அதிகாரம்- 6
‘ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளை உடைத்தல்’
‘The Lamb of God opening seals’
முத்திரைகளை உடைத்தல்
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்க்டேன்.(வச 1)
இந்த 6ஆம் அதிகாரத்தில் ஆட்டுக்குட்டியானவராகிய நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏழு முத்திரைகளில் ஆறை உடைக்கிறார். ஒவ்வொரு முத்திரையும் உடைக்கப்படும்போதும் தேவ கோபம் இந்த உலகத்தில் நிறைவேற்றப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் உலகம் அந்திக்கிறிஸ்துவின் கைகளில் வந்துவிடுகிறது. கிறிஸ்துவின் சபையோ ஆண்டவரோடு இருக்கும்படியாக அவருடைய இரகசிய வருகையில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். இந்த அதிகாரத்தில் காணப்படும் நிகழ்வுகள் 7 ஆண்டு உபத்திரவகாலத்தின் முதல் 3 ½ ஆண்டுகளில்; நடப்பவைகளாகும். திருச்சபை ஆண்டவரிடம் எடுத்துக்கொள்ளப்படுவதைக் குறித்து யோவானுக்கு இந்த அதிகாரத்தில் வெளிப்படுத்தப்படவில்லை. பின்வரும் அதிகாரங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆவியானவருடைய ஒத்தாசையோடு இநத நிகழ்வுகள் கோர்வைபடுத்தப்பட்டு அறிந்து கொள்ள வேண்டும்.
வச 1,2 – முதல் முத்திரை உடைத்தல் - வெள்ளை குதிரை- White Horse
வெள்ளை குதிரையில் ஏறியிருப்பது சமாதானத்தைக் குறிக்கிறது. ஏறியிருப்பவன் கையிலுள்ள வில்லோ யுத்தத்தைக்குறிக்கிறது.
உலகத்தலைவர்கள் சமாதானத்தை பேசுவார்கள்.ஆனாலும் தந்திரமாக ஆயுதங்களை பெருக்குவார்கள். சமாதானப்பேச்சுகளை உலக நாடுகளோடு வல்லரசு நாடுகள் முன்னின்று நடத்தினாலும், இன்னொருபுறம் தங்களது அணு ஆயுதங்களை பெருக்கிக் கொண்டே போகிறார்கள். ஒரு வல்லரசு நாடு தனது உயர்ந்தரகப்படைகளை உலகமெங்கும் நிறுத்தியுள்ளதாக பிரபல செய்தித்தாள்கள் வெளியிட்டுள்ளன. ஆகவே உலகளாவிய பயங்கர யுத்தம் தவிர்க்க முடியாதது. எனவே, அந்திகிறிஸ்து உலகத் தலைவர்களோடு சமாதானப்பேச்சை தந்திரமாக முன்னின்று நடத்திப்பின்னர் உலகமுழுவதையும் கைப்பற்றுவான். 1 தெச 5: 3
வச: 3,4 - இரண்டாம் முத்திரை உடைத்தல் – சிவப்பு குதிரை – Red Horse
சிகப்பு யுத்தங்களையும் இரத்தம் கொட்டப்படுதலையும குறிக்;கிறது. அந்தி கிறிஸ்துவினால் முயற்ச்சிசெய்யப்பட்ட சமாதானம் வராதபடியினாலே பல உள்நாட்டுக் கலவரங்களும் தேசங்களுக்குள் யுத்தங்களும் வெடிக்கும். இரத்த ஆறு ஓடும். அந்தி கிறிஸ்து பலவந்தமாக ஆட்சியை பிடிப்பான்.
