப்பதே கடவுள் அருளும் அந்நியபாஷை. நாம் மட்டும் புரிந்துகொண்டு பிரயோஜனமடையும் மொழியை பேசுவது சுயநலமாகும். ஆனால் கடவுளின் வரங்கள் அனைத்தும் சபையாரின் அல்லது பொது பிரயோஜனத்திற்கென்று பவுல் கூறுகிறார். 1 கொரி. 12: இவ்வசனம் தமிழில் தனி பிரயோஜனத்திற்கென்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் அநேகர் அந்நியபாஷை நம் சுய பிரயோஜனத்திற்கென்று பொருள் கொள்கின்றனர். கடவுள் அருளும் வரங்கள் அனைத்தும் அவருடைய ஊழியத்திற்கென்று பயன்படுபவைகளேயாகும்.

அந்நியபாஷை சபையை ஸ்தாபிக்கிறது

பெந்தேகோஸ்தே அன்று அந்நியபாஷையின் பொருளைக்கேட்டு அதற்கு சாதகமான இனக்கத்தை கொடுத்ததின் விளைவாக புதியஏற்பாட்டு திருச்சபை 3000 பேரிலிருந்து ஸ்தாபிக்கப்பட்டது. இன்று அந்நியபாஷை பேசுகிறவர்களால் பல்வேறு சபைகள் துவங்கப்படுகிறது ஆனால் மக்களின் தெளிவினாலோ மனமாற்றத்தினாலோ ஸ்தாபிக்கப்படுகிறதா என்ற கேள்வி கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? ஒரு சபையிலிருந்து கொள்கை அடிப்படையில் பிரிந்து பிரச்சனைகளை வளர்க்கும் விதமாகத்தானே இன்று அநேக புற்றீசல் சபைகள் தோன்றுகின்றன!

பல்வேறு மிஷனரிகள் பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்து அந்நியபாஷைகளான நம்நாட்டு பாஷைகளை தேவனுடைய கிருபை வரத்தால் கற்று மக்கள் புரியும்படி பேசி அதன் விளைவால் அநேகர் பயன்பெற்று மனந்திரும்பியதின் விளைவாக இன்று நம்நாட்டில் என்னற்ற சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. நம் நாட்டினரும் கூட தென் இந்தியாவிலிருந்து வட இந்தியாவிற்கு சென்ற மிஷனரிகள் அந்நியபாஷைகளின் வரங்களின் நிறைவால் இன்று பல ஆயிரம் இந்திய சபைகளை ஸ்தாபித்திருக்கின்றனர். மக்களின் மனங்களை விழிப்படையச்செய்யும் உணர்வடையச்செய்யும் மனந்திரும்பச்செய்யும் அந்நியபாஷைகளை அந்நியர்களாக அல்ல அவர்களில் ஒருவராக பேசியதின் விளைவால் சபைகள் நம் தேசமெங்கும் இன்றும் ஸ்தாபிக்கப்படுகின்றன.

அந்நியபாஷை சபையை ஸ்திரப்படுத்துகிறது

அந்நியபாஷை சபையை ஸ்தாபிப்பதோடு நின்றுவிடாமல் அச்சபை கிறிஸ்துவுக்குள் கனிகொடுக்கும் சபையாக செயல்வீர சபையாக ஒருநாளும் எப்பேற்பட்ட எதிர்ப்பை சந்தித்தாலும் தன் ஸ்திரத்தன்மையை விட்டுக்கொடுக்ககாமல் என்றும் நிலைத்திருக்க அந்நியபாஷை வரம் உதவுகிறது. வில்லியம் கேரி அந்நியபாஷைகளான 40 இந்திய பாஷைகளை கடவுளின் அருளால் கற்று வேதாகமத்தை மொழிபெயர்த்தார். சீகன் பால்க் நம் தமிழ்மொழி கற்று வேதத்தை நம்மொழியில் மொழி பெயர்த்ததால்தான் இன்று தமிழ் கிறிஸ்தவ திருச்சபை ஸ்திரப்பட்டு அநேக திருச்சபைகளை நம் பாரத தேசமெங்கும் ஸ்தாபித்துக்கொண்டிருக்கிறது. அந்நியபாஷையாகிய ஆங்கிலபாஷை நமக்கு கிடைக்கப்பெற்றதால் நமது வேதத்தை அதிகமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்ள உதவுகிறது. அதன் விளைவாகத்தான்  தியோடர் வில்லியம்ஸ் சாம்கமலேசன் சு. ஸ்டான்லி போன்றோர் பல்வேறு நாடுகளுக்கு சென்று ஆங்கில அந்நியபாஷையில் வேதத்தின் மகத்துவத்தை  விளக்கி கொடுத்து  நம் பாஷைக்கு புகழ் சேர்க்கின்றனர் எவ்விதவேறுபாடின்றி சபைகளை ஸ்திரப்படுத்துகின்றனர்.

