அதிகாரம் - 10
‘இனி காலம் செல்லாது’
‘There will be no more delay.’
‘…பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்… “இனி காலம் செல்லாது” …என்று…ஆணையிட்டுச் சொன்னான்.
வச 1- 4: இந்த பலமுள்ள தூதன் மற்ற தூதர்களிலும் வித்தியாசமானவனாகவும் தேவனுடைய செய்தியை இடிகளின் சத்தத்தைப்போல அறிவிக்க அதிகாரம் உடையவனாகக் காட்சியளித்தான். ஆனால், நிச்சயமாக இந்த தூதன் கிறிஸ்து அல்ல. ஏனென்றால், யோவான் மற்ற தரிசனங்களில் கிறிஸ்துவை கண்டபோது வணங்கி தொழுதுகொண்டதுபோல இந்த தூதனைக் கண்டபோது செய்யவில்லை. அவன் கையிலிருந்த புத்தகம் திறந்திருந்தது, அப்புத்தகத்தில் எழுதப்பட்டவை எல்லா மக்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை என்று உணர்த்துகிறது.
மேகம் வானவில், சூரியன் போன்ற இயற்கை படைப்பகளால் சூழப்பட்டும், சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்பதுமாக இந்த தூதன் காணப்பட்டது, இவன் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையுள்ள ஊழியன் என்பதையும், இந்த தூதன் அறிவிக்கும் செய்தி பூமியின் எல்லா பகுதிகளையும் பாதிக்கப்போவதையும் தெரிவிக்கிறது.
ஏழு இடி முழக்கங்களாக இந்த தூதன் பேசியதை எழுதவேண்டாம் என்று யோவான் தடுக்கப்பட்டான்.(வச 4), ஏனென்றால், அந்த அறிவிப்பால் வரப்போகும் நிகழ்வுகள் உடனே நிகழாமல் சற்று தாமதமாகும் என்பதே.
வச 6, 7 : ‘இனி காலம் செல்லாது’ என்று இந்த பலமுள்ள தூதன் தான் சொன்னதை உறுதிப்படுத்தும் விதத்தில் ஆணையிட்டு சொன்னான. அந்திக் கிறிஸ்துவின ஆட்சி முடிவுக்கு வரவும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சி இந்த பூமியில துவங்கவும் காலம் நெருங்கிவிட்டது. மேலும் அந்த பலமுள்ள தூதன், ஏழாம் தூதன் எக்காள் ஊதப்போகிறபோது தேவ இரகசியம் நிறைவேறும் என்றும் சொன்னான். தேவன் தமது தீர்க்கதரிசிகள் மூலமாக சத்திய வேதத்தில் உரைத்துள்ள கீழ்படியாத தேசங்கள் மேல் தமது நியாயத்தீர்ப்பின் கோபாக்கினை ஊற்றப்போகும் தீர்க்கதரிசனங்கள் யாவும் நிறைவேறி முடியும்.
வச 8- 10: அந்த பலமுள்ள தூதனுடைய கையிலிருந்த திறந்த புத்தகத்தை வாங்கி புசிக்கும்படியாக கட்டளை பெற்றான். யோவன் அதை வாங்கி புசித்தபோது அது அவன் வாய்க்கு மதுரமாகவும் வயிற்றுக்கோ கசப்பாகவும் இருந்தது. ஆம், கர்த்தருடைய கட்டளைகள் கேட்பதற்கு இனிமையாகவும் ஆறுதலாகவும் இருக்கும். ஆனால், அவற்றை கடைபிடிக்கும்போது அவை சற்று கடினமாகவும், சில கசப்பான அனுபவங்களினூடே செல்ல வேண்டியதாகவும் இருக்கும்.
வச 11: யோவான் தான் ஒதுக்கப்பட்ட ஒரு தீவில் தப்பிக்க வழியில்லாத இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் தனது எல்லா ஊழியங்களும் முடிந்துவிட்டது என்றே நினைத்தான். ஆனால், இங்கே தேவன் யோவானிடம் இன்னும் உனக்கு ஊழியங்கள் உண்டு என்று சொன்னார். திறக்கப்பட்ட அந்த புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களை இப்பொழுது யோவான் புறஜாதிகளிடம் சென்று அறிவிக்க வேண்டும். அந்த புத்தகத்தை யோவான் புசியாதிருந்தால் அதில் எழுதப்பட்டவற்றை தீர்க்கதரிசனமாக உரைக்க முடியாதவனாக இருந்திருப்பான்.
