முக்கியக் கருத்து
- துன்மார்க்கருக்கு தேவன் நீதியை சரிகட்டுவார்.
- நீதிமானை சிட்சித்து, சறுக்குதலுக்கு தப்புவிப்பார்.
1. துன்மார்க்கருக்கு தேவன் நீதியை சரிகட்டுவார் (வச.1-11, 19-21, 23)
இந்த உலகத்தில் துன்மார்க்கருடைய கொடுமைகளாலும் அநியாயங்களாலும் விசுவாசிகள் துன்பத்திற்குள்ளாக்கப்படுகிறார்கள். சத்தியத்திற்காக அர்ப்பணித்துள்ளதன் காரணமாக இந்த உலகம் விசுவாசிகளைத் தவறாக நடத்துகிறார்கள் (வச.5,6,21). ஆகவே, விசுவாசிகள் பொல்லாப்பு தங்களை மேற்கொள்வதைத் தடுத்து நிறுத்த இரவும் பகலும் ஜெபிக்கிறார்கள் (வச.1-4, 23). தேவன் இவர்கள் ஜெபத்தைக் கேட்டு சீக்கிரமாகவே துன்மார்க்கனுக்கு நீதியை சரிகட்டி, அவனுடைய அக்கிரமத்தை அவன்மேல் திருப்பி பதிலளிப்பார் (வச.6-11, 20).
"தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில்... நியாயஞ்செய்வார்' என்று நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லூக்கா 18:7 ஆம் வசனத்தில் கூறியிருக்கிறார். ஆகவே, துன்மார்க்கனுடைய யோசனைகள் கொடுமைகள் இவை என்றும் நிலைத்து நிற்காது.
"மனுஷனுடைய யோசனைகள் வீண்' (வச.11) என்று கர்த்தர் கூறுகிறார். கர்த்தர் மனுஷனுடைய யோசனைகள் யாவற்றையும் அறிந்திருக்கிறார் என்று யோவான் 2:24 ஆம் வசனத்தில் வாசிக்கிறோம்.
2. நீதிமானை சிட்சித்து, சறுக்குதலுக்கு தேவன் அவர்களைத் தப்புவிக்கிறார் (வச.12-19, 22-23)
துன்மார்க்கனுடைய கொடுமைகளால் நீதிமான் சோர்வடைந்து, கலங்கி , தேவனுடைய வழியைவிட்டு விலகிப்போகிற சூழ்நிலைகள் வரும்போது (வச.18). தேவனே தமது ஜனத்தைத் தேற்றி, தைரியப்படு(வச.19)த்தி, பலப்படுத்தி நிறுத்துகிறார்.
"வழுவாதபடி உங்களைக் காக்கவும், உங்களை மாசற்றவர்களாக நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்' என்று யூதா 24 ஆம் வசனம் மிக அழகாகக் கூறுகிறது.
அதுமாத்திரமல்லாமல், துன்மார்க்கனால் வரும் தீங்கு நாட்களில் நாம் பொறுமையோடே காத்திருக்கவும் (வச.12), நாம் பொறுமையிழந்து தவறு செய்தால் நம்மை சிட்சித்து திருத்தவும் (வச.13) வேத வசன அடிப்படையில் நம்மை நடத்தவும் தேவன் நம்மீது மிகவும் கவனமுள்ளவராயிருக்கிறார். அவருடைய கிருபையே நம்மைத் தவறான பாதையில் செல்லாமலும், அழிந்து போகாமலும் விசுவாச ஜீவியத்தில் இம்மட்டும் நடத்தி வருகிறது (வச.14-17, 22).
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே' புலம்பல் 3:22 இல் வாசிக்கிறோம்.
ஆகவே, தேவன் நீதிமானை கைவிடார். துன்மார்க்கத்தில் நிலைத்திருப்பவனையும் தண்டியாமல் விடார் என்று விசுவாசிகள் தெரிந்துகொண்டு, விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
"மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்' (கலாத்தியர் 6:7).
Author: Rev. Dr. R. Samuel