பண்டிகைகள் மக்களின் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியையும் புத்தெழுச்சியையும் அளிப்பவை.
பல்வேறு சமயங்களை உள்ளடக்கிய நமது இந்திய தேசத்தில் மக்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு பஞ்சமே இருந்ததில்லை.
இன்று உலகெங்கும் இயேசு பெருமானின் மரித்து உயிரோடு எழும்பிய தினமான ஈஸ்டர் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு நாற்பது நாட்கள் லெந்து( Lent) நாட்கள் எனப்படும் தவக்காலத்தைக் கடைப்பிடிக்கின்றனர். லெந்து என்பதற்கு வசந்தம் என்று பொருள்.
மரஞ்செடிகொடிகள் தங்களது இலைகளை உதிர்த்திவிட்டு , புதிய துளிர்களை விடும் வசந்த காலம் போல் இந்த லெந்து நாட்களில் கிறிஸ்தவ மக்கள் உபவாசம் எனப்படும் நோன்பு, விவிலிய தியானம் , தொடர் வழிபாட்டு முறைகள் மூலம் தங்களில் நற்பண்புகளைப் புதுப்பித்துக் கொள்கின்றனர்.இதனைத் தவக்காலம் அல்லது கஸ்தி நாட்கள் என்றும் கூறுவர்.
இத்தவக்கால கடைசி வாரத்தின் வெள்ளிக் கிழமையை இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்ற தினமாக( புனித வெள்ளி) ஆசரிக்கின்றனர். அதைத்தொடர்ந்து வரும் மூன்றாம் நாளான ஞாயிற்றுக் கிழமையன்று இயேசு தாம் கூறியிருந்தபடியே உயிரோடு எழுகிறார். அந்நாளையே ஈஸ்டர் பண்டிகையாகக் கிறிஸ்தவர்களும் அவர்களது நண்பர்களும் உற்றார் உறவினர்களும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நாளில் அதிகாலை நான்கு மணிக்கு தேவாலயங்களில் இயேசு உயிர்த்த சம்பவத்தை உள்ளடக்கிய போதனைகளோடு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் ஈஸ்டர் பண்டிகை மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரை மாறி மாறி வரும். அதாவது கிறித்தவம் இஸ்ரவேல் நாட்டின் யூதரான இயேசு கிறிஸ்துவால் உருவானது .எனவே அச்சமயம் சார்ந்த பண்டிகைகள், வழிபாட்டு முறைகள் போன்றவை அந்நாட்டின் முந்தைய மரபினைத் தழுவியே தொடக்கக் காலத்திலிருந்து இன்றுவரை அச்சமயம் காலூன்றிய மற்ற நாடுகளின் பண்பாட்டுக் கூறுகளையும் உள்வாங்கி வளர்ந்து வருகிறது. இது உலகின் அனைத்து சமயங்களுக்கும் பொருந்தும்தான். இதன்படி, இஸ்ரவேலர் கொண்டாடும் பாஸ்கா என்னும் வெகு சிறப்பான பண்டிகை நடைபெற்ற வாரத்தில்தான் இயேசு மரித்து அதற்கு அடுத்த வாரத்தின் முதலாம் நாள் (ஞாயிறு) காலையில் உயிர்த்தெழுந்தார்.
இஸ்ரவேலர்கள் எகிப்தியர்களின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி, பாஸ்கா என்னும் பண்டிகையைக் கொண்டாடி,அங்கிருந்து புறப்பட்ட தினம், ஒரு முழு நிலவு நாளாக இருந்தது. இஸ்ரவேலரின் பண்டிகைகள் அனைத்துமே நிலவை மையமாகக் கொண்டதாகவே இருக்கும். இதற்கான காரணம் இஸ்ரவேலர் நிலவை மையமாக கொண்ட ஆண்டைப் (Lunar year) பின்பற்றுவது தான்.அந்த முழு நிலவு ஒரு குறிப்பிட்ட நாளில் தோன்றாமல் மாறி மாறி வருவதால் ஈஸ்டர் ஞாயிறும் ஆண்டுதோறும் ஒரே நாளில் வருவதில்லை.
ஈஸ்டரோடு நெருங்கிய தொடர்புடையது முட்டைகள். பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.சிவப்பு நிறம் இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது. முட்டையின் கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது. கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான மறுபிறப்பு மற்றும் கிறிஸ்துவுக்குள் புதிய வாழ்வு ஆகிய நம்பிக்கைகளின் குறியீடாகவும் முட்டை கருதப்படுகிறது.
வண்ணம் ஏற்றப்பட்ட முட்டைகளைப் பறிமாறிக் கொள்வதும் வீடுகளில் குறிப்பாக குழந்தைகள் ஒழித்து வைக்கப்பட்ட முட்டைகளைத் தேடி எடுத்து மகிழவதும் ஈஸ்டரின் ஒரு மகிழ்ச்சியான சிறப்பு பகுதி. மேற்கத்திய நாடுகளில் இம்முறை அதிகளவில் இருந்து வருகிறது. இந்தியாவிலும் ஆங்காங்கே இப்பழக்கம் இப்போது மெல்ல பரவி வருகிறது. அத்தோடு ஈஸ்டரை முன்னிட்டு முட்டைவடிவ சாக்லேட்டுகள் இனிப்புக் கடைகளில் விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளன.
இந்நன்னாளில் மரணத் தருவாயிலும் அன்பையும் தாழ்மையையும் போதித்து மீண்டும் உயிரோடு எழுந்த இயேசுவின் தன்மைகளையும் சகோதரத்துவத்தையும் ஒவ்வொரு தனிமனிதனும் கைக்கொண்டால் உலகம் சமாதான பூப்பந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
Author: Dr. Jansi Paulraj