ஆம் கிரேஸி வாழ்வில் உதய நேரம். திருமதி. தாமஸ் என்ற சகோதரி சென்னைக்கு வந்து மருத்துவமனையிலிருந்த கிரேஸியைப் பார்த்தார். ஆண்டவரின் அற்புதங்களை எடுத்துக் கூறினார்கள். தேவன் சர்வ வல்லமையுடையவர் என்பதையும், அவரிடம் கேட்கும் போது, நம்பிக்கையோடு கேட்கும் போது பெற்றுக் கொள்வோம் என்பதையும் விளக்கமாகக் கூறினார். கிரேஸி நம்பினாள். கடலில் தத்தளிக்கும் கலத்திற்கு (படகிற்கு) கலங்கரை விளக்கம் தென்பட்டது. ஜெபிக்க ஆரம்பித்தாள். வாய்பாடு போன்ற ஜெபம் அல்ல! உணவருந்தும் முன், படுக்கையில் இருந்து எழுந்தவுடன், படுக்கப்போகும் முன் ஜெபிக்கும்படி பெற்றோர் கற்றுக் கொடுத்திருக்கும் சிறுபிள்ளையின் ஜெபத்தை மட்டுமே கடமையே என்று சொல்லி வந்த அவள் வாழ்வில் ஜெபத்தை முழுமையாக உணர ஆரம்பித்தாள். தன் பரம தகப்பனோடு உரையாடுவதே ஜெபம் என்பதை அறிந்தாள். ஜெபிக்க ஆரம்பித்தாள். தன் அறியாமையை அறிக்கையிட்டாள். தன் ஏக்கங்களை எடுத்துரைத்தாள். தன் பெலவீனத்தை பரமன் பாதத்தில் படைத்தாள். செவிமெடுத்த தேவன் சும்மா இருப்பாரா?
அவள் வாழ்வில் அற்புதம்; அவள் உறுப்புகள் பெலன் பெறுவது போல் ஒரு உணர்வு வாந்தி நின்றது பசியெடுக்க ஆரம்பித்தது. சாப்பிட முடியாமல் இருந்தவள் சாப்பிட ஆரம்பித்தாள். மருத்துவர்கள் மகிழ்ந்தனர். சற்று தேறி வரும் கிரேஸிக்கு இனி அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றிவிடலாம் என முடிவு செய்தனர்.
அறுவை திகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்தன. அறுவை சிகிச்சை செய்யும்முன் கட்டி இருக்குமிடத்தை தெளிவுப்படுத்திட திரும்பவும் ஸ்கேன் எடுத்தனர். மூளையிலிருந்த கட்டி எங்கு சென்றதோ? தெரியவில்லை. கட்டியைக் காணோம். மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. மீண்டும், மீண்டும் இருமுறைகள் ஸ்கேன் எடுத்தனர். கட்டியைக் காணவே காணோம். ஆச்சரியம்! அதிசயம்! ஆனால் உண்மை!
எப்படி நடந்தது?
“பை கார்ட்ஸ் கிரேஸ்! (கடவுளின் கருணை) நீ சுகமானாய்! இது தான் அவரால் சொல்ல முடிந்தது.
தன் மீது கடவுள் கருணை பொழிந்தருளவியதை எண்ணி பூரித்தாள். தான் எழுதாத செமஸ்டரையும் சேர்த்து எழுதினாள். தேவன் அவள் மூளையை தொட்டதின் விளைவால், முன்னிருந்ததை விட சிறந்த ஞானம் பெற்றாள். கல்லூரியில் முதல் மாணவியாகத் திகழ்ந்தாள். காலச் சக்கரம் சுழன்றது. இன்று அரசினர் மருத்துவமனையில் சிறப்புப்பயிற்சி பெற்ற தலைமை மருத்துவராகத் திகழ்கின்றார்கள்! “இதோ, மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர், என்னாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் உண்டோ? என்று நம்மைப் பார்த்துக் கேட்கும் தேவனுடைய வாக்கு மதுப்பற்றுப் போகுமோ?
வாழ்வே முடிந்துவிடப் போகிறது என்ற நிலையில் இருந்த வாலிபப் பிள்ளையின் வாழ்வு துளிர்த்தது எப்படி? கடவுளாகிய இயேசு கிறிஸ்துவை அவள் நம்பினாள். அவள் குடும்பத்தார் விரதம் இருந்தார்கள்... அவளை நேசித்தவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். கடவுள் அருள் புரிந்தார்.
எனக்கன்பனவர்களே! ஒரு வேளை நீங்கள் மட்டுமே இயேசு கிறிஸ்துவைக் கடவுள் என்று நம்பலாம். உங்கள் நம்பிக்கை உங்களை வாழவைக்கும். இயேசு தெய்வத்திடம் கேளுங்கள்... அவர் உங்களுக்கு புது வாழ்வு கொடுப்பார்.
இந்த உண்மைச் சம்பவம் விடுதலைப் புறா என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.