கிறிஸ்தவ ஆசீர்வாதம்
கிறிஸ்தவ ஆசீர்வாதம் பிறர் கற்றுக் கொடுத்தல்ல. நான் கற்றுக் கொள்வதும் அல்ல, நான் பெற்றுக்கொண்டது பிரயாசப்பட்டதனால் அல்ல தேவன் எனக்குள் தந்த பரிசு இது. நான் கண் வைத்து குறி வைத்து பெற்றதல்ல அவர் கண் வைத்து என்னை தெரிந்து கொண்டதின் அனுபவம் இந்த ஆசீர்வாதம். எனது இஷ்ட விருப்பங்களல்ல, கடவுளது இஷ்ட விருப்பம். நான் கஷ்டப்பட்டு சேர்த்தது அல்ல கடவுள் கஷ்டப்பட்டதினால் எனக்குக் கிடைத்த விசேஷம். எனக்குள் தேக்கி வைக்கும் ஒன்றல்ல ஊரெல்லம் பகிர்ந்து கொடுக்கும் ஒன்று. இது சேர்த்து வைப்பதல்ல, செலவழிக்க வேண்டிய ஒன்று பிறறோடு ஒத்துப்பார்ப்பதற்கல்ல. பிறரோடு சேர்ந்து வாழும் பாக்கியத்தை தருவது கிறிஸ்தவ ஆசீர்வாதம். வித்தியாசங்கள் அளவுகோல் அல்ல மனிதர்களால் கிடைத்தல்ல. கடவுளால் கூடிய ஒன்று கிறிஸ்தவ ஆசீர்வாதம் தத்துவங்களின் அடிப்படையில் வந்தது அல்ல. இது ஒரு நபர் மூலம் கிடைத்தது. அந்த நபரே இயேசுகிறிஸ்து, இயேசுகிறிஸ்துவே எனக்கு ஆசீர்வாதம்.
பரிசுத்த வாழ்வுக்கு தெரிந்துக் கொள்ளப்படுதல்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம், அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீவாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். எபேசியர் 1:3.
தமக்கு முன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மை தெரிந்து கொண்டபடியே எபேசியர் 1 : 4.
கிறிஸ்து இயேசுவோடு ஐக்யம் கொண்டு வாழும் வாழ்வே ஆசீர்வாதம். தேவன் நம்மை பரலோக ஆசீர்வாதங்களினாலே ஆசீர்வதிக்கிறார். ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை ஆவிக்குரியவர்களே அவர் நமக்கு தந்த ஆவியின்படி உணர்ந்து கொள்ள வேண்டும். இது தேடி சென்று கண்டு கொள்ளும் ஆசீர்வாதம் அல்ல. மேலிருந்து எனக்குள் வந்து தங்கியிருக்கும் ஆசீர்வாதம். ஆவியின் கூறுகளான எனது எண்ணம் உணர்வு சித்திக்கும் சித்தத்துக்குள் கலந்து விட்டதே ஆசீர்வாதம், கண்ணால் வெளியில் பார்த்து உணர்கின்றதல்ல. என் உள்ளான மனிதனில் தேவ ஐக்யத்தை பெற்றுக் கொண்டதன் விளைவு அவர் எனக்குள் இருப்பதே ஆசீர்வாதம். உலகத்தோற்றத்துக்கு முன்னே என்னை அவர் தெரிந்து கொண்டார் என்ற உன்னத அனுபவத்தை உணர்வதே ஆசீர்வாதம். அவர் என்னை தெரிந்து கொண்டார். ஆசீர்வாதத்து ஊற்றுக் கண் அவரே. அவரே துவக்கம் அவரது செயலாற்றும் முன் குறித்த அனுபவ பகுதியை எனக்குள் உணர்ந்து என் பொறுப்பையும் உணர்ந்து கொள்கிறேன். பிந்தி அவரில் அன்பு கூர்ந்திருக்கிறேன். தெரிந்து கொண்ட இந்த பரிசுத்தருக்கு முன்பு என்னை பரிசுத்தமாக்கும்படி அப்படி