முக்கியக் கருத்து
- கர்த்தருடைய மகத்துவ செய்கைகளிமித்தம் அவரை துதிப்பது நல்லது.
- துன்மார்க்கர் இதை உணராமல் அழிந்துபோவார்கள்.
- நீதிமான்கள் கர்த்தரை கீர்த்தனம்பண்ணி செழித்திருப்பார்கள்.
முன்னுரை
இஸ்ரவேல் மக்கள் ஒய்வுநாளில் கர்த்தரை தொழுதுகொண்டு துதித்துப்பாடும் கீர்த்தன சங்கீதம் இது. விசுவாசிகளாகிய நாமும் நமது ஆராதனை நேரத்தில் மகிழ்ச்சியோடு கர்த்தரை துதித்துப்பாடவேண்டும்.
1 நாளாகமம் 23:5,6
1. கர்த்தரை துதிப்பது நல்லது (வச.1,2,3)
கர்த்தரைத் துதிக்கும் செயல் நல்லது, இது நமது கடமையும் கூட. தியானத்தோடும், வாத்தியக் கருவிகளோடும் கர்த்தரை துதித்தல் நம் ஆத்துமாவிற்கு நன்மை பயக்கும். ஒரு நேரம் மாத்திரமல்ல, காலை, இரவு என்னும் ஒரு நாளின் இரு நேரங்களிலும் கர்த்தரைத் துதித்து ஆராதிப்பதே சரியான முறையாகும். தேவ மக்கள் கர்த்தரைத் துதிப்பதன் மூலம் கர்த்தரோடு ஐக்கியப்படுகிறார்கள். கர்த்தருடைய கிருபையை இவ்விதமாக அறிவித்துப்பாடுதல் நம்மை அழிவிலிருந்து பாதுகாக்கும்.
"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே' புலம்பல் 3:22 என்று எரேமியா பாடுகிறார்.
2. கர்த்தருடைய மகத்துவ செயல்கள் (வச.4,5)
கர்த்தர் தமது மகத்துவமான செயல்கள் மூலம் தேவமக்களை மகிழ்ச்சியாக்குகிறார். ஆகவே, தேவமக்கள் தேவனை ஆனந்த சத்தமிட்டுப் பாடத்தூண்டப்படுகிறார்கள்.
கர்த்தர் செய்த நன்மைகளினிமித்தம் அவருக்கு நன்றி செலுத்தவும், அவருடைய மகத்துவமான கிரியைகளினிமித்தம் அவருக்குத் துதிகள் ஏறெடுக்கவும், கர்த்தரைப்பற்றிய யோசனைகள் தேவ மக்களை ஒரு ஆழமான அனுபவத்திற்குள் கொண்டு செல்கிறது.
நாம் அதை உணர்ந்திருக்கிறோமா?
3. மூடன் அதை உணரான் (வச.6-7)
கர்த்தர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறார் (வச.8). ஆகவே அவரைத் துதித்துப் பாடி கீர்த்தனம் செய்வது நன்மைபயக்கும் என்பதை உணராத ஒரு மனுஷன் மிருக குணமுள்ள மூடன் (வச.6). இவ்வுலக வாழ்க்கையில் தான் செய்யத்தக்க மகா உன்னத செயலை உணராதபடியினாலே துன்மார்க்கர் சொற்ப காலம் தழைத்தாலும்கூட சீக்கிரத்தில் வாடிப்போகும் புல்லைப்போல துவண்டு அழிந்துபோவார்கள் (வச.7). சர்வ வல்ல தேவனுக்கு அவர்கள் சத்துருக்களாக மாறிவிட்டபடியினால் வளமாக வாழமுடியாமல் அழிந்துபோவார்கள் (வச.9).
ஆகவே, உன்னதமான தேவனை நாம் பற்றிக்கொண்டு அழிவுக்குத் தப்பி, உச்சிதமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
4. நீதிமான் அதினால் செழிப்பான் (வச.10-15)
கர்த்தருடைய மகத்துவம், நீதி, ஆசீர்வாதங்கள் இவற்றை அறிந்து பற்றிக்கொள்ளும் மனிதனே நீதிமான். இப்படிப்பட்ட நீதிமான்களுக்குக் கர்த்தர் வளமான ஆசீர்வாதங்களை ஏராளமாகத் தருகிறார் என்று இந்த வசனங்களில் வாசிக்கிறோம். - காண்டாமிருகத்தின் கொம்புக்கொத்த மகாபெலனை கர்த்தர் கொடுப்பார் (வச.10).
- புது எண்ணெயாகிய தேவாவியின் அபிஷேகத்தால் நிரப்புவார் (வச.10).
- விரோதமாக எழும்பும் சத்துருக்கள் அடங்கிப்போவதை காணச்செய்வார் (வச.11) ஏசாயா 54:17.
- பனைமரத்தைப்போல உயர்ந்தும், கேதுரு மரத்தைப்போல படர்ந்தும் எல்லா திசைகளிலும் வளர்ச்சியடையச் செய்வார். (வச.12)
- கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தரை எப்போதும் துதிப்பதன்மூலம் மிகுந்த செழிப்பைப் பெறச்சேய்வார். (13)
- வயோதிப வயதிலும் கர்த்தருக்கும் மற்றவர்களுக்கும் பிரயோசனமாக இருக்கும் விதத்தில் ஆரோக்கியமாக இருப்பார்கள் (வச.15)
கர்த்தர் நீதிமானை இவ்விதமாக ஆசீர்வதித்து, சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோகச் செய்வதினாலே அவர் உத்தமரென்பதையும், அவரிடத்தில் அநீதி இல்லையென்பதையும் விளங்கச்செய்கிறார் (வச.14)
வெளி. 22:11,12.
Author: Rev. Dr. R. Samuel