அந்நியபாஷை கடவுளுக்கு மகிமையை சேர்க்கிறது

கடவுள் அருளும் எவ்வரமும் கடவுளின் புகழ்ச்சிக்காகத்தானேயொழிய நம் பிரஸ்தாபத்திற்காகவோ புகழ்ச்சிக்காகவோ சம்பாத்தியத்திற்காகவோ அல்ல என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு புகழைத்தேடித்தராத எந்த பாஷைவரமும் கடவுள் அருளினவரமாக இருக்கமுடியுமா? அவைகள் கடவுள் பெயரில் உலரும் உலரல்களே என கூற அநேகர் தயங்குவதில்லை. பெந்தேகோஸ்தே அன்று பேசப்பட்ட அந்நியபாஷை கடவுளுக்கு புகழ்ச்சியாக இருந்தது. அதைக்கேட்;ட ஒரு பிரிவினர் கேலி செய்தாலும் பெரும் திறள் கூட்டம் கடவுளுக்கு மகிமையை தங்கள் மனந்திரும்புதலினால் வெளிப்படுத்தினார்கள். கடவுள் அவர்களால் பெருமளவில் புகழப்பட்டார். குறிப்பாக கிறிஸ்துவை அறியாதோர் மத்தியில் கடவுள் நாமம் அவர்கள் வாழ்வின் வழியிலும் வார்த்தை மொழியாலும் மகிமைப்பட்டார். சிலர் மூலம் கடவுள் மகிமைப்படும் போது வரம்பெற்றவர்கள் தங்களை ஆவிக்குறிய மகாவீரர்களாயும் வரங்களின் சொந்தக்காரர்களாகவும் குத்தகைக்காரர்களாகவும் கருதி மக்களிடம் அப்படிப்பட்ட மாயையான பிம்பத்தை ஏற்படுத்தி தங்களுக்கு மகிமையை சேர்த்துக் கொள்வதை நாம் காண்கிறோம் அல்லவா?

இவர்களில் அநேகர் அந்நியபாஷையை ஆவியின் நிறைவுக்கு ஒரே ஆதாரமாகக் கொள்பவர்கள். இவர்கள் மூலம் கடவுள் மகிமைப்படுகிறாரா அல்லது இகழப்படுகிறாரா என்பதை நாம் நிதானமாக தீர்மானிக்க வேண்டும். பவுல் தான் எல்லாரையும் காட்டிலும் அதிக பாஷைகளை பேசுவதாக சொல்லும் போது அது தற்ப்பெருமையாக அல்லாமல் அதை எவ்வாராக ஊழியத்தில் பயன்படுத்துகிறேன் என்ற நிலையில் சொல்வதை நாம் அறியலாம்.

முடிவுரை

அந்நியபாஷை வரம் ஒரு மிஷனெரி அடையாளம். மிஷனெரியாக அனைத்து விசுவாசிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவ பாஷைகள் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்துவ நிலையில் இடைபடும் பாஷை கடவுளுக்கு மட்டுமே தெரியும். அந்நியபாஷைகளை நம் உள்ளத்திலும் உதட்டிலும் கொடுப்பவர் கடவுளே. அங்ஙனம் நாம் பெறும் பாஷைகள் மிஷனெரிப் பணிக்கான அடையாளம் என்றால் மிகையாகாது. அந்நியபாஷைகளை பேசுவதை தடைசெய்யவேண்டாம் ஆனால் அந்நியபாஷை என்ற பெயரில் எதையாவது பேசி ஏமாறாமலும் பிறரை ஏமாற்றாமலும் இருப்போம். மாறாக அந்நியபாஷையை மிஷனெரிப்பணியின் அடையாளமாக எடுத்து பிறருக்கு புரியும்படி பேசி பிரயோஜமடைந்து அவர்கள் சபையாக ஸ்தாபிக்கப்பட்டு ஸ்திரப்பட்டு கடவுளுக்கு மகிமையை கொண்டு சேர்ப்போம். கடவுளைக் பிரியப்படுத்துவோம். இந்தியாவில் பல ஆயிரம் மொழிகள் உண்டு. இம்மக்கள் இன்னும் இயேசுவின் நற்செய்தியை அவர்கள் மொழியில் கேட்கவில்லை. அவர்கள் மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப்டாத நிலையே இன்றும் உள்ளது. மிஷனெரி அடையாளமாகிய அந்நியபாஷையை நாம் வாஞ்சித்து மஷனெரி பணிசெய்வோம். அந்நியபாஷை வரம் இருந்தால் மிஷனெரியாகப் போவோம்.

Author: Rev. Dr. C. Rajasekaran



Topics: bible study Rev. Dr. C. Rajasekaran Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download