Author: Rev. Dr. R. Samuel
10 ம் அதிகாரம் பலமுள்ள தூதனும் திறக்கப்பட்ட சிறிய புத்தகச்சுருளும்
இது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் மத்தியப்பகுதியில் நடந்த சம்பவம் ,
இந்த அதிகாரத்திலுள்ளவைகள் நடக்கும் பொழுது யோவான் பூமியிலிருக்கிறான். அதனால்தான் வ1ல் வானத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன் என்றான். மேலும் பரலோகத்தில் சமுத்திரம் இடையாது. ஆகவே அந்த தூதனும் பூமியிலேதான் நின்றான். மூன்றாவதாக வ4,8ல் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன் என்றான். ஆகவே யோவான் பூமியிலிருந்துதான் அந்த சத்தத்தைக் கேட்டான், இயேசு தூதனாக பூமிக்கு வந்ததினால், வானத்திலிருந்து உண்டான சத்தம் பிதாவினுடைய சத்தமாகத்தான் இருக்க வேண்டும்.
வ1 வானத்திலிருந்து இறங்கி வரக்கண்டேன்
இந்த தூதனைப்பற்றிய வர்ணனை பலமுள்ள தூதன். (வெளி. 5:2 புத்தகத்தைத் திறக்கவும் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரமானவரை சுட்டிக்காட்டவும் வந்த தூதன். இவன் யாரென்பதைக் குறித்து ஒரு சர்ச்சையும் கிடையாது) ஆனால் வெளி, 10:1லுள்ள தூதன் யாரென்பதைக் குறித்து நெடுங்காலமாய் சந்தேகம் உள்ளது. காரணம் என்ன?
1. வ1 மேகம் அவனைச்சூழ்ந்திருந்தது.
மேகம் தேவனோடு சம்பந்தப்பட்டது. யாத். 16:10 கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது; யாத், 24:16 ஏழாம் நாளிலே அவர் மேகத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்; எண். 11:25 கர்த்தர் மேகத்தில் இறங்கி அவனோடே பேசினார் ;
லேவி, 16:2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன் ;
சங் , 97:2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது சங், 104:3 மேகங்களை தமது இரதமாக்குகிறார்; அப். 1:9 அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக் கொண்டது: வெளி. 1:7 மேகங்களோடு வருகிறார். அப்படியானால் தூதன் யார் ?
2. தூதனின் சிரசின்மேல் வானவில்லிருந்தது எசேக் .1:28 கர்த்தருடைய மகிமை வானவில் போலக் காணப்பட்டது; வெளி. 4:3 சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது. சிரசின்மேல் வானவில்லிருந்தது. இந்த தூதன் யார் ?
3. தூதனின் முகம் சூரியனைப் போலவும் இருந்தது, வெளி. 1:16ல் யோவான் இயேசுவைக்கண்டபோது அவருடைய முகம் வல்லமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது என்றான். மத். 17:2ல் மறுரூபமலையில் அவர் முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது என்று மத்தேயு எழுதியுள்ளார் .
மோசேயின் முகம் பிரகாசித்தது; ஸ்தேவானின் முகம் பிரகாசித்தது; ஆனால் சூரியனைப்போல் பிரகாசிக்கவில்லை. அப்படியானால் இந்த தூதன் யார் ?
4, தூதனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப் போலவும் இருந்தது.
இயேசுவைக்கண்ட யோவான் அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது என்றான். எசேக்கியேல் தேவதரிசனத்தில் மனுஷ சாயலுக் கொப்பான ஒருவரைக்கண்டபோது அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் ௮க்கினிமயமாகவும் அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக் கண்டேன் என்றான் (எசேக் , 1:27). இது தேவனுடைய பரிசுத்தத்தையும் , நீதியையும் குறிக்கும் .
யோபு 4:18ல் தேவன் தம்முடைய தூதரின் மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே என்றுள்ளது. அப்படியிருக்க ஒரு தூதனுக்கு இவ்வளவு பரிசுத்தம், நீதி, பிரகாசம். இருக்க முடியுமோ?
