முக்கியக் கருத்து
- தேவனுடைய முக்கியத்துவம் வல்லமை இவற்றை அறியும் ஜனம் பாக்கியமும் உயர்வும் பெறும்.
- தேவன் தாவீதுடன் செய்த உடன்படிக்கை.
முன்னுரை
பாடகர் குழுவின் தலைவனாகிய ஏத்தான் என்ற ஏமானின் சகோதரன் பாடிய போதக சங்கீதம். தேவனுடைய வல்லமை மகத்துவத்தை அறிந்த ஜனம் பாக்கியமுள்ளது. அந்த ஜனத்திற்கு ஒரு இராஜாவை தேவன் கொடுத்து அவனுடன் உடன்படிக்கை செய்தார். அந்த உடன்படிக்கையை தேவன் மாம்ச பிரகாரமாக நிறைவேற்றாமல் ஆவிக்குரிய பிரகாரமாக நிறைவேற்றினார் என்பதை நாம் தியானித்து தெரிந்துகொள்வோம்.
1. தேவனுடைய வல்லமையையும், மகத்துவத்தையும், உடன்படிக்கையையும் பாடுதல் (வச.1-14)
"ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்?' (வச.6)
"சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்?' (வச.8)
"நீர் ராகாபை (எகிப்தை) வெட்டுண்ட ஒருவனைப்போல நொறுக்கினீர்' (வச.10)
என்ற வசனங்கள் கர்த்தருடைய பராக்கிரமத்தை விவரிக்கிறது யாத்திராகமம் 15:11.
சேனைகளின் கர்த்தர் தமது ஜனங்களுக்கு பாதுகாப்பாக இருந்து இக்கட்டுகளுக்குத் தப்புவிக்கிறார்.
சரணம்
1. கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சூழ்ந்திடினும்
மேக ஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன் செல்லுவாய்
பல்லவி
பயப்படாதே கலங்கிடாதே
பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்
பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்
3. கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்ரு சேனை மூழ்கி மாளும்
ஜெயஞ் சிறந்தே முன் செல்லுவாய்.
பாட்டு - சகோதரி சாராள் நவரோஜி
"தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறார்' (9)
"வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது' (11) என்ற வசனங்கள் தேவன் எல்லா சிருஷ்டிக்கப்பட்டவைகளின் தலைவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.
"நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்;' (வச.14) என்ற வசனம் தேவன் நீதியானவர், அவர் அதிகாரம் மகத்துவம் நீதி என்ற அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டதை விளக்குகிறது.
"என் தாசனாகிய தாவீதை நோக்கி, என்றென்றைக்கும் ... உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன்' (வச.3,4) என்ற வசனம் தேவன் தாவீதுடன் செய்த உடன்படிக்கையை (2 சாமுவேல் 7:16) நினைவுபடுத்துகிறது.
"உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்' (வச.1) என்ற வசனம் ஏத்தான் தேவனுடைய மகத்துவங்களைத் தானும் தனது சந்ததியும் தொடர்ந்து பாட வேண்டும் என்ற வாஞ்சையை வெளிப்படுத்துகிறது.
2. தேவனுடைய மகத்துவத்தை அறிந்தவர்கள் உடன்படிக்கை மூலம் உயர்த்தப்படுவார்கள் (வச.15-37)
இப்படிப்பட்ட வல்லமையையும் மகத்துவத்தையும் அறிந்துகொண்ட ஜனத்தை தேவன் உயர்த்துவார். எப்படி உயர்த்துவார்? இந்த ஜனத்திற்கு ஒரு இராஜாவை கொடுத்து, அந்த ராஜாவுடன் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்தி என்று (வச.18-22). ஆம் வசனங்கள் விளக்குகிறது. தேவனுடைய மகத்துவத்தை அறிந்த இஸ்ரவேல் ஜனத்திற்கு தாவீதை இராஜாவாகக் கொடுத்து, தாவீதினுடைய சத்துருக்களை அவனுக்குக் கீழ்ப்படுத்தி, தாவீதினுடைய சந்ததியை என்றைக்கும் நிலைத்திருக்கவும், அவனுடைய ராஜாசனம் நிலைநிற்வும் (வச.29) உடன்படிக்கை செய்து, இவ்விதமாக தேவன் தமது வல்லமையை அறிந்த ஜனங்களை உயர்த்துவதாக, கொடுத்த வாக்குத்தத்தத்தை ஏமான் தேவனுக்கு நினைப்பூட்டுகிறார் (வச.37).
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இந்த வாக்குத்தத்த வசனத்தை தேவன் நிறைவேற்றினார் என்பதை "அவனுடைய (தாவீதினுடைய) சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்' என்று அப்போஸ்தலர் 13:23 வசனத்தில் தெரிந்துகொள்கிறோம்.
அது மாத்திரமல்லாது, இந்த வாக்குத்தத்தம் எல்லா தேசத்தாருக்கும் உண்டாயிருக்கும் என்பதை
"வாக்குத்தத்தமானது உங்களுக்கும், ... நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது' என்ற அப்போஸ்தலர் 2:39 வசனத்தின் மூலம், உலகத்திலுள்ள அனைத்து மக்களும் இந்த வல்லமையுள்ள தேவனை அறிந்துகொண்டால் உயர்த்தப்படுவார்கள் என்பதை தெரிவிக்கிறது.
மேலும், "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்' என்றும் அப்போஸ்தலர் 16:31 வசனத்தின்மூலம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மூலம் கிடைக்கும் ஆத்தும இரட்சிப்பின் பாக்கியமும் தேவனை அறிந்த ஜனங்கள் பெற்றுக்கொள்வார்கள் என்று தெரிவிக்கிறது.
3. தேவனுடைய உடன்படிக்கையை பெறமுடியா ஜனம் (வச.38-52).
தாவீதுடன் தேவன் செய்த உடன்படிக்கையை, தாவீதின் மாம்ச சந்ததியார் பெற முடியவில்லை. காரணம், தாவீதிற்கு பின் வந்த இஸ்ரவேல், யூதா இராஜாக்கள் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் தேவன் தமது உடன்படிக்கையை அவர்களுக்கு நிறைவேற்றாமல் கல்தேயரின் இராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்து சிறையிருப்புக்குட்படுத்தினார். "உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு...' (வச.39) என்று ஏத்தான் முறையிடுவதை பார்க்கிறோம். "எதுவரைக்கும், கர்த்தாவே?' (வச.46) என்றும் தேவனிடம் ஏத்தான் மன்றாடி மீண்டும் தங்கள் சிறையிருப்பைதிருப்பி தங்களை விடுவிக்க ஜெபிக்கிறான்.
மனிதன் தனது சுயபெலத்தால் தன்னை இரட்சித்துக்கொள்ள முடியாது (வச.48) என்றும் தேவனே, நீரே எங்களை காப்பாற்றும் என்று (வச.49-51) வசனங்களில் கெஞ்சியும்,
"கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக' (வச.52) என்று நன்றியுள்ள இருதயத்துடன் இந்த சங்கீதத்தை ஏத்தான் முடிப்பதை பார்க்கிறோம்.
ஒவ்வொரு விசுவாசியும்கூட, தனது சொந்த பெலத்தைச் சாராமல், தேவனுடைய பெலத்தில் சார்ந்து தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது தேவனுடைய வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் என்று இந்த சங்கீதம் கற்பிக்கிறது.
Author: Rev. Dr. R. Samuel