செய்தாரென அறிக்கையிடுகிறேன். நான் கர்த்தர் நான் பரிசுத்தர் ஆகையால் நீங்கள் உங்கள் நடக்கையில் எல்லாவற்றிலும் பரிசுத்மாயிருங்களென வசனத்தை அனுப்பி என்னை பரிசுத்தத்துக்கு அழைத்திருக்கிறார். எண்ணத்திலும் உணர்விலும் சிந்திப்பிலும் ஆண்டு கொண்ட அவருக்கே பரிசுத்தமாக என்னை படைக்கிறேன். இந்த அனுபவமே ஆசீவாதம். எத்தனையோ பேருக்கு இல்லாத சிலாக்கியம் எனக்குள் நான் பெற்றிருக்கிறேன் நான் வித்தியாசமானவன். இதுவே தேவ ஆசீர்வாதம். அப்படி என்னை தெரிந்து கொணடு அழகுபடுத்தும் அவர் முன் கரை திறை அற்றவராக என்னை காண்பிக்கவே அவர் அப்படி செய்திருக்கிறார். தெரிந்து கொள்ளப்பட்டவன், அறிந்து கொண்டேன் ஆண்டவரை, பரிசுத்தமானேன், என்னை காத்துக் கொள்கிறேன். இந்த அனுபவமே கிறிஸ்தவ ஆசீர்வாதம்.
அவரது தீர்மானத்தின் படி அவரது பிள்ளைகளானோம்
தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திராகும்படி முன் குறித்திருக்கிறார். எபேசியர் 1:5
கடவுளது அன்பினாலே இயேசுகிறிஸ்துவுக்குள்ளாக அவரின் பிள்ளைகளானதே ஆசீர்வாதம். பாவத்தில், சாபத்தில் சிக்கித்தவித்த நம்மை அவரது விலையேறப் பெற்ற அன்பின் இரத்தத்தினால் மீட்டெடுத்ததே ஆசீர்வாதம். அவரது பிள்ளைகளாகும்படி அதிகாரமும் என்னை பிரிக்க முடியாதென்ற நிச்சயமுள்ளவர்களே ஆசீர்வாதம் பெற்றவர்கள். இந்த செயல் முந்தி என்மேல் அவரது நோக்கமாயிருந்தது என அறிக்கையிட வேண்டும். இதுவே அவருக்கு பிரியமாயிருந்தது இது விலையேறப் பெற்ற கிருபையை இயேசுகிறிஸ்துவுக்குள் பெற்றதே ஆசீர்வாதம். இது தகுதியில்லாத எனக்கு கிடைத்த தகுதி. மகா பெரிய மகிமை சுதந்திரபாக்கியத்தை அவருக்குள் பெற்று வாழும் வாய்ப்பைப் பெற்றதே ஆசீர்வாதம். என்னுள்ளம் தேவன்பால் பொங்கி வழியுதே இயேசு என்னை இரட்சித்தார் நான் ஆடிப்பாடுவேன் என அனுபவம் கொள்வதே தேவ ஆசீர்வாதம். உன்னத ஆசீர்வாதம், உன்னத பெலன் உன்னத பரிசு. இது உன்னதத்திலிருந்து உண்டான ஒன்று. இந்த இயேசு கிறிஸ்து ஜீவபலியாய் தன்னையே கொடுத்ததினால் எனக்குக் கிடைத்த இந்த விடுதலையே ஆசீர்வாதம். என் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்ற நிச்சயம் பெற்றேன். என்னை உறுத்தும் பாவங்களை என்னை விட்டு அகற்றினார் இது அவருடைய சுத்த கிருபையே. யார் என்னை விடுதலையாக்கக்கூடும்? அவரே இதை செய்தார் அளவிடமுடியாத இந்த மன்னிப்பே எனக்கு ஆசீர்வாதம். அந்த மன்னிப்பினால் எனக்குள் சமாதானம் குடி கொண்டது. வீண் பழிகளுக்கும் தீர்ப்புகளுக்கும் என்னை விலக்கிக் காத்துக் கொண்டாரே அவருக்கே துதி கனம் மகிமை. ஆசீர்வாதத்தின் தகப்பனே நமக்கு ஆசீர்வாதம்.
