முக்கியக் கருத்து
- கர்த்தருடைய ராஜரீகம் ஸ்திரமானது, பெலமானது, நித்தியமானது.
- கர்த்தரைப்பற்றிய சாட்சிகள் உண்மையானது.
முன்னுரை
கர்த்தர் அரசாண்டு கொண்டிருக்கிறார் என்ற உண்மையையும் அவருடைய ஆட்சியின் நன்மைகளையும் தெரிந்துகொள்வதன் மூலமாகத்தான் ஒரு பக்தன் கர்த்தரிடம் தன் முழுமையான அர்ப்பணிப்பையும் பக்தியையும் செலுத்த முடியும்.
1. கர்த்தர் அரசாளுகிறார் (வச.1,2)
கர்த்தர் இந்தப் பூலோகத்தை அரசாண்டுகொண்டிருக்கிறார். அவர் பராக்கிரமமும், மகத்துவமும் உடையவராயிருக்கிறபடி யால் தாம் அரசாளும் இந்தப் பூமி இன்றுவரை நிலைபெற்றிருக்கிறது. இந்தப் பூமியை கர்த்தர் தமது வல்லமையினால் படைத்தார் என்று விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளுகிறோம்.
"விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்று ... அறிந்திருக்கிறோம்' (எபிரெயர் 11:3).
அதேபோல, விசுவாசத்தினாலே தேவன் இந்தப் பூமியை அரசாளுகிறார் என்றும் நாம் அறிந்து கொள்ளவேண்டும். அவருடைய பராக்கிரமத்தையும் மகத்துவத்தையும் விசுவாசிக்கவேண்டும்.
2. பூமியின் நிலமை (வச.3,4)
இந்தப் பூலோகத்திலே பல குழப்பங்களும், விபரீதங்களும், சேதங்களும் சமுத்திரத்தின் அலைகளின் இரைச்சலைப்போல எழும்புகிறது என்று பார்க்கிறோம். ஆனாலும், கர்த்தருடைய வல்லமைக்கு முன்பாக இவைகள் ஒன்றுமில்லை. இவற்றைக் கர்த்தர் தமது கட்டளைக்கும், அதிகாரத்திற்கும் உள்ளடக்கி வைத்திருக்கிறார்.
"இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது...' (யோபு 38:11) என்று கடலைப் பார்த்துக் கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். விசுவாசிகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும்கூட நமது பிரச்சனைகள் தேவனுடைய வல்லமையினால் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படும் என்று விசுவாசிக்கும்போது, கர்த்தர் அற்புதங்களைச் செய்வார்.
3. கர்த்தரைப்பற்றிய சாட்சி உண்மையானது (வச.5)
கர்த்தருடைய ஆளுகை நித்தியமானது, பரிசுத்தத்தை ஆதாரமாகக் கொண்டது, ஒருபோதும் அழியாது, ஸ்திரமானது. அவருடைய சிங்காசனம் உறுதியானது, அநாதியானது என்ற சத்தியம் உண்மையானது. இதை விசுவாசிக்கும்போது தேவனுடைய மகிமை வெளிப்படும். "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்' யோவான் 11:40 என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே கூறியிருக்கிறார்.
Author: Rev. Dr. R. Samuel