வெள்ளிக்கிழமை விரதம்(உண்மைச் சம்பவம்)

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையின் அரசு மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டில் படுத்திருந்தாள் கிரேஸி. டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. கிரேஸி, தகப்பனை இழந்திருந்ததால் தாயினால் மிகவும் நேசிக்கப்பட்ட கடைசிப் பிள்ளை. மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அவளுக்கு இது சோதனையின் காலம்! வேதனையின் வழியில் நடந்து கொண்டிருந்தாள். தன்னைச் சுற்றி நிற்கும் தன்னுடன் பயிலும் மாணவ, மாணவிகளைப் பார்த்தாள். அனைவர் முகங்களிலும் வருத்தத்தன் ரேகைகள். தன்னை நோக்கும் மாணவிகளின் விழிகள் கண்ணீர்க் குளத்தில் நீங்கும் நீந்தும் கயல்களாகக் (மீன்களாக) காட்சியளித்தன.

அவளுடைய தாய் சோகமே உருவாக அவளருகே அமர்ந்திருந்தார். ஆறுதலாகப் பேசியவர்கள் தைரியம் கூறி நகர்ந்தனர். அவள் நினைவு பின்னோக்கிச் சென்றது. ஒரு நாள் இரவு திடீரென்று மயங்கி விழுந்தாள். ஒரு மணி நேரத்திற்குப் பின், சிகிச்சைக்குப் பிறகு கண் விழித்தாள். என்ன நடந்தது? அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளால் படிக்க முடியவில்லை.

இரண்டு வரிகள் வாசித்த பின் மூன்றாவது வரி வாசிக்க முடியவில்லை. கண்ணின் முன் புகை மண்டலம் போல் பார்வையை மறைக்க ஆரம்பித்தது. திகைத்தாள் மருத்துவக் கல்லூரியில் மூன்றாவது ஆண்டில் ஏறக்குறைய ½ மணி நேர இடைவேளை தவிர தொடர்ச்சியாக 6 மணி நேரம் நிற்க வேண்டிய காலக் கட்டத்தில் இவளால் 1 மணி நேரத்திற்கு மேல் நிற்க இயலவில்லை. வாந்தி ஆரம்பித்தது. உணவு உண்ண இயலவில்லை உடல் பலவீனப்பட ஆரம்பித்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். நன்கு படிக்கும் திறமை மிக்க மாணவி அல்லவா அவள்? அனைவரும் முழு மூச்சுடன் அவளுக்கு சிகிச்சை அளிக்க முனைந்தனர். “செமஸ்டர் எழுத இயலாமல் போய் விடுமோ”? அவள் உள்ளம் கலங்கியது. அவளுடைய புரபஸரும் செமஸ்டரைக் குறித்துக் கவலைப்படாதே! அடுத்த முறை எழுதிக் கொள்ளலாம். நீ நல்ல சுகமாகி வந்தால் போதும்”? என அறுதல் கூறினார். நாட்கள் நகர்ந்தன. எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு, ஸ்கேன் செய்வது அரிதாகவும், செலவு மிக்கதாகவும் இருந்த காலம். இருப்பினும் ஸ்கேன் எடுத்தனர். மருத்துவர்களின் அறிவுக்கு மிஞ்சினதாகவும் இருந்தது அவளுடைய வியாதி! நரம்புத் தண்டிலும் ஊசி மூலம் மருந்து ஏற்றி சோதனை செய்தனர். “கிரேஸி பிழைப்பாள்” என்ற நம்பிக்கை அவர்களை விட்டு நீங்கியது. எனவே அவளை சென்னை மருத்துவக் கல்லூரி நரம்பியல் பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தனர். டீன் சிபாரிசுக் கடிதத்துடன் சென்னை மருத்துவமனையில் அட்மிட் ஆனாள் கிரேஸி. எட்டாவது மாடி ஸ்பெஷல் வார்டில் படுத்திருந்த கிரேஸியின் நிலைமை பரிதாபத்துக்குரியதாயிற்று.

கிரேஸி ஞானம் மிகுந்த பிள்ளை என்பதால் அவளுக்காக அவளுடைய உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் ஜெபத்தில் மன்றாடினர். தன் நிலைமையை உணர்ந்து தனக்காக இயேசுவிடம் மன்றாட வேண்டுமென்பது கூட அறியாத பிள்ளையாக இருந்தாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம் படிப்பு ஒன்று தான்.

மகளின் நிலைமை அன்னையையும், உடன் பிறந்தாரையும் உலுக்கியது. கண்ணீரே என் உணவாயிற்று என்று கூறுவது போல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தாய், தன் ஏனைய பிள்ளைகளோடு ஒரு முடிவுக்கு வந்தார்கள். வெள்ளிக்கிழமை உபவாசித்து மன்றாட ஆரம்பித்தனர். கிரேஸியின் உடன் பிறந்தோர் அனைவரும் திருமணமாகி தனித் தனிக் குடும்பங்களாக வாழ்ந்தாலும் கூட தங்கள் தங்கைக்காக ஒரு மனதோடு குடும்பமாக உபவாசிக்காக ஆரம்பித்தனர். வெள்ளிக்கிழமை விரதம் ஏகமனதோடு. ஏறெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மருத்துவமனையில் மூன்று மாதங்கள் கடத்திய பின் சென்னையில் சிகிச்சைக்கு வந்துள்ள அவள் மீட்புப் பெற வேண்டுமெனில் தேவன் ஒருவரால் தான் அந்த அற்புதத்தைச் செய்ய முடியுமென நம்பினர்.

கிரேஸிக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. மூளையில் பின்பகுதியில் ஒரு கட்டி காணப்பட்டது. அது புற்றுநோய் கட்டியா? அல்லது டி.பி. கட்டியா? அல்லது இரத்த உறைவா? என ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. தனிச் சிறப்பு வாய்ந்த நரம்பு ஊசி போட்டு அவள் உடலெல்லாம் மரத்து விட்டதோ என்று சொல்லுமளவுக்கு அவள் நொறுக்கபட்டாள். அவள் சுகம் பெறுவாள் என்ற நம்பிக்கை மருத்துவர்களை விட்டுப் போய் விட்டது.

இதன் தொடர்ச்சி உதய நேரம்‌! என்ற தலைப்பில் உள்ளது.

இந்த உண்மைச் சம்பவம் விடுதலைப் புறா என்ற புத்தகத்திலிருந்து   Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.



Topics: Bible Articles Tamil Christian Story Viduthalaipuraa - Story Sis. Vanaja Paulraj

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download