எனக்குள் அவர் ஞானமும் தீபமும் ஆனார் அவரே ஆசீர்வாதம்
தமக்குள்ளே தீர்மானித்திருந்து தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். எபேசியர் 1:10
கண்டு கொள்ளமுடியாததை காணக்கூடாதவரை கண்டு கொண்டேன். வெளிப்படுத்தப்படாதவைகள் என்னுள்
வெளிப்படுத்தப்பட்டன. நாற்சந்திகளில் நின்று சத்தமிட்ட ஞானத்தை என்னுள் தக்க வைத்துக்கொண்டேன். ஞான ஒளி பெற்றேன் ஞானவானானேன். அந்த பரமனின் திட்டம் எனக்குள் தீபமாய் ஏற்றி வைக்கப்பட்டது அதை விளக்கு தண்டின் மேல் வைத்து உலகெங்கும் ஏற்றி வைப்பேன். இதுவே நான் பெற்ற ஆசீர்வாதம், கடவுளை அறிந்து கொண்டே அந்த ஞானச்சுடரை உள் வாங்கிக் கொண்டுள்ளேன். இந்த இயேசுகிறிஸ்து வுக்குள்ளாக பூரணம் கற்றுக்கொள்ளப்பட்டது. அவரே சம்பூரணர். அவருக்குள் எல்லாம் அவராலேயன்றி ஒன்றுமில்லை. துவக்கமும் முடிவும் அவரே. ஆதியும் அந்தமும் அவரே. அவருக்குள் சகலமும் நிறைவு பெறுகிறது பிரமாணமும் சட்டபுத்தகமும் ஆசீர்வாதத்துக்கு வழி சொல்லி அனுப்பி வைத்தன. ஆனால் ஆசீர்வாதத்தை அவை எனக்கு தரவில்லை. மனசாட்சியில் குழப்பத்தோடு இருந்தேன். மனசாட்சியை சுத்திகரித்து குற்றமில்லாத முழுமையை எனக்குள் இயேசுகிறிஸ்துவை பெற்றுக்கொண்டேன் இந்த தீபமே என்னுள் இயங்கும் தீப ஒளி. இதுவே ஆசீர்வாதம் காலங்கள் நடுவில் சிருஷ்டிப்புகள் நடுவில் எல்லாவற்றையும் ஒருங்கிணைந்து முழு குடும்பத்துக்கும் இயேசுகிறிஸ்துவை தலையாக்கினார். அவரே சர்வ ஞானி சர்வல்லவர். அவருக்குள் பூலோகமும் பரலோகமும் வந்து நிற்பதே ஆசீர்வாதம். கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் அறிக்கை பண்ணும் இந்த இயேசுவே ஆண்டவரென. இதுவே ஆசீர்வாதம் கர்த்தரை அறிகிற அறிவினாலே பெருகுவதே ஆசீர்வாதம். ஞானமும் நீரே! கானமும் நீரே! ஜோதியும் நீரே! என் சொந்தமும் நீரே! ஆமென்
சகலமும் அவர் திட்டமே அதுவே நமக்கு ஆசீர்வாதம்
தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன் குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்திரமாகும்படி தெரிந்து கொள்ளப்பட்டோம். எபேசியர் 1: 12.
