18:1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
18:2 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
18:3 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன், இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான்.
18:4 குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான்.
18:5 அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
18:6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக் கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கைகயில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
18:7 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில்,
18:8 நான் விரோதமாய் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.
18:9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
18:10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு மனம் மாறுவேன்.