முக்கியக் கருத்து
- மகா துயர நேரத்தில் தேவனை நோக்கி கூப்பிடு.
- தேவனுடைய பதில் வராதது போன்ற சூழ்நிலையிலும் விசுவாசத்தை தளரவிடாதே.
முன்னுரை
பாடகர்குழு தலைவனாகிய ஏமான் போதித்த ஒரு சங்கீதம். இந்த சங்கீதத்தில் விவரிக்கப்பட்ட மகா மரணத்திற்கேற்ற துயரம் ஏமானின் சொந்த அனுபவமா அல்லது மற்றவரின் அனுபவத்தை வைத்து போதிக்கிறானா என்பது தெரியவில்லை, ஒரு தேவ பிள்ளையின் மகா துன்ப நேரத்தில் இடைவிடாது ஜெபிக்கும் அனுபவத்தையும், தேவனே தன்னை தள்ளிவிட்ட யோபைப்போன்ற அனுபவத்தை உணர்ந்த போதும் விசுவாசத்தைத் தளர விடாதிருப்பதையும் இந்த சங்கீதத்தில் பார்க்கிறோம். இதுவே ஒரு விசுவாசி அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய சத்தியம்.
நமது துன்பங்கள், துயரங்கள் நாம் தேவனை நெருங்க உதவும் கருவிகளாக இருக்க வேண்டும்.
1. (வச.3-8, 14-18) ஏமான் விவரிக்கும் மகா கொடிய துன்பம்
"என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது;' (3)
"மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்' (5)
"சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவன்' (15)
"கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்' (14)
"சிநேகிதனையும்... எனக்குத் தூரமாக விலக்கினீர்;' (18)
என்று இந்த வசனங்களில் ஏமான் விவரிக்கும் மகா கொடிய துன்பம், யோபுவின் புலம்பலுக்கு சமமாயிக்கிறது.
2. (வச.1,2,9-13) துக்கம், குழப்பம் நிறைந்த நேரத்தில் பொறுமை, ஜெபம்.
ஏமான் விவரித்த இந்த மகா துக்க நேரத்திலும், தேவனே தன்னை ஏன் தள்ளிவிட்டார், தனது தோழர்களை ஏன் தூரமாக்கினார் என்ற குழப்பமான சூழ்நிலையிலும் ஏமான் விசுவாசிகளுக்கு போதிப்பது என்ன?
1. இடைவிடாத ஜெபம் (1,9,13)
2. தேவன் ஜெபிப்பதைக் கேட்கிறவர் என்ற விசுவாசம் (2)
3. தேவனிடம் தமது நியாயமான காரணத்தை எடுத்துக்கூறும் தைரியமும், வைராக்கியமும், பொருத்தனையும் கலந்த மன்றாட்டு (10,11,12).
- மரித்தவர்களுக்கு நீர் அதிசயம் செய்தால் அவர்கள் உம்மை துதிக்க முடியாது. இருளில் உமது அதிசயம் காணப்படாது. ஆகவே, உயிரோடு இருக்கும் எனக்கு தேவரீர் அதிசயம் செய்தால் அது காணப்படும்,
நானும் உம்மை துதிப்பேன்.இதே சத்தியத்தை கீழ்கண்ட வசனங்களிலும் வாசிக்கலாம்.
ஏசாயா 38:18, சங்கீதம் 115:17
ஒவ்வொரு விசுவாசியும்கூட தனது சோதனை நேரத்தில் இப்படி வைராக்கியமாக, இடைவிடாமல் ஜெபிக்கவேண்டும்
லூக்கா 18:1,2 கொரிந்தியர் 4:8,9.
Author: Rev. Dr. R. Samuel