ஆதிமுதல் முழு வரைபடமும் அவர் கையில், எல்லா திட்டங்களும் தீர்மானங்களும் அவரே இயற்றினார். முடிவெடுத்த அனைத்து காரியங்களையும் அதனதன் காலத்தில் நேர்த்தியாய் செய்பவரும் அவரே. எங்கெல்லாம் காரியங்கள் ஒழுங்கும் கிரமுமாய் காணப்படுகிறதோ அங்கெல்லாம் அதன் பின்னால் ஒரு மனம் உண்டு. அந்த மனம் கடவுளுடையது. சிருஷ்டிப்புகளெல்லாம் அவருடையவைகளாம். நம்மையும் நம்முடைய வாழ்க்கையின் நிகழ்வுகளையும் உலகத்தோற்றத்துக்கு முன்னே முன் குறித்து திட்டமிட்டுள்ளார். அதுவே நடைபெறுகிறது. ஒன்றாகிலும் பிசகி போகவில்லை. அவர் சொல்ல ஆகும் அவர் கட்டளையிட நிற்கும் அவரது ஆளுகைக்குள் ஒன்றும் தடுமாறி போவதில்லை. அது ராஜ்ய பாதை. பேதையர்களாய் இருந்தாலும் திசை கெட்டுப் போவதில்லை என் ஜனம் ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை என அவர் கூறியிருக்கிறார். அவரது வரையரைக்குள் தான் இருக்கிறேன், என்னுடைய உட்காருதலையும், எழுந்திருக்குதலையும் அவர் அறிந்திருக்கிறாரென்ற நிச்சயத்துக்குள் இருப்பதே ஆசீர்வாதம். அவருக்குள்ளேயே நமக்கு நம்பிக்கை பிறந்தது. புது வாழ்வு புதிய இதயம் புதிய ஆவி என்ற அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதமும் அவரே தருகிறார். சோர்ந்து போகிறவர்களுக்கு சத்துவத்தை அளித்தவரும், அளிப்பவரும் அவரே மரணத்துக்குள் நாமும் மரித்து அவரது உயிர்த்தெழுதலில் நாம் உயிர்ப்பிக்கப் பட்டிருக்கிறோமென்ற நம்பிக்கை மேலானது. இந்த நம்பிக்கையினால் பிரகாசிக்கிறோம். எந்த மனுஷரையும் பிரகாசிப்பிக்கிற ஒளி அவரே. அவர் மூலமாய் நமக்கு கிட்டிய இந்த கிறிஸ்தவ வாழ்வுக்காக தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம் தேவதிட்டத்தில், வரைபடத்தில், கவனத்துக்குள், அவரே தந்த நம்பிக்கையினால் ஸ்திரப்பட்டிருப்பதே பாக்கியம், இதுவே கிறிஸ்தவ ஆசீர்வாதம். கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென்.
சத்தியமே செய்தி அதுவே ஆசீர்வாதம்
நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரை போடப்பட்டீர்கள். எபேசியர் 1 : 13.
வாழ்வில் எத்தனையோ நீதிபோதனைகள், நீதிக்கதைகள் கேட்டறிந் திருந்கிறோம் சுற்றிருக்கிறோம். அனைத்தும் பழமொழிகளும். பழைய மொழிகளுமாயின. நமக்குள் மாற்றத்தையோ ஒரு உறவையோ ஏற்படுத்தியதாக தெரியவில்லை. சொல்லப்பட்ட செய்தி மூலம் கேள்வி வந்தது. கேள்வியினால் விசுவாசம் வந்தது. கிறிஸ்தவம் மூட நம்பிக்கையல்ல, சத்திய தேவனை அறிந்ததினால் வந்த விளைவு எனக்குள் ஏற்பட்ட மாற்றமே இந்த சத்தியத்திற்கு சாட்சி. சந்திரனையும், மார்சையும் கட்டுப்படுத்த விழையும் எனக்கு என்னை கட்டுப்படுத்தமுடியவில்லை. ஆகவே எந்த மாற்றமுமில்லை. சத்தியத்துக்கு என்னை கையளித்த நாளிலே என்னுள் மறு உருவாக்கம் வந்தது. அதுவே சத்தியம். சத்தியமே செய்தி. அதுவே ஆசீர்வாதம், அந்நற்செய்தி ஒரு நபரைப் பற்றியது. அவரே இயேசுகிறிஸ்து அவர் மூலமாகவே இரட்சிப்பு வந்தது. வானத்தின் கீழே பூமியின் மேலே எல்லா நாமத்துக்கும் மோலான நாமத்தை அந்த சத்திய செய்தி சுமந்து வந்தது. அந்த நாமத்திலே விடுதலை இந்த கிறிஸ்து இயேசுவை விசுவாசிக்க தேவன் தந்தருளிய ஆவியானவரே எனக்கு அச்சாராமானார். பரிசுத்த ஆவியானவரே இந்த உன்னதமான ஆவியென்றும் அச்சாரத்தை எனக்கு தந்தார். இதுவே ஆசீர்வாதம். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியானவர் கொண்டு வந்த இந்த புது உறவே தேவ ஆசீர்வாதம். நீ தேவனுடைய பிள்ளை என கூறும் சாட்சி. அச்சாட்சியே எனக்குள் முத்திரை அந்த முத்திரை அதிகாரமே மறுபடி பிறந்த அனுபவம் எனக்கு தந்தது. அதுவே கிறிஸ்தவ ஆசீர்வாதம்.
