முக்கியக் கருத்து
- என் தாயின் வயிற்றிலிருந்து என்னை தெரிந்துகொண்டபடியால், சிறுவயதிலிருந்தே உம்மை நேசிக்கிறேன்.
- என் முதிர்வயதுவரை உமக்கு ஊழியம் செய்ய உதவி செய்து, முதிர் வயதிலும் என்னை காத்துக்கொள்ளும்.
- உம்மைப் பாடும்போது என் ஆத்துமா கெம்பீரிக்கும் - இது ஒரு தாவீதின் அறிக்கை.
1. தேவனிடம் நெருங்கிய ஐக்கியம் (வச.1-6)
என் தாயின் வயிற்றிலிருந்தே என்னை நீர் தெரிந்துகொண்டபடியால் (6) சிறுவயதிலிருந்தே உம்மை நம்பி உம்மேல் நேசமாயிருக்கிறேன் (5) என்று தாவீது சொல்லும் உண்மையான கருத்தைப் பார்க்கிறோம்.
"... அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,' என்று எபேசியர் 1:4 ஆம் வசனத்தில் அப்போஸ்தலன் வெளிப்படுத்தும் ஒரு சத்தியத்தை ஒவ்வொரு விசுவாசியும் அறிந்து கொள்ளவேண்டும். கர்த்தர் நம்மைத் தாயின் வயிற்றில் உருவாகுவதற்கு முன்னிருந்தே தெரிந்துகொண்டிருந்தால், நாம் எவ்வளவு நம்பிக்கையுடனும், தைரியத்துடன் தேவனிடம் நம் பாதுகாப்பைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம் என்று நாம் யோசிக்க வேண்டும். ஆகவேதான், தாவீது "நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; ...' (3) என்றும்,
"உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; ...' (2) என்றும் கூறுகிறார். இதனால், தாவீதுக்கு தன் வாழ்க்கையில் "நீரே என் நோக்கம் ...' (5) என்கிறார். நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய முக்கிய குறிக்கோளும், நோக்கமும் என்ன என்பதை சிந்திக்க இந்த வார்த்தை தூண்டுகிறதல்லவா?
2. நான் ஒரு புதுமை (வச.7,8)
தாவீது, தான் மற்றவர்களுக்குப் புதுமையாக இருப்பதை வெளிப்படையாக அறிவிக்கிறான். கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நாம் இந்த உலகத்திற்கு வேறுபட்டவர்களாக, புதுமையானவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால், கிறிஸ்து நம்மை புதுசிருஷ்டியாக மாற்றியிருக்கிறார் என்று (2 கொரி.5:17) ஆம் வசனத்தில் வாசிக்கிறோம். நமது நடத்தை, பேச்சு, உடை, வாழ்க்கைமுறை, ஆவிக்குரிய ஜீவியம் எல்லாவற்றிலும் புதுமையாக இருக்கவேண்டும். (1 தீமோத்.4:12). இதைக்குறித்து நாம் வெட்கப்படக்கூடாது. கிறிஸ்துவின் சிலுவையை குறித்து மேன்மை பாராட்ட வேண்டும்.
3. வயோதிபம், எதிரிகள் தொல்லை இவற்றிலும் திடநம்பிக்கை (வச.9-18)
சிறுவயது முதல் நீர் எனக்கு நல்ல போதனைகள் கொடுத்து வளர்த்ததால் (17) எனக்கு வயோதிப வயது வரும் வரை உமது சத்தியத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்க பெலன் தாரும் (18) என்று தாவீது ஜெபிக்கிறான். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்ற ஒரு தமிழ் பழமொழி உண்டு. நாம் நமது பிள்ளைகளை ஞாயிறு பள்ளி போன்ற சிறுவர் வேதாகமப் பள்ளிக்கு அனுப்பியும், சிறு வயது முதலே வேத வசனங்களைக் கற்பித்தும் வளர்த்தால் முதிர்வயதிலும் மறக்கமாட்டார்கள். மேலும், இன்றைக்கு அனேக குடும்பங்களில் முதிர் வயதான பெற்றோரைப் பிள்ளைகள் சரியாக கவனிக்காமல் வெறுத்தொதுக்குகிறார்கள். இதனால், தேவனுக்கு பிரியமில்லாத செயலை செய்கிறார்கள். முதிர்வயதான பெற்றோரும் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள். தாவீது, தனக்கு அப்படிப்பட்ட நிலமை வரக்கூடாது என்பதற்காக, தனது முதிர்வயதிலும் தேவனே தன்னைக் கைவிடாமல் பாதுகாக்கவேண்டும் என்று (வச.9) இல் மிக முக்கியமான ஜெபத்தை ஏறெடுக்கிறான். அது மாத்திரமல்ல, தன் பெலன் ஒடுங்கி, தன்னால் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் தன் எதிராளிகள் தன்னை இழித்துப் பேசினாலும் (வச.10,11), அந்த நேரத்திலும் ' தேவனேஎனக்குச் சகாயம் செய்யும்' என்ற ஜெபத்தை ஏறெடுக்கிறான் (வச.12). அவ்விதமாகத் தனக்கு எதிராகப் பேசும் எதிராளிகள் வெட்கப்பட்டுப் போகும்போது (13) தான் தேவன்பேரில் நம்பிக்கையாயிருந்து " தேவனை துதிப்பேன்" என்ற விசுவாச அறிக்கை (14) ஏறெடுப்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் உற்சாகமும், ஊக்கமும் ஊட்டும் சத்தியவாக்காக இருக்கிறது. ஆகவே, முதிர்வயதிலும் விசுவாசிகள் சோர்ந்து போகக்கூடாது. தைரியமாக தேவனை நம்பவேண்டும்.
4. தேவனுக்குத் துதியும் புகழ்ச்சியும் (வச.19-24)
தேவன் நீதியுள்ளவரானபடியால் என் வாழ்க்கையில் பாதாளத்திற்கு இறங்கினது போன்ற இக்கட்டுக்களையும், ஆபத்துகளையும் சந்தித்திருந்தாலும் (19,20) என்னைக் காத்து, என் எதிராளிக்கு வெட்கத்தை உடுத்தி என்னையோ மேன்மைப்படுத்தி இருப்பதால் நாம் உம்மை எனது வீணையைக் கொண்டு பாடும்போது, என் உதடுகள் மாத்திரமல்ல நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்துப் பாடும் என தாவீது சொல்கிறான். நீங்களும் இதே சாட்சியை சொல்ல முடியுமா?
Author: Rev. Dr. R. Samuel