வச: 5,6 - மூன்றாம் முத்திரை உடைத்தல்– கறுப்பு குதிரை – Black Horse
கறுப்பு தீமை, துக்கம் இவற்றையும், தராசு நெருக்கடி பற்றாக்குறையையும் காண்பிக்கும். உலகமெங்கும் பொருளாதார நெருக்கடியும் பஞ்சங்களும் தலைவிரித்தாடும். ஆகாரத்திற்கும் தண்ணீருக்கும் அளவோடு பங்கீடு செய்யும் முறை வரும். இந்த நிலமை இப்பொழுதே பல இடங்களில் அமுலுக்கு உள்ளது. உலகமெங்கிலும் 1.02 கோடி மக்களுக்கும் மேலானவர்கள் அனுதின ஆகாரம் கிடைக்காமல் அல்லலுற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு 6 வினாடிக்கும் ஆகாரம் இல்லாமல் ஒரு குழந்தை சாகிறது. புலம்பல் 5: 10, எசே 4: 16, 17
அந்தி கிறிஸ்து தனது 666 முத்திரையை அறிமுகப்படுத்துவான். வெளி 13: 16- 18
இந்த காலக்கட்டத்தில் உத்தம கிறிஸ்தவர்கள் அந்திக் கிறிஸ்துவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ளாமல் இரத்த சாட்சிகளாக மரிப்பார்கள்.
வச: 7,8 - நான்காம் முத்திரை உடைத்தல் – மங்கின குதிரை – Pale Horse
மங்கிப்போன நிறம் பெலவீனத்தையும், வியாதி மரணத்தையும் குறிக்கிறது. பலவிதங்களில் அழிவு பெருகும்.பஞ்சம், கொள்ளை நோய் இவற்றினால் பெருமளவில் சாவு எண்ணிக்கை உலக முழுதும் உயரும். எசேக்கியேல் 5: 16, 17 அந்தி கிறிஸ்து தந்திரமாக இஸ்ரவேல் தேசத்துடன் சமாதான உடன்படிக்கை செய்வான். இஸ்ரவேலர் எருசலேமில் தங்கள் தேவாலயத்தைக் கட்டுவார்கள்.
வச: 9– 11 –ஐந்தாம் முத்திரை உடைத்தல்
உபத்திரவ காலத்தைக் கடந்து வந்த இரத்தசாட்சிகளுடைய கூக்குரல் தேவனுடைய சிங்காசனத்தில் கேட்டது. வெளி 4: 6 –கண்ணாடிக்கடல் இந்த இரத்தசாட்சிகளையே குறிக்கிறது. வெளி 15: 2
உண்மையில், உலகத்தோற்றமுதல் தங்கள் தேவ பக்திக்காக இரத்தசாட்சிகளாக கொல்லப்பட்டவர்கள் பலிபீடத்திற்கு கீழே தங்கள் உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இரத்தசாட்சிகளுடைய எண்ணிக்கை நிறைவாகும்வரை பொறுத்திருக்கம்படியாக அவர்களுக்கு சொல்லப்பட்டது.
வச: 12 – 17 – ஆறாம் முத்திரை உடைத்தல்
மனுஷ குமாரனுடைய வெளிப்படை வருகைக்கு முன் வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படுவதும், பூமியதிர்ச்சிகள் உண்டாவதுமான நிகழ்ச்சிகளில் உலகத்தில் பல நாசங்கள் நடந்தேறும். மல்கியா 4: 1,2. மத்தேயு 24: 29, 30. 1 தெச 1: 10
Author: Rev. Dr. R. Samuel
6ம் அதிகாரம்: துன்ப காலத்தின் ஆரம்பம் முத்திரைகள் உடைக்கப்படல்
முதலாம் முத்திரை ஆட்டுக்குட்டியானவர் முதலாம் முத்திரையை உடைக்கும் பொழுது ஒரு ஜீவன் யோவானை வந்து பார் என்றது, யோவான் ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டான். அதின் மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருத்தான்; அவனுக்கு ஒரு கிரீடம் கொடுக்கப்பட்டது. அவன் ஜெயிக்கிறவனாகவும், ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.
வெள்ளைக்குதிரை வெற்றிக்கு அடையாளம், அப்படியானால் அதில் ஏறியிருந்தது மேசியாவா? அது மேசியாவாக இருக்க முடியாது என்பதற்கு இரண்டு காரணங்கள் கூறலாம்:
1. முத்திரைகளை உடைப்பதே ஆட்டுக்குட்டியாகிய மேசியாதான். பின் எப்படி அவர் குதிரையில் ஏறிப்போவார்?
