முக்கியக் கருத்து
- பாடகர் குழு தலைவன் ஆசாபின் தீர்க்கதரிசனம்.
- தேவனே நியாயாதிபதி.
1. தேவன் மிக சமீபமாயிருப்பதால் துதிக்கிறோம் (வச.1)
பாடகர் தலைவர் ஆசாப், இஸ்ரவேலுக்கு தேவன் மிக சமீபமாயிருப்பதை அவர் செய்யும் அதிசய கிரியைகளினால் அறிந்துகொண்டதால், அவரை துதிக்கிறோம் என்று பாடுகிறான்.
"நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, ...' என்று உபாகமம் 4:7 வசனத்தில் இஸ்ரவேல் மக்களிடம் மோசே கூறினான். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நமக்கும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மிக சமீபமாயிருக்கிறார் என்பதை
"முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்' எபேசியர் 2:13 வசனம் மூலம் அறிந்துகொண்டு அவரை துதிக்கவேண்டும்.
2. காலம் நிறைவேறும்போது நியாயந்தீர்ப்பார் (வச.2,3)
பூமியின் குடிகள் பூமியில் நடந்தேறும் பலவித பாழ்க்கடிப்புகள், சேதங்கள், பூமி வெப்பம் அதிகரித்தல், தண்ணீர் அளவு குறைதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதால் அச்சத்திற்குள்ளாகிறார்கள். ஆனாலும், பூமியை நிலைநிறுத்துகிறவர் தேவன் (வச.3). பூமி உள்ளவரை பூமியை பாதுகாப்பார். அதே நேரத்தில், அவருடைய காலம் நிறைவேறும்போது பூமியை நியாயந்தீர்க்க, நியாயாதிபதியாய் வருவார். பூமியின் குடிகள் அவருக்கு முன் நியாயம் விசாரிக்கப்பட நிற்கவேண்டும். (வச.2).
"ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவதுதக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்' (2 கொரிந்தியர் 5:10).
3. துன்மார்க்கனை தாழ்த்தி, தேவ ஜனத்தை உயர்த்துவார் (வச.4-8)
இஸ்ரவேல் மக்களின் சத்துருக்கள், தேவ ஜனமாகிய அவர்களுக்கு எதிராக இறுமாப்பாய் பேசினார்கள். தேவன் தமது ஜனத்திற்கான வைராக்கியத்தினாலே அவர்களை தண்டித்தார். அசீரியர்கள் இஸ்ரவேலருக்கு எதிராக வந்து வீம்புபேசி, தாழ்த்தப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்து ஆசாப் பாடியிருக்கலாம் (வச.4-7).
"அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டுபோவான்' ஏசாயா 30:31 என்ற வசனத்தில் கூறப்பட்ட வார்த்தைகள், யூதா இராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் அசீரியா இராஜாவாகிய செனகெரிப் தேவனுக்கு விரோதமாய் வீம்புபேசி, தேவனால் தாழ்த்தப்பட்டு போனதை ஏசாயா 36,37 ஆம் அதிகாரங்களில் வாசிக்கிறோம்.
கிழக்கிலும், மேற்கிலும் வனாந்திரத்திலுமிருந்து தேவஜனத்திற்கு ஜெயம் வராது. வடதிசையில் வாசம் செய்யும் தேவனிடமிருந்தே தேவ ஜனம் ஜெயம் பெருவார்கள் (வச.6). துன்மார்க்கனை தாழ்த்தி தேவன் தமக்கு பயந்தவர்களை உயர்த்துவார் (வச.7). கலங்கிப் பொங்குகிற மதுபானம் நிறைந்த பாத்திரம் தேவனுடைய சத்துருக்களுக்கும், பிசாசின் சேனைகளுக்கும் தேவன் கொடுக்கும் தண்டனையை குறிக்கிறது (வச.8).
"அவன் (பிசாசின் வழிகளை பின்பற்றின துன்மார்க்கர்) தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்' வெளி.14:10. தேவன் தமது காலம்நிறைவேறும் கடைசிநாளில் (வச.2) இந்த பொல்லாத உலகத்தை நியாயந்தீர்ப்பார். பிசாசையும், பிசாசை பின்பற்றுகிறவர்களையும் நித்திய நரக அக்கினியின் ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பார் என்று இந்த வசனம் தெளிவாக கூறுகிறது.
4. யாக்கோபின் தேவனுக்குக் கீர்த்தனம் (வச.9)
தேவனை நம்பி அண்டிக்கொண்டதால், நான் இந்த சத்தியத்தை அறிவித்து இஸ்ரவேலின் தேவனைத் துதிப்பேன் என்று ஆசாப், தேவனுடைய மேலான அதிகாரத்தை பாடுகிறான். துன்மார்க்கரின் செயல்கள் அழிக்கப்பட்டு, நீதிமான்களின் கிரியைகள் பலனளிக்கப்படும் என்ற உலக முடிவின் சத்திய சுவிசேஷம், தேவனுக்கு பயந்து நீதியாய் நடக்கும் விசுவாசிகளுக்கு தேவ பெலனையும், நித்திய நம்பிக்கையின் சந்தோஷத்தையும் கொடுக்கிறது.
"ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; ... அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், ...அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்' (வெளி.21:7,8).
Author: Rev. Dr. R. Samuel