ஒரு போதகர் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். இளைஞன் ஒருவன் தனியாக தனது வாகனத்தில் அடர்ந்த காடு வழியாக பயணிக்க வேண்டியிருந்தது. இரவு நேரமானதால், சிறிது நேரம் குட்டித் தூக்கம் போட்டு எழுந்து மீண்டும் பயணத்தை தொடங்க நினைத்து, வண்டியை நிறுத்திக் கொண்டான். அப்படி நிறுத்தியபோது அவனுக்குள் மரண பயம் வந்ததோ என்னவோ?! ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவன், ஆனால் கடவுளோடு அவனுக்கு தனிப்பட்ட உறவு இல்லாததினால், ஒரு பெரிய வட்டத்தை வரைந்து நடுவில் சிலுவை அடையாளத்தை வரைந்து, அதற்குள் படுத்துக் கொண்டான். இரவில் பிசாசுகள் ஒன்றுக்கொன்று பேசுவதைக் கேட்க முடிந்தது: “இந்த நபர் ஒரு ஓட்டை பானை, ஆனால் அவனைச் சுற்றி ராஜாவின் முத்திரையை அல்லவா வைத்திருக்கிறான். அப்போது எங்களால் தொட முடியாதே", என்றதைக் கேட்டவுடன் பயந்து எழுந்தான். அப்போதுதான் இயேசுவை அவன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாததை நினைத்து வருந்தியவனாய் மனந்திருந்திய இளைய குமாரனைப் போல ஜெபித்தான், மீண்டும் பிறந்தான், இப்போது ஆவியினால் முத்திரையிடப்பட்டான். "நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள்" (எபேசியர் 1:13). "அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார்" (ஏசாயா 42:3).
இதில் சுவாரஸ்யமானது என்னவெனில், பலவீனமான அல்லது தவறாக புரிந்துகொள்ளப்பட்ட நம்பிக்கையுடன் வரையப்பட்ட சிலுவையின் சின்னம் கடவுளால் மதிக்கப்பட்டது, இந்த மனிதனும் பாதுகாக்கப்பட்டான். ஆமாம், கிறிஸ்தவ குழந்தைகள் இருண்ட தெருக்களைக் கடக்கும்போதோ அல்லது வீட்டில் தனியாக இருக்கும்போதோ சிலுவையின் அடையாளத்தை வரைகிறார்கள். அதுபோல, பெரும்பாலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆராதனையின் முடிவில், சிலுவையின் அடையாளத்தை வரைவதின் மூலம், தாங்களும் கிறிஸ்துவுடன் சிலுவையில் அறையப்படுவதைக் குறிக்கிறார்கள். பல கிறிஸ்தவ பெற்றோர்களும் பிரசிங்கியார்களும் ஆசீர்வதிக்க நெற்றியில் சிலுவையின் அடையாளத்தை இடுகிறார்கள். சரி இவையெல்லாம் பாரம்பரிய மரபுகளா அல்லது ஆவிக்குரிய பயிற்சியா? இதுபோன்ற சில குறியீட்டு செயல்கள் வேதாகமத்தில் பதிவாகியுள்ளன. மோசே செங்கடலின் மீது தனது தடியை நீட்டியபோது அற்புதமாக கடல் பிரிக்கப்பட்டது. அதற்காக எந்தவொரு நீர்நிலையிலும் அந்த தடி என்னும் அடையாளத்தைக் கொண்டு ஒரு வழியை உருவாக்க முடியும் என்று அர்த்தமல்ல.
ஒரு கட்டிடம் கட்டப்படும்போது, கான்கிரீட் போடும்போது சாரக்கட்டு (பலகைகளால் போடப்படுவது) அவசியம். கான்கிரீட் வேலை முடிந்தவுடன், சாரக்கட்டு அகற்றப்படுகிறது. அதேபோல், ‘குழந்தைத்தனமான மரபுகளின்’ சாரக்கட்டு நம்மை விட்டு அகல வேண்டும். "நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன். நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்" (1 கொரிந்தியர் 13:11).
ஆவிக்குரிய வளர்ச்சியில் நான் குழந்தைத்தனமான நபரா அல்லது பக்குவப்பட்ட (முதிர்ச்சியுடைய) நபரா? என சிந்திப்போம்.
Author: Rev. Dr. J. N. Manokaran