ஆவியானவரே சாட்சி ஆவியின் சிந்தை ஆசீர்வாதம்
அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்திரத்தின் அச்சாரமாயிருக்கிறார். எபேசியர் 1:14.
கடவுளுடைய ஆவியானவரோடு எனது ஆவி தொடர்பு கொள்ள வேண்டும். வேதத்தில் எழுதப்பட்டுள்ள எல்லா வல்லமையுள்ள வார்த்தைகளும் என்னை ஆவியானவருக்குள்ளே நடத்தும். அது எனது ஆவியின் மூலம் நடைபெறும் ஒரு அனுபவம். வேத வசனம் ஆவியையும் மாம்சத்தையும் ஆத்துமாவையும் ஊடறுக்கும் வல்லமையான பட்டயம். மாம்ச சிந்தை மரணம், அதற்குள் அடிமைப்பட்டு சுதந்திர பாக்கியத்தை இழந்து போகாதபடி மாம்ச சிந்தையை விட்டு என்னை ஊடுறுவி பிரிக்கும் ஆவியே உற்சாகமுள்ளது மாம்சம் பெலவீனமானது. இந்த பெலவீனமான மாம்சம் ஆவிக்கு விரோதமாக போராடும். ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமும், இந்த சிந்தையை மீட்டெடுக்க வேத வசனத்தை, வாக்குத்தத்தத்தை அனுப்பி ஆண்டவர் நம்மை இரட்சிக்கிறார். ஆவியின் சிந்தை ஜெயிக்கிறது. நமது ஆவி கடவுளின் ஆவியானவரோடு உறவு ஏற்படுத்துகிறது. சரியான வழியிலே நிலையிலே நிறுத்தப்படுகிறோம். ஆவியின் பிரமாணம் ஜெயித்து வாழ வழி வகை செய்கிறது. நிச்சயம் பிறக்கிறது கடவுள் நம்மீது வைத்திருந்த முழு சுயாதீன பிரமாணத்தை நிறைவேற்ற வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு சொந்தமானவருக்கு இது ஆசீர்வாத பெலனாக மாறுகிறது. இதினிமித்தம் தேவனுக்கு மகிமை சேர்க்கிறோம். ஆவியானவரது தொடர்புக்கு தினமும் காத்திருப்பதே ஆசீர்வாதம். மாம்ச சிந்தையை கீழ் அழுத்துவதே ஆசீர்வாதம். ஆத்துமாவைக் காத்துக்கொள்வதே ஆசீர்வாதம் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்தினாலும் ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் அதனால் என்ன இலாபம்? ஆவியின் முதற்பலன் பெற்றவர்களே ஆசீர்வாதத்திற்கு உரியவர்கள் ஆவியிவே நடந்து கொள்ளுங்கள். இதுவே கிறிஸ்தவ ஆசீர்வாதம், ஆவிக்குரிய ஆசீர்வாதமே பரலோக ஆசீர்வாதம் ஆமென்.
Author Bro. C. Jebaraj