முக்கிய கருத்து :
- கர்த்தர் நீதியாய் இந்த உலகத்தை நியாயம் தீர்ப்பார்.
- கர்த்தரை தேடுகிறவர்கள் கைவிடப்படுவதில்லை.
1. கர்த்தரைத் துதிப்பதும், கர்த்தரில் மகிழ்ச்சியாயிருப்பதும் கர்த்தரின் செய்கைகளை மற்றவர்களுக்கு விவரித்து அறிவிப்பதும் தனது வாழ்க்கையின் சிறப்பு அம்சமாக தாவீது செய்துவந்தான் (வச.1,2). சீயோனிலிருந்து கர்த்தரை தான் துதிப்பது தடைசெய்யப்படாதபடி தன்னைப் பகைக்கிறவர்களால் வரும் துன்பத்தினின்று மீட்க கர்த்தர் தனக்கு இரங்கவேண்டும் என்றும் தாவீது ஜெபிக்கிறான் (வச.13,14). சீயோனில் வாசமாயிருப்பவர்கள் கர்த்தரைத் துதிக்கும்படி தாவீது அழைப்பு விடுக்கிறார். சீயோனில் வாசமாயிருக்கும் கர்த்தரைக் கீர்த்தனம் செய்வது, கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியில் நடைபெறப்போகிற சம்பவம். அதை தீர்க்க தரிசனமாக வசனம் 11இல் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சீயோன் என்பது புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவின் சபையையும் விசுவாசிகளையும் குறிக்கிறது. ஆகவே விசுவாசிகள் கர்த்தரை துதித்து கர்த்தருடைய இரட்சிப்பை தேசங்களுக்கு அறிவிக்கவேண்டும்.
"சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு' என்று செப்பனியா 3:14 வசனத்தில் வாசிக்கிறோம்.
2. கர்த்தர் இந்த உலகத்தை தமது சிங்காசனத்திலிருந்து நீதியாய் நியாயத்தீர்ப்பு செய்வார் (வச.8,19,20). துன்மார்க்கரும் தேவனை மறக்கிற எல்லா தேசங்களும் அழிந்து நரகத்தில் தள்ளப்படுவார்கள் (வச.3-7,15-17).
"கொடியன் அற்றுப்போவான், ... அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள்' (ஏசாயா 29:20,21).
"பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதன்மேல் வீற்றிருக்கிறவரையும் ... கண்டேன்; ... யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். ... ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்' வெளி.20:11-15 என்ற வசனங்கள் இந்த உண்மையை வெளிப்படுத்துகிறது.
3. கர்த்தர் சிறுமைப்பட்டவனுக்கு அடைக்கலமாகவும் தஞ்சமாகவும் இருந்து, கர்த்தரைத் தேடுகிறவர்களைக் கைவிடாமல் இருந்து காப்பார். சிறுமைப்பட்டவன் கூப்பிடுதலைக் கேட்டு, எளியவனை என்றும் மறவாமலும் தயை செய்வார் என்று (8,9,10,12,18) வசனங்களில் எழுதியிருக்கிறார்.
"அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்' உபாகமம் 33:27. "அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை' வெளி.21:4 என்ற வாக்குத்தத்த வசனங்கள் இதை உறுதிப்படுத்துகிறது.
கர்த்தர் துன்மார்க்கனை நியாயந்தீர்த்து தேவனை தேடுகிறவர்களுக்கு இரக்கஞ்செய்வது உலக முடிவில் மாத்திரமல்லாமல், இவ்வுலக வாழ்க்கையிலும் கூட தொடர்ந்து செய்கிறார்.
"... அவன் (நீதிமான்) செய்வதெல்லாம் வாய்க்கும். துன்மார்க்கரோ ... காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்' (சங்கீதம் 1:3,4) .
Author: Rev. Dr. R. Samuel