2. இரண்டாவதாக, முதலிலேயே அவர் வெற்றி வீரனாக வந்துவிட்டால் யுத்தங்களும், மற்ற சம்பவங்களும் நடப்பதில் அர்த்தமே கிடையாதே!
அப்படி அது மேசியா இல்லை என்றால், பின் அது யார்?அது அந்திக்கிறிஸ்துவின் ஆவி, அவனிடம்வில் இருந்தது,பூமியிலே வில் ஒரு யுத்த ஆயுதம், அது அவனிடமிருந்தது. ஆனால் அவனிடம் அம்புகளில்லையே! பின் எப்படி யுத்தம்பண்ணுவான்? எப்படி ஜெயிப்பான்? அவன் யுத்தம் பண்ணவேமாட்டான். ஆனால் ஜெயிப்பான் தானி. 8:23 - 25 வாசித்தால் அது விளங்கும், மூர்க்க மூகமும், சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ராஜா எழும்புவான். தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி ஜெயிப்பான், அவன் சாத்தானின் பிரதிநிதி. சாத்தானுக்கு தேவ பிள்ளைகள் மேல் வல்லமை கிடையாது. ஆனால் வஞ்சகத்தில் வல்லமையுள்ளவன். சாத்தானின் அந்திக்கிறிஸ்துவும் அப்படியே இருப்பான். சாத்தானுக்கும், அவனால் அதிகாரம் பெற்ற அந்திக்கிறிஸ்துவுக்கும் பூமியை ஆளுவதே நோக்கம், பரலோகத்தில் சேவகம் புரிவதைவிட நரகத்தில் ஆளுகை செய்வதே மேல். சாத்தானுக்கு பரலோகம் பிடிக்காது. நீ போவதும் பிடிக்காது. தடுக்கப் பார்ப்பான். விழித்திருந்து ஜெபம்பண்ணு,
இரண்டாம் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் இறந்தபோது, இரண்டாம் ஜீவன் யோவானை, வந்து பார்! என அழைத்தது. அப்பொழுது யோவான் சிவப்பான ஒரு குதிரையையும் அதின மேல் ஏறியிருந்தவனையும்கண்டான். அவனுக்கு பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலை செய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
சிகப்பு நிறம் சாதாரணமாக ஆபத்தைக்குறிக்கும், ஒரு தனி மனிதனோ, குடும்பமோ, சமுதாயமோ, தேசமோ சமாதானமில்லையென்றால் எப்படி இருக்குமென சிந்தித்துப் பாருங்கள். தற்கொலைகள், கற்பழித்துக் கொலை செய்தல், நகைக்காக கொலை, இவைகள் பெருகிக் கொண்டே போகிறது, காரணமென்ன? சாத்தான் மக்கள் நடுவிலிருந்து சமாதானத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகநீக்கிவிட்டு, வன்முறைகளையும், சாதிக்கலவரங்களையும், மதத்தின் பெயரால் கொலைகளையும், இனப்படுகொலைகளையும் அந்திக்கிறிஸ்துவின் ஆவியையும் அவிழ்த்து விட்டிருக்கிறான். மனைவி அரிவாளால் கணவனை வெட்டிக்கொலை செய்யும் காலத்திலிருக்கிறோம். இது ஆரம்பம்தான். போகப் போக எப்படியிருக்குமோ? பட்டயம் தண்டனையையும், சாபத்தையும் தாங்கொணொ வேதனையையும் குறிக்கும்.