5. இறக்கப்பட்ட ஒரு சிறு புத்தகம் அவன் கையில் இருந்தது. அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் சிங்காசனத்திலிருந்தவரிடமிருந்து ஒரு முத்திரையிட்ட புத்தகத்தை வாங்கி அதின் 7 முத்திரைகளையும் உடைத்தார். இந்தப் புத்தகம் அதுவாயிருக்கலாமோ என்ற சந்தேகம் எழுகின்றது. ஏனெனில் அந்தப் புத்தகம் திறக்கப்பட்டிருந்தது.
வ5-7 . நான் கண்ட தூதன் தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி இந்தப்பகுதியை வைத்துத்தான் சிலர் இது இயேசு அல்ல, தூதன் தேவன் பேரில் ஆணையிட்டானே என்கிறார்கள். சில சம்பவங்களை நாம் எண்ணிப்பார்க்கலாம் ,
1. உயிர்த்தெழுந்த இயேசுபெத்தானியாவிலேதம்முடைய கைகளை உயர்த்தி தமது சீஷர்களை ஆசீர்வதித்தார் லூக்கா 24:50. கைகளை உயர்த்தி ஜெபிப்பது யூத வழக்கம்,
2. ஆணையிடுவது யூத வழக்கம். எபி, 6:13,14ல் ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணின போது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவரும் இல்லாதபடியினாலே தமது பேரிலேதானே ஆணையிட்டு ஆசீர்வதித்தார்.
3. எபி, 7:20ல் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக கர்த்தர் ஆணையிட்டு நியமித்தார்.
4. உன் சந்ததியிலே கிறிஸ்து பிறப்பாரென்று கர்த்தர் தாவீதுக்கு சத்தியம் பண்ணினார். அப் . 2:30.
மேற்கூறிய வசனங்களிலிருந்து மிகமுக்கியமான காரியங்களுக்கு ஆணையிட்டதை அறிதிறோம். ஆகவே ஏழாம் தூதன் எக்காளம் ஊதும் பொழுது நடக்கப்போகும் காரியங்கள் மிக முக்கியமானவை என்று அறிந்து கொள்ளலாம் .
6. அவன் வலது பாதம் சமுத்திரத்தின் மேலும் , இடது பாதம் பூமியின் மேலும் வைக்கப்பட்டிருந்தது, சங்கம்போல மகாசத்தமாய் கெர்ஜித்தான் இயேசுவின் சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சல் போலிருந்தது என்று எழுதினான் .
தூதனுடைய பாதங்கள் பூமியிலும் சமுத்திரத்திலும் இருப்பது அவனுக்கு அவைகளின் மேலுள்ள அதிகாரத்தைக் குறிக்கும், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் இயேசுவுக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது, அவன் சிங்கம் போல கெர்ஜித்த பொழுது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. வ6 இனி காலம் செல்லாது!
வெளி. 6ம் அதிகாரத்திலிருந்து நடப்பவைகளெல்லாம் துன்ப காலமாகிய அந்திகிறிஸ்துவின் ஆட்சியில் நடப்பவை என்பதை மறந்துபோகக்கூடாது. முதல் மூன்றரை ஆண்டுகள் துன்பக்காலமென்றும், அடுத்த மூன்றரையாண்டுகள் கொடுந்துன்பக்காலமென்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது. 7ம் தூதன் எக்காளம் ஊதும் பொழுது நடப்பவை அந்திக்கிறிஸ்துவை தேவன் அழிக்கும் பொழுது சம்பவிப்பவைகளாக இருக்கும், ஆகவே இனிவரும் அதிகாரங்களில் அந்திக்கிறிஸ்துவையும், அவனுடைய ஆண்டவனாகிய சாத்தானையும் குறித்து அறிந்துகொள்ளலாம்.
ஏழாம் தூதனுடைய எக்காளம் ஊதுகிற நாட்களிலே, அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவரகசியம் நிறைவேறும் என்று ஆணையிட்டுச்சொன்னான் . “நிறைவேறும் ” என்றதால் அது தீர்க்கதரிசனங்களாயிருக்கலாம்.
1. ஆபிரகாமுக்குப் பிள்ளைகளில்லாத காலத்தில், “உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்களென்றும் நீ நிச்சயமாய் அறியக்கடவாய் என்றார். ஆபிரகாமுக்குத்தன் சந்ததியார், எந்த தேசத்திற்கு போவார்களென்றோ, 400 வருஷங்களுக்குப் பிறகு என்ன நடக்குமென்றோ தெரியாது. அவனைப் பொறுத்தவரை அது ரகசியம், ஆனால் அது தேவனுடைய கால அட்டவணைப்படிதான் நிறைவேறியது.
