இயேசுவும் அவர் தம் சீஷரும் படகில் ஏறி கடலைக் கடக்க முற்பட்டனர். யோர்தான் பள்ளத்தாக்கு பூமியின் மேற்பரப்பில் ஒரு குறுகிய திறப்பு போன்றுள்ளது. கலிலேயாக் கடல் அத்திறப்பின் ஒரு பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து 680 அடி தாழ்வாக உள்ளதால், தட்பவெப்ப நிலை மித வெப்பமானது, ஆனால் அது ஆபத்தானது. மேற்பகுதியில் பள்ளத்தாக்குகளும் நீர் அரித்தோடிய மலை இடுக்குகளையும் கொண்ட மலைகள் இருக்கின்றன. இப்புறத்தில் ஒரு பலமான காற்று வீசினால், பள்ளத்தாக்கு அழுத்தம் பெற்று மிகுந்த துரிதமாய் இக்கடலில் விழும் எனவே ஒரு கணநேர அமைதியானது, அடுத்து கடுங்காற்றின் ஒரு ஓலமிடுதலாக மாறும். படகில் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்திற்குப் பின் கடலில் மாபெரும் கொந்தளிப்பு உண்டாயிற்று. படகின்மேல் அலைகள் குவிந்தன. சீடர்கள் திகைத்தனர். அடுத்த கணம் ' “ஆண்டவரே காப்பாற்றும், காப்பாற்றும் மடிந்து போகிறோம்” எனக் கதறினர். இயேசுவை எழுப்பினர்.
“அற்ப நம்பிக்கை உள்ளவர்களே ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டார்.
கடலைப் பார்த்தார், 'காற்றே இரையாதே! கடலே அமைதியாய் இரு! என ஆணையிட்டார்.
அடுத்த கணம் மிகுந்த அமைதல் உண்டாயிற்று, “இயற்கையும் கீழ்ப்படிகிறதே' என அனைவரும் வியப்புற்றனர்.
படகு ஆடி அசைந்து சென்று மறுகரையை அடைந்தது. அந்த நாட்டின் பெயர் தெக்கப் போலி. தெக்கப் போலி எனப்பட்ட அந்நாடு ரோமரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. யூதர்களால் “பன்றி” தீட்டான விலங்காகக் கருதப்பட்டது. யூத நீதிச் சட்டம் பன்றி வளர்ப்பதைத் தடை செய்தது. யூத நீதிச் சட்டம் செயல்படாத ஒரே நாடு. தெக்கப்போலி, எனவே யூதர்கள் தெக்கப்போலி நாட்டில் பன்றி வளர்த்தனர். இயேசு போய்ச் சேர்ந்த நாடு தெக்கப் போலி நாட்டிலுள்ள கதரா.
இயேசுவை நோக்கிப் பேய் பிடித்த இரு மனிதர்கள் வந்தனர். அவர்கள் மிகவும் கொடியராக இருந்ததால் அந்தப் பக்கம் யாரும் போக முடிவில்லை. அவர்கள் இயேசுவிடம் வந்து கடவுளின் மைந்தரே! எங்களுக்கும் உமக்கு என்ன வேலை? குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்? என்று கத்தினார்கள்.
பின் அவைகள் “எங்களை ஓட்டுவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக் கூட்டத்திற்குள் போகும்படி எங்களை அனுப்பி விடும் என வேண்டின.
இயேசு, “போங்கள்” என்றார், அங்கு மேய்ந்து கொண்டிருந்த பன்றிக்கூட்டத்திற்குள் பேய்கள் புகுந்தன. பன்றிக் கூட்டம் முழுதும் ஓடிச் செங்குத்துப் பாறையின் விளிம்புக்குக் கீழே கடலில் பாய்ந்து தண்ணீரில் மாண்டது. அவற்றை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஊரார். இச்செய்தியறிந்து இயேசுவிடம் வந்து, தங்கள் நாட்டை விட்டு அவர்கள்
போகும்படி வேண்டிக் கொண்டார்கள். அவர்களுக்குத் தேவை பணந்தானே! மற்றவர்களுடைய நலம் அல்லவே. இயேசுவும் படகில் ஏறி, தம் ஊருக்கு வந்தார்.
அங்கு ஒரு வீட்டில் அ௫ளுரை ஆற்றிக் கொண்டிருந்தார். வீடு நிறைய மக்கள் கூட்டம் இருந்தது. பரிசேயரும் நீதி சட்ட அறிஞரும் நிறைந்திருந்தனர். அப்பொழுது திமிர்வாதக்காரன் ஒருவனை படுக்கையோடு கொண்டுவந்து, வீட்டினுள் கொண்டு போக வழி தெரியாததால், வீட்டின் மேல் ஏறி ஓடுகளுக்கிடையே திறப்புண்டாக்கி அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள்.
இயேசு அவனைப் பார்த்து, “மனிதனே! உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டு விட்டன” என்றார். பரிசேயரும் வேத அறிஞரும், பாவங்களை மன்னிக்க இவன் யார்? கடவுள் ஒருவரே அன்றி யார் பாவங்களை மன்னிக்க முடியும்? என்று பேசிக் கொண்டனர்.
இயேசு அவர்களது சிந்தனைகளை அறிந்து, “உங்கள் உள்ளத்தில் இப்படி சிந்திப்பதேன்? உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வது எளிதா? எழுந்து நட என்று சொல்வது எளிதா? பாவங்களை மன்னிக்க மனுமைந்தர்க்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” எனக் கூறி,
திமிரவாதக்காரனைப்பார்த்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டிற்குப் போ” என்றார்.