வ 5-6: மூன்றாம் முத்திரை
மூன்றாம் முத்திரை திறக்கப்படும் பொழுது, மூன்றாம் ஜீவனானது யோவானை அழைத்து வந்து பார் என்றது. யோவான் ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டான். அதின்மேல் ஏறியிருந்தவன் தன் கையிலே ஒரு தராசைப் பிடித்திருந்தான் அப்பொழுது ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும் ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்
கறுப்புக்குதிரை பஞ்சத்தைக் குறிக்கும், பஞ்சம் தேவனுடைய தண்டனையைக் குறிக்கும், எசேக், 14:21ஐ வாசிப்போமென்றால், “நான் மனுஷரையும், மிருகங்களையும் நாசம்பண்ணும்படி, எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும் போது எவ்வளவு அதிக சங்காரமாகும்? பஞ்சம் ஒரு தேவ தண்டனை.
ஒரு பணம் ஒரு யூதனின் ஒருநாள் சம்பளம், அதில் ஒருபடி கோதுமை வாங்கினால் அது அவனுக்கு மட்டும்தான். பத்தும், குடும்பத்திற்கு ஒன்றும் வாங்க முடியாது. மிருகங்களுக்குப்போடும் வாற்கோதுமை மூன்று படி வாங்கினால் குடும்பத்திற்குப் போதும். ஆனால் எண்ணெயோ, திராட்சரசமோ வாங்க முடியாது, அவை விலை அதிகமானவை. ஏழைகள் வாங்க முடியாது, பஞ்சம் பணக்காரர்களைப் பாதிக்காது. ஆனால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். லேவி, 26:26ஐ வாசியுங்கள். உங்கள் அப்பம் எனும் ஆதரவு கோலை நான் முறித்துப்போடும் போது பத்து ஸ்திரிகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தை சுட்டு, அதை திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள், நீங்கள் திருப்தியடைய மாட்டீர்கள்.”
பாடுபடும் ஏழைகள் மனந்திரும்பி தேவனை நோக்கிக் கூப்பிட்டு ரட்சிக்கப்படுவார்கள், பணக்காரர்களோ திருப்தியாயிருப்பதால் தேவனைத் தேடாமல் நியாயத்தீர்ப்படைந்து, நரகத்திலே தள்ளப்படுவார்கள். (லூ. 16; லாசரு ஐசுவரியவான் யாக், 2:5) பஞ்சம் துன்ப காலத்தின் ஆரம்பத்திற்கோர் அடையாளம்.
வ 7,8: நான்காம் முத்திரை மங்கின நிறமுள்ள குதிரை நாலாம் ஜீவன் யோவானை அழைத்து நான்காம் முத்திரை உடைப்பதைப் பாரென்றது. ஒரு மங்கின நிறமுள்ள குதிரை. அதின்மேலிருந்தவனுக்கு மரணம் என்று பெயர், பாதாளம் அவன் பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலை செய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக்கொடுக்கப்பட்டது. (எசேக், 14:21)
மரணம் முடிவல்ல - ஒரு தற்காலிக பிரிவே, ஆத்துமா சரீரத்தை விட்டு பிரிவது சரீர மரணம்; ஆத்துமா தேவனை விட்டுப் பிரிவது ஆவிக்குரிய நித்திய மரணம், நியாயத்தீர்ப்பிற்குப் பின் மரணமும், பாதாளமும் அக்கினிக்கடலாகிய நரகத்திலே தள்ளப்படுவார்கள். (வெளி. 20:14)
இன்றும் பூமியில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது, தற்கொலைகள்,நகைக்காக, பணத்திற்காக, இச்சைவெறிக்காக, சாதி மத வைராக்கியத்திற்காக நடக்கும் கொலைகள் கூடிக் கொண்டேபோகின்றன. எதையும் தடுக்கவோ, குறைக்கவோ யாராலும் முடியவில்லை! இது நாம் கடைசிக்காலத்தில் இருக்கிறோம் என்பதற்கான அடையாளம், இதோ இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும் என்பது நிறைவேறிக்கொண்டிருக்கிறது..
