மனிதகுல சமத்துவத்தில் கிறிஸ்தவம்..!

ஏழை ,பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஆள்பவன்,அடிமை, ஆண்,பெண் என்ற பேதமைகள் பாராத மார்க்கமாக கிறித்தவம் திகழ வேண்டும் என்றே ஆதி கிறித்தவ சமய வழிகாட்டிகள் எழுதியும் உபதேசித்தும் போனார்கள். கிறித்தவத்தை உலகிற்கு வழங்கிய இயேசுகிறிஸ்துவோ தம் வாழ்வில் அவற்றைக் கடைப் பிடித்து தம் சீடர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்தும் காட்டினார். 

இயேசு ,சமூகத்தில் புறக்கணக்கப்பட்ட மக்களைத் தேடிச் சென்று தம் அன்பை வெளிப்படுத்தினார். ஏற்றத்தாழ்வற்ற உலக வாழ்வை வலியுறுத்தினார். அவரை பின்பற்றும்  ஒவ்வொருவரும் அவரது போதனைகளை அறிந்து அதன்படி நடக்க முயன்றால் மட்டுமே கிறித்தவத்தின் வளர்ச்சி தடையற்ற ஒன்றாக இருக்க முடியும்.

நூற்றிருபது வருடங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் சமயப்பணி செய்த தாமஸ் உவாக்கர் என்ற இங்கிலாந்து மிஷனெரி தனது தாய்நாட்டிற்கு எழுதிய கடிதம் ஒன்றில், இங்கு ஆயிரக்கணக்கில் மனம் மாறி கிறித்தவத்தில் இணைகிறார்கள் என்று கேள்விப்படுவதால் மனம் மகிழாதீர்கள், அவர்களெல்லோரும் பெயரளவில் தான் கிறித்தவர்கள், உண்மையான கிறித்தவத்திற்கும் அவர்களது வாழ்கைக்கும் தொடர்பில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்( Amycormicheal, *Walker of Tinnevely) என்று . ஆம் அவரது ஆழ்ந்த பார்வையின் தாக்கம் எத்தனை உண்மை..! இன்றும் அதே நிலையை நாமும் அவரது கண்கொண்டு பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

சாதிப்பாகுபாடு, பிற சமயத்தின்பால்  காட்புணர்ச்சி, சபைப் பிரிவினைகள், சமய சகிப்புத்தன்மை இல்லாத நிலை, ஒரே கருத்தை வெவ்வேறு சொல்லாடல்களைப் பயன்படுத்தி தங்களையே உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்ள எடுக்கும் நகைப்பிற்குரிய காரியங்கள்... என்பன போன்ற மன முதிர்ச்சியற்ற தன்மையே கிறித்தவத்தின் சித்தாந்தங்களை, பொதுமக்கள் உணர்ந்து கொள்ள  பெரும் முட்டுக்கட்டையாக இருப்பதை அறியலாம். அவற்றை ஒழிக்கும் போதனைகளும் செயல்பாடுகளுமே இன்றைய கிறித்தவர்கள் பெரும்பாலானோர் பெற வேண்டிய விழிப்புணர்வு நிலை.  

இஸ்ரவேல் தேசத்தில் சமாரியர்களோடு யூதர்கள் சம்பந்தம் கலப்பதில்லை. நம்மூர் சாதிப் படிநிலை போன்றதொரு நிலை தான் அதுவும். ஆனால் இயேசுவோ அந்நிலையை தகர்த்து சமாரிய இனத்துப் பெண்ணிடம் பேசுகிறார். அவளிடம் தனது தாகத்திற்காக தண்ணீர் கேட்கிறார். அந்தப் பெண்ணோ, தான் சமாரியப் பெண் ,நீரோ யூதரல்லவா என்ற தயங்குகிறாள்(யோவான்_4:9). இதை நேரடியாக பார்த்த அவரது சீடர்கள் வியந்தாலும் அவரது சமத்துவ சிந்தனைகளை உள்வாங்கி பிற்காலங்களில் தங்களது வாழ்வில்  பிரதிபலிப்பதை பார்க்க முடிகிறது. அவர்களது அத்தகைய முன்மாதிரியான வாழ்க்கை முறைகளே வெகுசன மக்களின் கிறித்தவப்பரவலுக்கும் மூலக் காரணமாக இருந்தது.

இன்றைய திருச்சபைகள்  இயேசுவின் இத்தகைய சமத்துவப் பார்வையைக் கொண்டிருந்தால் சமூகத்தில் இத்தனை ஏற்றத் தாழ்வுகளை காண முடியாது என்பது மறுக்க இயலாத உண்மை. அனைவரையும் சரிசமமாக பார்க்கும் உயர்ந்த மனப்பான்மையை, அனைவருமே இயேசுகிறிஸ்துவிடமிருந்து கற்க வேண்டியது அவசியம்.

விபச்சாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப் பட்ட பெண்ணை உங்களில் குற்றமில்லாதவன் முதலில் இவள் மீது கல்லெறியுங்கள் என்று கூறி அவர்களை சிந்திக்க வைத்தார். விபச்சாரத்தில் பிடிக்கப்பட்டாள் என்றால் அவளோடு விபச்சாரம் செய்த ஆண் அல்லது ஆண்கள் எங்கே? அவனும் விபச்சாரகாரன் தானே? இதை தான் இயேசு அன்று உணர்த்தியது...!

இன்றும்  ஒழுக்கத்தில் தவறும் பெண்ணைப் பாவியாக பார்க்கும் சமூகம் ஆணை, கண்டு கொள்வதில்லை..! ஒழுக்கநெறி என்பது மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் உரியது என்ற உணர்வை முதலில் ஒவ்வொரு குடும்ப சூழலிலும் அமல்படுத்தி வாழ்க்கையை இளைய தலைமுறையினருக்கு கற்பிக்க வேண்டியது அவசியம். சமத்துவ சிந்தையை வளர்க்கும் நோக்கத்தை ஒவ்வொருவரும் முயன்றால் முடியாமல் போகாது, எதுவும் சாத்தியம் தான் உலகில்...! 

கிறித்தவத்தின் அடிப்படை கொள்கைகளை வாழ்வியல் முறைகளில் வெளிப்படுத்தினால் உலகம் முழுமையும் மௌனமான சிறந்த மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 

சமத்துவம் வற்புறுத்தலால் அல்ல ...தானாகவே தலைதூக்கும்...!

Author: Dr. Jansi Paulraj



Topics: Bible Articles

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download