திமிரவாதக்காரன் எழுந்தான். இயேசுவை வணங்கினான். தன் படுக்கையை கருட்டிக் கொண்டு போய் விட்டான்.
புதுமையான காரியத்தை இன்று கண்டோம், என மக்கள் களிப்படைந்தனர்.
ஒருமுறை நாயினூர் வழி சென்றபோது, இறந்த வாலிபனை சுமந்து கொண்டு வந்தனர். அவன் தாய் விதவை. அவளுக்கு இவனைத் தவிர வேறு பிள்ளையில்லை. கதறிக் கொண்டு வந்தாள். இயேசு அவளை பார்த்து மனதுருகி,
“அம்மா! அழாதே!” என்றார், பின் பாடையைத் தொட்டார், இறந்தவன் உயிருடன் எழுந்தான், அனைவரும் ஆச்சரியத்தால் பிரமித்தனர் தாயின் அழுகை ஆனந்தக் கண்ணீராக மாற, இயேசுவைப் பணிந்தாள்.
பாலெஸ்தீனத்தில் யூதர்களிடையே இரு பிரிவினர் இருந்தனர். ஒரு பிரிவினர், “பாலஸ்தீனமாகிய இந்தக் கானான் நாடு எங்களுக்குரியது ரோமர்களை விரட்டிவிட்டு சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கொள்கையில் செயல்பட்டவர்கள் கானானியர். இவர்கள் ரோமர்களை எதிர்த்தனர். புரட்சி செய்தனர். ரோமர் தம் வன்முறையினால் இவர்களை அடக்கி ஒடுக்கினார்கள். சிலுவையில் அறைந்து கொன்றனர்.
மற்றொரு பிரிவினர் ஆயக்காரர். ஆயம் என்றால் வரி. வரி வசூலிப்பவர்கள் ஆயக்காரர்கள். ரோம அரசாங்கத்திற்காக யூதமக்களிடம் வரி வசூலித்தனர். யூதர்களிடம் தங்கள் இஷ்டம்போல் வரிவாங்கி, அவற்றில் ஒரு குறிப்பிட பகுதியை மட்டும் ரோம அரசுக்கு செலுத்திவிட்டு மீதியை தாங்களே வைத்துக் கொண்டனர். எனவே ஆயக்காரர்கள் செல்வந்தர்ளாகத் திகழ்ந்தனர். ரோம அரசுக்கு உற்ற நண்பர்களாக விளங்கினர்.
ஆயக்காரரும், கானானியரும் யூதர்களேயாயினும் இரு வேறு துருவங்களாகச் செயல்பட்டு ஒருவரையொருவர் எதிர்த்தனர்.
ஆயத்துறையில் அமர்ந்திருந்த மத்தேயுவைக் கண்டார் இயேசு. கனிவுடன் நோக்கினார்.
“என்னைப். பின்பற்றி வா” - இயேசுவின் அன்பு நிறைந்த ஆணை வெளிவந்தது. தொடர்ந்து நடந்தார் இயேசு. மத்தேயுவால் உட்கார்ந்திருக் முடியவில்லை. எழுந்தார். பணம் தரும் தன் பதவியை விட்டார். இயேசுவை பின் தொடர்ந்து நடந்தார். இயேசுவின் இல்லம் வந்தவர்களுக்கு மற்றொரு அதிசம் காத்திருந்தது. இயேசுவின் சீடர்களாக இருந்தவர்களுள் ஒருவன் கானானியனாகிய சீமோன்!
“சீமோன்! நீ.இயேசுவின் சீடரா?'”
“மத்தேயு! ஆச்சரியமாக இருக்கிறதா? இயேசுவை என்று ௧ண்டேனோ அன்றே அவர் அடிமையானேன். என் மூர்க்க குணம் என்னை விட்டுப் போய்விட்டது. என் ஆசை எல்லாம் விண்ணரசை சுதந்தரிப்பதுதான்.'”
“ஆமாம் சீமோன்! நான் வாழ வேண்டும். 'என் குடும்பம் செழிக்க வேண்டும்' என்ற சுயநலம் இயேசு என்னைப்பார்த்த அதேகணம் என்னை விட்டு விலகி விட்டது.”
“மத்தேயு! ஏழைகளைக் கஷ்டப்படுத்தி வரி வாங்கிய உன்னைக் கொலை செய்ய வேண்டும் என்று துடித்த என் கரம் இப்பொழுது உன்னை நண்பனாக அணைக்கிறது. இது ஆச்சரியமல்லவா?'”
"சீமோன்! என் பாதைக்குக் குறுக்கே இருக்கும் நீ என்று ரோமர் கைகளில் வீழ்ந்து, சிலுவையில் அறையப்படுவாய் என ஆவலோடு. ஒரு காலத்தில் காத்திருந்தேன். சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்தேன். ஆனால்... இன்று நாமிருவரும் பிறர் வாழ... இயேசுவுக்காக வாழப் போகிறோம். இல்லையா?'”
“ஆமாம் மத்தேயு! பகை என்ற முள்... நட்பு என்ற மலராக மலர்ந்தது விந்தையிலும் விந்தையல்லவா?
இருவரும் உரையாடி மகிழ்ந்தனர்.
இதன் தொடர்ச்சி மாண்டவள் மீண்டாள்! என்ற தலைப்பில் உள்ளது.
இந்தக் கதை உதய தாரகை என்ற புத்தகத்திலிருந்து Sis. Vanaja Paulraj அவர்களின் அனுமதியுடன் போடப்பட்டுள்ளது.