வ 9-11: ஐந்தாம் முத்திரை பரலோகத்தில் ரத்தசாட்சிகள்
நான்கு முத்திரைகள் உடைக்கப்படும் போதும், நான்கு ஜீவன்களும் யோவானை அழைத்தன. ஆனால் ஐந்தரம் முத்திரை உடைக்கும் பொழுது யோவான் தான் இருந்த இடத்திலிருந்தே பலிபீடத்தின் கீழ் ரத்த சாட்சிகளாக மரித்த ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் கீழே கண்டான். பழைய ஏற்பாட்டில் பலியாக கொல்லப்பட்ட மிருகங்களின் ரத்தம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றப்பட்டது. மாம்சத்தின் உயிர் அதின் ரத்தத்திலிருக்கிறது ஆகவே ஆத்துமாக்களைப் பலிபீடத்தின் அடியில் யோவான் கண்டான். பூத பாரம்பரியத்தின்படியேயும் ஆத்துமாக்கள் பலிபீடத்தினடியில் தான் கரக்கப்படுகின்றன. அந்த ஆத்துமாக்கள் 7 வருட அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் கொல்லப்பட்ட விசுவாசிகளின் ஆத்துமாக்களாக. இருக்கலாம். அந்த ஆத்துமாக்கள் தேவனை நோக்கி எங்கள் ரத்தத்திற்காக எதுவரைக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமலும், பழிவாங்காமலும் இருப்பீர்?” என்று கூப்பிட்டன அந்திக்கிறிஸ்துவின் காலத்தில் ரட்சிக்கப்படாத ஆத்துமாக்கள் நியாயத்தீர்ப்புக்குப் பயந்து “எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்?” என்று கதறின. நாம் எப்படி? துதிப்போமா அல்லது அலறுவோமா? (வ10)
வ 11: ரத்த சாட்சிகளானாலும் கேட்டது கிடைக்கவில்லை. “இன்னும் கொஞ்சக்காலம் காத்திருங்கள்' என்ற பதில் கிடைத்தது. அதை உறுதிப்படுத்தி ஆறுதல்படுத்த பரலோகத்தின் ஆடையாகிய வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டது.
வ 12-17: யோவான் ஆறாம் முத்திரையை ஆட்டுக்குட்டியானவர் உடைக்கக் கண்டான். பூமி மிகவும் அதிர்ந்தது. சூரியன் கறுப்புக் கம்பளியைப் போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று, ஜப்பானில் அணுகுண்டு போடப்பட்டபொழுது இதுபோன்ற காட்சி காணப்பட்டதாகச் சொல்லுகிறார்கள், ஏதோ ஒரு பயங்கரமான வெடி வெடித்திருக்க வேண்டும் அதனால்தான் நட்சத்திரங்களும் அத்திக்காய்கள் போல உதிர்ந்திருக்க வேண்டும்.
வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போல (அளவு சுருங்கி) விலகிற்று.. மலைகளும், தீவுகளும் இடம் பெயர்ந்தன. எவ்வளவு பயங்கரமான சத்தம் உண்டாயிருந்திருக்கும்! சீனாய் மலையில் கற்பனைகளை அன்பின் தேவன் அன்பாகக் கொடுத்த போது உண்டான சத்தத்தைக்கேட்ட இஸ்ரவேலர் என்ன சொன்னார்கள்? தேவன் எங்களோடே பேச வேண்டாம்! அவ்வளவு பயந்தார்கள். இப்பொழுதோ தேவன் கோபமாக: சராசரங்களை அசைக்கும் பொழுது எவ்வளவு பயங்கரமான சத்தம் உண்டாகும்? இதைக் கேட்கிற யார்தான் பயப்படாமல் இருக்க முடியும்? பூமியின் ராஜாக்களும்,பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும் பர்வதங்களின் குகைகளிலும், கன்மலைகளிலும் ஒளிந்துக்கொண்டு எங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று அலறுவார்கள். இரட்சிக்கப்பட்டு விசுவாசிகளான நமக்கோ ஒரு புகழிடமுண்டு! அதுதான் கல்வாரிச்சிலுவை! மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் என் கிருபை உன்னை "விட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்.
Author: Rev. S.C. Edison