2. இயேசுவின் பிறப்பைக்குறித்து ஏசாயாவுக்கு சொல்லப்பட்டது, அவரது மரணத்தைக்குறித்து, இரட்சிப்பைக் குறித்து சொல்லப்பட்டது. எப்பொழுது நடக்கும் என்று ஏசாயாவுக்குத் தெரியாது. அது தேவ ரகசியம் , ஆனால் நிறைவேறிற்று. நமக்கு விளங்காத தேவனுடைய செயல்கள் எல்லாமே தேவரகசியம்தான் இங்கே சொல்லப்பட்ட தேவ ரகசியம் அந்திக் கிறிஸ்துவின் ராஜ்யத்தின் அழிவும் சாத்தானின் ராஜ்யத்தின் முடிவுமாக இருக்கலாம்.
3. தேவரகசியம் நிறைவேறும் என்று சொல்லும்பொழுது அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியில் 42 மாதங்கள் ஜனங்கள் துன்பம் அனுபவித்துவிட்டார்கள். இன்னும் பூமி. இருக்கப் போவது 1260 நாட்கள் மட்டுமே! அதன்பின் என்ன நடக்குமோ எப்படி நடக்குமோ அது தேவரகசியம். ஏழாவது எக்காளம் ஊதப்படும் பொழுது அது நடக்கும். அப்பொழுது மிகப்பயங்கரமானதும், கொடுமையானதுமான காரியங்கள் நடக்கும் , ஆகவே அது கொடுந் துன்பக்காலம் எனப்படும் .
வ8-11 தூதனிடமிருந்து புத்தகத்தை வாங்கிப் புசி என்றுயோவானுக்குக் கட்டளை பிறந்தது, அவன் அந்தப்புத்தகத்தை வாங்கிப் புசித்தான். அது அவன் வாய்க்கு தேனைப்போல மதுரமாயிருந்தது. ஆனால் அது அவன் வயிற்றுக்குக் கசப்பாயிருந்தது. அந்த தூதன் யோவானை நோக்கி “நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும் , பாஷைக்காரரையும் ராஜாக்களையுங்குறித்துத் தர்க்கதரிசனஞ் சொல்ல வேண்டும் ” என்றான் .
அந்தப்புத்தகத்தில் எழுதியிருந்ததென்ன? அது ஏன் கசப்பாயிற்று?
அந்தப்புத்தகத்தில் சாத்தானின் அழிவையும், கிறிஸ்துவின் வருகையையும் குறித்து எழுதப்பட்டிருக்கலாம், சாத்தானைப் பாதாளத்தில் அடைத்து இயேசு பூமியிலே ஆயிரம் வருடம் அரசாளுவார் என்பது இனிப்பான செய்தி, அதற்குப் பின் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நியாயத் தீர்படைந்து நரகாக்கினைக்குத் தள்ளப்படுவார்களென்பது கசப்பான செய்தி, ஆகவே அந்தப் புத்தகம் வாய்க்கு மதுரமும் , வயிற்றுக்குக் கசப்புமாயிருந்தது.
இந்தப் புத்தகத்தைப் புசித்தபின் தீர்க்கதரிசனம் சொல் என்று யோவானுக்குக் கட்டளை பிறந்தது.
தீர்க்கதரிசனம் என்பது தேவனுடைய வார்த்தையை, அவரிடத்தில் கேட்டு, அதை ஜனங்களுக்கு சொல்வது. அவருடைய வசனத்தால் நிறைந்த பின்பே ஜனங்களுடன் பேச வேண்டும் என்பதே தேவனுடைய ஒழுங்கு. எசேக்கியேலிலும் இதே ஒழுங்கைக் காண்கிறோம், எசேக் 3:1 காண்கிறதைப் புசி. புசித்த பின் பேசு, எல்லாருக்கும் இதே ஒழுங்குதான். பிறருக்கு சுவிசேஷம் சொல்லுமுன் நாம் வசனத்தால் நிறைந் தவர்களாய் இருக்க வேண்டும் .
Author: Rev. S.C. Edison