முக்கியக் கருத்து
- கர்த்தருடைய இரட்சிப்பை சகல ஜாதிகளுக்கும் அறிவிக்கவேண்டும்.
- கர்த்தரைப் பரிசுத்த அலங்காரத்துடன் தொழுதுகொள்ளவேண்டும்.
- கர்த்தர் பூமியை நீதியாய் நியாயந்தீர்க்க சீக்கிரமாய் வருகிறார்.
1. கர்த்தரின் இரட்சிப்பை சகல ஜாதிகளுக்கும் அறிவிக்கவேண்டும் (வச.1-5)
புதிய ஏற்பாட்டின் சுவிசேஷம், பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்ரவேல் ஜனத்தின் தேவனாகிய யேகோவா தேவனே மெய்யான கர்த்தர். மற்ற தேவர்கள் என்று அழைக்கப்படும் நாமங்கள் பொய்யானவை, விக்கிரகங்கள். கர்த்தர் ஒருவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவர் மாத்திரமே மனு மக்களை இரட்சிக்க வல்ல வர். ஆகவே, அவருடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை சகல ஜாதிகளுக்கும் பிரஸ்தாபம் செய்யவேண்டும் என்ற புதிய ஏற்பாட்டின் சத்தியத்தை இந்த சங்கீதத்தில் சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக உரைத்திருக்கிறார்.
"... நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, ... உபதேசம்பண்ணுங்கள்' என்று மத்தேயு 28:19,20 வசனங்களில் ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கிறார். ஆகவே பழைய ஏற்பாட்டில் புதிய ஏற்பாட்டு சத்தியத்தை புதுப்பாட்டு பாடி அறிவிக்க அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
2. பரிசுத்தமான தொழுகை (வச.6-9)
கர்த்தர் பரிசுத்தர். அவரிடத்தில் மகிமையும், கனமும் இருக்கிறது. அவரை நெருங்கி அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் பரிசுத்தம் அடைந்து தொழுதுகொள்ளவேண்டும். "... கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக' என்று லேவியராகமம் 11:45 ஆம் வசனத்தில் யேகோவா தேவன் இஸ்ரவேல் மக்களிடம் கூறியிருக்கிறார். கறைதிரையற்ற ஒரு பரிசுத்தமான திருச்சபையை உருவாக்கி, தமக்கு முன் அதை நிறுத்திக்கொள்வதே தேவனுடைய நோக்கம் என்று எபேசியர் 5:25-27 வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் கூறி இருக்கிறார். மேலும், ஜனங்களின் எல்லா வம்சங்களையும் இவ்வுலகத்தின் அசுத்தங்களினின்று இரட்சித்து பரிசுத்தப்படுத்தும் தேவனுடைய திட்டத்தை இந்த சங்கீதம் வெளிப்படுத்துகிறது.
3. கர்த்தர் பூமியின் நீதியான நியாயாதிபதி (வச.10-13)
பாவத்தினாலும், அக்கிரமங்களினாலும் அசுத்தப்பட்டிருக்கிற பூலோக ஜனங்களை பரிசுத்தமடைய அழைப்பு விடுத்து, இரட்சிப்பை ஏற்றுக்கொள்கிற ஜனத்தை தம்மிடம் சேர்த்துக்கொள்ளவும், பூலோக ஜாதிகளை நீதியாய் நியாயந்தீர்த்து, பூச்சக்கரம் முழுவதையும் நேர்மையாய் அரசாளவும் கர்த்தர் சீக்கிரம் வருகிறார் என்ற சத்தியம் இங்கே தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது. ஏசாயா 11:1-10, பிலிப்பியர் 4:20,21.
Author: Rev. Dr. R. Samuel