முக்கியக் கருத்து
- தேவன் இஸ்ரவேலரை ஒரு நல் மேய்ப்பனாக நடத்தி வந்தார் என்ற அறிக்கை.
- விழுந்துபோன தேவஜனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ஆசாபின் வேண்டுதல்.
1. இஸ்ரவேலின் நல் மேய்ப்பர் (வச.1)
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தேவனை தங்கள் மேய்ப்பனாக எப்போதும் பாவித்துக் கண்டார்கள். தாவீதும்கூட
"கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்' சங்.23:1 என்றான். "மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்;...' என்று ஏசாயா 40:11 வசனத்திலும் வாசிக்கிறோம். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, "நானே நல்ல மேய்ப்பன்' என்று
யோவான் 10:11 ஆம் வசனத்தில் சொன்னார்.
ஆகவே, ஆடுகளின் சத்தத்திற்கு மேய்ப்பன் நிச்சயம் செவி கொடுப்பார் என்ற நம்பிக்கையுடன் ஆசாப் விண்ணப்பிக்கிறான் (வச.1). இஸ்ரவேலின் தேவன் கேரூபின்களின் மத்தியில் வாசம் செய்கிறவராகவே வேதம் வர்ணிக்கிறது. யாத்.25:22,
ஏசாயா 6:13, வெளி.4:8.
சேராபீன்களும், கேரூபீன்களுமாகிய பலத்த தூதர்கள் எப்போதும் துதிக்கிற தேவன் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் செய்கிறவர். அவரே தங்களை தமது பிரகாசமான ஒளியால் பிரகாசிக்கச் செய்யவும் ஆசாப் வேண்டுதல் செய்கிறான்.
எண்.6:25, யோவான் 1-9.
2. எங்களைத் திரும்பக் கொண்டுவாரும் (வச.2-7)
யோசேப்பு, எப்பிராயீம், மனாசே, பென்யமீன் என்ற கோத்திரங்களின் குறிப்பிடல் யூதா, இஸ்ரவேல் பிரிவுக்குப்பின்னான வடக்கு ராஜ்ஜியங்களாகிய சமாரியாவின் வீழ்ச்சியை குறிக்கலாம். கி.மு. 722 இல் வீழ்ச்சியடைந்த சமாரியாவை அல்லது கி.மு.586 இல் முற்றிலும் சிறைப்பட்டுப்போன முந்தின வடக்கு ராஜ்ஜியங்களை, கிருபையுள்ள தேவன் மீண்டும் திரும்பக் கட்டி எழும்ப, தேவ பக்தியுள்ள ஆசாப், நெகேமியா, தானியேல் போன்றவர்களின் ஜெபமாக இந்த பகுதி அமைந்திருக்கிறது.
தேவன் மகா கிருபையுள்ளவர், இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராகையால் தேவ ஜனம் வீழ்ந்துவிட்ட நிலைமையிலும் கூட, பரிசுத்தவான்கள் வழக்கமாக ஜெபித்து தேவ தயவை பெற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இந்த வசனங்கள் நமக்கு நம்பிக் கையூட்டுகிறது.
"... நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; ...' (வெளி.2:5).
3. தேவனுடைய தோட்டம் (வச.8-17)
எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கி, பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தில் இஸ்ரவேலரை கொண்டு வந்து அங்கிருந்த பொல்லாத கானானிய ஜாதிகளை துரத்தி, தமது வாக்குத்தத்தத்தின்படி தம் ஜனங்களை தேவன் குடியேறச் செய்ததை (உபாகமம் 7:1-8) ஒரு திராட்சக் கொடியை ஒரு தோட்டத்திலிருந்து பிடுங்கிக் கொண்டு வந்து வேறு நல்லதோட்டத்தில் நடுவதை உவமையாக ஆசாப் பயன்படுத்தியுள்ளது, மிகச் சிறந்த உதாரணமாக இருக்கிறது. நடப்பட்ட இந்த திராட்சச் செடி வேரூன்றி படர்ந்து பெருகியது என்று விளக்குகிறார். தாவீது, சாலமோன் ராஜ்யபாரம் செய்த நாட்களில் உபாகமம் 11:24 வசனத்தில் சொல்லப்பட்டபடி யூதேயாவின் மலைப்பிரசேதங்களிலிருந்து லீபனோனின் கேதுரு மரத் தோட்டங்கள், ஐபிராத் நதி தொடங்கி கடைசி சமுத்திரம் வரை பரவியிருந்தது (8-11). ஆனால், இப்பொழுதோ அது கைவிடப்பட்டு, அதன் வேலிகள் பிடுங்கி எறியப்பட்டு, காட்டு மிருகங்களால் மிதிக்கப்படும் நிலைமைக்கு வந்துவிட்டது (12,13,16). புறஜாதி இராஜாக்களால் (பாபிலோனியர், அசீரியர்) படையெடுக்கப்பட்டு பாழாக்கப்பட்டதை ஆசாப் இங்கே குறிப்பாக கூறுகிறான்.
ஆகவே, சேனைகளின் கர்த்தருடைய உதவி மீண்டும் தேவைப்படுகிறது. அவர் கொண்டு வந்து நட்ட திராட்சச் செடிக்கு அவரே உதவி செய்யவேண்டும். தேவன் தமது ஜனத்தின் மீது மீண்டும் தமது இரட்சிப்பின் கரத்தை நீட்டினால் மட்டுமே தேவஜனம் மீட்கப்படும் என்ற சத்தியம் இந்த வசனங்களில் தொனிக்கிறது.
விசுவாசிகளாகிய நம்மையும் கர்த்தர் ஒரு திராட்சச் செடியாகவோ அத்தி மரமாகவோ பார்க்கிறார். பாவ உலகமாகிய தோட்டத்திலிருந்து, கிறிஸ்துவின் சபையாகிய நல்ல தோட்டத்தில் நட்டு நல்ல கனிகளை கொடுக்கும்படியாக எதிர்பார்க்கிறார். இதை ஒரு உவமையாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து லூக்கா 13:6-9 வசனங்களில் கூறியிருக்கிறார். நாம் நல்ல கனியை கொடுப்போமா? தேவ ஆசீர்வாதங்கçáப் பெறுவோமா?
4. உறுதிமொழி (வச.18,19)
சேனைகளின் தேவனாகிய எங்கள் கர்த்தர் எங்களைத் திருப்பிக்கொண்டு வந்தால், நாங்கள் இரட்சிக்கப்படுவோம். உயிர்ப்பிக்கப்படுவோம். இனி ஒரு காலும் பின் வாங்க மாட்டோம் என்ற உறுதிமொழியை தேவ ஜனத்தின் சார்பாக ஆசாப் கொடுப்பதை பார்க்கிறோம். இதுவும் ஒரு தீர்க்கதரிசன வார்த்தை. கடைசி நாட்களில், கர்த்தர் இஸ்ரவேல் மக்கள் அனைவரையும் தங்கள் தேசத்தில் கூட்டிச்சேர்ப்பார். அப்போது அவரைவிட்டு அவர்கள் பின் வாங்க மாட்டார்கள் ஏசாயா 32.
Author: Rev. Dr. R. Samuel